குர் ஆன்
(இஸ்லாம் பற்றிய அறிவோம் தொடர் - 5)
வானவர் ஜிப்ரயீல் மூலம் நபிகள் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய இறுதி வேதம் குர்ஆன் ஆகும். குர்ஆன் என்ற அரபிச் சொல்லிற்கு ஓதக் கூடியது, ஓத வேண்டியது எனப் பொருள்படும்.
அருளப் பெற்ற நாள் இடம்
பெருமானாரின் 40 ஆம் வயதில் ரமலான் மாதத்தின் லைலத்துல் கத்ரு இரவில் மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையில் பெருமானார் தனித்து தியானத்திலிருந்த நேரத்தில் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது.
மாண்புமிக்க அந்த இரவில் முதன் முதலாக அருளப் பெற்ற குர்ஆன் அந்தந்த நேரத்திற்கும், நிலைமைக்கும், அவசியத்திற்கும் ஏற்றவாறு 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப் பெற்று நிறைவுற்றது.
அமைப்பு
முதல் ஆயத்து “இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக்” என்று இறங்கியது. இறுதி ஆயத்து “அல்யவ்ம அக்மல்(த்)து ல(க்)கும் தீன(க்)கும்” இறங்கியது. மொத்தம் 30 ஜுஸ்உ என்னும் பாகங்கள் உள்ளன. 114 சூரா என்னும் அத்தியாயங்கள் உள்ளன. அதில் மக்காவில் இறங்கிய 86 மக்கீ சூராக்களும், மதீனாவில் இறங்கிய 28 மதனீ சூராக்களும் உள்ளன. 6666 ஆயத் என்னும் வசனங்கள் உள்ளன. இவ்வாறாக எழுத்து வடிவில் குர் ஆன் காட்சியளித்தாலும், உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் அதனை மனனம் செய்த ஹாபிஸ்களின் நெஞ்சங்களில் அது பதிந்துள்ளது.
வஹி என்னும் வேத வெளிப்பாடு
அல்லாஹுத்த ஆலாவின் புறத்திலிருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக நபிக்கு வேதவசனங்கள் இறங்கியதை “வஹி” எனப்படும். பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக திருக் குர் ஆனைச் சிறிது, சிரிதாக இறக்கியருளினான். நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட காலம் முதல் 23 ஆண்டுகளில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப அல்லாஹ்விடம் இருந்து வஹி எனும் வேத வெளிப்பாடு இறங்கிக் கொண்டேயிருந்தது. பெருமானாருக்கு வஹீ எனும் வேத வெளிப்பாடு மக்காவிற்கு அருகிலுள்ள ஹிராக்குகையில் ரமலான் மாதத்தின் லைலத்துல் கத்ரு இரவன்று நிகழ்ந்தது. தற்போது உள்ள தொகுக்கப்பட்ட குர் ஆனின் தொடர் போன்று வஹி தொடர்ச்சியாக இறங்கவில்லை. ஆனால் காலத்திற்கும், சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப திருக் குர் ஆனின் வசனங்கள் வஹியின் மூலம் அருளப்பட்டாலும் ‘மஹ்பூல் பலகையில்’ அல்லாஹ்வால் பதிவு செய்யப்பட்ட குர் ஆனுடைய தொடரும் தற்போதுள்ள குர் ஆனின் தொடரும் ஒன்றாக அமைக்கப் பட்டது. அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் ஒரு வசனம் இறங்கிய உடனே அவ்வசனம் இருக்க வேண்டிய அத்தியாயத்தையும் வசனத்தின் எண்ணிக்கையையும், இன்ன அத்தியாயம் இன்ன அத்தியாயத்திற்குப் பிறகு என்ற விபரங்களையும் மிகத் தெளிவாக விளக்கியிருந்தார்கள். அதனை பெருமானாரின் தோழர்களும் உடனுக்குடன் எழுதி வந்தனர். பெருமானார் அவர்களே அத்தியாயங்களுக்குரிய பெயர்களையும் அறிவித்தனர்.
