Home


(அறிவோம் இஸ்லாம்- இஸ்லாம் பற்றிய தொடர் - 20)

இஸ்லாத்தில் பெண்கள்

        இறைவனின் படைப்புகளில் மிக அழகான படைப்பு பெண்ணாகும். ஆனால் பெண்களை தாழ்வாக, தரக்குறைவாக கருதக்கூடிய  நிலைமை பண்டைய காலம் தொட்டு இருந்து வந்துள்ளது. அக்காலத்தில் அரபு நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் அது அவமானம் என எண்ணி பெற்றவர் பல மாதங்கள் வெளியே வராமல், சில சமயங்களில் பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த தாகவும் வரலாற்று ஏடுகளில் காணப்படுகிறது. பெண்களைத் தாழ்வாகக் கருதும் இழி நிலை உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்துள்ளது. இத்தன்மை அருமை நாயகம் நபி (ஸல்) அவர்களின் வருகையால், எல்லாம் வல்ல இறைவன் அளித்த அருள் மறையாம் திருமறை இன் துணை கொண்டு மாறி, இப்பொழுது பெண்களுக்கு இஸ்லாம் ஓர் உன்னத நிலையை வழங்கியுள்ளது. இஸ்லாம் பெண்களுக்கு மட்டும் சில பிரத்தியேகமான கட்டுப்பாடுகளை விதித்து, அவர்களின் தகுதியை உயர்த்தி ஆணுக்குச் சமமாக எல்லா உரிமைகளையும் கொடுத்திருக்கிறது.

பெண்களின் சம அந்தஸ்து

        “நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கு) வழிபடும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவு கூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.” (33:35 குர்ஆன்) என்று வல்ல நாயன் தம் திருமறையிலே ஆண்களையும், பெண்களையும் சமமாக உரிமை பாராட்டிப் பேசுகின்றான்.

        மேலும் இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்.

“ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். அன்றி (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.” (16:97 குர் ஆன்.)

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் ஆகிய ஈமான் கொள்ளுதல், தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையும் ஆண்களைப் போன்று பெண்களுக்கும் மிக முக்கியமானவைகளாகும். இவற்றினால் இருபாலரும் இறைவனிடமிருந்து பெறும் வெகுமதியில் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. வல்ல நாயன் தன் வான்மறையில் பின்வருமாறு கூறியுள்ளான்.

“மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்து தான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரை விட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.” (49:13 குர்ஆன்.)

திருக்குர்ஆனில் பெண்கள் பெயரில் ஓர் அத்தியாயம்

        இறைவன் தனது இறுதி நபி (ஸல்) அவர்களுக்கு அருளிய திருக்குர்ஆனில் பெண்களின் பெயரில் ஓர் அத்தியாயத்தை (ஸுரத்து அன்னிஸாஉ) அருளியதன் மூலம், சமூகத்தில் பெண்களுக்குரிய முக்கியத்துவத்தையும் உயர்வையும் இறைவன் குறிப்பால் உணர்த்துகின்றான் எனலாம். பெண்கள், சமுதாயத்தின் கண்களாவர். சிறந்த தலைமுறையினை உருவாக்குகின்ற மிகப் பெரிய பொறுப்பு பெண்களைச் சார்ந்திருக்கிறது. எனவே ஒரு சமூகத்தில் பெண்கள் மதிக்கப் பெற்றால் அந்த சமூகம் அமைதி பெறும்; வளர்ச்சி காணும் என்பதற்கு இப் பெயர்ச் சூட்டல் ஓர் எடுத்துக்காட்டாகும்.

பர்தாவின் அவசியம்

        பெண்களின் ஒவ்வொரு அங்கமும் ஆண்களை ஈர்க்க கூடியதாகவும், இச்சையை உண்டாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. எனவே பெண்கள் தங்கள் முகம், இரு முன்கை, இரு கால் பாதம் இவைகளைத் தவிர மற்றவைகளை மறைத்தாக வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், “பெண் மறைவிடத்தில் இருக்க வேண்டியவள்; அவள் வெளிக் கிளம்பிச் சென்றால், ஷைத்தான் அவளை (பிற ஆண்களின் கண்களுக்கு சிங்காரித்துக் காட்டுகிறான்) உற்று நோக்குகிறான். (நூல் : திர்மதி)

