இஸ்லாத்தில் திருமணம்
திருமணம் என்பது உள்ளத்தின் தன்மையும் எண்ணத்தின் திண்ணத்தையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகும். அதில் வெறுப்புக்கும் வேதனைக்கும் வற்புறுத்தலுக்கும் இடமில்லை. அன்பும் பண்பும் பாசமும் நேசமும் தான் அதன் அணிகலன்களாகும். ஒரு ஆண் தான் விரும்பிய பெண்ணை மணக்க உரிமை பெறுவது போல ஒரு பெண்ணும் தான் விரும்பிய ஆடவரை மணக்க உரிமை பெற்றவளாவாள். தான் விரும்பாத ஆடவரை மணக்கும் படி ஒரு பெண்ணை பெற்றவர்களோ, உற்றவர்களோ, மற்றவர்களோ வற்புறுத்தக் கூடாது.
திருமணம் நிறைவேற இரண்டு நிபந்தனைகள்
எப்பொழுது ஒரு பெண் திருமண வயதை அடைந்து விட்டாளோ, அவளுடைய பெற்றோர் அவளது ஆலோசனையுடன் அவளுக்கு தகுந்த கணவனைத் தேர்ந்தெடுத்து திருமணம் முடித்து வைப்பது அவர்களுடைய கட்டாயக் கடமையாகும். ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து தன்னை ஆலோசனை செய்யாமல், தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறியதற்கு, நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மணபந்தத்தை நீ விரும்பினால் முறித்துக் கொள்ள உரிமை உண்டு என்று கூறினார்கள்.
மேலும் ஒரு பெண் விதவையாகவோ அல்லது மணவிலக்குப் பெற்றவளாகவோ இருப்பின் அவளுக்கு தன் திருமணத்தைக் குறித்து முழு உரிமை உண்டு. அவளின் மனப்பூர்வமான ஒப்புதல் இல்லாமல் திருமணம் நிறைவேறாது. இஸ்லாமிய திருமணத்தில் இரண்டு நிபந்தனைகள் தான் உண்டு. ஒன்றாவது மாப்பிள்ளை, பெண் இருவரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் (ஈஜாப் கபூல்) பெற வேண்டும். இரண்டாவது வாக்குமூலம் (ஈஜாப் கபூல்) பெறும் போது இருவர் சாட்சியாக இருக்க வேண்டும். இத்துடன் திருமணம் இனிது நிறைவேறி விடுகிறது.
இஸ்லாத்தில் பெண் தேடுதல்
திருமணம் என்பது ஒருவருக்கொருவர் நன்றாக அறிந்துணராமல் செய்யக்கூடாது. தாம் மணப்பவர் அன்பு, பாசம், அறம், ஆற்றல், அறிவு, பணிவு, பரிவு, தெளிவு, கனிவு, துணிவு அத்துனையும் பெற்றவரா என்று கவனிக்க வேண்டும். அன்றி மோகத்தின் தாகத்தில் வேகம் கொண்டு குருட்டுத்தனமாக ஒரு பெண்ணையோ ஆணையோ விரும்பக் கூடாது. செல்வத்தையோ, அழகையோ ஆசிக்கக் கூடாது. ஏனெனில் அழகும், செல்வமும் நிலையாக இருப்பவையல்ல. நல்லொழுக்கம், நல்ல செயல், நற்பண்புகள் இவைகளே நிலையானவை; மன அமைதி அளிப்பவை. தேர்ந்தெடுக்கும் மணமகளில், மார்க்க ஒழுக்கம், குணம், அழகு, குழந்தை பெறும் தகுதி, வயது, குடும்பம் இவைகளைக் கவனித்தல் இன்றியமையாததாகும். ஆயினும் மார்க்க ஒழுக்கத்தையும், குணநலன்களையும் முக்கியமாகக் கருதுதல் வேண்டும். நம்மிடம் வசதி வாய்ப்புகள், கல்வி ஞானம், பட்டம் பதவி இன்னும் எத்தனையோ இருக்கலாம். எத்தனை இருந்தாலும் அவை பண்பற்றதாக நாயின் கழுத்தில் இடப்பட்ட முத்து மாலையாக இருந்து விடக் கூடாது. இருளிலும் ஒளி கொடுக்கும் மாணிக்கங்களாக மிளிர வேண்டும். ஆழ் கடலின் கரையருகில் அமைந்திருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும். பெண்ணின் பெருமையையும், மனிதப் பண்பையும் மதிக்கத்தக்கதாக அமைய வேண்டும்.
எனவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “பெண்களை அழகிற்காக மட்டும் திருமணம் செய்யாதீர். ஏனெனில் சில சமயங்களில் அவர்களின் அழகே நஷ்டத்தை உண்டு பண்ணக்கூடும். பெண்களை அவர்களின் செல்வத்திற்காக மட்டும் திருமணம் செய்யாதீர். ஏனெனில் செல்வத்தினால் அவர்கள் பெருமை கொண்டு வரம்பு மீறக்கூடும். பெண்களை (அவர்களிடமுள்ள) மார்க்க ஒழுக்கத்திற்காக திருமணம் செய்யுங்கள். மார்க்க ஒழுக்கமுள்ள கருத்த அடிமை பெண் அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுள்ள மார்க்கப் பற்றில்லாத பெண்ணை விடச் சிறந்தவள் ஆவாள்.” என்று கூறினார்கள். (அல் முன்தகா)
“எவர் ஒரு பெண்ணை அவளிடமுள்ள மார்க்க ஒழுக்கத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டாரோ அவருக்கு அல்லாஹ் இரண அபிவிருத்தியளிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். - அல்ஹதீஸ்
“நிச்சயமாகப் பெண்ணை, அவளின் மார்க்க ஒழுக்கம், அழகு, செல்வம், குடும்பச் சிறப்பிற்காக திருமணம் செய்யப்படுகிறது. என்றாலும் நீ மார்க்க ஒழுக்கமுள்ள பெண்ணையே தேர்ந்தெடுத்துக் கொள்.” என நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
“உங்களிடம் பெண் கேட்டு வருபவரின் மார்க்க பக்தியும், நற்பண்புகளும் உங்களுக்குத் திருப்தி அளிக்குமாயின் (அவரின் பணத்தையும் குலத்தையும்) பாராட்டாமல் மணமுடித்துக் கொடுங்கள். இவ்விதம் நீங்கள் செய்யாவிடின் உலகில் பித்னாவும் (குழப்பமும்) பஸாதும் (பூசலும்) பெருகி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
அறிவிப்பு - அபூஹுரைரா (ரழி) நூல் - திர்மதி
செல்வத்தால் மனிதனுக்கு அமைதி கிடையாது. அழகால் ஆனந்தமும் கிடையாது. அமைதியும், ஆனந்தமும் உண்மையான அன்பினால் மட்டும் தான் பெற இயலும். உண்மையான அன்புடையவர் மட்டும் தான் நம்முடன் அனைத்திலும் ஆதரவாக நிற்க முடியும். இன்பத்திலும் துன்பத்திலும் கணவன் மனைவி இணை பிரியாது. ஒருவருக்கொருவர் ஆடையாக இருந்து துணை புரிய முடியும். இதை இறைவனும் தன் திருமறையில், “(பெண்களாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (ஆண்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.” (2:187) என்று கூறுகின்றான்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுக்கு, பலர் அழகு செளந்தர்யமுள்ள பெண்ணை மணமுடித்து வைக்க முயன்ற போது, அவர்கள் மறுத்து விட்டார்கள். மாறாக கருநிறமுடைய தீன்தாரியான பெண்ணை மணந்து கொண்டார்கள்.
அவ்வாறே இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களும், கண் ஒச்சமடைந்திருந்த ஒரு பெண்ணை மணந்து கொண்டார்கள். நம் முன்னோர்கள் தீனிய்யாத் தான நல்ல ஒழுக்கமுள்ள பெண்களையே துருவிப் பார்த்து மணமுடிக்கக் கூடியவர்களாயிருந்தார்கள். அதனால் அவர்கள் வாழ்வு மலர்ந்தது உலகுக்கு அவர்களால் நல்ல சாதனையை வழங்க முடிந்தது.
