Home


நூஹ் அலைஹிஸ்ஸலாம்

        ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வுலகில் இறங்கி 1642 ஆண்டுகள் சென்றபின் இவர்கள்  இவ்வுலகில் தோன்றினர். இவர்களின் பெயர் ஸாகுப் என்றோ ஸகுன் என்றோ கூறப்படுகிறது. அரபியில் நூஹா என்றால் அழுபவர் என்று பொருள். பிரளயத்திற்குப் பின் இப்லீஸ், நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன் தோன்றி, “உம்மால் தான், உம் இறைஞ்சுதலால் தான் இந்தப் பிரளயமும், இத்தகு அழிவும் ஏற்பட்டன” என்று கூறியதாகவும், அது கேட்டு இவர்கள் தாங்கள் செய்த இறஞ்சுதலை எண்ணி அழுததாகவும், அதன் காரணமாக இவர்களுக்கு நூஹ் என்னும் பெயர் ஏற்பட்ட தென்றும் சிலர் கூறுகின்றனர்.

ஒரு நாயைப் பார்த்து, “நீ எத்துணை அவலட்சணமாய் உள்ளாய்” என்று இவர்கள் கூறியதற்காக, இறைவன் இவர்களைக் கண்டிக்க, இவர்கள் தம் பாவம் நினைத்து அழுது கொண்டு காடுகளில் அலைந்து திரிந்ததன் காரணமாக இவர்களுக்கு இப் பெயர் ஏற்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர். நூஹ் என்ற சொல்லுக்கு சுர்யானி மொழியில் ‘அமைதி பெறுபவர்’ என்று பொருள் என்றும் பிரளயத்தில் வம்பர்கள் மடிந்து உலகம் அமைதி பெற்றதால் இவர்களுக்கு இப் பெயர் ஏற்பட்டதென்றும் கூறுவர். நபிமார்களில் இவர்களே பன்னெடுங்காலம் இவ்வுலகில் வாழ்ந்ததனால் இவர்களுக்கு ஷைகுல் முர்ஸலீன் (முர்ஸலான நபிமார்களில் முதியவர்) என்றும், ‘கபீருல் அன்பியா’ (நபிமார்களில் பெரிய வயதினர்) என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு.

இவர்கள் இராக்கில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் தந்தை பெயர் லாமக்; அன்னை பெயர் ஃபுஸுல். “நூஹை நம்முடைய தூதராக அம் மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் ஆண்டுகள் அவர்களிடையே இருந்தார்.” (29:14) என்று இறைவன் திருமறை குர் ஆனில் கூறுகின்றான். பிரளயத்திற்குப் பின் இவர்கள் 60 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்றும், தனது 40ஆவது வயதில் நபிப்பட்டம் பெற்றனர் என்றும், ஆக 1050 ஆண்டுகள் இவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தனர் என்றும் கூறப்படுகிறது.

950 ஆண்டுகள் இவர்கள் உருவமற்ற ஒரிறை வணக்கப் பிரச்சாரம் செய்தும் அந்த மக்கள் கேட்கவில்லை, அதற்கு பதிலாக இவருக்கு கிடைத்த பலன் அடியும் உதையும் தான். எனவே அவர்களை அழித்தொழிக்கு மாறு இவர்கள் இறைவனிடம் இறைஞ்சினர். கப்பல் கட்டுமாறு இறை ஆணை வர, அவ் விதமே இரண்டாண்டுகளில் இவர்கள் அதனைக் கட்டி முடித்தனர். அதனுடைய நீள அகலம் பற்றிப் பல்வேறு  விதமாகக் கூறப்படுகிறது. ஈஸா (அலை) அவர்கள் நூஹ் (அலை) அவர்களின் மகன் ஸாமை உயிர்ப்பித்த பொழுது, அவரிடம் அது பற்றி வினவிய பொழுது, அவர் அதன் நீளம் 1200 கஜமும், அகலம் 600 கஜமும் இருந்ததாகக் கூறியதே பெரும் பாலோரால் அதன் நீள, அகலம் என ஒப்புக் கொள்ளப்படுகிறது. அது ஒரு பறவை போன்று அமைக்கப்பட்டதென்றும், அதில் மூன்று அடுக்குகளோ, ஏழு அடுக்குகளோ இருந்தன வென்றும் கூறப்படுகிறது. அதில் ஒரே இறை வழிபாட்டை மேற்கொண்ட மனிதர்களும், விலங்கு, பறவை, ஊர்வன ஆகியவற்றில் ஒவ்வொரு ஜோடியும் ஏற்றிக் கொள்ளப் பட்டன.

பின்னர் கடும் மழை பெய்து பிரளயம் ஏற்பட்டு, உலகமெல்லாம் அழிந்தது. நூஹ் (அலை) அவர்களின் கப்பல் மட்டும் மிதந்து சென்று கொண்டிருந்தது. ரஜப் மாதம் முதல் நாளிலிருந்து துல்ஹஜ் மாதம் இறுதி நாள் வரை ஆறு மாதங்கள் அக்கப்பல் இவ்வுலகைச் சுற்றியது. இறுதியாக மழையும் நின்றது. தண்ணீரும் வடிந்தது. கப்பல் ஜூதி மலை மீது நின்றது. முஹர்ரம் பத்தாம் நாள், அனைவரும் இறை ஆணைப் படி கப்பலிலிருந்து கீழே இறங்கினர்.

இதற்கு அறுபது ஆண்டுகளுக்குப் பின் நூஹ் (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸில் இறந்து, அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிரியாவிலுள்ள கர்க் என்னும் இடத்தில் இவர்கள் இறந்து அடங்கப் பெற்றார்கள் என்றும், மக்காவில் இறந்து அங்கு அடங்கப் பெற்றார்கள் என்றும் பல்வேறு விதமாகக் கூறப்படுகிறது.

நாளடைவில் இவர்களின் மக்களான ஸாம், ஹாம், யாபூத் ஆகியவர்களையும், அவர்களின் மனைவி மக்களையும் தவிர்த்து ஏனையோர் இறந்து விட்டனரென்றும், அவர்களிலிருந்தே புத்துலகம் தோன்றியதென்றும், எனவே நூஹ் (அலை) அவர்களுக்கு மனிதர்களின் தந்தை என்னும் சிறப்புப் பெயரும், இரண்டாம் ஆதம் என்னும் சிறப்புப் பெயரும் ஏற்பட்டன என்றும் கூறுவர்.

நூஹ் (அலை) அவர்களின் கப்பலின் சில பகுதிகள் துருக்கி நாட்டிலுள்ள அரராத் என்ற 17,000 அடி உயரமுள்ள பனிமலையில் 14,000 அடியில் உள்ள ஒரு சரிவில் கண்டு பிடிக்கப் பட்டன என்றும், அம் மரத்தை சோதித்துப் பார்த்ததில் அது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ளது என்று தெரிய வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள சீர்காழியிலேயே நூஹ் (அலை) அவர்கள் தம் கப்பலைக் கட்டினர் என்றும், எனவே அதற்குத் தோணிபுரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ‘தமிழ் இலக்கிய ஆய்வு’ (Studies in Tamil Literature) என்ற நூலில் ராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ளார். நூஹ் (அலை) அவர்களுக்குத் தோணியப்பர் என்ற பெயரும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...