பெருங்குற்றங்கள் - பரிகாரம்
மனிதன் தவறு செய்பவன்; மறதியாளன். ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தவறு செய்து திருந்தியவரே. இறைவன் படைப்பில் ‘இன்சான்’ (மனிதன்) தவறு செய்யும் தன்மையுடையவனாக இருந்த போதும், அத்தவறை நினைத்து வருந்தி, பாவ மன்னிப்பு கோரி, மீட்சிபெறக் கூடிய வழிவகைகளையும் இறைவன் நமக்கு அருளியுள்ளான்.
தவறுகளை, குற்றங்கள் - பாவங்கள் எனக் கூறுவோறும் உண்டு. குற்றம்கள் தன்மையைக் கொண்டு சிறு குற்றங்கள், பெருங்குற்றங்கள் எனப் பிரிக்கலாம். சிறு குற்றங்கள் தொழுகையின் மூலமாகவே மன்னிக்கப்பட்டுப் போகின்றன. ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் குலுக்கினார்கள். பழுத்த இலைகள் தானாக உதிர்ந்தன; இதைப் பற்றி சஹாபாக்களிடம் கூறும் போது “இந்த மரத்தின் பழுத்த இலைகள் உதிர்வது போல ஒரு முஃமினின் சிறுபாவங்கள் தொழுகையின் காரணத்தால் தானாக உதிர்ந்து விடுகின்றன” என நவின்றார்கள்.
பெரும் பாவங்கள் அவ்வாறு தானாக மன்னிக்கப் படுவதில்லை. அவற்றிற்கு முறைப்படி பரிகாரம் தேட வேண்டும் - இல்லையெனில் இறைவனின் தண்டனை உண்டு.
குர் ஆனில் எதைக் கண்டிப்பாகச் செய்யக் கூடாதென ஹராமாக்கப்பட்டிருக்கிறதோ அதைச் செய்வது பெரும் பாவமாகும். அவைகளில் சில கீழே குறிப்பிடப்படுகின்றன.
பெருங்குற்றங்களின் விளைவும் தண்டனையும்
1. இறைவனை மறுப்பதும், இறைவனுக்கு இணைவைப்பதும் :
எல்லாம் வல்ல அல்லாஹ் தனித்தவன்; இணை துணையற்றவன்; அவன் எவராலும் பெறப்படவுமில்லை, எவரையும் பெறவுமில்லை. அவனுக்கே வானம், பூமி அனைத்தும் சொந்தம். அவனை “இல்லை” என்று மறுப்பது ‘குஃப்ர்’ - அவனுக்கு இணைவைப்பது ‘ஷிர்க்’ இவையிரண்டும் மன்னிப்பில்லாத பெருங்குற்றங்கள். இக்குற்றத்திற்குப் பரிகாரம் கலிமா சொல்லி மீள்வது தான். அதாவது, இறைவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனின் திருத்தூதர் என்ற சொற்களை மனதார நம்பி, வாயால் மொழிந்து செயல் முறையில் எடுத்து நடப்பதே!.
அல் குர்ஆனில் இது பற்றி...
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர் ஆன் 4:48.)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கின்றார். (4:116)
எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் செல்லும் இடம் நரகம் தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை. (5:72)
2. பெற்றோர்களை நோவினை செய்தல் :
“தனது பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ இருந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்து, அதன் மூலம் சுவர்க்கம் புகாதவர்கள் நஷ்டமடையட்டும்” இதனை வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கூறி, மனித குலப் புனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆமீன் எனக் கூறியதாக ஹதீஸில் காணப்படுகிறது.
“பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்வது ஜிஹாத் செய்வதை விடச் சிறந்தது” என்பது நபி மொழியாகும். ஒரு முறை நபிகள், பெற்றோர்களை நோவினை செய்யக்கூடாது. அவர்கள் அறிவில் - கல்வியில் - குறைந்த தரமுள்ளவர்களாக இருப்பினும் சரியே!. பெற்றோர்கள் குரலைவிட உயர்த்திப் பேசக்கூடாது!. முதுமை காரணமாக அவர்களை சீ என்று சொல்லுவதும், விரட்டுவதும் கூடாது என்பது குர் ஆன் கட்டளையாகும்.
(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படியாகவும் கட்டளை யிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். (அல் குர்ஆன். 17:23.)
ஒரு முறை ஒரு சஹாபியின் மரணத் தருவாயில் ‘கலிமா” சொல்ல நா வராததால் பெருமானார் அவர்கள் இவருடைய பெற்றோரை வரவழைக்கச் செய்து கேட்ட போது, அந்த சஹாபியின் தாய் “இவன் எனக்குக் கொடுமைகள் இழைத்தான்; இவனை மன்னிக்க மனமில்லை” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்படியாயின், இவரின் மகன் நரக நெருப்பில் கிடந்து வேகட்டும் என்றார்கள். அதன் பின் தன் மகன் நரக நெருப்பில் கிடந்து வேகப் போகிறான் என்று எண்ணச் சகியாத அத்தாய் “அவனை நான் மன்னித்தேன்” என்றார்கள். அதன் பிறகு சஹாபியின் நாவில் ‘கலிமா’ உச்சரிப்பு வந்தது என அறிகிறோம். எனவே, பெற்றோரின் மனதை நோவினை செய்தால் நரகம் கிட்டும் என்பதே இதன் தாத்பரியம்.
