Home


பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு)

        பிலால் இப்னு ரபாஹ் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.580-கி.பி.640) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிகவும் நம்பகமான மற்றும் விசுவாசமான தோழர்(சஹாபாக்)களில் ஒருவர். அபிசீனியா நாட்டை சேர்ந்தவர், இவர் மக்காவில் பிறந்தார். அடிமைகளாக இருந்தவர்களில் முதன் முதலாக இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இவர்களே ஆவார். மக்காவில் உமைய்யா பின் கலஃபிடம் அடிமையாக பல சித்திரவதைகள் படுவதை காண சகிக்காமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறி விலைக்கு வாங்கி உரிமை விட பணித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தொழுகைக்கு அழைப்பொழி முழங்க முதன் முதலாக நியமிக்கப்பட்ட ’முஅத்தீன்’  ஆவார்கள்.

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்வு

        இவர்களின் தந்தை ரபாஹ் அல் ஹபாஷி அபிசீனியா (எத்தியோப்பியா)வில் அடிமையாகப் பிடிக்கப்பட்டு மக்கா கொண்டு வரப்பட்டார். அன்னையின் பெயர் ஹமாமா. இவர்களுக்கு மக்காவில் முதல் குழந்தையாக  கி.பி.578-582 காலப்பகுதியில் பிலால் அவர்கள் பிறந்தார். பின்னர் இவர்களுக்கு காலித் என்ற சகோதரர் பிறந்தார். இவர்கள் நீக்ரோ இனத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் அடிமைகளாகவே இருந்தனர்.

        பிலால் (ரழி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். குறைஷிகளில் இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன். அடிமையாயிருந்த பிலால் (ரழி) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார்.  

        அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக்கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் திளைத்திருந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர். அபரிதமான இணைவைப்பாளர்களுக்கு இடையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரின் நிலை பரிதாபகரமாக இருந்தது. இணை வைப்பாளர்களின் கொடுமைக்கும் சித்தரவதைக்கும் ஆளாயினர்.

இந்த வரலாற்றில் ஒரு பகுதி உங்களுக்காக இன்னிசையில்

இணைவைப்பாளர்களின் கொடுமை

        உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால்(ரழி) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து தம் வம்சத்தாரின் துணையுடன் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரலி) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்ச நிலையை உணர்ந்த போதும் பிலால் (ரலி) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனை அளவும் மாறவில்லை. அவர்களின் உடல் சித்தரவதையால் சின்னா பின்னப் படுத்தப்பட்டு கசையடி, அடி உதை என தண்டனைகள் அதிகரிக்கப் பட்டும் கூட “'அஹதுன் அஹதுன்" என்றே கூறினார்கள்.

அடிமைத் தளையிலிருந்து விடுதலை

        இணைவைப்பாளர்களின் இத்தண்டனைகள் சித்தரவதைகள் யாவுமே பிலால் (ரழி) அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கையை மேன் மேலும் உறுதிப் படுத்தவே உதவியது. அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரழி) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்ர் (ரழி) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால் (ரழி) அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் (ரழி) அவர்களை அபூபக்கர் (ரழி) அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில் கூறுகிறான் இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன் எனக் கூறுகிறான். பிலால் (ரழி) அவர்களுக்காக வேண்டி நீ 1000 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என அபூபக்ர்(ரழி) அவர்கள் அவனுக்கு பதில் அளித்தார்கள். பின்னர் பிலால் (ரழி) அவர்களை அபூபக்கர் (ரழி) அவர்கள் விடுதலை செய்தார்கள். இதிலிருந்து இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் இருந்தனர்.

மதீனாவில் பிலால் (ரழி)

        மதினாவிற்கு இடம் பெயர்ந்த பின் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த பிலால் (ரழி) அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் ’பாங்கு’ கூறும் பணிக்கு நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரழி)யை நியமிக்கிறார்கள். அபிஸீனிய அடிமைக்கு இத்தனை பெரிய அந்தஸ்த்தா? என இணைவைப்பாளர்கள் எரிச்சலடைந்தனர். முதல் இமாம் நபி (ஸல்) முதல் முஅத்தீன் பிலால் (ரழி) என நாம் அறிகிறோம்.