இஸ்லாத்தில் மஹர்
‘மஹர்’ என்ற திருமணப் பரிசுத் தொகை மணப் பெண்ணுக்கு மணமகனால் கொடுக்கப்படுவதாகும். இது கணவன் மனைவி இருவரிடம் தொடர்பையும் சம்மதத்தையும் நிலைப்படுத்தக் கூடிய ஒன்றாகும். வாழ்க்கையில் எழும் இன்பம், துன்பம், அன்பு. பாசம், பரிவு அனைத்திலும் பிணைப்பை ஏற்படுத்தும் உரிமைப் பரிமாற்றமாகும். எனவே திருமணச்சபையிலேயே மஹர் நிர்ணயிக்கப் படுகின்றது. அத்தொகையை முதல் இரவு அன்றே பெண்ணுக்கு கொடுத்து அவனை அணுகும்படி இஸ்லாம் பணிக்கின்றது. ஆனால் அவள் இத்தொகையை பிறகு பெற்றுக் கொள்ள சம்மதித்தால் அவளை அணுகுவதில் குற்றம் இல்லை என்றாலும் அவள் சம்மதத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.
“அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.” (குர் ஆன் 4:24)
“உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமை பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;” (குர்ஆன் 4:25)
“(நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவைகள் அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டுவிட்டன. வேதத்தையுடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்களுடைய உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்.) அன்றி, எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இவற்றை) நிராகரிக்கின்றானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவனாகவே இருப்பான்.” (குர் ஆன் 5:5)
மஹராக கணிக்கப்படுவது
கணவன் தன் மனைவியின் மீதுள்ள அன்பின் காரணமாக பல ஆயிரம் ரூபாய்களுக்கு ஆடை ஆபரணங்கள், வீடு, தோட்டம், வேளாண்மை நிலங்கள் முதலியவைகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம். அவைகளில் எதுவும் மஹராகி விடாது. மஹர் என்று குறிப்பிட்டு இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் கொடுக்கப்படும் பொருள் தான் மஹராகக் கணிக்கப்படும்.
மஹர் வாழ்நாளிலேயே செலுத்தி விட வேண்டிய தொகை என்பது கூட அநேக மாப்பிள்ளைகளுக்குத் தெரியாது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவுளமாகிறார்கள். “ஒருவர் குறைந்த மஹருக்கோ கூடுதல் மஹருக்கோ ஒரு பெண்ணை மண முடிக்கிறார். ஆனால் அவளுக்குச் சேர வேண்டிய மஹரை அவளிடம் செலுத்தும் நோக்கம் அவருக்கு இல்லை; அவ்வாறாயின் அவர் அவளை மோசடி செய்தவராவார். இந்நிலையில் அவர் அவளின் மஹர் பணத்தைச் செலுத்தாமலேயே மரணித்து விடுவாராயின் அவர் நாளை நியாயத் தீர்ப்பு நாளன்று விபச்சார குற்றத்துடன் இறைவனைச் சந்திப்பார்.” (நூல் : தபரானீ)
ஒரு ஆண், தான் மண முடிக்கும் பெண்ணை வைத்து வாழ பொருளாதாரத் தகுதி படைத்தவன் என்பதை உணர்த்துவதும் மஹர் தொகையின் அடிப்படை நோக்கமாகும். குறைத்து மஹர் வைத்து உடனே கொடுத்து விடுவது மிகவும் ஏற்றதாகும்.
சீதனம் (பெண்ணுக்குரிய பொருட்கள்)
திருமணமாகி கணவன் வீடு செல்லும் பெண்ணிற்கு சீதனம் கொடுத்து அனுப்பி வைத்தல் தந்தையின் மீது சுன்னத்தான கடமையாகும். (ஸீரத்துன்னபீ - அல்லாமாஷிப்லீ)
பெண்ணின் தந்தை சீதனம் கொடுக்காவிட்டால் அல்லது குறைவாக கொடுத்திருந்தால் சீதனப் பொருட்களை கொடுக்கும் படி கேட்க கணவனுக்கு உரிமை இல்லை. வெறும் கொடுக்கல் வாங்கல் திருமணத்தின் நோக்கம் அல்ல. சில ஊர்களில் பலகாரங்கள் கூட கணக்குப் போட்டு கேட்கின்றார்கள். அவர்களின் அறியாமை நீங்கினால் தான் இந்த அநியாயங்கள் ஒழியும். சமுதாயப் பேரைக் கெடுக்கும் அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட போதுமானவன்.