ஹல்ரத் உஸ்மான் பின் அபுல் ஆஸ் (ரழி) அறிவிப்பதாவது: அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் அத்தியாயங்களின் வசனங்களை (வஹீ மூலம்) கொண்டு வந்து ஒவ்வொரு வசனமும் எழுதப்பட வேண்டிய இடத்தை அல்லாஹ்வின் தூதருக்கு நன்கு விளக்கிக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கேற்ப பெருமானார் (ஸல்) அவர்கள் அந்தந்த இடங்களை எழுதுபவர்களுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
முதன் முதலில் இறக்கப்பட்ட தொடர்
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் அருளப் பட்ட பிறகு அவர்கள் திருமக்காவில் வசித்த 13 ஆண்டுகளில் 81 அத்தியாயங்களும், மதீனாவில் வாழ்ந்த 10 வருடங்களில் 30 அத்தியாயங்களும் இறக்கியருளப்பட்டன. திரு குர் ஆனின் மொத்த அத்தியாயங்கள் 114, ஆகவே, மீதமுள்ள 3 அத்தியாயங்கள் மக்காவிலோ, மதீனாவிலோ, இரண்டிலும் சேர்த்தோ அருளப்பட்டதாக மூவகைக் கருத்துக்கள் நிலவுகின்றன.
நபித்துவத்தின் ஆரம்பமாக திருமக்காவில் முதன் முதலாக “இக்ர உ” சூராவின் 5 வசனங்கள் இறக்கியருளப் பட்டது. பின்னர் ஆறு மாதங்கள் எந்த வஹியும் வரவில்லை, பிறகு சூரா முதஸ்ஸிர், முஜம்மில், நூன், பாத்திஹா ஆகிய அத்தியாயங்கள் முறையே இறக்கப்பட்டு அப்பால் தேவைகேற்ப பலவாறாக அருளப்பட்டன.
இறங்கிய முறை
குர் ஆன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக பெருமானார் (ஸல்) அவர்களுக்கு 23 ஆண்டுகளில் 486 தடவைகள் வஹி மூலம் இறங்கியது.
வஹிக்கு உதாரணம்
குர் ஆனுக்கு ஆசிரியர் அல்லாஹ் - வஹி மூலம் பின்னனி பாடியவர் ஜிப்ரயீல் - வாயசைத்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவர்.
இவ்வாறு அருளப்பட்ட வஹி என்னும் வெளிப்பாடு மணி அடிப்பது போன்றோ, அல்லது வண்டு ரீங்காரமிடுவது போன்றோ, ஒரு வகைச் சப்தத்துடன் சில சமயங்களில் அருளப்படும். இம் முறையில் அருளப்படும் வஹி மிகவும் பளுவுள்ளதாக இருந்ததற்குப் பல சரித்திர ஆதாரங்கள் சுட்டிக் காட்டப் படுகின்றன.
ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் மடியிலே அண்ணலெம் பெருமானார் (ஸல்) தனது புனித சிரசை வைத்து ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மேற்கூறப் பட்ட வஹி அருளப்பட்டது. அதைப் பற்றி அன்னையவர்கள் ’என்னுடைய தொடை எலும்பு முறிந்து விட்டதோ, அல்லது தரையோடு தரையாக என்னுடைய தொடை ஆகி விட்டதோ, என்று எண்ணுமளவிற்கு பளுவால் என்னுடைய தொடையானது தாழ்த்தப் பட்டது. என்னால் அப்பளுவைத் தாங்க இயலவில்லை’ என் அறிவிக்கிறார்கள். ஒரு சமயம் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஒட்டகத்தின் மீதேறி பிரயாணம் செய்து கொண்டிருக்கையில் வஹி அருளப்பட்டது. அவ்வஹியின் பளு தாளாமல் அவ்வொட்டகம் அப்படியே பூமியில் படுத்து விட்டது. ஏனெனில் அது அல்லாஹ்வின் அருள் வசன மன்றோ! இவ்வாறு குர் ஆன் காலத்தின் தேவைக்கேற்ப சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது.
பாதுகாத்தல்
அல்லாஹ் தனது திருவேதமான திருக்குர் ஆன் முழுவதையும் ரமலான் மாதத்தின் புனித லைலத்துல் கத்ர் இரவில் முதல் வானத்தில் இறக்கி வைத்து விட்டான். அப்பால் சூழ்நிலைச் சந்தர்ப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்ப 23 ஆண்டுகள் ஹல்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் பெருமானார் (ஸல்) அவர்களுக்குச் சிறுகச் சிறுக 486 தடவைகளில் அதனை இறக்கி முடித்தான்.
அப்போதைக்கப் போது இறக்கப்படுகின்ற திருக்குர் ஆன் வசனங்களை பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் ஓதிக் காண்பித்து அவைகளை எழுதச் செய்தும் அவற்றின் கருத்துக்களை விளக்கியும் வந்தார்கள். அத்துடன் இறைவன் அறிவித்த பிரகாரம் இன்ன வசனம், இன்ன வசனத்தின் தொடரில் இருந்து வர வேண்டுமென்றும், அத்தியாயங்களின் தொடர் இவ்வாறு இருக்க வேண்டும்மென்றும் எடுத்துக் காட்டி வந்தார்கள்.
