இஸ்லாம் என்றால் என்ன?
உலகில் எத்தனை மதங்கள் உள்ளனவோ அத்தனை மதங்களுள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட மனிதரின் பெயரோ, அம்மதம் எச்சமுதாயத்தில் தோன்றியதோ அச்சமுதாயத்தின் பெயரோ சூட்டப்பட்டுள்ளது. உதாரணமாக கிறிஸ்துவ மதம், புத்த மதம் ஆகியவை அவற்றைத் தோற்று வித்த மனிதர்களின் பெயரைக் கொண்டு அமைந்துள்ளன. யூத மதம் அச்சமுதாயத்தின் பெயரைத் தாங்கியுள்ளது. இந்திய நாட்டில் உருவான மதம் இந்துமதம் என நாட்டின் பெயரால் அழைக்கப் படுகிறது. ஆனால் இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட தனி மனிதர் அல்லது தனி சமுதாயம் அல்லது நாட்டின் பெயரைக் கொண்டதாக இல்லை. மாறாக அதன் பெயரே ஒரு குறிப்பிட்ட அம்சத்தையும் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது. அந்த அம்சமும் சிறப்பும் இஸ்லாம் என்னும் சொல்லிலேயே அடங்கியுள்ளன. இந்த மதம் மனிதனால் தோற்றுவிக்கப் பட்டதன்று என்பதே அதற்குரிய தனிச் சிறப்பாகும். இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் சார்ந்ததன்று. இதற்குக் குறிப்பிட்ட மக்கள், குறிப்பிட்ட நாடு, குறிப்பிட்ட சமுதாயம் எனும் வரையறைகள் எதும் இல்லை.
இஸ்லாம்
இஸ்லாம் எனும் அரபிச் சொல்லிற்கு கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்று பொருள்படும். இஸ்லாம் என்னும் சொல்லின் மற்றொரு பொருள் சாந்தி மார்க்கம் என்பதாகும். இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளுவதன் மூலமும் அவனுக்கு முற்றிலும் கீழ்படிந்து நடப்பதன் மூலமும் ஒருவன் தன் உடலுக்கும் உள்ளத்திற்கும் உண்மையான சாந்தியைத் தர முடியும். இத்தகைய கீழ்படிதல் தான் உள்ளத்திற்கு சாந்தி அளிக்கும். சமுதாயத்திலும் அமைதியை நிலை நிறுத்தும். இவ்வழி முறைக்குப் பெயர் தான் இஸ்லாம்.
முஸ்லிம்
இஸ்லாத்தை வாழ்க்கை நெறிமுறையாக அமைத்து நடக்கும் மனிதனுக்குப் பெயர் முஸ்லிம். இறைவனை நிராகரித்து நன்றி மறந்து அவனுக்குக் கீழ்ப்படியாது நடத்தல் குஃப்ராகும், இத்தகைய மக்கள் காபிர் எனப்படுவர். எவன் அல்லாஹ்வையே தன் ஏக இறைவனாகவும், படைத்துப் பரிபாலிக்கும் ரப்பாகவும், தன்னுடைய உபகாரியாகவும், ஏற்றுக் கொண்டு அல்லாஹ்வுடைய ஆணைகளின் படி நடந்து கொள்கிறானோ அவனே முஸ்லிம். உலகில் அவனுக்கு அல்லாஹ் நிம்மதியையும் சாந்தியையும் சமாதானத்தையும் வழங்குகிறான். ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் நெறிமுறைகளின் படி நடப்பதன் காரணமாக இவன் பிற சகோதர முஸ்லிம்களுக்கும், மற்றவர்களுக்கும் சாந்தியும் சமாதானமும் வழங்க வல்லவனாக இருக்கிறான். அல்லாஹ் இப்படிப்பட்ட அடியானைப் பொருந்திக் கொண்டு சன்மானமாக மரணத்திற்குப் பின் நிரந்தர தங்குமிடமாக சுவனத்தை அளிக்கிறான். யார் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறு செய்வார்களோ அவர் இம்மையிலும் தாழ்ந்து விடுவார்; மறுமையிலும் நிரந்தரமான துன்பத்திற்கு ஆளாவார்.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பரம்பரையுடன், ஒரு குறிப்பிட்ட குடும்பத்துடன் அல்லது ஒரு குறிப்பிட்ட உறவின் முறையுடன் தொடர்பு கொண்டிருப்பதால் மட்டும் அல்லாஹ்வின் பார்வையில், உயர்ந்தவராக ஆகிவிட முடியாது. இறைவனுக்கு அடிபணிதல், மக்களுக்கு நல்லவராக நடத்தல் ஆகியவைகளைக் கொண்டு மட்டும் தான் அல்லாஹ்வுடைய திருப்தியை அடைய முடியும்.
