இஸ்லாமிய ஆண்டு (ஹிஜ்ரி) மற்றும் ஹிஜ்ரத்
இஸ்லாம் தோன்றுவதற்கு முன் அரபிகள் தங்களின் ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு என்றும் நில அசைவு ஆண்டு என்றும் யானை ஆண்டு என்றும் பல ஆண்டுகளை அவர்கள் வைத்திருந்தார்கள். இஸ்லாம் வந்த பின் ஒரு புதுச் சகாப்தத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இஸ்லாமிய ஆண்டைத் தொடங்க வேண்டிய அவசியம்
ஒரு நாள் கலீபா உமர் (ரழி) அவர்கள் குறிப்பு ஒன்று தயாரித்தார்கள் என்றும் அதில் ஷஃபான் மாதம் என்று குறிப்பிட்டார்கள் என்றும், பின்னர் அவர்கள் தங்களையே தாங்கள் நோக்கி, “இதனைப் பின்னர்ப் பார்ப்பின் எந்த ஆண்டின் ஷஃபான் மாதம் என்று விளங்குவது?” என்று கேட்டுக் கொண்டார்கள் என்றும் அதன் பின்பே ஓர் இஸ்லாமிய ஆண்டைத் தொடங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதற்கு ஆவன செய்தார்கள் என்றும் ஒரு வரலாறு கூறுகிறது.
ஆனால் மற்றொரு வரலாறு கலீபாவிடமிருந்து வரும் கடிதங்கள் தேதி குறிப்பிடப்படாமல் வருகின்றன என்று பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் குறைபட்டுக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.
கலீபாவின் ஆலோசனை
அது பற்றி உமர் (ரழி) அவர்கள் தங்கள் தோழர்களுடன் ஆலோசனை கலந்தார்கள். பெரும்பாலோர் பாரசீக முறையைப் பின்பற்றலாம் என்று கூறினார்கள். ஆனால் வேறு சிலரோ அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளிலிருந்து இஸ்லாமிய ஆண்டுக் கணக்கு தொடங்கப்பட வேண்டுமென்று கூறினர். ஆனால், அது பற்றி அப்பொழுது திட்டமாய்த் தெரியாததால் அந்த யோசனையும் புறக்கணிக்கப்பட்டது. அப்பொழுது அலீ (ரழி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா (ஹிஜ்ரத்) புறப்பட்ட நாளிலிருந்து இஸ்லாமிய ஆண்டு கணக்கிடப் பட வேண்டுமென்ற தங்களின் கருத்தை எடுத்துரைத்தார்கள். அது பொருத்தமானதாய்த் தெரிந்ததால் அதனை எல்லோரும் ஏகமனதாய் ஏற்றுக் கொண்டனர்.
ஹிஜ்ரத்
ஓரூரிலிருந்து மற்றோர் ஊருக்குக் குடி பெயர்வதற்கு “ஹிஜ்ரத்” என்று பெயர். மக்காக் குறைஷிகளின் கொடுமை தாங்க இயலாது போக அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆணைப்படி அபிஸீனியாவுக்கு முஸ்லிம்கள் இரண்டு குழுக்களாக ’ஹிஜ்ரத்’ குடிபெயர்ந்தனர். பின்னர்க் குறைஷிகளின் கொடுமை அளவுக்கு மீறவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை நோக்கி யத்ரிபுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு பணித்தார்கள்.
தங்களைப் பற்றி இறை ஆணையை எதிர் பார்த்திருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு யத்ரிப் செல்லுமாறு கனவின் மூலம் பணித்தான் இறைவன். அவ்வாறே அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களை அழைத்துக் கொண்டு, தெளர் குகை சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்து, மக்காவில் கொந்தளிப்பு அடங்கியதும், கி.பி 622 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, ரபீஉல் அவ்வல் முதலாம் நாள் திங்கள் இரவு நபிகள் நாயகம் (ஸல்) தெளர் குகையை விட்டு யத்ரிபு நோக்கித் தனது ஹிஜ்ரத் பயணத்தைத் தொடங்கி வழக்கமான பாதைக்கு மாற்றமான பாதையில் பிரயாணமாகி 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை யத்ரிப் (மதீனா) புகுந்தார்கள். ஆனால் இஸ்லாமிய ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாளிலிருந்து தொடங்கப் பெறாமல் முஹர்ரம் மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்கப்பட்டது.
அதற்குக் காரணம், முஹர்ரம் மாதமே ஹஜ் முடிந்து வாணிபம் தொடங்கப் பெறும் மாதமாய் இருந்ததாகும். எனவே முஹர்ரம் மாதம், முதல் மாதமாக கொண்டு இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி 17 ஆம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் பிறை 20 வியாழன் அன்று, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கா நீங்கி மதீனாவில் குடியேறிப் பதினாறு ஆண்டுகளுக்குப் பின் பதினேழாம் ஆண்டில் ஆலோசனை நடத்தி ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கு தொடங்கப்பட்டது.
ஹிஜ்ரத் பயணத்தில் நமக்கு கிட்டிய பயன்கள்
இந்த பயணம் மனித குலத்திற்கு மாபெரும் நீட்சியாகவும், நாகரீக மேம்பாடாகவும் திகழ்கிறது. இதில் இறைநம்பிக்கை மிகுந்த படிப்பினைகள், அழகிய நற்குணங்கள், மனித நேய பண்புகள் நிறைந்துள்ளன. இறை நம்பிக்கை மிகுந்த படிப்பினைகள் என்றால் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பற்றி நல்லவிதமாக எண்ணம் கொள்வது, மன உறுதி கொள்வது, அவனுடைய மார்க்கத்தை பாதுகாப்பது போன்றவையாகும்.
இந்த ஹிஜ்ரத் பயணத்தில் நமக்கு உயரிய நற்பண்புகள் பல கிடைக்கப் பெறுகின்றன. அவற்றுள் ஒன்று நம்பகத்தன்மையை காப்பாற்றுவது. அதாவது நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள் அல்லது செய்தியை மற்றவர்களிடம் தந்து விடாமல் உரிய வகையில் பாதுகாக்க வேண்டும். அடுத்ததாக அவரவர்களுக்குரிய உரிமையை நிலைநாட்ட வேண்டும். நம்பகத்தன்மையை காப்பாற்றுவதில் இறைதூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனித்து விளங்குகிறார்கள்.
மனித நேய நற்பண்புகளை இந்த ஹிஜ்ரத் பயணம் நமக்கு கற்றுத் தருகிறது. தேவைப்படும் போது முஸ்லிம் அல்லாதவர்களிடமும் உதவிகள் பெற்றுக் கொள்ளும் பண்பை நமக்கு போதிக்கிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் ஹிஜ்ரத் பயணம் செல்வதற்கு பயண வழிகாட்டியாக அப்துல்லாஹ் இப்னு உரைகித் என்கிற மாற்று மத சகோதரரை உதவிக்கு அழைத்துக் கொண்டார்கள். காரணம் இவர் பயண வழிகள் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர். மேலும் நம்பிக்கைக்குரியவர்.
எழுச்சி பெற்ற புதிய சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கான விதையாக இந்த ஹிஜ்ரத் பயணம் அமைந்தது. இறைநம்பிக்கையின் அடிப்படையை நிலை நாட்டியது. அழகிய நற்குணங்களையும், மனிதநேய நற்பண்புகளையும் பறைசாற்றியது. ஹிஜ்ரத்துக்குப் பின்பே இஸ்லாத்தின் முன்னேற்றக் காலம் தொடங்கியது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.