பெற்றோர்கள் இடும் கட்டளைகளை ஏற்றுச் செயல்பட வேண்டும். பெற்றோர்கள் இறைவனை மறுத்தும், இறைவனுக்கு இணை வைத்தும் வணங்கச் சொன்னால் மட்டுமே நாம் பெற்றோர்கள் சொல்லக் கூடியவற்றைக் கேட்க வேண்டியதில்லை!. எனினும், அவர்களுக்குரிய பணிவிடையைக் குறைக்காது செய்து விட வேண்டும். இதனை திருக்குர் ஆன் ‘சூரயேலுக்மான்’ மூலமாக வலியுறுத்துகிறது.
“தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது” எனவும் “தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும் இருக்கிறது” எனவும் பெருமானார் கூறியுள்ளார்கள்.
பெற்றோர் மனது புண்படும் படிச் செய்தவர்கள் அவர்களிடம் மன்னிப்புக் கோரிப் பெற்று விட்டால் மட்டுமே இறைவனும் மன்னிப்பான். இதுவே அதற்குரிய பரிகாரம். இல்லையென்றால், மரணமடைந்த பின் ஆயிரம் பாத்திஹாக்கள் ஓதினாலும், நேரடியாக மன்னிப்புக் கேட்டதற்கு ஈடாகமாட்டாது. பெற்றோர்களுக்கு மாறு செய்தவர்கள் அதற்காக மனம் வருந்தி “சதக்கத்துன் ஜாரியா” மூலமாக தானமும், தருமமும் செய்து அதன் மூலம் பரிகாரம் தேட முயற்சிக்கலாம் என இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
3. கொலை செய்தல் :
உயிரைக் கொடுத்த அல்லாஹ் தான் உயிரை எடுக்கவும் உரிமையுள்ளவன். எனவே ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உயிரை அநியாயமாகப் போக்கக் கூடாது. அப்படியேப் போக்கினால் அதற்குப் பரிகாரம் மரண தண்டனையை ஏற்றுக் கொள்வது தான். இருப்பினும் பாதிக்கப்பட்ட அவர்கள் குடும்பத்தினர் விரும்பினால் ஈட்டுத்தொகை கொடுத்தும் பரிகாரம் தேடலாம். “எவனொருவன் ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்கு கூலி நரகமேயாகும்” (4:93)
4. தற்கொலை :
தானாக உயிரைப் போக்கிக் கொண்டால் நரகம் தான் தங்குமிடம். ஏனெனில் உயிரைக் கொடுத்த இறைவன் தான் போக்குவதற்கும் உரிமை உள்ளவன். இவனே அக்காரியத்தைச் செய்யும் போது இறைவன் வேலையில் இணைவைத்ததாகக் கருதப்படும். எனவே தற்கொலை செய்து கொள்ளுபவன் நரகத்தை விட்டு மீள முடியாது. “உங்களை நீங்கள் கொன்று விடாதீர்கள்!.”
5. மதுக்குடி - சூதாட்டம்
இது பற்றி குர் ஆனில்
2:219. (நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர் களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவைகளில் உள்ள பாவம் அவைகளிலுள்ள பயனைவிட மிகப் பெரிது.
5:90. நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:91. மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?)
இஸ்லாத்தில் மதுக்குடியும், சூதாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது.
இது பற்றிய நபிமொழி
போதையூட்டும் எந்தப் பொருளும் அது கொஞ்சமானாலும் அதிகமானாலும் முற்றிலும் ஹராம்.
மது அனைத்துப் பாவங்களுக்கும் திறவுகோல்.
ஒரு முஸ்லிம் மது அருந்தினால் அவனுடைய ஈமான் அவனைவிட்டு வெளியேறி அவன் தலைக்கு மேல் சென்று குடையைப் போன்று நிற்கிறது. அவன் அச் செயலை விட்டும் விலகி விட்டால் மீண்டும் அந்த ஈமான் அவனை வந்தடைகிறது. இஸ்லாமிய சட்டத்தில் மது அருந்தியவருக்கு 40 அல்லது 60 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும்.
6. விபச்சாரம் :
இது பற்றி குர் ஆன்
17:32. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபச்சாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
24:2. விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில் அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும்.
இது பற்றி நபிமொழி
ஒரு மனிதன் விபச்சாரம் செய்யும் போது ஈமான் அவனை விட்டும் நீங்கி விடுகிறது. திருமணம் செய்து கொண்ட ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்து, 4 சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டால் அவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.
7. பொய் சத்தியம் செய்தல் :
பொய் சத்தியத்தை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.
(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள். (அல்குர்ஆன். 68:10.)
நபி மொழி :
“பொய் ஈமானைத் தின்று விடும், எப்படி நெருப்பு விறகை எரித்து விடுகிறதோ அதேபோல.”
