இஸ்லாத்தில் பொருளியல்
(அறிவோம் இஸ்லாம் தொடர் - 16)
முன்னுரை
மனிதனைப் படைப்பதற்கு பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பாகவே, ஒவ்வொரு மனிதனும் அவனுடைய உலக வாழ்வில் எந்தெந்தப் பொருட்களை உண்பான், உடுத்துவான், பெற்றுக் கொள்வான் என்பதை இறைவன் முடிவு செய்து விட்டான். அந்தப் பொருட்களை அந்தந்த மனிதனிடமே எந்தெந்த நேரம் சேர்த்து வைக்க வேண்டுமென்று இறைவன் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டான். எனினும் மனிதன் அந்தப் பொருட்களை, செல்வங்களை, தேட வேண்டியதை இறைவன் கடமையாக்கி உள்ளான். தேடுவதையும் இறைவனுடைய கட்டளைப்படி தேட வேண்டும் என்றும் விதித்துள்ளான்.
நாம் ஈட்டும் பொருட்களுக்கும், நாம் செய்யும் வணக்கங்களுக்கும், செய்யும் பிரார்த்தனைகளுக்கும் அல்லாஹ் நமக்கு செய்யும் முடிவுகளுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு மனிதன் எவ்வளவு நற்செயல்கள் புரிந்தாலும், அழுது கதறி இறைவனிடம் பிரார்த்தனை செய்தாலும் அவனது உணவு, குடிப்பு, உடை முதலியவைகள் இறைவனுக்கு உகந்த வழிகளில் ஈட்டப்பட்டிருக்க வில்லையானால் அவனது வணக்கங்களும், பிரார்த்தனைகளும், இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஒருவனுடைய உணவில் உடையில் பத்திலொரு பாகம் தவறான வழியில் ஈட்டப் பட்டிருந்தாலும் அவருடைய வணக்க வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என்றும், தடுக்கப்பட்ட உணவு உண்டு அதனைக் கொண்டு உருவான இரத்தம் ஒரு மனிதனின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் காலமெல்லாம், ஹராமாக்கப்பட்ட உடையணிந்த காலமெல்லாம் அந்த மனிதனுடைய வணக்கங்களும் பிரார்த்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று நபி (ஸல்) அவர்கள் திருவுளமாகியிருக்கிறார்கள். எனவே இறைவன் விதித்த, விலக்கிய வழிமுறைகளை அறிந்து பொருளை சம்பாதிக்க வேண்டும்.
அளவை, நிறுவை :
பொருளீட்டுவதற்கு வியாபாரம், விவசாயம், கைத்தொழில், கூலி வேலை, உத்தியோகம் என்று எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அவைகள் ஒவ்வொன்றிலும் பல விதிமுறைகளும் உள்ளன. “வர்த்தகத்தில் பொருள் விருத்தியுண்டு” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பி உள்ளார்கள். ஆனால் வியாபாரத்தில் நேர்மை இருத்தல் வேண்டும். அளவை, நிறுவையில் நியாயம் வேண்டும். வாங்குவதற்கு ஒரு நிறுவையும், விற்பதற்கு ஒரு நிறுவையுமின்றி, நியாயமான முறையில் நிறுத்தல், அளத்தல் செய்ய வேண்டும்.
“நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும்.” (17:35) என்றும்,
83:1. அளவில் மோசம் செய்பவர்களுக்குக் கேடுதான்.
83:2. அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்துகொள்கின்றனர்.
83:3. மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்.
83:4,5. மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்ப வில்லையா?