ஈருலக இரட்சகர் நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு அரசியான தங்கள் மகள் ஃபாத்திமா (ரழி) அவர்களுக்கு சீதனமாக மூங்கில் கட்டில், காய்ந்த பேரீத்தம் மர மட்டைகளால் ஆன தலையணை, ஒரு தட்டு, ஒரு தம்ளர், தோலால் செய்யப்பட்ட தண்ணீர்ப் பை ஒன்று மற்றும் மாவு அரைக்கக் கூடிய திரிகை ஒன்றும் கொடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் விருப்பத்திற்குத் தான் இந்த சாமான்களை கொடுத்தார்களே தவிர அலீ (ரழி) அவர்கள் எதையும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கைக்கூலி (வரதட்சணை)
சில பகுதிகளில் மாப்பிள்ளைக்காக கைக்கூலி கேட்கும் ஆபாச நிலை இருந்து வருகிறது. இன்றைக்கு நாம் வாங்குகிறோம் என்றால் நாளைக்கு நமக்கு பெண் குழந்தைகள் பிறக்காதா என்ன? நாம் ஒரு முறை தான் கைக்கூலி (வரதட்சணை) வாங்குகின்றோமென்றால் பிறகு நாம் பல முறை கொடுக்க வேண்டியதாகி விடுமே!. இன்று வாங்கும் போது நமக்கு சந்தோஷமென்றால் நாளை கொடுக்கும் போது நம் நிலை என்ன? இந்த கைக்கூலி கொடுமையினால் இன்றைக்கு எத்தணை குடும்பங்கள் சீரழிந்து சின்னா பின்னமாகியிருக்கின்றன. சொந்த நிலபுலன்களை விற்று, குடியிருந்த வீடுகளையும் விற்று கைக்கூலி கொடுத்து பெண் மக்களை திருமணம் செய்வித்து விட்டு, வேதனைக்கும் சோதனைக்கும் ஆளாகி ஒண்டிக் குடிசையில் தஞ்சமாகி காலங்கழிப்பவர்களும் உள்ளனர். பெண்ணைப் பெற்றவர்களுக்கு தண்டனையா இது?
வறுமையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் வறிய குடும்பங்களில் எளிய குமருகள் எத்தணையோ இன்றைக்கும் கைக்கூலியின் பெயரால் கட்டுண்டு கிடக்கின்றனர். பெண்ணாய்ப் பிறந்த தோஷத்தை கண்ணீரால் கழுவிக் கொண்டிருக்கின்றனர். அழகு, அறிவு, ஆற்றல், ஒழுக்கம், மார்க்கம் இவை அத்தனையும் இருந்தும் அப்பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற வழி என்ன? இன்று நாம் இருக்கும் நிலை என்ன? இந்த உலகிற்கு ரசூல்மார்களையும், நபிமார்களையும், இறைநேசச் செல்வர்களான வலிமார்களையும், விஞ்ஞானிகளையும், மெய்ஞானிகளையும், அறிஞர்களையும், கல்விமான்களையும், கடமையாளர்களையும் ஈன்று தந்தவர்கள் பெண்கள். இத்தகைய பெண்மையின் தூய்மையறியாத சிலரால் உருவாக்கப் பட்டது தான் கைக்கூலி. இன்று அது பெரும் தொற்று நோயாகப் பரவிப் பலரை பலியாக்கிக் கொண்டிருக்கிறது. மணமகனின் பட்டப் படிப்பை பட்டாக்கத்தியாகவும், பதவியை வீச்சு அரிவாளாகவும் பயன்படுத்தி பெண்ணின் வீட்டில் வரதட்சணை என்ற பெயரால் வழிப்பறி செய்வது எந்த வகையில் நியாயம்? சமுதாயத்தின் இத்தகைய செல்லரித்துப் போன பிற்போக்குகள் அனைத்தும் அகல இன்றைய இளைய சமுதாயம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
வலீமா விருந்து
