லைலத்துல் கத்ர்
லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் ‘கண்ணியம் வாய்ந்த இரவு’ என்பதாகும். இவ்விரவில் திருக்குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டதால் இவ்விரவு சிறப்புப் பெற்றது என்று சிலரும், அதற்கு முன்னரே இது சிறப்புடைய இரவு தான் என்றும் அதன் காரணமாக அதில் திருக்குர் ஆன் இறக்கி வைக்கப்பட்டதென்று வேறு சிலரும் கருதுகின்றனர். இவ்விரவில் விண்ணவர்கள் மண்ணகம் இறங்குவதால் மண்ணகத்தில் இட நெருக்கடி அதிகமாக ஏற்படுவதால் இதற்கு ‘நெருக்கமான இரவு’ என்று பொருள்படும் ‘லைலத்துல் கத்ர்’ என்ற பெயர் ஏற்பட்டதென்று அல் கலீல் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். பனீ இஸ்ராயீல்களில் ஒரு பெரியார், ஆயிரம் மாதங்கள் இறைவனுக்கென்று அறப்போர் செய்ததாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டுத் தோழர்கள் வியப்புற்றார்கள் என்றும், அதன் பின்னர் இவ்விரவில் வணக்கம் நிகழ்த்துவது அதைவிட மேலானது எனக் கூறி இறைவசனம் வந்ததென்றும் கூறுவர்.
இது பற்றி இறைவன் தன் திருமறை அல்குர்ஆனில்…..
97:1. நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம்.
97:2. (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?
97:3. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.
97:4. அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
97:5. ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
இவ்விரவின் மாண்பைப் பற்றி இறைவன் தன் திருமறையில் குறிப்பிடும் பொழுது இது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாயும், அவ்விரவில் தான் குர்ஆனை இறக்கி வைத்ததாயும் கூறுகின்றான்.
இருவர் சண்டையிட்டதனால் எந்த இரவு என கூற மறந்த நிகழ்வு
லைலத்துல் கத்ர் எந்த இரவு என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திட்டவட்டமாகக் கூறிச் செல்லவில்லை. ஒரு தடவை இது எந்த இரவு என்று மக்களுக்கு அறிவிப்பதற்காக அவர்கள் பள்ளிவாயிலுக்கு வந்த பொழுது இருவர் சண்டையிட்டதனால் ஏற்பட்ட குழப்பத்தில் அதனைக் கூற மறந்து விட்டனர். பின்னர் இல்லம் திரும்பிய பொழுதுதான் அது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. இறைவன் அதனைத் தாம் மக்களுக்குத் தெரிவிப்பதை விரும்பவில்லை என எண்ணி அவர்கள் இருந்து விட்டார்கள். உண்மையில் அது ஒரு நன்மையேயாகும். ரமலானின் இருதியில் மக்கள் சோர்வுறாது வணக்கம் நிகழ்த்த அது ஒரு தூண்டுகோலாய் அமைந்துள்ளது.
இது பற்றிய ஹதீஸ் ஸஹீஹ் புகாரியில்…
உபாதா பின் அஸ்ஸாமித் (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘லைலத்துல் கத்ர்’ (கண்ணியமிக்க இரவு) பற்றி (‘அது ரமளான் மாதத்தில் எந்த இரவு’ என்று) அறிவிப்பதற்காக(த் தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரு முஸ்லிம்கள் தமக்கிடையே சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள்.
(இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “லைலத்துல் கத்ர் இரவு பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இன்ன மனிதரும் இன்ன மனிதரும் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். (அவர்களை விலக்கி விடச் சென்றேன்.) எனவே, அது (பற்றிய விளக்கம் என் நினைவிலிருந்து) நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமளான் மாதத்தின் இருபத்து) ஏழு, (இருபத்து) ஒன்பது, (இருபத்து) ஐந்து ஆகிய (ஒற்றை எண்ணிக்கையிலான) இரவுகளில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்” என்றார்கள். (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண் : 49 அத்தியாயம் :2)
இவ்விரவு எது என்பது பற்றி பலரும் கூறும் கருத்துக்கள்
இவ்விரவு எது என்பது பற்றி பலரும் பலவிதமாகக் கூறுகிறார்கள். இதைப் பற்றி இறைவன் கூறும் ‘அல் கத்ர்’ சூராவில் லைலத்துல் கத்ர் என்ற சொல்லை மும்முறை திரும்பத் திரும்பக் கூறுகிறான். அச்சொல்லில் ஒன்பது எழுத்துகள் உள்ளன். எனவே மூன்றை ஒன்பதால் பெருக்கினால் இருபத்தேழு வருவதாலும், மேலும் அந்த சூராவில் உள்ள மொத்தம் முப்பது சொற்களில் ‘அது’ என்று பொருள்படும் ‘ஹிய’ என்ற சொல் 27ஆவது சொல்லாய் இருப்பதாலும் ரமலான் மாதம் 27ஆம் இரவே லைலத்துல் கத்ர் இரவு என்று பொரும்பாலோர் கருதி அன்றே தராவீஹ் தொழுகையில் குர் ஆனை ‘ஹத்தம்’ செய்கிறார்கள்.
“லைலத்துல் கத்ரை ரமலான் பிறை 20க்குப் பின்னுள்ள ஒற்றைப்படை உள்ள இரவுகளில் தேடிக் கொள்ளுங்கள்” என்ற ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ‘அஹ்லெ ஹதீஸ்’கள் ரமலான் 21, 23, 25, 27, 29 ஆகிய இரவுகளில் அதிகமான வணக்கங்களில் ஈடுபடுகிறார்கள்.