என்றும் திருக்குர் ஆன் திருவுளமாகியிருக்கிறது. நபிமார்களில் பலர் வியாபாரம் செய்து வழிகாட்டி உள்ளனர். அவர்களும் அளவை நிறுவையில் மோசடி செய்வது பற்றி எச்சரித்துக் கண்டித்துள்ளனர். பொருள்களைக் கொடுக்கும் போது அளவிற்கு அதிகமாக மனமார வழங்குங்கள் என்றும், வாங்கும் போது அளவிற்கும் அதிகமாக வற்புறுத்தி வாங்காதீர்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
பதுக்கல் :
விற்பனைப் பொருட்களை பதுக்கி வைப்பதை இஸ்லாம் தடுக்கிறது. அதிலும் உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் போது விலை ஏறட்டும் என்று உணவுப் பொருட்களை, தானியங்களை பதுக்கி வைப்பதை இஸ்லாம் மிக மிக வன்மையாக கண்டிக்கின்றது. தங்களது குடும்பத் தேவைகளுக்கு அல்லாமல் உணவுப் பொருட்களை அதிகமதிகமாக சேமித்து வைப்பதையும் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் விரும்பவில்லை. தமது தேவைக்கு அதிகமாக உள்ள பொருட்களை தேவையுள்ளவர்களுக்கு வழங்குவதைத்தான் இஸ்லாம் விரும்புகின்றது. “பதுக்கல் செய்பவன் பாவியாவான் எனவும் பதுக்கல் செய்யாமல் பொருட்களை கடைவீதிக்கு கொண்டு வருபவர் இறைவனின் அருளுக்குரியவர் எனவும், பதுக்கி வைப்பவர் சாபத்திற்குரியவர்” எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அடமானம் :
சில சமயம் நமது தேவையை நிறைவேற்றிக் கொள்ள தேவைப்படும் பணம் கிடைக்கவில்லை எனில், மற்றவர்களிடம் கடன் பெறுவதற்கு உத்திரவாதமாக ஏதாவது நமது பொருளை அவர்களிடம் அடமானமாகக் கொடுத்து தேவைப்படும் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் அடமானமாக பெற்றுக் கொண்ட பொருளை தான் உபயோகப்படுத்துவதையோ, கடனைத் திருப்பித் தரும் நேரம் அடமானம் வைக்கப்பட்ட பொருளை உடனடியாக திருப்பித் தராமல் இருப்பதையோ, கொடுத்த கடனுக்கு வட்டியாக சேர்த்து வாங்குவதையோ இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. கடனாகப் பெற்றுக் கொள்வதற்கு எழுத்து மூலமாகப் பதிந்து கொள்ள வேண்டும். அத்துடன் தேவைப் பட்டால் அடமானமாக பொருளை கொடுத்துப் பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அடமானம், அடகு, ஒத்தி, குத்தகை என்ற பெயரில் ஈடுவைக்கப்பட்ட பொருள்களை உபயோகித்துக் கொள்வதையும், அதில் மோசடி செய்வதையும், திருப்பி அளிக்கும் போது தான் கொடுத்த பணத்திற்கு வட்டி கணக்கிட்டு வாங்குவதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
வியாபாரத்தின் மாண்பு :
தனது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மனிதன் ஏதாவது மார்க்கம் அனுமதிக்கப்பட்ட தொழில்களில் ஈடுபடுதல் வேண்டும். தொழில்களிலெல்லாம் மேலானது விவசாயத் தொழில் என்றாலும், வாணிகமே சிறந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் “உங்களின் உணவில் பத்தில் ஒன்பது பங்கு வியாபாரத்தாலேயே கிடைக்கின்றது. எனவே வியாபாரத்தையே விரும்பிச் செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் திருவுளமாகியுள்ளார்கள். “நேர்மையான வியாபாரத்தில் இறைவனுடைய திருப்தியும், வாழ்வில் விருத்தியும் உள்ளது” என்றும், உண்மையை பேசுகின்ற, மோசடி செய்யாத ஒரு வியாபாரி மறுமையில் இறைதூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள் ஆகியோருடன் இருப்பர் என்றும், நேர்மையான வியாபாரியும் நானும் (இரு விரல்கள் போன்று) சேர்ந்து சுவனத்திலிருப்போம்.” என்றும் நபிகள் நாயகம் (ஸல்) நவின்றுள்ளனர்.
பொருளீட்ட வேண்டுமென்ற வெறியில் அநியாய விலைக்கு விற்பதையும், அளவை, நிறுவையில் மோசடி செய்வதையும், பொய் சொல்லி விற்பதையும், கலப்படம் செய்வதையும், குறைகளை மறைத்து விற்பதையும், மார்க்கம் தடை செய்துள்ள பொருள்களை விற்பதையும், பொருளைக் காட்டாமல் விலை பேசுவதையும், இன்னும் இவை போன்றவைகளையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. இத்தகைய வியாபாரம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளையும் மார்க்கம் இயம்பி உள்ளது. “கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையாக நற்பண்புடன் நடந்து கொள்பவர் மீதும் இறைவன் அருளைப் பொழிவானாக” என நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளார்கள்.
