Home


ஜகாத்

        முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளுள் “ஜகாத்” ஒரு கடமை. திருக்குர் ஆனில் இக்கடமை பற்றி பல்வேறு இடங்களில் வலியுறுத்திக் கூறப்படுகிறது. “அகீமுஸ்ஸலாத வ ஆதுஜ் ஜகாத்” (தொழுது வாருங்கள், ஜகாத் கொடுங்கள்) என்ற சொற்றொடர் குர் ஆன் முழுவதிலும் பரவியிருக்க காணலாம். இதனால், தொழுகை முதற்பெரும் கடமையென்றால் ‘ஜகாத்’ அடுத்த அந்தஸ்திலுள்ளது என்பது புலனாகிறது.

        ஜகாத்துக் கொடுப்பதற்குத் தகுதி படைத்த ஒருவர், ஜகாத் பர்லு; என்பதையே மறுப்பாராயின் அவர் முஸ்லிம் அல்ல என்றும், ஜகாத் பர்லு என்பதை ஏற்கும் ஒருவர் அதைச் செலுத்தாதிருந்தால் பெருங்குற்றவாளி என்றும் குர் ஆன், ஹதீது, இஜ்மாஉ இவைகளின் விளக்கத்தால் தெளிவாகிறது.

ஜகாத்தின் வரலாறு

        ஹிஜ்ரத்துக்கு முன்னதாகவே மக்காவில் முஸ்லிம்கள் மீது தொழுகையுடன் ஜகாத்தும் கடமையாக்கப்பட்டு விட்டது என்பதற்கு குர் ஆன் ஹதீதில் ஆதாரங்கிடைக்கின்றது. மக்கீ வசனங்களில் ஜகாத் பற்றிய பிரஸ்தாபமிருக்கிறது. தப்சீர் இப்னு கதீர் நூலாசிரியர் போன்றோரும் இதை ஊர்ஜிதம் செய்கின்றனர். ஆயினும் ஜகாத் கடமையாகும் பொருள், ஜகாதின் அளவு, ஜகாத் கொடுக்க வேண்டிய இடங்கள், அதை வசூலிப்பதற்குரிய அரசாங்க ஏற்பாடு முதலியவைகள் படிப் படியாக மதீனா தய்யிபாவில் தான் சட்டமாயின.

        ஹிஜ்ரி இரண்டாவது வருடம் ஸதகத்துல் பித்ரு கடமையாயிற்று. அப்பால் ஜகாத் வரி வசூல் செய்வதற்காக மதீனாவில் நிருவனமாயிருந்த அரசாங்கத்தால் அதிகாரிகள் (உம்மால்கள்) நியமிக்கப் பட்டனர். அவர்களால் ஜகாத்தின் சகல வகைப் பொருட்களையும் வசூலிக்கப்பட்டு பைதுல் மாலில் சேகரஞ் செய்து ஏழை எளியோர்க்குச் செலவிடும் அறப்பணிகள் ஒழுங்காக நடைபெற்றன.

        ஜகாத் பொருள் சம்பந்தமான வணக்கம். இஸ்லாமிய பைத்துல்மால் அவற்றை வசூலித்தாலும், வசூலிக்காவிடினும், பொருள் வசதி படைத்தவர் அதை முறையுடன் விநியோகித்து விடுவது அவர் மீது கடமை. கடந்த கால நபிமார்கள் கொணர்ந்த மார்க்கங்களிலும் தொழுகை போன்றே ஜகாத்தும் விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும், அந்த மார்க்கங்களில் ஜகாத்துப் பொருளை ஏழை எளியோர்க்குச் செலவிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஜகாத்துப் பொருள்களைக் கொணர்ந்து ஒரிடத்தில் குவித்து வைத்து விடுவர். வானத்திலிருந்து இடி விழுந்து அதைக் கரித்துப் பொசுக்கிச் சென்று விடும். இது தான் ஜகாத் அங்கீகரிக்கப்படுவதற்கு அறிகுறியாயிருந்தது.

