Home


இஸ்லாத்தின் முக்கியத்துவம் 

(இஸ்லாம் பற்றிய தொடர் - 2)

        இஸ்லாம் ஒரு மதம் என்பதை விட ஒரு மார்க்கம் என்று சொல்லுவது பொருந்தும். இஸ்லாம் வாழ்க்கையின் வழி காட்டியாகும். ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடைய சகல காரியங்களையும் முறைப்படி நடத்திக் காட்டும் வழி தான் இஸ்லாமாகும். இந்த வழி முறை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையாக உள்ளது. மனிதன் தன்னுடைய சுய புத்தியின் காரணமாக உலகத்திற்கு வரவில்லை. இவன் அல்லாஹ்வினுடைய பல்லாயிரப் படைப்புகளில் ஒரு படைப்பாகும். அல்லாஹ் மற்ற படைப்பினங்களான சூரியன், சந்திரன், நட்சத்திரம், பூமி, காற்று, நீர், நெருப்பு, ஒளி, ஜடப்பொருட்கள், தாவரங்கள், பிராணிகள் ஆகியவை இயங்கக் கூடிய வழிமுறை சட்டதிட்டங்கள், நியதிகளை ஏற்படுத்தி உள்ளான். இதே போல மனிதன் இயங்குவதற்குள்ள நியதி தான் இஸ்லாம் மார்க்கம் ஆகும். இதை நபிமார்கள் மூலமாக அல்லாஹு தஆலா மனிதனுக்கு அறிவித்துள்ளான். இதைப் பின் பற்றுவது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

        ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பு, உலக வாழ்க்கை, இறப்பு ஆகிய எல்லாமே இறைவனின் சட்டத்திற்குட்பட்டே நடைபெறுகின்றன. அவனுடைய ஒவ்வொரு உறுப்பும், அமைப்பும் இறைவனின் சட்டப்படியே உருவாகியும், வளர்ந்தும் செயல்பட்டும் வருகின்றன. பிறப்பில் ஒவ்வொரு மனிதனும் முஸ்லிமாக பிறக்கின்றான். காரணம் அவனுடைய ஒவ்வொரு உறுப்பும் அல்லாஹ்வினுடைய  சட்டத்தின் படியே செயல்படுகின்றது. இவ்வுறுப்புக்கள் அடிபணிதலைக் கொண்டு இஸ்லாத்தைச் சார்ந்து இருக்கின்றன. எனவே இஸ்லாம் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது.

நிறைவுடைய மார்க்கம்

        இப்பூவுலகில் எத்தனையோ மதங்கள் தோன்றி மறைந்தும் அழிந்தும்  வருகின்றன. காரணம் அந்த மதங்களில் மனிதனின் வெறும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் மட்டுமே இருக்கின்றன. மனிதன் படைப்பினங்களிலேயே மிக உயர்ந்த படைப்பாக இருக்கின்றான். இத்தகைய மனிதனுக்கு உயர்ந்த, நேரிய, நீதியான சாந்தியும், சமாதானமும் வழங்கவல்ல ஒரு மார்க்கம் தேவையாகும்.

        நபிமார்களால் போதிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாமாகும். ஹலரத் ஆதம் நபி (அலை) அவர்கள் முதற்கொண்டு பல நபிமார்கள் இறைவனின் ஏகத்துவத்தையும் அவனால் அளிக்கப்பட்ட நேரிய வழியையும் போதித்து வந்தார்கள். இதை முழுமைப்படுத்திய பெருமை ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உரியதாகும். அவர்கள் இதுபற்றி குறிப்பிட்டதாவது : நபிமார்களால் கட்டப்பட்ட இஸ்லாம் என்னும் மாளிகை முழுமை அடைவதற்கு ஒரு கல் வைப்பது பாக்கி இருக்குமேயானால் அதை வைத்து மாளிகையைப் பூர்த்தி செய்தவன் நான் எனச் சொன்னார்கள்.

