ஹஜ்ஜு - உம்ரா (புனித பயணம்)
(அறிவோம் இஸ்லாம் தொடர் - 17)
இஸ்லாத்தின் இறுதிக்கடமை
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இறைவனால் விதிக்கப்பட்ட இறுதிக் கடமை ஹஜ்ஜு ஆகும். இது ஹிஜ்ரீ 9-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் நிறைவேற்றியுள்ளனர். இந்தக் கடமையை மக்காவிலேயே பிறந்து மக்காவிலேயே 53 ஆண்டுகள் வாழ்ந்த நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது மரணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தனது 63 ஆம் வயதில் ஒரே ஒரு முறை ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள். எனவே வாழ்வில் ஒரே ஒரு முறை ஹஜ்ஜை நிறைவேற்றுவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. ஹஜ்ஜின் போது தனது ஸஹாபாக்களுடன் அரபாத் மைதானத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் இருந்த போது தான், “இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்).” என்ற திருவசனத்தை அல்லாஹ் இறைக்கியருளினான்.
ஹஜ்ஜும் மற்ற கடமைகளும் :
வசதி உள்ளவர்களுக்கு ஆயுளில் ஓரே ஒரு முறை மட்டும்
இஸ்லாத்தின் முதல் கடமையான ஈமான் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வினாடியும் இருப்பது கடமையாகும். இரண்டாவது கடமையான தொழுகை தினசரி ஐவேளை மட்டும் கடமையாகும். மூன்றாம் கடமையான நோன்பு புனித ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் கடமையாகும். நான்காம் கடமையான ஜக்காத் பணம் படைத்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் கணக்கிட்டு வழங்கவேண்டிய கடமையாகும். ஆனால் இறுதிக் கடமையான ஹஜ் முழு ஆயுளிலும் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் ஒரே ஒரு முறை நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.
துல்ஹஜ் மாதம் (பிறை 8, 9, 10, 11, 12, 13) ஐந்து நாட்கள் மட்டும்
ஈமான் எந்நேரமும் கடமை, தொழுகையை குறிப்பிட்ட கடமையான நேரமல்லாத நேரங்களில் உபரியாக, தனிப்பட்ட முறையில் நிறைவேற்றலாம். ரமலான் அல்லாத மற்ற நாட்களிலும், உபரியாகவோ விடுபட்ட நோன்புகளையோ நோற்கலாம். ஜகாத் எந்த நேரத்திலும் பகலிரவு வருடமுழுவதும் கொடுத்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் புனித ஹஜ் கடமை ஒவ்வொரு ஆண்டிலும் துல்ஹஜ் மாதம் பிறை 8, 9, 10, 11, 12, 13 நாட்களைத் தவிர வேறு நாட்களில் நிறைவேற்ற முடியாது.
ஹஜ் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் நிறைவேற்ற முடியும்
ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத் இவைகளை எந்த இடத்திலும் நிறைவேற்றலாம். ஆனால் புனித ஹஜ்ஜை குறிப்பிட்ட இடங்களில் தான் நிறைவேற்ற முடியும். மற்ற கடமைகளை ஒருவர் நிறைவேற்ற வேண்டுமானால் அவர் சுய நினைவுடனே இருத்தல் வேண்டும். ஆனால் ஹஜ் கடமையை நிறைவேற்றக் கூடியவர் மயங்கிய நிலையிலிருந்தாலும், சுய உணர்வே இல்லாமலிருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட இடத்தில் அவரை சில நிபந்தனைகளுக்குட் பட்டு கொண்டு போய் அழைத்து வந்து விட்டாலும் அவரது ஹஜ் நிறைவேறி விடும்.
ஓதவே தெரியாதவர்களும் ஹஜ்ஜை நிறைவு செய்து விட முடியும்.
மற்ற கடமைகளை நிறைவு செய்யும் போது அதற்குள் எத்தனையோ விதமான செயல்களைச் செய்தல் வேண்டும். எத்தனையோ விதமான பிரார்த்தனைகள், ஆயத்துகள் ஓதுதல் வேண்டும். ஆனால் ஹஜ்ஜின் போது எந்த ஆயத்துகளையும், துஆக்களையும் ஓதவேண்டிய கட்டாயமில்லை. ஓதவே தெரியாதவர்களும், சிறு குழந்தைகளும் கூட ஹஜ்ஜை நிறைவு செய்து விட முடியும்.
தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை ஹைலு, நிஃபாஸ் போன்ற பெருந்துடக்கு நிலையிலுள்ளவர்கள் நிறைவேற்ற முடியாது. ஆனால் இதே நிலையிலும் ஹஜ்ஜை நிறைவேற்றிவிட முடியும்.
அரபாவில் தங்குவது தான் ஹஜ்
துல்ஹஜ் பிறை 9 அன்று மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து (லுஹருடைய நேரத்திலிருந்து) அன்று மாலை சூரிய அஸ்தமனம் (மஃரிபு) வரையுள்ள நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் அரபாத் மைதானத்தில் “இஹ்ராம்” உடையில் இருந்து விட்டால் போதும்; ஹஜ் முடிந்து விடும். ஹாஜியாகிவிடுவார். “அரபாவில் தங்குவது தான் ஹஜ்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளார்கள்.