        ஆனால், நம்மவருக்கு அல்லாஹுதஆலா  தனது தனிப் பெருங்கருணையால், அந்த பொருளை முஸ்லிம்களிலுள்ள ஏழை எளியோர்க்குச் செலவிட அனுமதித்தான். இந்த ஜகாத் திட்டம் நம் சமுதாயத்தவரின் வறுமையை, துன்பத்தைப் போக்குவதற்கு எவ்வளவு அனுகூலமான திட்டம் என்றால், அதைக்கணக்கிட்டுச் சேமித்து இஸ்லாம் கூறும் துறைகளில் செலவிடுவோமாயின்; சில ஐரோப்பியர் கூறுவதேபோல் எந்த ஒரு முஸ்லிமும் பசித்தவராக, நிர்வாணியாகக் காணப்பட மாட்டார் என்பது திண்ணம்.

ஜகாத் விநியோகத்தில் கவனக்குறைவு

        தற்காலத்தில் முஸ்லிம்கள் மார்க்கத் துறையில் மிகவும் பின் தங்கியிருப்பதால் பலர் முற்றிலும் ஜகாத் கொடுப்பதில்லை, சிலர் ஏனோ தானோ என்று ஜகாத்தின் பேரால் ஒரளவு செலவிடுகின்றனர். இவ்விதம் செலவிடுபவர்களும் செலவிட்டால் போதுமானது எனக் கருதுகின்றனர். உரிய இடத்தில் அப்பொருளை செலவிடுவதில்லை. குர் ஆன் மஜீதில் ஜகாத்து கொடுத்து விட்டால் மத்திரம் போதுமானது எனக் கூறப்படவில்லை. பிறகு அப்பொருளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப் படுகிறது. “ஆதுஜ் ஜகாத்” என்பதற்கு இது தான் பொருள். கடன் யாரிடம் வாங்கினோமோ; அவர் வசம் அந்தக் கடனை திருப்பிக் கொடுத்தால் தானே கடன் நிறைவேறும். தெருவில் செல்லும் ஒருவர் வசம் கொடுத்து விட்டால் கடன் நிறைவேறி விடுமா? இவ்விதமே ஜகாத் என்னும் கடனையும் உரியவர்களிடம் செலுத்த வேண்டும். இன்று முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் பெரிதும் கவனக் குறைவாயிருக்கின்றனர். பெறுவதற்கு உரிமையாளர்களைத் தேடிப் பிடித்துக் கொடுக்காமல் தகுதியில்லாதோரிடம் போய் பணம் சேர்ந்து விடுகிறது. உரிமையாளர்கள் வறுமையால் அவதிப்படுகிறார்கள்.

ஜகாத்துக் கொடாதோரின் கதி

  1. “எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.” (9:34) (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). (அல்குர் ஆன்; 9:35) இவ்விதம் வல்ல அல்லாஹ் எச்சரிக்கிறான்.
  2. நம் அருமைப் பெருமானார் (ஸல்) அவர்கள் திருவுளமாகிறார்கள், “எந்த சமூகம் ஜகாத்து கொடுக்காதிருக்கிறதோ, அவர்களை அல்லாஹ் பஞ்சத்தால் சோதிக்காமல் விடுவதில்லை.
  3. அல்லாஹ் ஒருவருக்கு பொருள் கொடுத்திருக்க, அவர் அதற்குரிய ஜகாத்தைச் செலுத்தவில்லையாயின் அவர் விஷயத்தில் அந்த பொருளை மூர்க்கமான மலைப்பாம்பின் உருவமாக்கப்படும். அதற்கு இரு விஷப்பற்களிருக்கும். அது மறுமை நாளில் (அவன் மேல்) மாலையாகச் சுற்றிக் கொள்ளும், பிறகு தன்னுடைய இரு அலகுகளாலும் அவனைப் பிடித்துக் கொண்டு நான் உனது சேமிப்பு என்று கூறும். (நூல். புகாரி)
  4. அனுதினமும் அதிகாலையில் இரு மலக்குகள் வானத்திலிருந்து இறங்குகின்றனர். ஒருவர், “யா அல்லாஹ் தருமசீலனுக்கு அவன் பொருளுக்குப் பிரதி கூலம் கொடு” என பிரார்த்திக்கிறார். மற்றொருவர், “யா அல்லாஹ்! உலோபிக்கு அழிவைக் கொடு,” என சாபமிடுகிறார். (நூல், புகாரி, முஸ்லிம்)
  5. ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரு பெண்களின் கரங்களில் தங்கக்காப்புகளைக் கண்டு “நீங்களிருவரும் இதற்குரிய ஜகாத்தை செலுத்துகிறீர்களா?” எனக் கேட்டார்கள், ‘இல்லை’ என அவ்விருவரும் பதிலுரைத்தனர். “இதற்குப் பதிலாக உங்களிருவருக்கும் நெருப்புக் காப்புகள் அணிவிக்கப்படுவதை விரும்புகிறீர்களா?” என பெருமானார் கேட்டார்கள். ‘இல்லை’ என்றனர் அவ்விருவரும். அவ்விதமாயின் இதற்குரிய ஜகாத்தைச் செலுத்தி விடுங்கள் என நல்லுபதேசஞ் செய்தார்கள்.  (திர்மதி)
  6. எந்தப் பொருளிலேனும் ஜகாத் கலந்துவிடுமாயின் அந்தப் பொருளை அந்த (ஜகாத்) அழித்திடாமல் விடுவதில்லை.  (நூல் ; புகாரி)