லைலத்துல் கத்ர் ரமலான் மாதம் 30 நாள்களில் ஒரு நாள் இரவென்றும், ரமலான் 14 ஆம் நாள் இரவென்றும், பத்ருப் போர் நிகழ்ந்த நாளாகிய ரமலான் 17 ஆம் நாள் இரவென்றும் பல்வேறு விதமாக கூறப்படுகிறது.
கல்வத்து நாயகம் அவர்கள் பல்லாண்டுகளாய் ‘கல்வத்து’ இருந்த பின் ஒரு வழக்கின் பொருட்டு முதுகுளத்தூர் சென்று திரும்பிய பொழுது வழியில் ஓரிரவு இதம்பாடல் என்ற ஊரிலுள்ள ஒரு நண்பரின் இல்லத்திற்குச் சென்ற சமயம் அங்கிருந்த விளக்கு அணைந்ததாயும், எனினும், அவர்களின் முகம் ஒளிர்ந்ததாயும், அன்று ‘லைலத்துல் கத்ர்’ என்று அவர்கள் கூறியதாயும் ஒரு வரலாறு உள்ளது.
இவ்வாறு ‘லைலத்துல் கத்ர்’ எவ்விரவு என்பது பற்றி நாற்பது விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
ரமலான் பிறை 27 தான் ‘லைலத்துல் கத்ர்’ என்று திடமாகக் கொள்வது பற்றி
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்வாய் மொழியாகிய, “நான் பிறந்ததும் திங்கட்கிழமை, நபித்துவம் எய்தப் பெற்றதும் திங்கட்கிழமை, ‘ஹிஜ்ரத்’ புறப்பட்டதும் திங்கட்கிழமை” என்பதையும், முதலாவது ஹிஜ்ரி முஹர்ரம் முதல் நாள் கி.பி.622 ஜுலை 16 வெள்ளிக்கிழமையிலிருந்து நிருணயிக்கப்பட்டு இருப்பதையும் அடிப்படையாக வைத்துக் கணக்கிட்டதில் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ‘ஹிரா’ மலையில் வைத்து முதன் முதலாய் ஜிப்ரீல் மூலம் நபித்துவம் நல்கப்பட்டது ரமலான் பிறை 27 திங்கள் இரவு (அதாவது கி.பி.610 ஆகஸ்ட் 24) என்பதாகவே வருகிறது. அவ்வாண்டு ரமலான் பிறை 20க்குப் பின்னுள்ள வேறு ஒற்றைப்படையுள்ள எந்தப் பிறையிலும் திங்கட்கிழமை வராததையும் கண்டு ‘லைலத்துல் கத்ர்’ ரமலான் பிறை 27 தான் என்று திடமாகக் கொள்ள முடிகிறது. அன்று சூரியகிரணமும் ஏற்பட்டுள்ளது.
அவ்விரவை நான் எய்த பெறின் என்ன செய்ய வேண்டும்?
“அவ்விரவை நான் எய்தப் பெறின் என்ன செய்ய வேண்டும்?” என்று ஆயிஷா (ரழி) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவிய பொழுது, “அவ்விரவில் ‘அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வு துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ (இறைவனே! நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும் மன்னிப்பதை உவப்பவனாயும் உள்ளாய். என் பாவம் பொறுத்தருள்வாயாக!) என்று அதிகமதிகமாக ஓதி வருமாறு பணித்தனர் அண்ணல். “அவ்விரவு வரின் நான் உடல் நலத்தைத் தவிர்த்து வேறொன்றையும் பற்றி இறைவனிடம் வேண்டுவதில்லை” என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவ்விரவில், ‘லாஇலாஹ இல்லல்லாஹு’ என்ற கலிமாவை இதய சுத்தியுடன் மூன்று தடவை ஓதின், முதல் தடவை ஓதுவதனால் ஒருவனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும், இரண்டாவது தடவை ஓதுவதனால் ஒருவனுக்குச் சுவனப்பேறு அளிக்கப்படும் என்றும் ஹதீது நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே, இவ்விரவில் கலிமாவை அதிகமதிகமாக ஓதுவது நற்பயன் நல்குவதாகும்.
மேலும், இவ்விரவில் ‘இன்னா அன்ஸல்னாஹு’ சூராவை ஒருவர் இஷாத் தொழுகைக்குப் பின் ஏழு தடவை ஓதி ‘துஆ’ இறைஞ்சின் இறைவன் அவரை நோய்களைவிட்டும் காத்தருள் புரிவான் என்றும், அவருக்குச் சுவனப் பேற்றினை வழங்குமாறு வானவர்கள் இறைவனிடம் மன்றாடுவார்கள் என்றும் ஹதீது நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இவ்விரவில் குறைந்த அளவு நஃபில் தொழுகை இரண்டு ரகஅத் களாகும். நடுத்தரமானது நூறு ரகஅத் களாகும். அதிகப்படியானது ஆயிரம் ‘ரகஅத்’ களாகும்.
இவ்விரவில் ஒருவன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பின் ‘இன்னா அன்ஸல்னாஹு’ சூராவை ஏழு தடவை ஓதி இரண்டு ரகஅத் தொழுது இஸ்திஃபாரை எழுபது தடவை ஓதின், அவன் அவ்விடத்தை விட்டுக் கிளம்பு முன் இறைவன் அவனது பவம் பொறுத்து அவனுக்குச் சுவனப் பேற்றை அளிக்குமாறு அமரர்களுக்கு ஆணையிடுவான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவ்விரவில் இறந்தவருக்கு மறுமையில் கேள்வி கணக்குக் கேட்கப்படாதென்றும் கூறப்படுகிறது.
இவ்விரவில் மஃரிபையும், இஷாவையும் இமாம் ஜமா அத்துடன் தொழுபவர் இவ்விரவின் பேற்றினைப் பெற்று விடுவார் என ஸயீது இப்னு முஸையப் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.