ஹஜ் யார் மீது கடமை :
இஸ்லாத்தில் உள்ள அனைவர் மீதும் ஹஜ் கடமையா? என்றால் இல்லை. யாரிடம் புனித ஹஜ்ஜை நிறைவேற்றி வருவதற்குரிய செல்வம் இருக்கின்றதோ, அவர் தனது கடன், கொடுக்கல் வாங்கல் இவைகளை நிறைவேற்றி, தன்னைச் சார்ந்துள்ள தனது மனைவி மக்களுக்கு தான் திரும்பி வரும் வரையுள்ள தேவைகளை நிறைவேற்றி ஹஜ்ஜுக்குச் சென்று வரக்கூடிய உடல் நலமும் திடகாத்திரமும் இருந்து வழிப் பயம் போன்ற துன்பங்கள் ஏதுமில்லாது இருந்தால் அவருக்குத்தான் ஆயுளில் ஒரே ஒரு தடவை ஹஜ்ஜை நிறைவேற்றுவது கடமையாகும்.
ஹஜ்ஜின் தத்துவங்கள்
புனித ஹஜ் கடமையாக்கப் பட்டிருப்பதற்கு எத்தனையோ தத்துவங்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஹஜ்ஜின் போது அடியார்கள் தனது நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இனப் பற்று, பொருள் உடமைகள் பற்று, மனைவிமக்கள் பற்று அனைத்தையும் துறந்து அல்லாஹ்வுக்காக தியாகம் செய்வது ஒன்றாகும். நாடு நகரத்தை விட்டு நான் இந்தியன், அமெரிக்கன், அரபியன் என்ற எண்ணமின்றி அவரவர்களுடைய கலாச்சாரத்தைக் காட்டும் உடைகளையும் விட்டு அனைவரும் தையல் இல்லாத ‘இஹ்ராம்’ என்னும் வெள்ளை ஒரே சீருடையில் இருந்து, அனைவரது வாயிலிருந்தும் ‘லப்பைக்’ - சரணடைந்தேன் என்னும் தல்பியாவை ஒரே தாரக மந்திரமாக முழங்க, நாமெல்லாம் ஒர் இனம், வணக்கத்திற்குரியவன் ஒர் இறை என்பதை ஹஜ் உறுதிப்படுத்துகிறது.
ஹஜ்ஜை நிறைவேற்றும் முறை :
துல்ஹஜ் பிறை 8
ஹஜ்ஜுடைய நாட்கள் துல்ஹஜ் பிறை 8-லிருந்து பிறை 13 வரையாகும். பிறை 8 அன்று அதிகாலை குளித்து சுத்தமாகி மக்காவிலிருந்தே ஹஜ்ஜிற்கு இஹ்ராம் அணிந்து, கஅபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுது, ஹஜ்ஜுடைய நிய்யத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுதிலிருந்து இஹ்ராம் நிலையில் பேணுதலுடன் இருத்தல் மிகமிக அவசியம். அத்துடன் அதிகமதிகமாக “லப்பைக்! அல்லாஹும்ம லப்பைக்! லப்பைக் லா ஷரீக்க லக் லப்பைக்! இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லா ஷரீக்க லக் லப்பைக்!” என்னும் தல்பியாவை கூறிக்கொண்டே இருத்தல் வேண்டும். அன்று மக்காவில் சுபுஹுத் தொழுது விட்டு காலையிலேயே கஅபாவை விட்டும் (மக்காவை விட்டும்) ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியேறி மினாவை சென்றடைய வேண்டும். மினாவில் தங்கியிருக்கும் நேரம் அங்கே எந்த விதமான விசேஷமான செயலும் இல்லை. மறு நாள் ஹஜ்ஜுடைய நாளாக இருப்பதால், அதற்கு நம்மை தாயார் படுத்துவதற்கான “ஆயத்த நாள்” - “யவ்மு தர்வியா” என்று பிறை 8 அழைக்கப் படுகிறது. மினாவில் லுஹர், அஸர், மஃரிபு, இஷா மறுநாள் காலை பிறை 9 சுபுஹு ஆகிய ஐவேளை தொழுகைகளையும் அதற்கிடையே குர் ஆன் திலாவத், திக்ரு, தஸ்பீஹ், தஃலீம் போன்ற நல்லமல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இன்றோ அல்லது இதற்கு முந்தியோ, ஷைத்தான்கள் - ஜும்ராக்கள் உள்ள இடங்களுக்கு சுற்றிப் பார்க்கும் நோக்கத்துடன் சென்று வரக்கூடாது, ஹஜ்ஜிற்குப் பின் தான் அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு முதன் முறையாகச் செல்ல வேண்டும்.