        ஜகாத்துச் செலுத்தாதோருக்கு இத்தகைய கடின துன்பங்கள் இருக்கின்றன. ஜகாத்துச் செலுத்துவோருக்கு எண்ணிறைந்த பாக்கியங்கள் கிடைக்கின்றன. அல்லாஹ்வின் அருளுடையோர் ஜகாத்துச் செலுத்த சிறிதும் தயங்கமாட்டார்கள்.

ஜகாத் கடமையாகும் இனங்கள்

        அல்லாஹு தஆலா, மனிதன் மீது பொருளுக்குச் செலுத்த வேண்டிய கடமையினை மிகக் குறைவாகவே விதித்திருக்கிறான். இது ஆராய்வோருக்கு நன்கு புலனாகும்.

முதலாவது எல்லா இன பொருட்கள் மீதும் ஜகாத்து கடமையாயில்லை, நடைமுறையில் எவை எவை வளரும் பொருளாகக் கருதப்படுகின்றனவோ அவை மீது தான் ஜகாத்து கடமை. 1.வியாபரச் சரக்குகள்,  2.கால்நடைப் பிராணிகள், 3.தங்கம், வெள்ளி, முதலியவற்றை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். தங்கம், வெள்ளியை இஸ்லாம் வியாபாரத்துக்கு அநுகூலமானவையாகக் கருதுவதால், நகையாகச் செய்தோ கட்டி கட்டியாகவோ வேறு எந்த ரூபத்திலோ வைத்திருந்தாலும் அவை மீது ஜகாத்து கடமையாகி விடுகிறது. “பொருளாதார தேக்கம்” ஏற்பட்டு விடக் கூடாதென்பதே இதன் பிரதான தத்துவம். மேற்கூறப்பட்ட மூன்று வகைப் பொருட்களைத் தவிர வியாபார நோக்கமில்லாமல், கட்டி வைத்திருக்கின்ற வீடு, கடை, பண்ட பாத்திரங்கள், பர்னிச்சர்கள் மற்றும் தட்டு முட்டு சாமான்கள், மில்கள், தொழிற்சாலைகள், மிஷினரி சாமான்கள் இவை எவ்வளவு தான் விலை மதிப்புள்ளவையாயினும் இவை மீது ஜகாத்து கடமையில்லை. ஆனால் விற்பனைக்காக இவைகளை வைத்திருந்தால் ஜகாத்து கடமையாகிவிடும்.

இரண்டாவதாக, மேற்கூறப்பட்ட மூன்று வகைப் பொருட்களுக்கு ஒருவர் சொந்தக்காரரானவுடன் அவர் மீது ஜகாத்து கடமையாகி விடுவதில்லை. பிறகு ஒரு வருட முழுவதும் அவர் இஷ்டம் போல் செலவு செய்த பின்னர், வருடக் கடைசியில் எவ்வளவு மிஞ்சுகிறதோ அவற்றில் நாற்பதில் ஒரு பங்கு ஜகாத்து கடமையாகிறது. இதனால் ஜகாத்து, இன்கம்டேக்ஸ் போன்று வருமானத்திற்குரிய வரி அல்ல, பின் அது மூலதனத்துக்குரிய வரி என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு வருடத்திற்குள் ஒருவர் தன் மூலதனம் பூராவும் செலவிட்டு விட்டாலும், அவர் மீது ஜகாத்து கடமையாகாது. வருமான வரிச் சட்டம் இத்தகையது அல்ல.

