Home


ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.568-கி.பி.624) அவர்கள் அப்துல் முத்தலிபின் கடைசி மகன் ஆவார் மேலும் இவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையுமாவர். இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள், ”அஸதுல்லா” அல்லாஹ்வின் சிங்கம் என்ற சிறப்புப் பெயருக்கு சொந்தக்காரர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்து தம் உயிரை அர்ப்பணம் செய்த உத்தம சஹாபாக்களில் ஒருவர் ஆவார்.

 இவர்களுக்குப் பால் கொடுத்த துவைபா என்ற பெண்மணியே அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குத் தொடக்கத்தில் சில நாள்கள் பால் கொடுத்தார்கள். எனவே நபிகளாருக்கும் இவருக்கும் பால்குடிச் சகோதர உறவும் இருந்தது. இவர் நபிகளாரின் வயதினை ஒத்தவரும் நபிகளாரின் சிறந்த நண்பரும் கூட. வாலிபப்பருவத்தில் சிறந்த உடல்வாகும் வளப்பு மிகு தோற்றமும் கொண்டு விளங்கிய ஹம்ஜா(ரழி) சிறந்த வாக்குச் சாதுரியமும், நேர்மையும் நிறைந்த பண்பாளராகத் திகழ்ந்தார். அண்ணலாரின் அழகிய நற்பண்புகள் ஹம்ஜா (ரழி) அவர்களைப் பெரிதும் கவர்ந்தன.

இன்னிசையில் ஹம்ஜா (ரழி) அவர்களின் சிறப்புகளை கேட்கவும்

அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா ரழியல்லாஹ்

 

ஆரம்ப கால வாழ்வு

        மக்காவில் அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் அவர்களின் கடைசி மகனாக கி.பி 568 இல் பிறந்தார்கள், இவர்களின் தாயார், நபி (ஸல்) அவர்களின் தாயார் அன்னை ஆமினா அவர்களின் சிறிய தந்தை உஹைபின் மகள் ஹாலா  ஆவார். ஹம்ஜா (ரழி) அவர்களுக்கு பால்கொடுத்து துவைபா என்ற பெண்மணியே நபி (ஸல்) அவர்களுக்கும் சில நாள்கள் பால் கொடுத்தார்கள்.

        ஹம்ஜா (ரழி) மல்யுத்தம், வில்வித்தை, சண்டை போன்ற வித்தைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் சிங்கங்களை வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர், மேலும் அவர் "குரைஷிகளில் பலம் மிக்க மனிதராகவும்" மேலும், நபி (ஸல்) அவர்களை மிகவும் விட்டுக்கொடுக்காதவர் என்றும் கருதப்பட்டார்.

        கதிஜா (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க பனீஹாஷிம்கள் இசைவு தெரிவித்த செய்தியை கதிஜா (ரழி) அவர்களின் சிறிய தந்தையிடம் கொண்டு சென்றவர்கள் இவர்கள் தாம்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது

        துவக்கத்தில் இவர்கள் இஸ்லாத்தைத் தழுவாத போதினும், அபூஜஹ்ல் நபி (ஸல்) அவர்களிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதை வேட்டையிலிருந்து திரும்பி வந்த இவர்கள் கேள்வியுற்றதும் அவனிடம் நேரில் சென்று அதற்குப் பழி தீர்க்கும் நோக்கத்துடன் அவனுடைய நெற்றியில் அடித்துக் காயமுண்டு பண்ணி அதன் பின் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள்.

        அது கேட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அதைவிடத் தாங்கள் இஸ்லாத்தை தழுவுவது தான் எனக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது” என்று கூற “அதைத்தான் ஏற்கெனவே செய்து விட்டேனே, அதனை அபூஜஹ்லிடமே நேரில் கூறி வந்துவிட்டேனே” என்றார்கள் இவர்கள். இதற்கு இரண்டு நாள்களுக்குப் பின் உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

இஸ்லாமிய குடியரசின் முதல் கொடி

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியேறி ஏழு மாதங்களுக்கு பின் ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்)அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா (ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். அப்பொழுது இவர்களின் கையில் அவர்கள் கொடுத்த வெள்ளைக் கொடியே இஸ்லாமிய குடியரசின் முதல் கொடி என்று கூறப்படுகிறது. ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத் தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். ‘ஈஸ்' என்ற நகரத்தின் ஓரத்தில் உள்ள ‘ஸய்ஃபுல் பஹ்ர்' எனும் இடத்தை இருகூட்டத்தினரும் அடைந்த போது சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.

நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போர்

        ஹிஜ்ரி 2, ஸஃபர் (கி.பி. 623 ஆகஸ்டு) மாதம் நபி (ஸல்) அவர்கள் 70 முஹாஜிர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடை மறிப்பதற்காக ‘அல்அப்வா' அல்லது ‘வத்தான்' என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. இந்தப் போருக்குச் செல்வதற்கு முன் நபி (ஸல்)அவர்கள் ஸஅது இப்னு உபாதாவை மதீனாவில் தனக்குக் கலீஃபாவாக (பிரதிநிதியாக) ஆக்கினார்கள். இந்த போரின் போது ‘ழம்ரா' கிளையினரின் தலைவரான அம்ர் இப்னு மக்ஷி என்பவருடன் நட்பு உடன்படிக்கை செய்தார்கள். அந்த உடன்படிக்கையில் எழுதப்பட்டதாவது:

‘‘இது அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மது ‘ழம்ரா' கிளையினருடன் செய்யும் ஒப்பந்தம். ழம்ரா கிளையினர் தங்களது உயிர், பொருள் அனைத்திலும் பாதுகாப்புப் பெற்றவர்களே! அவர்களிடம் சண்டை செய்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். சண்டை செய்பவர்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்வோம். இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக போரில் ஈடுபடக் கூடாது. அவ்வாறே நபி (ஸல்) உதவிக்காக அழைத்தால் அவர்களும் உதவ வரவேண்டும். கடல் வற்றினாலும் இந்த  உடன்படிக்கை நிலைத்திருக்கும்.''

இதுதான் நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போராகும். நபி (ஸல்) அவர்கள் இந்தப் பயணத்தில் பதினைந்து நாட்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்தார்கள். இந்தப் போரிலும் வெள்ளைக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.

பத்ரு போரில் ஹம்ஜா (ரழி)

        அஸ்வத் இப்னு அப்துல் அஸது மக்ஜுமி என்பவன் பத்ரு போரின் தீ கங்குகளை முதலில் மூட்டினான் இவன் மிகுந்த கெட்ட குணமுடையவன். ‘‘நான் முஸ்லிம்களின் தடாகத்தில் நீர் அருந்துவேன் இல்லையேல் அதை உடைத்தெறிவேன் அல்லது அங்கேயே நான் செத்து மடிவேன் என அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்கிறேன்'' என்று கூறியவனாக படையிலிருந்து வெளியேறினான். அவன் தடாகத்தை நெருங்க, ஹம்ஜா (ரழி) அவனை வாளால் எதிர்கொண்டு அவனது பாதத்தைக் கெண்டைக்கால் வரை வெட்டி வீழ்த்தினார்கள். அவன் காலிலிருந்து ரத்தம் சீறிப் பாய்ந்தது. தடாகத்திற்கு அருகிலிருந்த அவன் தவழ்ந்து வந்து தடாகத்திற்குள் விழுந்தான். அவன் தனது சத்தியத்தை நிறைவேற்றி விட வேண்டுமென்று எண்ணியதால் தடாகத்திற்குள் விழுவதில் இந்த அளவு பிடிவாதம் காட்டினான். அவன் தடாகத்திற்குள் இருக்கும் போதே ஹம்ஜா (ரழி) அவர்கள் அவன் மீது மற்றொரு முறை பாய்ந்து அவனை வெட்டிச் சாய்த்தார்கள்.

ஒண்டிக்கு ஒண்டி

இந்த முதல் கொலை, போரின் நெருப்பை மூட்டியது. குறைஷிகளின் மிக தேர்ச்சி பெற்ற குதிரை வீரர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படைக்கு முன்னால் வந்தனர். அவர்கள் உத்பா இப்னு ரபிஆ, ஷைபா இப்னு ரபிஆ, வலீது இப்னு உத்பாவாகும். இவர்களை எதிர்க்க மூன்று அன்சாரி வாலிபர்களான அவ்ஃப் இப்னு ஹாரிஸ், முஅவ்வித் இப்னு ஹாரிஸ், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஆகியோர் களத்தில் குதித்தனர். இம் மூவடரிமும் அந்த எதிரிகள் ‘‘நீங்கள் யார்?'' என்றனர். அதற்கு அவர்கள் ‘‘நாங்கள் மதீனாவாசிகள்'' என்றனர். அதற்கு அந்த எதிரிகள், ‘‘சங்கைக்குரிய நீங்கள் எங்களுக்கு நிகரானவர்கள் தான். ஆனால் உங்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் நாடி வந்திருப்பதெல்லாம் எங்கள் தந்தையுடைய சகோதரர்களின் மக்களைத்தான் என்றனர். பின்பு அவர்களில் ஒருவன் ‘‘முஹம்மதே! எங்களது இனத்தில் எங்களுக்கு நிகரானவரை எங்களிடம் அனுப்பும்!'' என்று கத்தினான். நபி (ஸல்) அவர்கள். ‘‘உபைதா இப்னு ஹாஸே! எழுந்து செல்லுங்கள்! ஹம்ஜாவே! எழுந்து செல்லுங்கள்! அலீயே! எழுந்து செல்லுங்கள்!'' என்றார்கள்.