துல்ஹஜ் பிறை 9
பிறை 9 அன்று சுபுஹ் தொழுத பின் மினாவை விட்டு வெளியேறி முஜ்தலிஃபாவையும் தாண்டி அரஃபாத் மைதானத்தை அடைய வேண்டும். அன்று லுஹருடைய நேரத்திற்கு முன்பு முடிந்தால் இஹ்ராமுடைய நிலைக்கு இடைஞ்சல் ஏற்படாத முறையில் குளித்து, உணவு மற்ற தேவைகளையும் முடித்துக் கொண்டு, லுஹருடைய நேரம் வந்ததும், ஒரே பாங்கில் அடுத்தடுத்து லுஹர், அஸர் தொழுகையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு சூரியன் மறையும் வரை அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்த விதமான தடையும், திரையுமின்றி யாருடைய பரிந்துரையுமின்றி நேரடியாக துஆக்களிலும், தவ்பாவிலும், கலிமாக்களிலும் ஈடுபட்டிருப்பதுடன் ஈருலக நல்வாழ்விற்கும், பாவமன்னிப்பிற்கும் மன்றாடி துஆ செய்து கொண்டு இருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட நேரத்தில், தொழுகை, குர்ஆன் திலாவத், திக்ரு, தஸ்பீஹ் செய்வதைக் காண துஆக்களில் ஈடுபட்டிருப்பது தான் மேலானதாகும். தனக்காக மட்டுமின்றித் தன்னுடைய சுற்றத்தார்கள், உற்றார்கள், உறவினர்கள், அகில உலக மக்கள் அனைவருக்காவும் துஆ செய்தல் வேண்டும். இதன் காரணமாக அந்த ஹாஜியின் பாவங்களனைத்தும் மன்னிக்கப் பட்டு அன்று தாயின் வயிற்றிலிருந்து பிறந்த பாலகனைப் போல் பரிசுத்தமடைகிறார். அத்துடன் அந்த ஹாஜி யார்யாருக்காக துஆ செய்தாரோ அவர்கள் அனைவருடைய பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். இதே நிலையில் பொழுது அடையும் வரை அரஃபா மைதானத்தில் தங்கிவிட்டால் ஒருவர் ஹாஜி ஆகி விடுகிறார். இந்த நாள் தான் ஹஜ்ஜுடைய நாள், இதனை “யவ்முல் அரஃபா” என்று கூறப்படுகிறது.
சூரியன் மறையும் வரை அரஃபாத்தில் இருந்த பின்பு அரஃபாத்திலேயோ, செல்லும் வழியிலேயோ மஃரிபுத் தொழுகையை தொழுகாமல் முஜ்தலிஃபாவைச் சென்று அடைய வேண்டும். அங்கு எப்பொழுது போய்ச் சேருவோமோ அப்பொழுது ஒரே பாங்கு இரண்டு இகாமத்தில் மஃரிபு இஷாத் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும். பின்பு தங்களது உணவு மற்ற தேவைகளை முடித்துக் கொண்டு முடிந்த வரை அவ்விரவில் திக்ரு தஸ்பீஹ்களிலும், துஆக்களிலும் ஈடுபட வேண்டும். அந்த துஆக்களின் காரணமாக அந்த ஹாஜி வேறு யாராவது ஒரு அடியாருக்கு தீங்கிழைத்திருந்தால் அல்லாஹ் அதனையும் மன்னித்து விட்டு, தீங்கிற்குள்ளானவர்களுக்கு தனது பொறுப்பில் பரிகாரம் செய்கின்றான். முஜ்தலிஃபாவில் தங்கியிருக்கும் போது பயறு அளவுள்ள பொடிக் கற்களை 70க்கும் குறையாமல் தரையிலிருந்து பொறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
துல்ஹஜ் பிறை 10
பிறை 10 அன்று காலை சுபுஹுத் தொழுகையை முஜ்தலிஃபாவில் நிறைவேற்றி விட்டு மீண்டும் மினா வர வேண்டும். நேராக பெரிய ஷைத்தான் அடையாளமிடப் பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். அதுவரை சதாவும் ஓதிக் கொண்டிருக்கும் தல்பியாவை நிறுத்தி விட்டு, ஜம்ரத்துல் உக்பா (பெரிய ஷைத்தான்) எல்லையில் 7 பொடி கற்களை ஒன்றன் பின் ஒன்றாக எறிய வேண்டும். இதற்கு “ரமீ” என்று பெயர். இதை முடித்து ஹஜ்ஜுடைய குர்பானீயை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு ஆட்டையோ, அல்லது ஏழு பேர்கள் சேர்ந்து ஒரு மாடு அல்லது ஒட்டகத்தையோ அறுத்து பலியிட வேண்டும். அதன் பின்பு தலைமுடியை ஆண்கள் முழுமையாக மழித்தும், பெண்கள் ஒரு அங்குல நீளத்திற்கு முடியை வெட்டியும் கொள்ள வேண்டும்.
இதன் பின்பு மூன்று நாட்களாக விட்டுப் பிரிந்திருக்கும் கஅபாவை சென்று தரிசித்து “தவாஃபுல் ஜியாரத்” தவாபு செய்து வர வேண்டும்.
கஅபா சென்று தவாபு செய்து ஸயீ செய்து முடித்த பின்பு இஹ்ராம் உடையை களைந்து குளித்து நமது வழக்கமான உடையிலிருந்து கொள்ளலாம். ஆனால் மக்காவிலேயே தங்கிவிடாமல் மீண்டும் மினா வந்து சேர வேண்டும்.