யார் மீது ஜகாத் கடமை? அதற்கான நிபந்தனைகள்.

 இஸ்லாம் மார்க்கம், மக்களனைவர் மீதும் ஜகாத்து விதியாக்கவில்லை. அடியிற்காணும் நிபந்தனைகள் உடையவர் மீதே ஜகாத்து கடமை. இந்த நிபந்தனைகளில் ஒன்று தவறிடினும் அவர் மீது ஜகாத்து விதியாகாது.

ஜகாத்தின் நிபந்தனைகள்

  1. ஜகாத்து செலுத்துபவர் முஸ்லிமாயிருத்தல் வேண்டும். காபிரின் மீது கடமையில்லை.
  2. பருவமெய்தி இருத்தல் வேண்டும். சிறுவர் சிறுமியரின் பேரால் எவ்வளவு தான் பொருளிருந்தாலும் அவர்களுடைய (வலீ) போஷகர் மீது ஜகாத் கடமை இல்லை. (ஹிதாயா)
  3. சுய அறிவுடையவராயிருத்தல் வேண்டும். வருடம் பூராவும் பயித்தியமாயிருப்பவர் மீது ஜகாத்து கடமை இல்லை. (துர்ருல் முக்தார்)
  4. சுதந்திரராயிருத்தல் வேண்டும். அடிமை மீது ஜகாத்து கடமை இல்லை.
  5. பொருளின் மீது பூரண அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும். ஒருவர் கைவசம் பொருளிருக்கிறது. ஆனால் அவர் அந்த பொருளுக்குச் சொந்தக் காரராயில்லை யாயின் அவர் மீது ஜகாத்து கடமை இல்லை.    (துர்ருல்முக்தார்)
  6. பொருளின் (நிஸாபின்) மார்க்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுள்ளதாயிருக்க வேண்டும். நிஸாபுக்கும் குறைந்த பொருளாயிருப்பின் ஜகாத்து கடமையில்லை. நிஸாப் பற்றிய விளக்கம் பின்னால் வரும்.
  7. இன்றியமையாத தேவைப் பொருட்கள் நீங்கலானவை மீதே ஜகாத்து கடமை. குடியிருக்கும் வீடு, அணிவதற்குரிய ஆடைகள், புழக்கத்திற்குரிய பாத்திரங்கள், பர்னீச்சர்கள், சவாரிக்குரிய மோட்டார் வண்டிகள், முதலியவை மீது ஜகாத்து கடமை இல்லை.
  8. ஒரு வருடம் பூர்த்தியாயிருக்க வேண்டும். பொருள் கிடைத்தது. ஒருவருடம் பூர்த்தியாயிருக்க வில்லையாயின்  அந்த பொருள் மீது ஜகாத்தில்லை.  (ஹிதாயா)
  9. வளரும் பொருளாயிருக்க வேண்டும். வியாபாரச் சரக்கு, தங்கம், வெள்ளி, கால்நடைப் பிராணிகள் வளரும் பொருட்களாகும். வளரும் பொருளாயில்லாதவை, தேவைக்கு மிஞ்சியவையாயிருப்பினும் அவை மீதும் ஜகாத்து கடமையில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள், கார்கள், பண்டபாத்திரங்கள், பர்னீச்சர்கள் இருந்தாலும் இவை மீதெல்லாம் கடமையில்லை.

        இந்த முழு விபரங்களும், பதாயிஉஸ்ஸநாயிஃ மற்றும் பிக்ஹு கிரந்தங்களில் இடம் பெற்றிருக்கின்றன. இனி ஒவ்வொரு வகைப் பொருட்களின் விரிவான சட்டங்களை ஆராய்வோம்.