கைத்தொழில் :
“தனது கரங்களால் உழைத்து உண்ணும் உணவே உணவுகளில் மேலானது” என்று நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர். கைத்தொழில் புரிபவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்த்தியருளியுள்ளார்கள். கைத்தொழில் புரிபவர்கள் கவலையடையத் தேவையில்லை என்பது தான் இஸ்லாத்தின் போதனை, “ஒருவர் தனது கைகளால் உழைப்பதும், மோசடி செய்யாமல் நடத்தும் வாணிபமும் தான் சிறந்த சம்பாத்தியம்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
உத்தியோகம் :
தனது தகுதிக்கேற்ப உத்தியோகம் புரிந்து அதற்குரிய ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்துவதையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. உத்தியோகத்தை தனது வருவாய்க்குரிய வழியாக மட்டும் கருதாமல் மற்றவர்களுக்கு ஊழியம் புரியும் வாய்ப்பாகக் கருத வேண்டும். அதிகாரத்திலிருப்பவர்கள் அதிகாரம் புரிவது தான் தமது அலுவல் என்று எண்ணாமல் தனக்குக் கீழுள்ளவர்களுக்கு சேவை செய்வதற்கு தமக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுதல் வேண்டும். உண்மை ஊழியனே சரியான அதிகாரியாகும். ஆனால் தனது கடமையை ஆற்ற வேண்டிய அதிகாரி, தமக்கு நிர்ணயம் செய்யப்பட்ட அலுவல்களை நிறைவேற்றிய பின்பு தான் அதற்குரிய ஊதியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். தனது கடமையை நிறைவேற்றுவதற்காக, தனது ஊதியம் அல்லாது, பிறரிடம் (கையூட்டு) லஞ்சம் பெற்றுக் கொள்வதையோ, வேறு வழிகளில் அன்பளிப்புகள் வெகுமதிகள் பெற்றுக் கொள்வதையோ இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமது அதிகாரத்திலுள்ள மனிதர்களையோ, பொருட்களையோ, துர்ப்பிரயோகம் செய்வதையும், தமது விருப்பு வெறுப்பிற்கேற்ப நடத்துவதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
கூலி வேலை :
வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கூலி வேலை செய்வதையும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது. கூலிக்காரர்களின் கூலியை அவர்கள் வியர்வை உலர்வதற்கு முன்பே பரிபூரணமாக கொடுத்து விட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. பேசிய கூலியை மோசடி செய்யாமல் வேலை முடிந்தவுடன் வழங்கி விட வேண்டும். பேசிய கூலிக்கு பாதகமில்லாமல் ஏற்றுக் கொண்ட வேலையை முடித்துவிட வேண்டும். கூலி வேலையை செய்பவர்களையும் சமமாக சகோதரர்களாகப் பாவித்து நடத்தல் வேண்டும்.
விலக்கப்பட்ட தொழில்கள் :
இஸ்லாத்தில் விலக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதும், தயாரிப்பதும் தடுக்கப் பட்டவைகளாகும். சிலைகள், சிற்பங்கள், உருவங்கள் சமைப்பது, அவைகளை விற்பதும் கூடாது. கள், சாராயம் போன்ற போதைப் பொருட்களை தயாரிப்பதும், விற்பதும் கூடாது. வாத்திய இசைக் கருவிகளை உருவாக்குவதும் விற்பதும் கூடாது. பன்றி இறைச்சி, இரத்தம் இவைகளை விற்பதும் கூடாது. சூதாட்டத் தொழில், லாட்டரி வியாபாரம் முதலியன கூடாது. மக்களுக்கு ஆகுமாக்கப்பட்ட பொருட்களை தயாரிப்பதையும் விற்பதையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.
வட்டி வாங்குதல் :
வட்டி ஏழைகளின் இரத்த உறிஞ்சியாகும். எனவே வாழ்க்கையில் சிரமப்படுபவர்களின் தேவைக்காக வட்டிக்கு கொடுத்து, வட்டிக்கு மேல் வட்டி வாங்குவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. பிறர் படக்கூடிய கஷ்டங்களை நீக்கி வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. தன்னால் முடிந்தால் தேவைப்பட்டு வரக்கூடியவர்களுக்கு கடனளித்து உதவ வேண்டும். கடன் பெற்றவருக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்காமல் தாராளமாக தவணைகள் அளித்து கடின வார்த்தைகள் கூறாமல் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் சிரமத்திற்குள்ளாகி இருப்பவர்களுக்குக் கொடுத்த கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு மேலும் சிரமம் கொடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. நாமும் நம்முடைய தேவைகளைச் சுருக்கி சிக்கனமாக வாழ்ந்தால், கடன் பெற வேண்டிய சூழ்நிலையோ, கடனுக்கு மேல் கடன் பட்டு காலமெல்லாம் கஷ்டப்பட வேண்டிய கட்டாயமோ ஏற்படாது. பொருளைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளும் வியாபாரம் போன்றதன்று, பணம் கொடுத்து விட்டு, அதற்கு மேல் பணம் பெறும் வட்டி.