துல்ஹஜ் பிறை 11, 12, 13
பிறை 10 அன்று குர்பானி கொடுக்க (பிராணியை பலியிட) வேண்டும். அன்று முடியாதவர்கள் பிறை 11, 12 வரை குர்பானி கொடுக்கலாம். இந்த நாட்கள் “அய்யாமுன்னஹ்ர்” எனப்படும்.
இதன் பின் பிறை 11, 12, 13 மூன்று நாட்களும் மினாவிலேயே தங்கி நமது அன்றாட தொழுகை, குர் ஆன் திலாவத், தஸ்பீஹ், திக்ரு இவைகளுடன் தினசரி, சிறிய, நடு, பெரிய ஷைத்தான்களுக்கு வரிசை கிரமமாக ஏழு ஏழு பொடிக் கற்களைக் கொண்டு “ரமீ” செய்ய வேண்டும். இதன் பின் பிறை 13 அன்று மக்கா திரும்பிவிட வேண்டும். மக்காவில் தங்கியுள்ள எஞ்சிய நாட்களில் இயன்றளவு தவாஃபுகளும் ஒரு சில உம்ராக்களும் நிறைவேற்றலாம். இறுதியாக கஅபாவை விட்டும் நாம் வெளியேறும் கடைசி நேரத்தில் “தவாபுல் விதா - இறுதி தவாபு” செய்து விடை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஹஜ்ஜின் சிறப்புகள் :
“எவர் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து, தீய வார்த்தைகள் பேசாமலும், தீமையான காரியங்களைச் செய்யாமலும் திரும்புவாரோ அவர் தனது தாயின் வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகனைப் போன்று (பாவமற்றவராகத்) திரும்புகிறார்” என்று அண்ணல் நபி (ஸல்) அருளுகிறார்கள். (புகாரீ, முஸ்லிம், மிஷ்காத்)
“ஹாஜியின் பரிந்துரை (யின் காரணமாக) 400 குடும்பத்தினர் (பாவமன்னிப்பிற்கு) ஒப்புக் கொள்ளப்படும்” என்று திரு நபி (ஸல்) அவர்கள் திருவுளமாயிருக்கிறார்கள். (தர்கீப்)
“நன்மைகள் நிறைந்த ஹஜ்ஜின் பிரதிபலன் சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை” என்று நாயகம் (ஸல்) நவின்றுள்ளார்கள். (புகாரீ, முஸ்லிம்)
“ஹஜ்ஜுக்கு முன் செய்த குற்றங்கள் அனைத்தையும் ஹஜ்ஜு போக்கி விடுகிறது” என்றும் திரு நபி (ஸல்) திருவுளமாகியுள்ளார்கள். (முஸ்லிம்)
“ஹாஜி ஒருக்காலும் ஏழையாக மாட்டார்” என்று திரு நபி (ஸல்) திருவுளமானார்கள். (மிஷ்காத்)
ஒருவர் ஹஜ்ஜோ, உம்ராவோ, ஜிஹாதோ செய்யும் எண்ணத்துடன் வீட்டிலிருந்து புறப்பட்டு வழியிலேயே மரணித்து விட்டால் அல்லாஹ் அவருக்கு அதை நிறைவேற்றின நற்கூலியை வழங்குவான். (மிஷ்காத்)
அல்லாஹ்வின் வல்லமைகளை நிரூபிக்கும் இடங்கள் :
கஅபத்துல்லாஹ் (ஆதி இறை இல்லம்)
பூமியின் நிலபாகம் படைக்கப் படுவதற்கு முன்பு உலகம் முழுவதும் நீராக இருந்தது. அதில் ஒரு நீர்க்குமிழி உருவானது. அந்த நீர்க்குமிழி விஸ்தரிக்கப்பட்டுத்தான் நிலபாகம் உருவாக்கப்பட்டது. ரொட்டி மாவு முதலில் உருண்டையாகப் பிடிக்கப்பட்டு பிறகு பரப்பி ரொட்டியாக ஆக்கப்படுவது போன்று இதிலிருந்து பூமி விஸ்தரிக்கப் பட்டது. நீர்க்குமிழி தோன்றிய இடத்தில் தான் இறைவன் கஅபத்துல்லாவை ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களைத் தோற்றுவிப்பதற்கு முன்பே இறக்கி வைத்தான். பின் நபி நுஹ் (அலை) அவர்கள் காலத்திலேற் பட்ட வெள்ளப் பிரளயத்தில் கஅபா வானில் உயர்த்தப்பட்டு விட்டது. பின்பு நபி இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு அல்லாஹுதஆலா மறுபடியும் கஅபாவைக் கட்ட வைத்தான். அதன் பின்பு பல நபிமார்கள் அரசர்கள் இவர்களைக் கொண்டு கஅபத்துல்லாஹ் பரிபாலனம் செய்யப்பட்டு, விஸ்தரிக்கப் பட்டு இன்று கம்பீரமான நிலையில் உள்ளது. உலக வரைபடத்தை நோக்கினால் ஆதி இறை இல்லமான கஅபா தான் உலகின் நடுநாயகமாக விளங்குவது தெரியும். உலகமென்னும் சக்கரத்திற்கு அச்சாணி போன்று கஅபா விளங்குகிறது.