தங்கம், வெள்ளி, ரொக்க ரூபாய்களுக்குரிய ஜகாத்து

        தங்கத்தின் மீது ஜகாத்து கடமையாவதற்குரிய (நிஸாபு) அளவு 82 ½ கிராம் அதாவது 10 ¼ பவுன். வெள்ளிக்குரிய (நிஸாபு) அளவு 612 கிராம். ஒருவரிடம் 612 கிராம் வெள்ளி அல்லது 82 ½ கிராம் தங்கம் ஒருவருடம் பூராவும் கைவசமிருக்குமாயின் அவை மீது ஜகாத்து (பர்லு) கடமை. அதை விடக் குறைந்த அளவின் மீது ஜகாத்து கடமையில்லை. கூடினால், ஜகாத்து பர்லு. (ஹிதாயா)

        தங்கம், வெள்ளி, ஆபரணங்கள், பாத்திரங்கள், தங்கம், வெள்ளி சாமான்கள் அனைத்தின் மீதும் ஜகாத் கடமை. இவை புழக்கத்திலிருந்தாலும் சரிதான். சுருங்கக் கூறின், தங்கம், வெள்ளி சாமான்கள் அனைத்தின் மீதும் ஜகாத்து கடமை. ஆனால் (நிஸாப்) அளவை விட குறைந்திருப்பின் கடமையில்லை.

ஒருவரிடம் ஜகாத் கடமையாகும் அளவு நிறைவான தங்கமோ வெள்ளியோ இல்லை. ஆனால் தங்கம் ஓரளவும், வெள்ளி ஓரளவும் இருக்கிறது. இரண்டின் விலையும் சேர்த்து பார்த்தால் 612 கிராம் எடையுள்ள வெள்ளிக்குச் சமமாக இருக்கிறது. அவ்விதமாயின் அவை மீது ஜகாத் கடமை.

ஒருவரிடம் 612 கிராம் வெள்ளி விலை (ரூபாய் 45,288) அல்லது  82 ½ கிராம் தங்கத்தின் விலைக்கு சரி நிகரான ரொக்க ரூபாய் கைவசமிருக்குமாயின் அவை மீதும் ஜகாத் பர்லாகும். ஏனெனில் ரொக்க நாணயங்களுக்கும் தங்கம் வெள்ளியின் சட்டமே தவிர வேறு அல்ல.

வியாபார சரக்குகளுக்குரிய ஜகாத்

        வியாபார சரக்கு என்பது விற்பனையின் நோக்கத்தில் (நிய்யத்தில்) கொள்முதல் செய்த சரக்குகளாகும். ரொக்க ரூபாய்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட (நிஸாப்) அளவு தான் வியாபாரச் சரக்குகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சரக்குகள் 612 கிராம் வெள்ளி அல்லது 82½ கிராம் தங்கம் விலை மதிப்புள்ளதாகவோ அதை விட கூடுதலாகவோ இருக்குமாயின் ஒரு வருடம் பூர்த்தியானவுடன் நாற்பதில் ஒரு பங்கு ஜகாத்து செலுத்தி விட வேண்டும்.

        கடைகளில் சரக்கு வைப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற அலமாரிகள் புழக்கத்திற்குரிய பர்னீச்சர்கள் மீதெல்லாம் ஜகாத்து கடமையில்லை. பிரிண்டிங் பிரஸ், தொழிற்சாலைகள், மில்கள் இவற்றில் பொருத்தி வைக்கப்பட்டிருக்கிற மிஷின்கள் விற்பனைக்குரிய சரக்காகயில்லாததால் அவை மீது ஜகாத் கடமையில்லை.

ஜகாத்தை எவ்வாறு கணக்கிடுவது?

        ஜகாத் என்பது குடியிருக்கும் வீடு, அன்றாடம் புழங்கும் பண்டம் பாத்திரங்களுக்குக் கிடையாது. வாடகைப்பணம், சேமித்து வைக்கப் பட்டுள்ள ரொக்கம், நகைகள்,  வியாபார பொருள்கள் மீது ஜகாத்  கணக்கிடப்பட வேண்டும். விளையும் நிலங்களிலிருந்து வரும் விளை பொருள்களுக்கு ஜகாத் கணக்கிடப்பட வேண்டும். பொதுவாக ஜகாத் என்பது நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் என்று இருந்தாலும், விளைபொருள்களுக்கு அதிக அளவு ஜகாத் கணக்கிடப்பட வேண்டும். உதாரணமாக வானம் பார்த்த பூமியிலிருந்து விளையும் பொருள்களுக்கு இரண்டரை சதவிகிதமும், ஆற்று நீர்ப் பாசன வசதியுள்ள நிலத்திலிருந்து விளையும் பொருள்களுக்கு ஐந்து சதவிகிதமும் கணக்கிட்டுக் கொடுக்கப் பட வேண்டும். வியாபாரப் பொருள்களான, சரக்கு ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றுக்கு ஜகாத் இரண்டரை சதவிகிதம் கணக்கிடப்பட வேண்டும். வளர்க்கும் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றுக்கு பின்வரும் அட்டவணைப் படி ஜகாத் கணக்கிடப் பட வேண்டும்.