ஷைத்தான்
ஆதி மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து மலக்குகளை அவருக்குச் சிரம் பணியும் படி கட்டளையிட்டான். எல்லா மலக்குகளும் உடனே பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் மட்டும் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு அடிபணியவில்லை. இப்லீஸ் வானவர்களின் தலைவராகவும், அறிஞனாகவும் பெரிய பதவியில் இருந்தும் கீழ்ப்படிதல் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாறு செய்ததால் அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டு ஷைத்தான் என்று அழைக்கப்படுகிறான்.
அல்லாஹ்வின் பொருத்தம்
ஹலரத் ஆதம், ஹவ்வா இருவரும் சுவர்க்த்தில் மிகவும் சுதந்திரமாக நினைத்ததை அனுபவித்துக் கொண்டு, மலக்குகளின் ஊழியம் பெற்றுக் கொண்டு உல்லாசமாக இருந்து வந்தனர். ஆனால் ஒரு தடுக்கப்பட்ட மரத்தின் பழத்தை அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறாகப் புசித்ததின் காரணமாக அடிபணிதல் என்ற இறைக் கொள்கைக்கு மாறு செய்தார்கள். இதனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இன்ப வாழ்க்கை பறிக்கப்பட்டு அல்லாஹ்வுடைய அதிருப்திக்கு ஆளாகி இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்கள். ஆகவே எவராக இருந்தாலும் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிதல் என்ற செயலைக் கொண்டு மட்டும் தான் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைய முடியும்.
அக்லாக் - நற்குணம்
முஸ்லிம் என்றால் பிறருக்குச் சாந்தி சமாதானம் வழங்குபவர். ஒரு முறை நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமைப் பற்றிக் குறிப்பிடும் போது, “எவர் தன் நாவைக் கொண்டும், தன் உறுப்புகளைக் கொண்டும் பிறருக்குத் துன்பம் விளைவிக்கவில்லையோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார்”, என்று சொன்னார்கள். ஒரு முறை இஸ்லாம் என்றால் அக்லாக் - நற்குணம் என்று பதில் அளித்தார்கள். ஒரு பெண்மணி பூனையைக் கட்டி வைத்து உணவளிக்காமல் அதன் காரணமாக அது இறந்து விடவே அந்த பெண்மணி நரகவாதியாகி விட்டாள். எனவும், தீய நடத்தையுள்ள ஒரு பெண் நாயின் தாகத்தை தீர்த்ததால் அந்தப் பெண் சொர்க்கவாதியாகி விட்டாள் என்றும் கூறினார்கள்.
இஸ்லாம் தன்னைப் பின்பற்றுகின்ற மனிதனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் சாந்தி, சமாதானம், நிம்மதி அளிக்கக்கூடிய ஒரு மார்க்கமாகும். ஒரு முஸ்லிம் பிறரோடு ஒற்றுமையாகவும் உபகாரியாகவும் வாழக் கூடியவராகவும் இருப்பார். இதன் காரணமாக முஸ்லிம்கள் பல இடங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல மொழிகள் பேசக்கூடியவர்களாக இருந்தாலும், உள்ளங்களின் இணைப்பை அல்லாஹ்விற்குப் பூரணமாக அடிபணிவதைக் கொண்டு மட்டும் தான் பெற முடியும்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்…..
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.