தான தர்மம் செய்வதில் பொருள் குறைவது போன்றும். வட்டி வாங்குதல் பொருள் அதிகமாவது போன்றும் தோன்றினாலும், நிச்சயமாக வட்டி வாங்குவது பொருளை அழித்து விடுகின்றது. தான தர்மம் செய்வது செல்வத்தை பாதுகாக்கிறது.
இது பற்றி திருகுர்ஆனில் ...
வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள். காரணமாவது: "வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதைவிட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கின்றது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டு விட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (2:275.)
அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். (2:276.)
(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். (30:39.)
“வட்டி வாங்குவோர், வட்டி கொடுப்போர், அதை எழுதுபவர் அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவர் மீதும் சாபமுண்டாவதாக” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளனர்.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள். (2:278.)
இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்! (2:279.)
பிச்சையெடுத்தல் :
வறுமையில் வாடி தன் தேவையைக் கருதி “93:10. யாசிப்பவரை வெருட்டாதீர்கள்.” என்று குர் ஆன் கூறினாலும், “யாசிப்பவன் குதிரை மீது ஏறி வந்து யாசித்தாலும் வழங்குங்கள்” என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினாலும், யாசிப்பதை அல்லாஹ்வும், ரசூலும் விரும்பவில்லை. “யாசித்து கீழாக நீட்டும் கையை விட வழங்குவதில் மேலாக உள்ள கையே சிறந்தது.” என்றும் “செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக யாசகம் செய்வோனை இறைவன் நாசமாக்குவானாக!” என்றும், “மக்களிடத்தில் யாசித்து நீட்டும் கரத்தை மூடவே முடியாது.” என்றும் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர்.
ஏழ்மையிலும், வறுமையிலும் வாடுபவர்களைத் தேடி தான தர்மம், அன்பளிப்புகள் மூலம் தங்களுடைய பொருளை வாரி வழங்க வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகிறது. நம்முடைய தேவைகளை மக்கள் முன் வைத்து யாசிப்பதையும், பிச்சைக்காரர்கள் உருவாக்குவதையும் இஸ்லாம் அனுமதிக்க வில்லை. செல்வந்தர்கள் ஏழைகளின் தேவைகளையறிந்து உதவ வேண்டுமென இஸ்லாம் போதிக்கிறது.
சூதாட்டம் :
உழைப்பு இன்றி, நேர்மைக்கு மாற்றமாக பலபேருடைய பொருளைப் போட்டு சூதாட்டம் மூலம், ஒரு சிலர் பயன் அடைவதை இஸ்லாம் தடை செய்கிறது. மது குடிப்பதன் மூலம் ஒரு சில பயன் இருப்பது போல தோன்றினாலும், அதிக அளவில் அதனால் கெடுதியே உள்ளது. இதைப் போல் சூதாட்டத்தின் மூலம் ஒரு சிலர் பயனடைவது போல தோன்றினாலும், பலருக்கு அதனால் நஷ்டமும் நாசமும் தான் உண்டாகிறது. எனவே திருமறை, (நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர் களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவைகளில் உள்ள பாவம் அவைகளிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. (2:219.) என்றும், “நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.” (5:90.) என்றும் கூறியிருக்கின்றது.