ஜகாத் யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும்

        (ஜகாத் எனும்) தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்தியதாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:60)

ஜகாத்தை முறையாக கொடுக்க வேண்டும் யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தை திருக்குர் ஆன் (9:60) எடுத்துக் கூறுகிறது. மேற்கண்ட வசனத்தின் படி எட்டு வகையானவர்கள் ஜகாத்தைப் பெற உரிமை பெற்றவர்களாகிறார்கள்.

1. பக்கீர்கள் - வறியவர்கள்

        பற்றாக்குறையான பொருள் உள்ளவர்கள்; வறுமையினால் வாடினாலும் வாய் திறந்து பிறரிடம் கேட்காத தன்மையுடையவர்கள்.

2. மிஸ்கீன்கள் - ஏழைகள்

        அடிப்படைத் தேவைக்கான வசதிகள் ஏதுமற்றவர்கள். வாய்விட்டுக் கேட்டாலன்றி தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்கள்.

        இதன் படி மிஸ்கீன் என்பவர், பக்கீரை விடவும் வறுமையிலுள்ளவர் ஆவார்.

3. வசூலிப்பவர்கள்

        ஜகாத்துக் கொடுக்கக் கடமைப்பட்டவர்களிடமிருந்து வசூலித்து வருவதற்காக நியமிக்கப் பட்டவர். இந்த வகையான வசூலிப்பவர்கள் இஸ்லாமிய அரசாங்கத்தாரால் நியமிக்கப்படுவதுண்டு. அவர்கள் வசூலித்து வரும் தொகையில் ஒரு பகுதியை சம்பளமாகக் கொடுக்கப் படலாம்.

        (இஸ்லாமிய அரசு இயங்காத இடங்களில் மஹல்லா நிர்வாகிகள் “பைத்துல்மால்” அமைத்து இதற்கான ஏற்பாட்டைச் செய்யக் கூடுமா என்பது யோசிக்கப்பட வேண்டிய கருத்து. மஹல்லா நிர்வாகம் ஓரளவு சிறு ‘இஸ்லாமிய ஆட்சி’ தானே!)

4. புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்கள்

        புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்கள். இவர்களை ‘மெளலா இஸ்லாம்’ என்பர். அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட மாசு மருவற்ற இஸ்லாத்தின் எஜமானர்கள் என்று பொருள்படும். இவர்கள் புதிய சமுதாயத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவிகள் தேவைப் படலாம். இவர்களுக்கும் ஜகாத் கொடுக்கலாம்.

5. அடிமைகளை விடுதலை செய்ய

மனித அடிமைகளை விடுவிக்கத் தேவையான நஷ்டஈடு வழங்க ஜகாத் பணத்தைக் கொடுக்கலாம். தற்காலத்தில் கொத்தடிமைகள் (Bonded Labour) இருக்கத்தான் செய்கிறார்கள். அநீதியாகச் சிறையிலடைக்கப் பட்டவரை விடுவித்தாலும் இதில் அடங்கும்.

6. கடனாளிகள்

கடனாளிகள் இருவகைப்படுவர். 1. ஆகுமான காரியங்களுக்காகக் கடன் வாங்கியவர்கள். 2.நன்மையான  காரியங்களுக்குக் கடன் வாங்கியவர்கள். மேற் சொன்ன இருவருக்கும் கடனை அடைக்க உதவி செய்யலாம்.

7. அல்லாஹ்வின் பாதையில் உள்ளவர்கள்

        இவர்கள் ஜிஹாத் போர் புரிபவர்களாக இருக்கலாம். அல்லது மார்க்கக் கல்வியைப் பெறும் மாணவர்களாகவும் இருக்கலாம். மார்க்கப் போதகர்களாகவும் இருக்கலாம்.