மணமகன் திருமணம் செய்ததற்குப் பின் மணமகளுடன் வீடு கூடிய பின் மறுநாள் அளிக்கும் விருந்து வலீமா என்று சொல்லப்படும். இது நபிகளாரின் சுன்னத்தாகும். எந்த வலீமாவில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழைகள் புறக்கணிக்கப் படுகிறார்களோ, அந்த விருந்து மிக மோசமான விருந்தாகும். “எவன் வலீமா விருந்து அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் இறைவனுக்கும், தூதருக்கும் மாறு செய்தவனாவான் (நபிமொழி-புகாரி)”
ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் அபிவிருத்தி பெருகும்
நம் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் : “பரக்கத் என்னும் அபிவிருத்தி நிறைந்த சிறந்த திருமணம் சிரமமின்றி எளிய முறையில் செய்து கொள்ளும் திருமணமேயாகும்.” (நூல் : பைஹகீ)
பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் சுமையாக இல்லாமல் சுலபமாக எளிய முறையில் செய்து கொள்ளப்படும் திருமணத்தில் தான் பரக்கத் நிறைந்திருக்கிறது என்று நமக்கு நபிமொழிகள் போதிக்கிறது. இந்த போதனைகளை பெருமானார் (ஸல்) அவர்கள் தம் சொல்லோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை செயலிலும் நிரூபித்துக் காட்டினார்கள். தாம் புரிந்து கொண்ட ஒவ்வொரு திருமணத்திலும், தம் புத்திரிகளுக்கும், தம் தோழர்களுக்கும் செய்வித்த திருமணங்களிலும் சிக்கனத்தையே கையாண்டார்கள். நடுத்தரமாகச் செய்யப்படும் திருமணத்தையே நபி (ஸல்) விரும்புகின்றார்கள்.”
”திருமணத்தில் மிகக்கண்ணியமானதும் சுபிட்சமானதும் ஆடம்பரமின்றி நடுத்தரமாகச் செய்யப்படும் திருமணமாகும்.” (நூல் : அஹ்மது)
சிலர் தங்கள் வீட்டுத் திருமணங்களில் செய்யும் தடபுடல் ஏற்பாடுகளை ஏட்டில் எழுதி முடிக்க முடியாது. படித்து விட்டு எறிகின்ற திருமண அழைப்பிதழ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் அச்சிடப்படுகின்றன. மேள தாளங்கள், கச்சேரி, கரக ஆட்டங்கள், வாண வேடிக்கைகள், பாண்டு வாத்தியங்கள் நடத்தப் படுகின்றன. விருந்து சாப்பாடோ மருந்து சாப்பிட்டு செரிக்க வைக்க வேண்டிய அளவிற்கு தயாரிக்கப்படுகிறது. சாப்பிட வேண்டிய ஏழை பசியாளிகள் விரட்டப்படுகின்றனர். சாப்பிட வேண்டாத புளிச்சேப்பக்காரர்கள் சாப்பிட வற்புறுத்தப் படுகின்றனர். தீனுக்காகச் செய்யப்பட வேண்டிய காரியம் வீணுக்காகப் பலியாகின்றது. “ஏழைகள் அழைக்கப்படும் விருந்தே இறைவனின் அருள் நிறைந்த விருந்தாகும். ஏழைகள் விரட்டப்படும் விருந்தே இறைவனின் வெறுப்புக்குரிய விருந்தாகும்.” என்ற நபி மொழியின் உட்பொருளை எண்ணிப் பார்க்க ஏனோ மறந்து விடுகின்றனர்.
மனைவியை நடத்தும் முறை பற்றி இறைவன் திருக்குர்ஆனில்,
“பெண்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்த போதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம்.” (4:19) என்று கூறுகின்றான்.
