Home


ஜிஹாத் (அறப்போர்)

        இது ‘ஜஹத்’ என்ற மூலத்திலிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் ‘முயற்சி செய்தல்’, ‘பாடுபடல்’ என்பனவாகும். இதன் எதிர்மறை ‘குவூத்’ (அமர்தல், அமர்ந்தே இருத்தல்) என்பதாகும். அதாவது கடமையை ஆற்றாது சோம்பேறித்தனமாய் அமர்ந்திருத்தல் என்பதாகும். இவ்விரு சொற்களும் திருக்குர்ஆனில் பயன்படுத்தப் பட்டுள்ளன. “இறைநம்பிக்கையாளர்களில் எவர்கள் தக்க காரணம் எதுவுமின்றி ஜிஹாதில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் தங்கி விடுகின்றார்களோ அவர்களும், எவர்கள் தங்களுடைய உயிராலும் பொருளாலும், அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களும் சமமாக மாட்டார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களை விட தங்களுடைய உயிராலும் பொருளாலும் ஜிஹாத் செய்பவர்களுக்கு அல்லாஹ் சிறப்பான அந்தஸ்தை வைத்திருக்கின்றான். ஒவ்வொருவருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். எனினும் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களைவிட கலந்து கொண்டவர்களின் கூலி அவனிடம் மிக அதிகமானதாக இருக்கிறது.” (4:95) என்று இறைவன் கூறுகிறான்.

ஜிஹாதில் ஐந்து வகைகள் உள்ளன.

  1. தன்னுடைய சுயநல இச்சையை எதிர்த்து போராடுவது

ஒருவன் தன்னுடைய இச்சையை எதிர்த்து போராடுவது. இதுவே ஜிஹாதுல் கபீர் (மாபெரும் ஜிஹாத்) ஆகும். ஒரு தடவை சன்மார்க்கப் போரிலிருந்து திரும்பிய தம் தோழர்களை நோக்கி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “நீங்கள் சிறு ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதிற்கு வந்துள்ளீர்கள். ஒருவன் தன் நஃப்ஸுடன் (தீய இச்சைகளுடன்) போரிடுவதே பெரிய ஜிஹாத் ஆகும்.”

  1. அறிவால் ஜிஹாத் செய்தல்

இஃது அறியாமையால் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பவர்களை அறிவுரை பகர்ந்து நேர்வழிப் படுத்துவதாகும். இறைவன் தன் திருமறையில் இதைப் பற்றி குறிப்பிடும் பொழுது, “(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக!” (16:125) என்றும், “(நபியே!) நீங்கள் இந்த நன்றிகெட்டவர்களுக்கு கட்டுப்படாதீர்கள். இந்தக் குர்ஆனை (ஆதாரமாக) கொண்டு நீங்கள் அவர்களிடத்தில் போராடுவீராக! (ஜிஹாத் செய்வீராக)” (25:52) என்றும் கூறுகின்றான்.

  1. செல்வத்தினால் ஜிஹாத் செய்தல்

        இஃது ஒருவன் தன் பொருளை இறைபாதையில் செலவழிப்பதாகும். இதனையே இறைவன், “அல்லாஹ்வின் வழியில் உங்கள் பொருள்களாலும் உயிர்களாலும் ஜிஹாத்* செய்யுங்கள்.” (61:11) என்று குறிப்பிடுகின்றான்.

  1. நற்செயல்களால் ஜிஹாத் செய்தல்

        மார்க்கப் போரில் கலந்து கொள்ள பெண்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி வேண்டிய பொழுது, “ஹஜ் செய்வதே உங்களுடைய ஜிஹாத்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மற்றொருவரிடம், “உமக்குப் பெற்றோர்கள் இருக்கிறார்களா?” என்று வினவி, “அவர்களுக்கு பணிபுரிவதே உமக்கு ஜிஹாத்” என்று மொழிந்து உள்ளார்கள்.  “அநியாயக்காரனின் முன் நேரிய சொற்களை எடுத்துரைப்பது பெரிய ஜிஹாத்” என்பதும் அவர்களின் அருள் வாக்காகும். இறைபாதையில் செய்யப்படும் எல்லா நற்செயல்களும் இதில் அடங்கும்.

  1. உடலால் - உயிரால் ஜிஹாத் செய்தல்

        ஒருவன் தன் உடல் உழைப்பால் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் ஜிஹாதேயாகும். இதன் இறுதிக் கட்டம் இறை நெறியை மக்களிடம் எடுத்துரைப்பதில் தீவிர முயற்சியாற்றி அதற்காகத் தன்னுடைய இன்னுயிரையும் அர்ப்பணிப்பதாகும். இவர்களைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் பொழுது, “இறைபாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் என்று எண்ணற்க. அவர்கள் உயிரோடிருக்கின்றனர்” என்று குறிப்பிடுகின்றான். இத்தகு உயிர்த் தியாகிகளுக்கு ‘ஷஹீத்’ என்பது பெயர்.

அறப்போர் அல்லது புனிதப்போர் என பெயர் வரக் காரணம்

        உலகத்தில் எல்லா மதத்தினரும் எல்லா இனத்தினரும் போர் செய்து இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியப் போருக்கு மட்டும் தான் புனிதப் போர் என்று பெயர் வந்தது. அதற்கு காரணம் யுத்ததிற்குப் புறப்பட்ட வீரர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளைகள் தான். அவைகள்

  • மரங்களை வெட்டாதீர்கள்
  • கட்டடங்களை இடிக்காதீர்கள்
  • குழந்தைகள், முதியவர்களை கொல்லாதீர்கள்
  • நோயாளிகளை, பெண்களை கொல்லாதீர்கள்
  • பிற மதத்தவர்களின் வணக்கத்தலங்களை இடிக்காதீர்கள்
  • சரணடைந்தவர்களை கொல்லாதீர்கள்.
  • மதகுருக்கள், துறவிகளை கொல்லாதீர்கள்
  • பிணங்களை சிதைக்காதீர்கள்
  • உணவுக்காக அன்றி விலங்குகளை கொல்லாதீர்கள்.
  • கைதிகளிடம் நல்ல முறையில் பேசி உணவளியுங்கள்.
  • இவர்களில் எவர் மீதும் இஸ்லாத்தை திணிக்காதீர்கள்.

(முஸ்லிம்:462, புகாரி: 2731, 2732, 2720, 2499, 3014, 3015, 3016, 5516)


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....


Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.