        உண்மையில் லட்சணமில்லாத பெண்ணொருத்தி வீதியில் சென்றாலும் அவளை ஆண்கள் ஒரு நிமிடமாவது ஏறிட்டுப் பார்க்காமல் விடுகிறார்களில்லை. ஏன்? ஷைத்தான் அவர்களை அவ்வாறு அலங்கரித்து காட்டுகிறான். இதில் விளையும் தீமையைத் தடுப்பதற்காகவே இஸ்லாம் பர்தா முறையை கையாளும் படி வலியுறுத்துகிறது. அவசியமின்றி அங்குமிங்கும் செல்லலாகாது. அவசியத்தை முன்னிட்டு வெளிச்செல்வதாயினும் பர்தா அணிந்து செல்ல வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. இந்தப் பர்தா, பெண்களின் “பாதுகாப்பு ஆயுதம்” என்று கூறினால் மிகையாகாது.

        கண்களுக்கு இமை எப்படிப் பாதுகாப்போ அதே போன்று சமுதாயத்தின் கண் களாகிய பெண்களுக்குப் பாதுகாப்பு பர்தாவாகும். வாகன ஓட்டுனருக்கு ‘ஹெல்மெட்’ எவ்வாறு பாதுகாப்போ அதே போல் “பெண்களின் ஹெல்மெட்” பர்தாவாகும்.

        அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நானும் ஹாரிஸுடைய மகளார் மைமூனாவும் இருந்த பொழுது உம்முமக்தூமுடைய மகனார் வந்தார். அது சமயம் பர்தா முறையைப் பற்றிய கட்டளை வந்திருந்தது அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அவருக்காக திரைமறைவிற்குள் இருவரும் சென்று விடுங்கள் என்று கூறினார். அதற்கு நாங்கள், “நாயகமே! அவர் தாம் குருடராயிற்றே எங்களை அவர் பார்க்க இயலாதல்லவா?” என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இருவரும் குருடர்கள் அல்லவே, நீங்கள் இருவரும் அவரைப் பார்க்கிறீர்கள் அல்லவா?” என்று வினவினார்கள்.        (அபூ தாவூது - திர்மதி)

        அன்னை ஆயிஷா நாயகி மூமின்களின் தயாராவார். அவர்கள் பர்தா முறையை மிகப்பேணுதலுடன் அனுஷ்டித்து வந்தார்கள். நாட்டின் பல்வேறு பாகத்திலிருந்து தம்மிடம் (மஸ்அலா) தீன் விளக்கம் கேட்டு தெரிய வரும் மாணவர்களுக்கு திரைக்கு பின்னாலிருந்தே போதிப்பார்கள். இந்த அம்மையாரின் வீட்டில் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்களையும், ஹல்ரத் அபூபக்ர் (ரழி) அவர்களையும் நல்லடக்கம் செய்யப்படுள்ளது. இவ்விருவரின் கப்ரு இருக்கும் வரை அங்கே பர்தா இல்லாமல் சென்று ஜியாரத் செய்வார்கள். பின்னர் ஹல்ரத் உமர் (ரழி) அவர்களையும் மூன்றாவதாக அங்கே நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு எந்த சமயமும் பர்தா இன்றி இவ்வம்மையார் அங்கே பிரவேசிக்கவில்லை.

        “அந்நியப் பெண்ணுடன் (ஆண்) எவரும் தனித்திருக்க வேண்டாம். ஆனால் அவள் அவருக்கு பர்தா இட வேண்டிய அவசியமில்லாத முறை இருந்தாலொழிய” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.  - (புகாரீ - முஸ்லிம்)

இது பற்றி இறைவன் திருமறையில்

        “நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும் படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.” (சூரத்துல் அஹ்ஜாப் : 59) என்று இறைவன் திருமறையில் கூறியிருக்கின்றான்.

பெண்ணுரிமை

        இஸ்லாத்தில் ஆணுக்கு என்ன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவோ, அவை அனைத்தும் பெண்களுக்கு உண்டு. பெண்களின் உடற்கூறு கருதி ஹெல்மேட்டாக பர்தா  கடைப்பிடிக்க கூறப்பட்டுள்ளது. சொத்துரிமை, திருமணம் செய்யும் உரிமை, திருமண விலக்கு உரிமை, சமுதாய அந்தஸ்து, அனைத்திலும் பெண்ணிற்கு நபிகள் நாயகம் உரிமை வழங்கினார்கள்.

        படைத்தோனின் பண்பான வழியில் சீராக நடப்போமேயானால், இறைவன் நமக்கு அன்பையும், நற்கூலியையும் நல்குவான்.


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....


Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.