8. திருடுதல் :
இஸ்லாத்தில் திருட்டு பெரும் பாவமாகும். ஏனெனில் திருட்டுத் தொழிலின் முடிவு கொலையில் முடியும்.
நபி மொழி :
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஒருவன் மூன்று வெள்ளிக் காசுகளே விலையுள்ள கேடயத்தைத் திருடியதற்காக, திருடியவனின் கையை வெட்டச் செய்தனர். (புகாரி, முஸ்லிம்)
திருடனுக்கு திருடியதற்குரிய தண்டனையை அளித்த பின், திருடிய பொருளுக்குரிய இழப்புத் தொகையை அளிப்பது அவன் மீது கடமையில்லை. (நஸயீ)
9. வட்டி :
வட்டி ஏழைகளின் இரத்தத்தை சிறிது சிறிதாக உறிஞ்சி அவர்களைத் துயரக்கடலில் மூழ்க வைப்பதால் இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது.
வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள். காரணமாவது: "வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியது தான். (வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதைவிட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்று போனது அவருக்குரியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கின்றது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டு விட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அல்குர் ஆன்.2:275.)
நபி மொழி :
“வட்டியை உண்ணுபவர்” உண்ணத் தருபவர். அதற்கு சாட்சிகளாக இருப்பவர், எழுதுபவர் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான்.
10. அவதூறு கூறுதல் :
24:4. எவனேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவன் கொண்டு வராவிட்டால் அவனை நீங்கள் எண்பது கசையடிகள் அடியுங்கள். பின்னர், அவன் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக இத்தகையவர்கள் பெரும் பாவிகள்.
எனவே கற்புள்ள பெண்ணின் மீது அவதூறு கூறுதல். பிறரைப்பற்றி அவதூறு, புறம் பேசுதல் இறந்தவர்களைப் பற்றி அவதூறு கூறி ஏசுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
பெரும் பாவங்கள் பதினேழு :
திரு நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களினாலும், இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத், இப்னு உமர் (ரழி) முதலிய அறிஞர்களிடமிருந்து நான் இந்த முடிவுக்கு வந்தேன்.
அந்த பதினேழு பாவங்களில் நான்கு பாவங்கள் உள்ளத்தோடு தொடர்பு கொண்டவை. (1)இணைவைத்தல், (2)குற்றத்தையே தொடர்ந்து செய்தல் (3)இறையருள் கிட்டாது என எண்ணுதல், (4)இறைவனுக்கு அஞ்சாதிருத்தல்.
இன்னும் நான்கு பாவங்கள் நாவோடு தொடர்பு கொண்டவை. (5)பொய்சாட்சி கூறுதல், (6)நல்ல பெண்களின் மீது அவதூறு போடுதல், (7)பொய் சத்தியம் செய்தல், (8)ஏகத்துவத்திற்கு எதிரான மந்திரம் ஜபித்தல் முதலியன.
இன்னும் மூன்று பாவங்கள் வயிற்றினால் ஏற்படுகின்றன அவைகள் (9)சாராயம் முதலிய போதைப் பொருள்களை அருந்துதல் (10)அநாதைகளின் பொருளைப் புசித்தல், (11)வட்டி வாங்கி சாப்பிடுதல்.
மேலும் இரண்டு பாவங்கள் மர்மத் தலத்தினால் ஏற்படுகின்றன. (12)விபச்சாரம் செய்தல் (13)ஆண் புணர்ச்சி செய்தல்.
மற்றும் இரண்டு பாவங்கள் கரங்களினால் ஏற்படுபவை. (14)கொலை செய்தல் (15)திருடுதல்.
இன்னும் ஒன்று கால்களைப் பொறுத்தது. (16)அறப்போர்க்களத்திலிருந்து ஒடுதல்.
இன்னும் ஒன்று உடல் முழுமைக்குமே தொடர்புடையது. (17)பெற்றோரை இம்சித்தல். -அபூதாலிப்மக்கீ (ரஹ்) (ஆதாரம் : பாவமன்னிப்பு பக்கம் 50)
ஏழு பெரும் பாவங்கள்
பெருமானார் தம் தோழர்களை நோக்கி “ஏழு பெரும் பாவங்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்” எனக் கூறிய போது அல்லாஹ்வின் தூதரே! அவையாவை என வினவினார்கள்.
அதற்கு அண்ணலார்.
பரிகாரம் (பாவமன்னிப்பு) ‘தெளபா’
பெரும் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமெனில் கீழ்கண்ட நடைமுறைகளைப் பேண வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே “தெளபா” எனும் பாவமன்னிப்பு பரிகாரம் கிடைக்க வாய்ப்புண்டு.
தவறு செய்தவர்கள் அதன் தரத்தினைக் கண்டு அது சிறு குற்றமா? அல்லது பெருங்குற்றமா? என அதற்கென்று கூறப்பட்டுள்ள வழிமுறைகளைக் கடைபிடித்து பாவ மன்னிப்புப் பெறும் நல்லடியார்கள் பாவம் செய்யாதவரைப் போன்று ஆகிவிடுகிறார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.