விபச்சார விடுதிகள் நடத்துதல் :
“நீங்கள் விபச்சாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.” (17:32) என்று திருக்குர்ஆன் திட்டவட்டமாகக் கூறுகிறது. விபச்சாரத்தின் தீங்குகளை அதனால் விளையும் விளைவுகளையும் அதற்குரிய கடின தண்டனைகளையும் கொடிய வேதனைகளையும், திருமறையும் இறைதூதரும் எடுத்தியம்பி இருக்கின்றனர். எனினும் இவ்வுலக அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக பெண்களை வைத்து விபச்சார விடுதிகள் நடத்துவதை இறைவன் மிகவும் கடினமாக கண்டிக்கிறான். “தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபச்சாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள்.” (24:33) என்று இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான். விபச்சாரத்தின் பக்கம் நெருங்கவே வேண்டாம் என்று திருமறை கூறும் போது விபச்சாரத்தையே தொழிலாகக் கொள்வது எத்தகைய இழி செயல் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மதுபானம் விற்றல் :
மதியைக் கெடுக்கும் மதுவை, குடியைக் கெடுக்கும் குடியை இறைவன் தடை செய்துள்ளான். மது அருந்துவதே பெரும் பாவம் எனில், அதனை விற்பனை செய்து மற்றவர்களை நாசப்படுத்தி நரகில் தள்ளுவது எவ்வளவு கொடிய பாவம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். “மதியைக் கெடுக்கும் பொருள் அனைத்துப் பாவங்களின் தொகுப்பாகும்” என்றும், “மதுபானம் அருந்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அது எல்லா கேவலமான செயல்களுக்கும் முதன்மையானதாகும்” என்றும், “குடிகாரனுக்கு 40 சவுக்கடிகள் கொடுக்க வேண்டும்.” என்றும் “மதுபானம் அருந்திய போது அவன் முஃமின் அல்லன்” என்றும், “மதுபான பழக்கமுடையவன் சுவனம் புகான்” என்றும் நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பி உள்ளார்கள். “மதுக்குடிப்பவர்கள், தயாரிப்பவர்கள், சுமந்து வருபவர்கள், வாங்குபவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவர்களே” என்றும் கூறியுள்ளனர். எனவே மது குடிப்பதைப் போன்று மதுபானங்கள் விற்பனை செய்வதும் தடுக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்குதல் :
தான் செய்ய வேண்டிய வேலையை தனது கடமை என்று கருதி, அதற்குரிய ஊதியத்தைத் தவிர வேறு கைமாறு கருதாமல் பணி செய்ய வேண்டும். ஊதியமும் பெற்றுக் கொண்டு, தான் செய்ய வேண்டிய சிறு சிறு பணிக்கும், கைமாறு கருதி, கையூட்டு, லஞ்சம் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்குவதும் பாவம், கொடுப்பதும் பாவம்.
“மேலும் நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்து கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.” (2:188) என்று திருமறை லஞ்சம் கொடுப்பது பற்றி எச்சரிக்கை செய்துள்ளது.
“இலஞ்சம் வாங்குபவர் மீதும் இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இஸ்லாம் தடுக்கும் சம்பாதிப்பு :
கேளிக்கை விடுதிகள், கூத்து, டிராமா, சினிமா கொட்டகைகள் (தியேட்டர்கள்) மூலம் சம்பாதிப்பதையும், லாட்டரி மூலம் பணம் சேர்க்க முயல்வதையும், தடுக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதையும், தடுக்கப்பட்ட (நியாயத்திற்கு புறமான) முறையில் வியாபாரம் செய்வதையும், இஸ்லாம் மிகவும் கண்டிக்கிறது. எனவே நாம் எத்தனை நற்செயல்கள் புரிந்திருந்தாலும் நமது செயல்களும், பிரார்த்தனைகளும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கு நமது சம்பாத்தியம் ஆகுமான வழிகளில், ஆகுமான முறையில் இருத்தல் வேண்டும்.
உழைத்து உயர்வு பெறு :
“வறுமை ஈமானைத் தின்று விடும்” எனச் சொல்லப் பட்டிருக்கிறது. எனவே மனிதன் வறுமையில் சிக்கிக் கொள்ளாமல் தன்னைத் தவிர்த்துக் கொள்ளுதல் கடமையாகும். மனிதன் நியாயமான முறையில் வியாபாரம் செய்து பொருளீட்டுவது, நிலத்தில் பாடுபட்டு விவசாயம் செய்து உணவு தானியங்களைப் பெறுவதும், உழைத்து உண்பதும், வேலை செய்து பிழைப்பதும், தனது மனைவி மக்களை காப்பாற்றுவதும் இறைவனுக்கு மிகவும் பிரியமான பொருளீட்டு முறையாகும். பொருளீட்டாமல் சோம்பேறியாக இருந்து வணக்கம் புரிவதை விட உழைத்து மனைவி மக்களைக் காப்பாற்றுவது மேலான செயல் என இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
“ஒருவர் தன் கைகளால் உழைப்பதும், மோசடி பொய் இல்லாமல் செய்யும் வாணிபமும் எல்லாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம்” என்றும், “மனிதன் மறுமையில் நற்கூலி பெறும் பொருட்டு தன் வீட்டாருக்கு செலவிடும் போது, அது அவனுக்கு அறமாக (ஸதகாவாக) ஆகி விடும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.