ஹஜருல் அஸ்வத் :
கஅபத்துல்லாஹ்வின் நான்கு மூலைகளில் ஒன்றான இந்தியாவை நோக்கியுள்ள “ருக்னேஹிந்த்” என்னும் மூலையில் ஒரு கருப்புக் கல் பதிக்கப் பட்டுள்ளது. இது “ஹஜ்ருல் அஸ்வத்” - கருப்புக்கல் எனப்படும். இந்தக் கருப்புக்கல் ஆதியில் பால் போல் வெண்ணிறத்திலிருந்து அதன் பிரகாசம் கஅபாவைச் சுற்றிலும் வீசிக் கொண்டிருக்கிறது. அதன் முன் திசையில் ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் வரையிலும் ஒளி கொடுத்து வந்திருக்கிறது. அதனுடைய பிரகாசம் முன் திசை மட்டுமின்றி கஅபாவைச் சுற்றிலும் கோழிமுட்டை வடிவிலுள்ள நிலப்பரப்பிலும் பரவி விழுந்து, இந்த ஒளிவெள்ளம் பரவிய பகுதியைத் தான் “ஹரம் ஷரீப்” என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்லைக்குள் சண்டை சச்சரவு செய்வது, கொலை செய்வது, உயிர்ப் பிராணிகளைக் கொல்வது, புல் பூண்டுகளை அழிப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது.
ஹஜ்ஜின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் அக்கல்லின் மீது முகத்தை வைத்து முத்தமிட்டார்கள். எனவே ஹாஜிகளும் அக் கல்லை தொட்டு முத்தமிடுகிறார்கள். இது அல்லாமல் அந்த கல்லுக்கு நன்மையளிக்கவோ, தீமை செய்யவோ எந்த சக்தியும் கிடையாது. அதை முத்தமிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையானால் முத்தமிடாமலிருப்பதில் எந்த குற்றமும் குறையும் இல்லை.
மக்காமே இப்ராஹீம் :
நபி இப்ராஹீம் (அலை) தமது நூறு வயதுக்கும் மேற்பட்ட நிலையில் இறை கட்டளையை சிர மேற்கொண்டு தமது அருந்தவப் புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் உதவியுடன் கஅபாவைக் கட்டினார்கள். அப்பொழுது அந்தக் கட்டிடம் 9 கஜ உயரம் வரை கட்ட வேண்டியிருந்தது. அவ்வளவு உயரம் கட்டுவதற்கு இப்ராஹீம் (அலை) யிடம் ஏணியோ, சாரமோ இல்லை. ஒரு கருங்கல் மீது ஏறி நின்று கட்டினார்கள். கட்டிடத்தின் மட்டம் உயர உயர அந்தக் கல்லும் உயர்ந்து கொடுத்தது. அந்தக் கல்லில் ஹல்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் பாதம் பதிந்த அடையாளம் இன்றைக்கும் இறைவனின் வல்லமையைக் காட்டும் ஓர் அத்தாட்சியாகப் பாதுகாக்கப் பட்டுள்ளது. அந்த இடத்திற்கு மக்காமே இப்ராஹீம் என்று சொல்லப் படுகிறது.
ஜம் ஜம் கிணறு :
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை சிரமேற்கொண்டு தனது அருமை மனைவி ஹாஜரா (அலை) அவர்களையும், அருந்தவப் புதல்வர் பாலகர் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் மக்களது நடமாட்டமே இல்லாத, உணவோ, தண்ணீரோ கிடைக்காத, புல் பூண்டுகள் கூட முளைக்க முடியாத, புதர்களும், விஷ ஐந்துக்களும் நிறைந்த, பயங்கர காட்டு மிருகங்கள் மட்டுமே நடமாடும் பாலைவெளியிலே, நிற்பதற்கு கூட நிழல் இல்லாத நிலையில் விட்டு விட்டுச் சென்றார்கள். அங்கே சில நாட்களிலேயே உண்ண உண்வோ, பருக பானமோ இன்றித் தவித்த நிலையில் தனயனுக்குப் பாலூட்டக் கூட இயலாத நிலையில் தாய் ஹாஜரா (அலை) , தங்களுக்கு ஏதாவது உதவி, தண்ணீர் கிடைக்குமா என்று பரிதவித்து, ஏங்கித் தவித்து அருகே இருந்த ஸபா மலைக் குன்றுக்கும், மர்வா மலைக் குன்றுக்கும் இடையே ஓடி ஓடிச் சென்று தேடிக் கொண்டு இருக்கிறார். இதே நிலையில் பாலை மணலில் கிடத்தப்பட்டு பசியினால் துடித்துக் கதறி அழும் குழந்தை கால்கள் உதைத்து உதைத்து அவ்விடத்திலிருந்து நீர் ஊற்று ஒன்று வெளிப்படத் தொடங்குகின்றது. எங்கே மறுபடியும் அந்தத் தண்ணீர் பாலை மணலில் சென்று விடுமோ என்று பதறிய தாய் மணலினால் அணையிட்டு, தனது மொழியில் “ஜம்! ஜம்!!” - “நில்! நில்!!” என்று தண்ணீருக்கு உத்தரவு இடுகின்றார். அந்த ஊற்றிலிருந்து புறப்பட்ட தண்ணீர் அங்கேயே ஊற்றெடுத்து நின்று விடுகின்றது. இறைவனையே முழு மனதுடன் நம்பிய, அநாதரவான நிலையிலிருந்த தாய்க்கும், தனயனுக்கும் அல்லாஹ் அருளிய அருட்பானமான ஜம் ஜம் தண்ணீர் அன்றிலிருந்து ஏறக்குறைய ஐய்யாயிரம் (5000) ஆண்டுகள் கோடான கோடி மக்களின் தாகத்தை தீர்த்துக் கொண்டு, கொஞ்சமும் வற்றாத நிலையில் இறைவனின் வல்லமையை உலகிற்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. இறுதி நாள் வரை ஜம்-ஜம் ஊற்று உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கும்.