8. வழிப்போக்கர்கள்

        இவர்களை முஸாபிர்கள் என்பர். நியாயமான காரணத்திற்காகப் பிரயாணம் (ஸபர்) செய்பவர்கள். வசதியுள்ளவராக இருந்தும் பிரயாணத்தில் பொருள் களவு போய் சிரமப் படுபவரும் இதில் அடங்குவர்.

        ஜகாத்தை முதலில் ஏழையான தனது நெருங்கிய பந்துக்களுக்கும், இரண்டாவது அண்டை அயலாருக்கும் (மஹல்லா) மூன்றாவது ஏனையோருக்கும் கொடுப்பது சிறந்தது.

உற்றார் உறவினர்களுக்கு ஜகாத்துக் கொடுத்தல்

  1. நமது ஜகாத்துப் பொருளை தமது தாய், தந்தை, தந்தை வழி பாட்டன், பாட்டி, தாய்வழி பாட்டன், பாட்டி, முதலியோர்க்கு அதாவது இவர் யாருடைய சந்ததியில் உள்ளவராக இருக்கிறாரோ அவர்களுக்கு கொடுத்தல் கூடாது. இவ்விதமே தமது மக்கள், மகன் வழி பேரன், பேத்தி முதலிய இவரின் சந்ததியைச் சார்ந்தவர்களுக்கும் இவருடைய ஜகாத்துப் பொருளைக் கொடுத்தால் நிறைவேறாது. இவ்விதமே கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் தமது ஜகாத்தைக் கொடுத்துக் கொள்வதும் கூடாது. (ஹிதாயா)
  2. மேற்கூறப்பட்ட உறவினர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் ஜகாத்துக் கொடுப்பது கூடும். உதாரணமாக சகோதரன், சகோதரி, சகோதரர் மக்கள், சகோதரி மக்கள், சிச்சா, மாமி, மாமா, மற்றாந்தாய், மாற்றாந்தந்தை, மாற்றாந் தந்தையின் பெற்றோர்கள், மாமனார், மாமியாள் முதலியவர்கள் அனைவருக்கும், அவர்கள் ஜகாத்து வாங்குவதற்குத் தகுதி உடையோராயிருப்பின் அவர்களுக்கு ஜகாத் செலுத்துவது கூடும்.
  3. ஜகாத்து மற்றும் தான தருமங்கள் கொடுப்பதில் முதன்மையாக தமது உற்றார் உறவினர்களையே மிக முக்கியமாகக் கருதல் வேண்டும். இவர்கள் ஏழையாயிருப்பின் முதன்மையாக இவர்களுக்குத்தான் கொடுத்தல் வேண்டும். ஆனால் அவர்களிடம் இது ஜகாத்துப் பொருள், ஸதகாவின் பொருள் என்றெல்லாம் கூறக் கூடாது. இதனால் அவர்கள் மனம் வேதனையுறும். வாங்குவதற்கும் வெட்கப்படுவார்கள். உறவினர்களுக்கு ஜகாத்து தான தருமங்கள் ஈவதில் இரு மடங்கு நன்மை கிடைக்கிறது. “1)தருமத்தின் நன்மை 2)தமது உற்றாருடன் நல்லுறவு கொண்ட நன்மை” என ஹதீது ஷரீபில் கூறப்பட்டிருக்கிறது. எஞ்சிய பொருட்களை ஏனையோருக்கு தாராளமாக வழங்கலாம்.  (ஆலம்கீரி)
  4. பால்குடி மகன், மகள், பால்குடி தாய் தந்தையர் ஆகியோருக்கும் ஜகாத்துக் கொடுக்கலாம். (ஷாமீ)
  5. வீடு அல்லது வியாபார ஸ்தலத்திலுள்ள முஸ்லிமான வேலையாட்கள், வண்ணான், நாவிதன். டிரைவர், தாதி, ஆயா, முதலியோர் எளியவர்களாயின், அவர்களுக்கும் ஜகாத்து கொடுக்கலாம். இதை அவர்கள் சம்பளக் கணக்கில் சேர்த்து விடக் கூடாது. சம்பளத்தை விட அதிகப்படியாக இனாமாக கொடுத்து, மனதிலே ஜகாத்து நிய்யத்து செய்து கொண்டால், கூடும். நிய்யத்து செய்யவில்லை யாயின் கூடாது. (ஆலம்கீரி)

ஜகாத் பெறுவோருக்கு எச்சரிக்கை

        ஜகாத்தைப் பெற நினைப்போருக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது கவனத்தில் கொள்ளப்படத் தக்கது.