இம்மூவரும் அந்த எதிரிகளுக்கருகில் செல்ல, அவர்கள் ‘‘நீங்கள் யார்?'' என்றனர். இவர்கள் தங்களைப் பற்றி சொன்னதும் ‘‘சங்கைமிக்க நீங்கள் எங்களுக்குப் பொருத்தமானவர்களே'' என்றனர். இம்மூவரில் வயதில் மூத்தவரான உபைதா (ரழி) எதிரி உத்பாவுடனும், ஹம்ஜா (ரழி) எதிரி ஷைபாவுடனும், அலீ (ரழி)எதிரி வலீதுடனும் மோதினர். (இப்னு ஹிஷாம்)

ஆனால், ஹம்ஜாவும் அலீயும் தங்களது எதிரிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் அடுத்த வினாடியே அவ்விருவரையும் கொன்றுவிட்டனர். ஆனால், உபைதாவும் உத்பாவும் சண்டை செய்து கொண்டதில் இருவருக்கும் பலத்த காயமேற்பட்டது. உபைதா (ரழி) அவர்களின் கால் வெட்டுண்டு விழுந்தது. இதைக் கண்ட ஹம்ஜா (ரழி) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் உத்பா மீது பாய்ந்து அவனை வெட்டிக் கொன்றார்கள்.  பத்ரு போரில் இவர்களது வாளின் முன் எதிர்ப்பட்டோர் எவரும் உயிர் தப்பவில்லை.

உஹதுப் போர்

        ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) சிங்கம் பாய்ந்து தாக்குவதைப் போல போரில் எதிரிகளைப் பாய்ந்து தாக்கியவராக எதிரிப்படையின் நடுப்பகுதிக்குள் சென்றுவிட்டார். அவருக்கு முன் எதிர்த்து நின்ற வீரமற்ற எதிரிகள் புயல்காற்றில் இலைகள் பறப்பது போன்று அவரைப் பார்த்து விரண்டனர். இணைவைப்பாளர்களின் கொடியை சுமந்திருந்தவர்களை அழிப்பதில் ஹம்ஜா (ரழி) எடுத்துக் கொண்ட பங்கைப் பற்றி இதற்கு முன்பே நாம் கூறியிருக்கின்றோம். இறுதியாக, முன்னணி வீரர்களில் இருந்த இவர் கொல்லப்பட்டார். போர்மைதானத்தில் இவருடன் நேருக்கு நேர் போரிட்டு கொல்ல சக்தியற்ற எதிரிகள் கோழைத்தனமானத் தாக்குதல் நடத்தி இவரை வஞ்சகமாகக் கொன்றனர்.

அல்லாஹ்வின் சிங்கம் வீர மரணம்

        அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொன்றது வஹ்ஷி இப்னு ஹர்ப் அதுகுறித்து கூறுகிறார்: நான் ஜுபைர் இப்னு முத்ம்மின் அடிமையாக இருந்தேன். அவனது தந்தையின் சகோதரன் துஅய்மா இப்னு அதீ பத்ர் போரில் கொல்லப்பட்டான். குறைஷிகள் உஹுத் போருக்குப் புறப்பட ஆயத்தமான போது ஜுபைர் என்னிடம் ‘‘முஹம்மதுடைய சிறிய தந்தை ஹம்ஜாவை நீ கொன்றுவிட்டால் உன்னை நான் உரிமையிட்டு விடுகிறேன்'' என்று கூறினான். நான் மக்களுடன் சேர்ந்து புறப்பட்டேன். ஹபஷிகள் திறமையாக ஈட்டி எறிவது போரில் நானும் ஈட்டி எறிவதில் திறமையானவன். நான் எறியும் ஈட்டி மிகக் குறைவாகவே இலக்கைத் தவறும். போர் மூண்டபோது நான் ஹம்ஜாவைத் தேடி அலைந்தேன். வீரர்களுக்கு மத்தியில் அவரைச் சாம்பல் நிற ஒட்டகத்தைப் போன்று பார்த்தேன். அவர் படை வீரர்களைப் பிளந்து கொண்டிருந்தார். அவருக்கு முன் நிற்பதற்கு எவருக்கும் துணிவு வரவில்லை. நான் அவரைக் கொல்ல நாடி அதற்காக ஆயத்தமானேன். அவர் எனக்கருகில் வரும் வரை ஒரு மரம் அல்லது ஒரு பாறைக்குப் பின் மறைந்து கொள்ள நாடினேன். ஆனால், திடீரென ஸிபா இப்னு அப்துல் உஜ்ஜா ஹம்ஜாவுக்கு முன் வந்தான். அவனைப் பார்த்த ஹம்ஜா (ரழி) அவனுக்குக் கோபமூட்டுவதற்காக ‘‘ஓ ஆணுறுப்பின் தோலைவெட்டுபவளின் மகனே! என்னருகில் வா!'' என்றழைத்தார்கள். (அவனது தாய் கத்னாசெய்யும் தொழில் செய்து வந்தாள்.) அவன் அருகில் வந்தவுடன் ஹம்ஜா (ரழி)அவனது தலையை உடம்பிலிருந்து தனியாக்கினார்.