“பிலாலின் ’பாங்கு’  அர்ஷு வரைக் கேட்குமே,

        இஸ்லாத்தின் முதல் முஅத்தினாக நியமிக்கப் பெற்ற பேறு இவர்களுடையதாகும். ஒரு தடவை வேறொருவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று பாங்கு (தொழுகைக்கான அழைப்பொலி) எழுப்ப, சற்று நேரம் கழித்து ஜிப்ரில் (அலை) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இன்னும் ஏன் பாங்கு கூறவில்லை?” என்று வினவினர். “வேறொருவர் இன்று பாங்கு கூறினாரே” என்றனர் நபி(ஸல்) அவர்கள். அது கேட்டு ஜிப்ரீல், “பிலாலின் ’பாங்கு’  அர்ஷு வரைக் கேட்குமே, இன்று கேட்கவில்லையே என்று தான் வினவினேன்” என்றனர். இதிலிருந்து இவர்களின் மாண்பினை உணரலாம்.

பிலால் (ரழி) மீதான நபி (ஸல்) அவர்களின் அளப்பெரிய அன்பு

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்கள் மீது கொண்டிருந்த அன்போ அளப்பரியது. “அரேபியாவில் நானே முதல் முஸ்லிம். அபிசீனியாவில் பிலாலே முதல் முஸ்லிம்” என்று இவர்களை அவர்கள் புகழ்ந்து கூறினர். ஒரு தடவை இவர்கள் நபி (ஸல்) அவர்கள் வழக்கமாகப் பால் அருந்தி வந்த கோப்பையைக் கை தவறிக் கீழே போட்டு உடைத்து விட்ட பொழுது, இவர்கள் மீது பெரிதும் வெகுண்ட ஆயிஷா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வந்ததும், “நீங்கள் காட்டும் அதிகமான அன்பின் காரணமாகவே பிலால் கவனக் குறைவாக நடந்து கொண்டார். அவரை கண்டித்து வையுங்கள்: அல்லது அவரை விலக்கி விடுங்கள்” என்று கூறினார்.

அது கேட்டு அண்ணல், “ஆயிஷா! ஒருவர் ஒரு செயலை ஆற்றும்பொழுது அதில் அவருடைய கவனம் குறைந்தால், அது வேறொன்றில் போய்ப் பதிந்து விடுகிறது என்று பொருள். பிலால் அப்பணியை ஆற்றும் பொழுது அவருடைய கவனம் என்னைப் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும்; என் மீது தான் சென்றிருக்க வேண்டும். அதற்காக வேண்டியா அவரை விலக்குமாறு கூறுகிறாய்? ஒரு வேளை பிலாலை விலக்குவதா, ஆயிஷாவை விலக்குவதா என்ற பிரச்சினை ஏற்படின் உன்னையே விலக்கி விடுவேனே யன்றிப் பிலாலை ஒரு போதும் விலக்க மாட்டேன்” என்றனர்.

குறைஷிகளைச் சிறிது குறைவாகப் பேசியதற்காக நபி தோழர் ஒருவர் பிலால் (ரலி) அவர்கள் மீது சினந்து, அச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறிய பொழுது, “ எவருடைய மனத்தை நோவினை செய்வது அல்லாஹ்வையும் அவனுடைய தூதுவரையும் வருத்தமுறச் செய்யுமோ அவருடைய மனத்தையா நீர் நோவினைச் செய்தீர்? என்று அத்தோழரிடம் சொன்னார்கள் அண்ணல். அக்கணமே அவர் பிலால் (ரழி) அவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

        இவர்களைக் கலீபா உமர் (ரழி) அவர்கள் சையிதினா (எங்களின் எசமானே) என்று அழைத்தனர். உமர் (ரழி) அவர்களின் ஆணைப்படி காலித் (ரழி) அவர்களை விசாரிக்க சென்ற இவர்கள், காலித் (ரழி) அவர்களின் தலைப்பாகையைத் தம் கையாலேயே வெடுக்கென எடுத்து விசாரித்த பின்னர் காலித் (ரழி) அவர்கள் நிரபராதி என்பதை அறிந்ததும், தங்களின் கைகளால் அவர்களுக்குத் தலைப்பாகை கட்டிக் கௌரவித்தார்கள்.