        “ஒருவர் (தமது பொருளாதாரத்தை) அதிகரித்துக் கொள்வதற்காக பிறமனிதர்களிடம் பொருளை யாசித்தால், அவர் (நரகின்) நெருப்புத் துண்டையே யாசிக்கின்றார். ஆகவே அவர் (அதனைக்) குறைத்துக் கொள்ளட்டும் அல்லது அதிகரித்துக் கொள்ளட்டும்.”

        “ஒரு மனிதன் மற்றவர்களிடம் யாசித்துக் கொண்டே இருக்கிறான். இறுதி நாளில் அவன் தனது முகத்தில் சதைப்பற்று இல்லாது (சுருங்கிய நிலையில்) வருவான்.” (புகாரி, முஸ்லிம்)

வளர்ப்பு கால்நடைப் பிராணிகளுக்குரிய ஜகாத்து

பிராணியின் பெயர்

எண்ணிக்கை

ஜகாத்து விளக்கம்

ஆடுகள்

1 முதல் 39 வரை

40 முதல் 120 வரை

121 முதல் 200 வரை

201 முதல் 300 வரை

பிறகு ஒவ்வொரு 100க்கும்

ஜகாத்து கடமையில்லை

ஒரு ஆடு

இரு ஆடு

மூன்று ஆடுகள்

ஒரு ஆடு அதிகப்படுத்தி கொள்ளவும்

பசு, காளை, எருமை

1 முதல் 29 வரை

1 முதல் 30 வரை

1 முதல் 40 வரை

1 முதல் 60 வரை

1 முதல் 70 வரை

1 முதல் 80 வரை

1 முதல் 90 வரை

1 முதல் 100 வரை

100க்குமேல் ஒவ்வொரு 30க்கு

100க்குமேல் ஒவ்வொரு 40க்கு

ஜகாத்து கடமையில்லை

ஒரு வயது நிரம்பிய கன்று ஒன்று

மூன்று வயது கன்று  - 1

2 வயது உடைய 2 கன்றுகள்

3 வயது கன்று 1, 2வயது கன்று 1

3 வயது கன்றுகள் இரண்டு

2 வயது கன்றுகள் மூன்று

2வயது கன்றுகள் 2, 3வயது கன்று 1

2 வயது கன்று ஒன்றை சேர்க்கவும்

3 வயது கன்று ஒன்றை சேர்க்கவும்

ஒட்டகை

1 முதல் 4 வரை

5 முதல் 9 வரை

10 முதல் 14 வரை

15 முதல் 19 வரை

20 முதல் 24 வரை

25 முதல் 35 வரை

36 முதல் 45 வரை

46 முதல் 60 வரை

61 முதல் 75 வரை

76 முதல் 91 வரை

91 முதல் 120 வரை

120லிருந்து ஒவ்வொரு 40க்கு

120லிருந்து ஒவ்வொரு 50க்கு

ஜகாத்து கடமையில்லை

ஒரு ஆடு ஜகாத்து செலுத்த வேண்டும்

இரண்டு ஆடுகள்

மூன்று ஆடுகள்

நான்கு ஆடுகள்

ஒட்டகையின் ஒரு வருடக் குட்டி

ஒட்டகையின் 2 வயது நிரம்பிய குட்டி

3 வயது நிரம்பிய ஒட்டகைக் குட்டி

4 வயது நிரம்பிய ஒட்டகைக் குட்டி

2 வயது நிரம்பிய 2 ஒட்டகைக் குட்டி

3 வயது நிரம்பிய 2 ஒட்டகைக் குட்டி

2 வயது நிரம்பிய 1 குட்டியை சேர்க்கவும்

3 வயது நிரம்பிய 1 குட்டியை சேர்க்கவும்


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.