எனவே மனைவியரையும் குடும்பத்தையும் அன்போடு நடத்துவது இஸ்லாமிய மரபாகும். இதனையே நாயகம் (ஸல்) அவர்கள் “உங்களில் சிறந்தவர் யாரென்றால், தங்கள் மனைவியருடன் அன்போடு நடந்து கொள்பவர்.” என்று கூறியுள்ளார்கள். (நூல் - முஸ்லிம்)
திருமணத்தின் உண்மையான அடிப்படை
மனித வாழ்வில் ஆண் பெண் என்பது தான் மாறுபாடே தவிர இன்ப துன்பங்களில் வேறுபாடு கிடையாது. உணர்வு உணர்ச்சி என்பவை இருவரிடமும் சம நிறைவு கொண்டது தான். இதனால் தான் திருமணத்திலும் கூட திருமண ஒப்பந்தம் ஆண் பெண் இருவரிடமும் பெற வேண்டியுள்ளது. இந்த சம நீதிக் கொள்கையை உணராத சில ஆண்கள், தான் ஆண் என்பதால் ஏதோ பெரிய அந்தஸ்துப் பெற்று விட்டதாகவும் பெண் என்பவள் அடிபட்டு இடிபட்டு பணிந்து போவதே அவள் வேலை என்றும் கருதி விடுகின்றனர். கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டவள் தான், என்றாலும் பெண்களையும் மனிதப்பிறவிகளாக மதித்து நடக்கும் பண்பு ஆண்களிடம் உருவாக வேண்டும். அதுதான் உண்மையான திருமணத்தின் அடிப்படையாகும். ஏனெனில் திருமணம் என்ற ஒரே பந்தத்துவத்திற்காக ஒரு பெண் பிறந்த இடத்தையும் மறந்து, பெற்று வளர்த்த தாய் தந்தையும், உடன் பிறந்தவர்களையும், உற்றார் உறவினர்களையும் துறந்து கணவனே கதியென்று காத்துக் கிடக்கின்றாள். “தாயின் காலடியில் சொர்க்கத்தைக் காணுங்கள்” என்ற நபி மொழியின் தத்துவத்தைத் தாங்கி நிற்பவர்கள் பெண்கள். இத்தகைய தாய்மையின் தூய்மையை அறியாத சில ஆண்கள் பெண்களை அடித்துத் துன்புறுத்தவும் செய்கின்றனர். இவர்களின் கோபத்திற்கும் தாபத்திற்கும் அப்பாவிப் பெண்கள் பலியாக வேண்டுமா? அத்தகையோர் மனிதர்களா?
“ஒரு முஃமினின் பரிபூரணமான ஈமான் என்பது அவரின் குண நலன்களை அழகாக்குவதாகும். உங்கள் குண நலன்களில் மிக அழகானதென்பது தங்கள் மனைவியரிடம் அழகான முறையில் நடந்துகொள்வதாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். - (அஹ்மது - திர்மதி)
திருமண பந்தம் சிறக்க - நல்ல குலங்கள் தழைக்க
“பெண்கள் விஷயத்தில் இறைவனைப் பயப்படுங்கள், ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பெண்களை அல்லாஹ்வின் அமானிதப் பொருளாகப் பெற்றிருக்கின்றீர்கள். அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு பெண்களின் கற்பை ஆகுமாக்கிக் கொண்டீர்கள்.” (அல்ஹதீஸ்)
“உங்கள் மனைவிகள் மீது உங்களுக்கு உரிமைகள் இருப்பது போல் மனைவிகளுக்கும் உங்கள் மீதும் உரிமைகள் உள்ளன.” - (புகாரீ)
“உங்களில் எவரும் தன் மனைவியை அடிமைகளைப் போல் அடித்துத் துன்புறுத்தி விட்டுப் பின்னர் மாலையில் அவளை நீ அணைத்து முத்தமிட வேண்டாம்” (அல் ஹதீஸ் - நூல் : புகாரீ, முஸ்லிம்) கணவன் மனைவி அன்பில் ஒருவருக்கொருவர் சமமாக நடந்து கொண்டால் தான் வாழ்க்கை சுவைக்கும், திருமண தத்துவம் சிறக்கும். நல்ல குலங்கள் தழைக்கும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.