போர்களில் பங்களிப்பு

        பிலால் (ரழி) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை (முன்னாள் எஜமான்) பிலால் (ரழி) அவர்கள் கொன்றார்கள். நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட அனைத்து போர்களிலும் கலந்து கொண்டார்கள். மேலும் மக்கா வெற்றி கொள்ளப் பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஅபாவில் நபி(ஸல்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கிய வரும் அவரே.

மதீனாவைக் காணச் சகியாதவர்

        நபிகளாரின் மரணத்திற்குப் பின் அண்ணல் நபிகளின் மீது கொண்ட அளவு கடந்த பற்றினால் பாங்கு சொல்லும் போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நினைவுக்கு வருவதை உணர்ந்த பிலால் (ரழி) பாங்கு கூற மறுக்கிறார்கள். தான் சிரியா சென்று ஜிஹாத் செய்யப்போவதாக அபூபக்கர் (ரழி) யிடம் சொல்கிறார்கள். அபூபக்கர் (ரழி) பிலால் (ரழி) அவர்களை பாங்கு கூறுமாறு உத்தரவிடுகிறார்கள். அதற்கு பிலால் (ரழி) அவர்கள் நீர் எம்மை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது அல்லாஹ்வின் அருளை நாடியா? அல்லது உம் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியா? என்று வினவினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களுக்கு சிரியா செல்ல அனுமதி தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மறைவுக்கு பின் மதீனாவைக் காணச் சகியாதவர்களாய் சிரியா சென்று, அங்குள்ள ‘கூலான்’ என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

பின்னர் வாழ்நாளில் இரண்டே தடவை பாங்கு ஒலித்தது

        இதன் பின் இவர்கள் தம் வாழ்நாளில் இரண்டே தடவை தாம் பாங்கு சொல்லியுள்ளனர். உமர் (ரழி) அவர்கள் ஜெரூஸலம் வந்திருந்த பொழுது ஒரு நண்பகல் (லுஹர்) தொழுகைக்கு கலீபா முதல் அனைவரும் வேண்டிக் கொண்ட பொழுது இவர்கள் பாங்கு சொன்னார்கள்.

இந்த வரலாற்றில் ஒரு பகுதி இன்னிசையில் இது 2 வது பாடல்

ஒரிரவு நபி (ஸல்) அவர்கள் இவர்களின் கனவில் தோன்றி, “ பிலாலே! என்னிடம் நீர் வந்து சேரும் நேரம் இன்னும் வரவில்லையா? என்று வினவினர். அதற்கிணங்க இவர்கள் மதீனா சென்ற பொழுது நபி (ஸல்) அவர்களின் பேரர்களான ஹஸனும் ஹுஸைனும் பெரிதும் வேண்டிக் கொண்டதன் பேரில் இவர்கள் வைகறைத் தொழுகைக்கு பாங்கு சொன்னார்கள். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் பிலால் (ரழி) அவர்களுக்கும் உணர்ச்சி மேலிட்டவர்களாக, நாத் தழுதழுத்தது; முச்சுத் திணறியது. மக்களும் அப்படியே, அவர்களின் கண்கள் குளமாயின. ஒருவாறு இவர்கள் பாங்கு சொல்லி முடித்தார்கள்.

இறுதி கால வாழ்க்கை

        இதன் பின் டமாஸ்கஸ் நகரம் சென்று வாழ்ந்த இவர்கள், பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரழி) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. கி.பி 640 ஆம் ஆண்டில் தம் 70 வதுவயதில் சிரியாவின் தலை நகரான டமாஸ்கஸில் இயற்கை எய்தினார்கள். அங்குள்ள பாபுஸ் ஸகீர் என்ற கோட்டை வாயிலின் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டனர். இவர்களின் அடக்கவிடத்தில் எவ்விதக் கட்டிடமும் எழுப்பப்படவில்லை. சாதாரணத் துணி ஒன்றே போர்த்தப் பட்டுள்ளது.

மிஃராஜ்சென்று திரும்பிய நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது? என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்அத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...