க அபாவை அடுத்துள்ள ஹஜ்ஜுக்குரிய இடங்கள் :
மினா :
மக்கமா நகரின் ஹரமுடைய எல்லைக்கு வெளியே இந்தியாவை நோக்கியுள்ள திசையில் மினா என்ற வெட்ட வெளி உள்ளது. இங்கே தான் நபி இப்ராஹீம் (அலை) தமது அருந்தவப் புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் ஆணையின் பேரில் அல்லாஹ்வுக்காக அறுத்து பலியிட (குர்பானீ கொடுக்க) முயன்றார்கள். அந்த நேரத்தில் அவர்களையும், பாலகர் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் உயிர்ப் பலி கொடுப்பதை விட்டும் மனம் மாறுவதற்கு ஷைத்தான் முயற்சி செய்த போது, அவனை அவர்கள் விரட்டி அடித்த இடங்கள் முறையே “ஜம்ரத்துல் அக்பா” (பெரிய ஷைத்தான்), “ஜம்ரத்துல் உஸ்தா” (நடு ஷைத்தான்), “ஜம்ரத்துல் ஊலா” (முதல் ஷைத்தான் அல்லது சிறிய ஷைத்தான்) என்று அடையாள மிடப்பட்டுள்ளன. இந்த இடங்கள் மினாவில் தான் உள்ளது. மேலும் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுக்க மறுத்த கத்தியைக் கொண்டு ஆத்திரத்தில் அருகேயிருந்த பாறையை வெட்டினார்கள் இப்ராஹீம் (அலை). அதனால் பாறை வெட்டுப் பட்டு இரண்டாகப் பிளந்துள்ளது. அதுவும் இன்றளவும் மினாவில் தான் உள்ளது.
முஸ்தலிஃபா :
மினாவிற்கு வெளியே இந்தியா உள்ள திசையிலேயே அடுத்துள்ள வெட்ட வெளி முஜ்தலிஃபா என்பதாகும். இங்கே தான் முதன் முதலாக ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் உலகில் சந்தித்து இரவு தங்கினார்கள். இந்த இடத்தை இறைவன் தன் திருமறையில், “மஷ்அருல் ஹராம்” என்று குறிப்பிடுகிறான்.
அரஃபாத் :
முஜ்தலிஃபாவையும் அடுத்து இந்தியா உள்ள திசையிலேயே உள்ள அடுத்த பாலைவெளி அரஃபாத்தாகும். இங்கே தான் ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களும், அவர்களது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் முதன் முதல் சந்தித்து ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டார்கள். அரஃபாத் என்றால் அறிந்து கொண்ட இடமாகும். ஹஜ்ஜுடைய நாட்களில் ஹாஜிகள் மக்காவை விட்டும் வெளியேறி மினா, அரஃபாத், முஜ்தலிஃபா முதலான இடங்களில் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு தங்க வேண்டும்.
கஅபாவில் மட்டுமே செய்யப்படும் விசேஷமான செயல்கள் :
தவாஃப் :
இன்று உலகில் லட்சகணக்கான இறை இல்லங்கள் பள்ளிவாசல்கள் இருந்தாலும், அவையனைத்தும் மக்கமா நகரிலுள்ள ஆதி இறை இல்லம் கஅபாவின் திசை நோக்கியே நிற்கின்றன. உலகிற்கே நடுநாயகமாக விளங்கும் அந்த இல்லத்தின் அதிபதியைச் சுற்றித்தான் அண்ட சராசரங்களும், அகில உலகமும் சுழல்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் முறையில் அங்கே செல்லும் அனவரும் அவ்வில்லத்தை இடப்புறமாக சுற்றி வருவார்கள். அதனை ஏழு முறை சுற்றி வந்து இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றுவது தான் ”தவாஃப்” எனப்படும். எந்தப் பள்ளிக்குள் நுழைந்தாலும் அங்கே இரண்டு ரக்அத்து அளவிற்காவது பள்ளிவாசலின் காணிக்கை தொழுகை போன்றவைகளை நிறைவேற்றாமல் வேறு செயலில் ஈடுபடக்கூடாது. ஆனால் கஅபாவில் செல்லுபவர்கள், முதன் முதலில் காணிக்கைத் தொழுகை போன்றவற்றில் ஈடுபடுவதைக் காட்டிலும், தவாஃப் செய்வது தான் சிறந்ததாகும். உலகின் வேறு பள்ளிவாசலையோ, பெரியோர்களின் அடக்க இடங்களையோ, மரம் அல்லது கட்டிடங்களையோ இது போல் சுற்றி தவாஃப் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை, தடுக்கப்பட்டுள்ளது. உலகின் அனைத்து நாட்டவரும், நிறத்தவரும், மொழியினரும், இனத்தவரும் அவ்விறை இல்லத்தை ஒரே எண்ணத்தில் இடம் சுற்றி வருவதை வானவெளியிலிருந்து பறவைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உலகமே இறைவனையே சுற்றி வருவதை மெய்ப்பிக்க கூடியதாக உள்ளது.