தொடர்ந்து வஹ்ஷி கூறுகிறார்: நான் நல்ல தருணம் பார்த்து எனது சிறியஈட்டியால் அவரை நோக்கி எறிந்தேன். அது அவரது தொப்புளுக்கு அருகில் குத்திக் குடலைக் கிழித்து அவரது மர்மஸ்தானத்தின் பக்கமாக வெளியாகியது. அவர் என்னை நோக்கி வர முயற்சி செய்தார். ஆனால் அவரால் வர முடியவில்லை. நான் அவரை அதே நிலையில் விட்டுவிட அவர் இறந்துவிட்டார்.

ஹிந்தாவின் பேய் கூத்து ஆட்டம்

        அதன் பின் சில கணங்களில் ஆங்குத் திரும்பிய வஹ்ஷி தம் குறு வாளை எடுத்துக் கொண்டு இவர்களது மார்பை பிளந்து இவர்களது இதயத்தையும் பிய்த்தெடுத்து அதனை அபூ சுப்யானின் மனைவி ஹிந்தாவிடம் கொடுத்தார். அதனைத் தன் வாயில் வைத்துக் கடித்து விழுங்க எண்ணினாள் அவள். விழுங்க இயலாத போது கீழே துப்பித் தன் தந்தையையும் சகோதரனையும் இவர்கள் பத்ரு போரில் கொன்றதற்குப் பழி தீர்த்துக் கொண்டாள். தான் வாக்களித்த வண்ணம் வஹ்ஷிக்குத் தன் ஆபரணங்களையெல்லாம் கழற்றி அன்பளிப்பு செய்தாள் அவள். அதன் பின் அவள் இவர்களின் காது, மூக்கு ஆகியவற்றை அறுத்து ஆபரணமாய் அணிந்து கொண்டு பேய்க் கூத்து ஆடினால்.

அவளின் கணவர் அபூசுப்யானும் தம்முடைய ஈட்டியை இவர்கள் வாயில் குத்தினார். “இவ்விதம் இறந்த உறவினரிடம் நடந்து கொள்வது நீதியா?” என்று ஒருவர் அவரிடம் வினவிய பொழுது, “தவறிழைத்து விட்டேன். எவரிடமும் இதனைக் கூறி விடாதே!’ என்று அவர் கூறினார்.

நபி (ஸல்) அவர்களின் கோபம்

        இவர்களது உடல் சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்ட தும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட வெஞ்சினத்திற்கு அளவில்லை. இவர்களது இறப்பிற்காக முப்பது குறைஷிகளின் உயிரைப் பழிவாங்குவதாக அவர்கள் சூளுரைத்தார்கள். அப்பொழுது தான், “நீங்கள் பழி வாங்க விரும்பின் அவர்கள் செய்தது போன்று செய்யுங்கள்! எனினும், அதனைப் பொறுத்துக் கொள்வது மேலானது” என்ற செய்தி இறைவனிடமிருந்து வந்தது.

நல்லடக்கம் செய்யப்பட்டது

        இவர்களுக்கு அருகில் மற்றவர்களுடைய வெற்றுடல்களை வைத்து நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை தொழ வைத்தார்கள். இவர்களின் பூத உடலும் இவர்களை போன்று உடல் சிதைக்கப்பட்ட (ஆனால் அவருடைய இதயம் மட்டும் பிய்த்தெடுக்கப் படவில்லை) இவர்களது மருகர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் வெற்றுடலும் ஒரே குழியில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டன.

        உஹத் மலைச்சாரலிலுள்ள இவர்களது அடக்கவிடத்திற்கு ஆண்டுதோறும் ஷஃபான் திங்கள் 14ஆம் நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சென்று இவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சி வந்தார்கள்.

        இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள், “அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் சிங்கம்” என்னும் சிறப்புப் பெயரை பெற்று விளங்குகின்றனர்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...