வெற்றி பெறுவதற்குரிய வழிமுறை

        உலக இறுதி நாள் வரை வரக்கூடிய மனித சமுதாயத்திற்கு உலகத்தில் ஏற்படக்கூடிய பல மாற்றங்களுக்கிடையில் மனிதன் வெற்றி பெறுவதற்குரிய வழிமுறை இஸ்லாம் மார்க்கமாகும். இதில் ஒரு மனிதன் தன்னுடைய குழந்தைப் பருவத்தில், வாலிபத்தில், குடும்ப வாழ்க்கையில், முதுமையில், வியாபாரத்தில், விவசாயத்தில், உத்தியோகத்தில் இன்னும் பலதரப்பட்ட, நிலைகளில் வாழக்கூடிய வழி முறைகளை இஸ்லாம் இயம்புகிறது. மேலும் மனிதனுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார, சமூக, அரசியல், தனிப்பட்ட, கூட்டு குடும்ப வாழ்க்கையின் சகல பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் இதில் உள்ளன. திருமணம், விவாகரத்து, மறுமணம் போன்ற பிரச்சனைகளும் தெளிவு படுத்தப் பட்டுள்ளன. சமூகத்தில் ஏழைகள், வறியவர்கள், பெண்கள், குழந்தைகள், அனாதைகள், முதியோர் போன்றோரின் கடமைகளும் தெளிவுப் படுத்தப் பட்டுள்ளன. கணவன், மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோருக்குச் செலுத்த வேண்டிய கடமைகள், பெற்றோருக்குப் பிள்ளைகளுடைய கடமைகள், தொழிலாளி முதலாளிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், முதலாளி தொழிலாளிக்கு செய்ய வேண்டிய கடமைகள், குடிமகன் ஆட்சியாளருக்கு செய்ய வேண்டிய கடமைகள், ஆட்சியாளர் குடிமகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் தவறுகளுக்குக் குற்றப் பரிகாரங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

        குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய அல்லாஹ்விற்குரிய கடமைகள், சக குடும்பத்தாருக்குரிய கடமைகள், சக முஸ்லிம்களுக்குரிய கடமைகள், சக மனிதப் படைப்புகளுக்குரிய கடமைகள், மற்ற படைப்பினங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆகியவைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன. நாயகம் (ஸல்) அவர்கள் ஹ்ஜ்ஜத்துல் விதா எனப்படும் இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றிய சமயம். “நான் இன்றைய தினம் இஸ்லாம் மார்க்கத்தை நிறைவு செய்தேன்.” என்ற கருத்துள்ள இறை வசனம் இறங்கியது.

இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம்

        படைப்புகளில் மேலான சிறந்த படைப்பாக அல்லாஹுத் தஆலா மனிதனைப் படைத்துள்ளான். மேலும் மனிதன் இம்மையிலும், மறுமையிலும் பூரணமான வெற்றி அடைய வேண்டிய நெறிமுறைகளைத் தன் வாழ்க்கையில் செயல் முறைகளில் செய்து காட்டும் பொருட்டு நபிமார்களை அனுப்பி வைத்தான். திருத்தூதர்கள் நேரிய வழியில் நடப்பவர்களாகவும், அதன்படி மக்களை ஏவுபவர்களாகவும் இருந்தனர். இந்த மார்க்கம் அல்லாஹ்வினால் ஒப்புக் கொள்ளப்பட்ட வழி முறையாகும். இந்த நேரிய ஷரீ அத் திட்டத்தை இறைவன் குர் ஆனை அருளி நபிகள் நாயகத்தைக் கொண்டு பூர்த்தி ஆக்கினான். எனவே மனிதனுக்குத் தன்னைப் படைத்தவனால் அருளப்பட்ட இஸ்லாம் மார்க்கமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்டது எனத் திருமறை கூறுகிறது.


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.