இன்றைய திருக்குர் ஆன் பிரதிகள் நாம் காணுகின்ற தொடரையும், வசனங்களின் முடிவுக்கு அடையாளமாக இருக்கின்ற சின்னங்களையும் உணர்த்திக் காட்டியே வந்தார்கள். ஒவ்வொரு அத்தியாத்தின் பெயரையும் சந்தேகத்திற்கிடமின்றித் தெரிவித்திருக்கிறார்கள். இன்று நம்மிடையே உள்ள திருக் குர் ஆனின் அமைப்புக்கும்; அக்காலை பெருமானார் (ஸல்) அறிவித்த அமைப்புக்கும் கிஞ்சிற்றும் வேறுபாடு கிடையாது. இன்று ஏட்டு வடிவில் இருந்து வருகிறது. ஆனால் அன்று அம்மக்களின் நெஞ்சங்களிலும், ஓட்டகம், மாடு இவைகளின் எலும்புகளிலும், ஓலைகளிலும், தோல் துண்டு, பேரீத்தமரப்பட்டைகளிலும் பதிவு செய்து குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.
அதன் அமைப்பிலும், வசன்ங்கள் அத்தியாயங்களின் தொடர் வரிசையிலும், பெயரிலும் எவ்வித மாற்றமும் ஏற்பட்டு விடாமலிருக்க ஒவ்வொரு ரமலானிலும் ஹல்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள், பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஆரம்ப முதல் திரும்பவும் ஓதிக் காண்பித்து ஒழுங்கு செய்து வந்திருக்கிறார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் இப்பூவுலகை விட்டுச் சென்ற ஆண்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் திருக்குர் ஆன் முழுவதையும் இப்போது உள்ள அமைப்பின் பிரகாரம் இரு தடவைகள் ஓதிக் காண்பித்து அதன் அமைப்பு அம்சத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு புகாரி, முஸ்லிம் ஆகிய ஹதீது நூற்களில் காணப்படுகிறது.
தொகுத்தல்
ஒட்டகத்தின் பட்டை எலும்புகளிலும், ஈச்சமட்டைகளிலும், ஓலைகளிலும், இலைகளிலும், இதயங்களிலும், பதிவு செய்யப்பட்டுச் சிதறியிருந்த திருக்குர் ஆன் வசனங்களை ஒரே ஏட்டில் ஒன்று திரட்டிச் சேர்க்க வேண்டிய அவசிய, அவசர, நிலை ஹல்ரத் அபூபக்ர் (ரழி) அவர்கள் காலத்தில் ஏற்பட்டது.
ஹல்ரத் அபூபக்ர் (ரழி) அவர்களது காலத்தில் யமாமா என்ற இடத்தில் அறப்போர் நடைபெற்றது. இப்போரில் எழுபதுக்கும் மேற்பட்ட குர் ஆன் மனனம் செய்திருந்த ஹாபிழ்கள் உயிர் நீத்தனர். இதனைக் கண்ணுற்ற ஹல்ரத் உமர் (ரழி) அவர்கள், கலீபா அபூபக்ர்(ரழி) அவர்களிடம் இனியும் யுத்தங்கள் நடைபெற்றால் குர் ஆன் மனனம் செய்த மக்கள் மாண்டு விடலாம். அதனால் குர் ஆன் முழுவதையும் ஒன்று திரட்டி ஒரே நூலாக அமைக்க தாங்கள் உத்தரவிடுங்கள்; என வற்புறுத்திக் கூறினார்.
இதனைச் செவியுற்ற ஹல்ரத் அபூபக்ர்(ரழி) அவர்கள் முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதித்து ஹல்ரத் ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களை அழைத்து, “திட்டமாக நீரோ இளம் வயதுடையவர், மதியூகி, உம்மை நாம் சந்தேகிக்க மாட்டோம், பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களுக்கு அப்போதைக்கப்போது இறைக்கியருளப்பட்ட வஹியை எழுதிக் கொண்டும் வந்திருக்கிறீர். ஆகவே, எங்கெங்கே குர் ஆன் வசனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை ஆராய்ந்து கண்டுபிடித்து ஒன்று திரட்டிச் சேர்ப்பீராக”, என்று பணித்தார்கள்.
ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக கலீபா அவர்கள் ஒரு மலையைப் புரட்டுமாறு எனக்கு கட்டளையிட்டிருந்தால், அது குர்ஆனை ஒன்று திரட்டிச் சேர்க்குமாறு அவர்கள் உத்தரவிட்டதைவிட மிகக் கடினமாக எனக்கு இருந்திருக்காது.” பிறகு ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களும் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்யாத காரியத்தைச் செய்வதற்கு முதலில் மறுத்தார்கள். ஆனால், அக்காரியத்தின் அவசியத்தைப் பின்னர் உணர்ந்து குர் ஆனைத் திரட்டும் பணியைத் தொடங்கினார்கள்.
மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து, ஓலை, இலை, ஒட்டகத்தின் பட்டை எலும்புகள் ஆகியவற்றிலிருந்தும் எடுத்து சரி பார்த்து ஒன்று திரட்டினார்கள். அவர்களுக்கு எல்லா வசனங்களும் முறைப்படி கிடைத்து விட்டன. தவ்பா என்ற அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்கள் கிடைக்காமலிருந்தன. பிறகு மிகுந்த சிரமத்திற்கப்பால் அபூகஜீமத்துல் அன்ஸாரி என்ற நாயகத் தோழரிடமிருந்து அவ்விரு வசனங்களைப் பெற்றார்கள்.
இவ்வாறு ஒன்று திரட்டி காரீகளைக் கொண்டு சரிபார்க்கப்பட்டு எழுதப்பட்ட குர் ஆனின் முதல் ஏட்டுப் பிரதி ஹல்ரத் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் இருந்து வந்தது. அவர்களுக்குப் பிறகு ஹல்ரத் உமர் (ரழி) அவர்களிடம் கைமாறியது. பிறகு நபிகளாரின் மனைவியும், உமர் (ரழி) அவர்களின் மகளாருமான ஹல்ரத் ஹப்ஸா (ரழி) அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் காலத்தில் அசல் பிரதியைப் பெற்று அதைப் போன்று பல பிரதிகள் எடுத்து அரசு முத்திரையிட்டு நாட்டின் பல் பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்பிரதிகள் இன்றும் இஸ்தம்பூல், தாஷ்கண்ட், லண்டன் நகரங்களில் வைக்கப்பட்டுள்ளன.
பல பிரதிகள் எடுக்கப்பட்ட வரலாறு
ஹல்ரத் உஸ்மான் (ரழி) அவர்களது காலத்தில் நடந்த போர்களில் ஆர்மீனியா, ஆஜர்பைஜான் போன்ற பல நாடுகளை முஸ்லிம்கள் வென்றனர். முன்னர் கூறப்பட்டபடி நூல் வடிவில் இருந்த திருக்குர் ஆன் பிரதி ஹல்ரத் ஹப்ஸா (ரழி) அவர்களிடமே இருந்து வந்தது. ஆனால் போர்க்களத்திற்குச் சென்ற முஸ்லிம்களுக்கு இந்த அமைப்புப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத காரணத்தால் மக்கள் குர் ஆனைப் பலவாறாக ஓதவாரம்பித்தனர். இதைத் தீர்க்க வேண்டிய பொறுப்பும், அவசியமும் மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்களுக்கு ஏற்பட்டது.
ஹல்ரத் உஸ்மான் (ரழி) அவர்கள், அன்னை ஹப்ஸா (ரழி) அவர்களிடம் இருந்த மூலப் பிரதியைப் பெற்று அதிலிருந்து பல பிரதிகளை எடுக்க முயற்சித்தனர். இப் பணிக்கு முன்னர் குர் ஆனைத் திரட்டிச் சேகரிக்கும் மாபெரும் பணியை மேற்கொண்ட ஹல்ரத் ஜைத் இப்னு தாபித் (ரழி) அவர்களுடன், அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி), ஜைத் இப்னு அல் ஆஸ் (ரழி), அப்துர்ரஹ்மான் இப்னு அல்ஹர்து (ரழி) ஆகியோரையும் இணைத்துப் பல பிரதிகள் எடுக்குமாறு ஹல்ரத் உஸ்மான் (ரழி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அதற்கிணங்க அப்பெரியார்கள் மிகுந்த கவனத்துடன் ஆறு பிரதிகளைத் தயாரித்து கலீபாவிடம் ஒப்படைத்தனர். அசல் பிரதியை அன்னை ஹப்ஸா (ரழி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மற்ற பிரதிகளை பல பகுதிகளுக்கும் அனுப்பி அவற்றைப் பார்த்து ஓத வேண்டுமெனக் கட்டளையுமிட்டார்கள். இவற்றைத் தவிர்த்து மற்ற துண்டுக் காகிதங்களில் எழுதபட்டிருப்பவைகளை யெல்லாம் அழித்துவிடுமாறு உத்தரவிட்டனர். இவ்வாறு குர் ஆனை உலக முழுவதும் ஒரே அமைப்பில் ஓதும் நிலை உருவானது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.