ஸயீ :
அன்னை ஹாஜரா (அலை) தமது அருந்தவப் புதல்வன் இஸ்மாயீல் (அலை) அவர்கள் பசிதாகத்தால் துடித்துக் கதறி அழுவதைத் தாங்க முடியாமல், ஏதாவது உதவியோ, நீரோ கிடைக்குமோ என்று மனித நடமாட்டமே இல்லாத அந்த பாலைவெளியில் ஸபா மலைக் குன்றுக்கும், மர்வா மலைக்குன்றுக்கு மிடையே ஓடி ஓடித் தேடினார்கள். இறுதியாக இறைவனின் அருள் ஹல்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களின் கால் உதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஜம் - ஜம் நீர் ஊற்று பீரிட்டுப் பொங்கியது. அல்லாஹ்வுக்காக தன்னையும் தனது பால்குடி மகன் இஸ்மாயீல் (அலை) அநாதரவாக பாலை வெளியில் விட்டுச் சென்றதை ஏற்று, சிரமங்கள் துன்பங்களைத் தாங்கி தியாகம் செய்ததை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹாஜிமார்கள் ஸபா மலைக்குன்றுக்கும், மர்வா மலைக்குன்றுக்கும் இடையே ஏழு தடவை தொங்கோட்டம் - ஸயீ செய்ய வேண்டியதை இறைவன் கடமையாக்கியுள்ளான். இவ்வாறு செல்லும் போது ஆண்கள் மட்டும் ஸபா மர்வாவுக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (மீலைன் அக்ரலைன்) மட்டும் சிறிது ஓடுவார்கள். பெண்கள் அந்த இடங்களில் ஓட வேண்டியதில்லை. தன் நடையாக நடந்தால் போதும். ஏனெனில் இறுதி நாள் வரை வரக் கூடிய பெண்கள் அனைவருக்குமாக அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் அன்றே ஓடி முடித்து விட்டார்கள்.
இந்த ஸயீ செய்யும் பொழுது (உம்ரா அல்லது ஹஜ்ஜிற்காக) இஹ்ராம் நிலையிலிருத்தல் வேண்டும். ஸபா மலைக் குன்றில் ஆரம்பித்து மர்வா மலைக் குன்றடைந்தால் ஒரு பயணம்; மறுபடியும் மர்வாவிலிருந்து ஸபா வந்தால் இரண்டாம் பயணம். இப்படியாக ஏழாவது தடவை ஸபாவிலிருந்து மர்வா சென்று முடிக்க வேண்டும். பின்பு மர்வா மலைக் குன்றில் ஆண்கள் தங்களது தலை முடியை முழுமையாகவோ, பகுதியாகவோ மழித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் தலை ரோமத்தின் நுனியில் ஒரு இஞ்ச் அளவிற்கு கத்தரித்துக் கொள்ள வேண்டும். அழகு அலங்காரம் செய்து, வாசனை திரவியங்கள் பூசி பாதுகாத்து தங்களது மகுடம் போல் யாருக்கும் வணங்காத தலை முடியை அல்லாஹ்வுக்காக மழித்து விடுவதனால், தான் பெரியவனல்லன்; தன்னை படைத்தவன் தான் மிகப் பெரியவன் என்பதை மெய்ப்பிப்பது போல் உள்ளது. அத்துடன் தனது சுய கவுரவத்தையும் வரட்டுப் பெருமையையும் இறைவனுக்கு முன்னால் நீக்குவதும் பெரும் தியாகமாகும்.
உம்ரா :
உம்ராவும் ஹஜ் போன்ற அமல் தான். ஆனால் ஹஜ்ஜிற்கும் உம்ராவுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன. ஹஜ்ஜை குறிப்பிட்ட சில நாட்களில் தான் செய்ய இயலும். ஆனால் உம்ராவை வருடம் முழுவதும் எந்த நாளும், எந்த நேரமும் நிறைவேற்றலாம். ஹஜ்ஜிற்காக கஅபாவிலிருந்து இஹ்ராம் அணிந்து கஅபாவை விட்டும், மக்கா முகர்ரமாவுடைய ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியேறி மினா, அரஃபாத், முஸ்தலிபா முதலிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால் உம்ராவிற்காக மக்கா நகரின் ஹரமுடைய எல்லைக்கு வெளியிலிருந்து இஹ்ராம் அணிந்து கஅபாவில் இருந்து அமல் புரிய வேண்டும்.
உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்த திசை வழியாகவும் கஅபாவை தரிசிப்பதற்காக ஒருவர் வருவாரேயானால், ஒரு குறிப்பிட்ட எல்லை வரும் போது அவர் தமது நிலையை மாற்றி கஅபாவை தரிசிப்பதற்காக இஹ்ராமுடைய நிலையில் உம்ரா செய்யும் எண்ணத்தில் தான் நுழைய வேண்டும். இந்த எல்லைகள் மக்காவிலிருந்து எண் திசையிலும் 300, 350 மைல் வரை குறிக்கப்பட்டுள்ளன. இந்த எல்லைகளை “ஹில்” அல்லது “மீக்காத்” என்பதாக குறிப்பிடுகின்றார்கள். இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளிலிருந்து நீர் வழியாகவோ, நில வழியாகவோ, வான் வழியாகவோ வரக் கூடியவர்கள் எமன் நாட்டிலுள்ள “யலம்லம்” என்ற மலைக்குன்றின் எல்லையை அடையும் போது கஅபாவை தரிசிப்பதற்காக (உம்ரா செய்வதற்காக) இஹ்ராமுடைய நிலைக்கு தயாராகி விட வேண்டும். இதே போன்று மதீனா முனவ்வரா திசையிலிருந்து வரக்கூடியவர்கள், மதீனா மாநகரின் வெளியே சுமார் 8 கி.மீ. தூரத்திலுள்ள (ஏறக்குறைய மக்காவிலிருந்து 470 கி.மீ தூரத்திலுள்ள) “துல் ஹுலைபா” அல்லது “பீரே அலி” என்று வழங்கப்படும் இடத்தைக் கடப்பதற்கு முன்பு இஹ்ராமுடைய நிலையில் தயாராக வேண்டும்.
இந்த “மீக்காத்” எல்லைகளுக்கு உள்ளேயே வசிக்க கூடியவர்கள் புனித கஅபாவை உம்ரா செய்ய வருவார்களேயானால், ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள ஹரமுடைய எல்லைகளை அடையும் போது தங்களை இஹ்ராமுடைய நிலைக்கு மாற்ற வேண்டும். இஹ்ராம் என்றால் அந்த நிலையில் நமக்கு இறைவனால் ஆகுமாக்கி (ஹலாலாக்கி) வைக்கப்பட்ட சில வாழ்க்கை வழி முறைகளை இறைவனுக்காக நமக்கு நாமே தடுத்து ஹராமாக்கிக் கொள்வது. இதற்காக அந்த எல்லையைத் தாண்டும் முன் குளித்து சுத்தம் செய்து தங்களது வழமையான ஆடை அணிகலன்களை மாற்றி விட்டு, இடுப்புக்கு கீழே ஒரு வெள்ளை தையலில்லாத முண்டும், தோளில் ஒரு துண்டு மட்டும் அணிந்து கொள்வது; (ஆனால் பெண்கள் மட்டும் தங்களது வழமையான உடைகளில் இருந்து கொள்ளலாம்) இதன் பின் ஆண்கள் தலையையோ, முகத்தையோ துணியால் மூடாமலிருத்தல் வேண்டும். பெண்கள் தங்கள் தலையை மூடியே இருக்க வேண்டும். ஆனால் அவர்களும் முகத்தை துணி கொண்டு மூடாமல் வைத்துக் கொள்ள வேண்டும். வீண் பேச்சுக்கள், சண்டை சச்சரவுகள், தர்க்கம், காம இச்சையான பேச்சுக்கள், பார்வைகள் இவைகளையெல்லாம் விட்டுத் தவிர்த்து கொள்ளல் வேண்டும். அதிகமாகத் ‘தல்பியா’ - “லப்பைக்! லப்பைக்!! அல்லாஹும்ம லப்பைக்! லப்பைக் லா ஷரீக்க லக் லப்பைக்! இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லா ஷரீக்க லக். லப்பைக்!” என்னும் தல்பியாவை அதிகமதிகம் ஓதிக் கொண்டிருக்க வேண்டும்.
கஅபத்துல்லாஹ்வை அடைந்து “ஹஜருல் அஸ்வத்” கல் வைக்கப் பட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து
ஹஜ் அல்லாத நேரங்களிலும் மக்காவிலேயே உள்ளவர்கள் உம்ரா செய்ய நாடும் போது, மக்காவின் ஹரமுடைய எல்லைக்கு வெளியே “தன்யீம்” என்றழைக்கப்படும் மஸ்ஜிது ஆயிஷா - பள்ளிவாசல் வரை சென்று அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வந்து உம்ராவை நிறைவேற்றலாம். இந்த இடம் கஅபத்துல்லாஹ் விலிருந்து ஏறக்குறைய 4 கி.மீ. தூரத்தில் ஹரமுடைய எல்லைக்கு வெளியே உள்ளது. இங்கிருந்து இஹ்ராம் அணிந்து செய்யப்படும் உம்ராவை “சிறிய உம்ரா” என்று அழைக்கிறார்கள். கஅபாவிலிருந்து ஏறக்குறைய 20 கி.மீ. தொலைவில் தாயிஃப் செல்லும் வழியிலுள்ள “மஸ்ஜிதுல் ஜிஃரானா” என்னும் இடம் வரை சென்று இஹ்ராம் அணிந்து வந்து உம்ரா செய்வதை “பெரிய உம்ரா” என்றும் அழைக்கிறார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.