Home


ரமலான் பிறை 17

பத்ர் போர்க்களம்

        பத்ர் அல்லது பத்ர் ஹுனைன் என்று அழைக்கப்பட்ட இது குன்றுகளால் சூழப்பட்ட முட்டை வடிவமான பகுதியாகும். மதீனாவுக்கு எண்பது கல் மேற்கே இது இருக்கிறது. இங்கு ஒரு வாய்க்கால் ஓடுவதால் இது செழிப்புற்று விளங்குகிறது. இதனுடைய நீளம் ஐந்து கல்லும், அகலம் நான்கு கல்லுமாகும். இது கடக்கரையின் அண்மையில் உள்ளது. மக்கா மதீனா, சிரியா ஆகிய நாடுகளுக்குச் செல்லக்கூடிய சாலைகள் இங்கு சந்திக்கின்றன. இங்கு இப்பொழுதும் ஒரு சிற்றூர் இருக்கிறது. நூற்றுக்கணக்கான வீடுகளும், இரண்டு பள்ளிவாயில்களும் இங்கு உள்ளன. இங்குள்ள கிணற்றின் பெயரால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டதென்றும், இங்கு வாழ்ந்து வந்த தலைவரின் பெயரால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டதென்றும், இரு வேறு விதமாகக் கூறப்படுகிறது.

ரமலான் பிறை 17 பத்ர் போர்க்களம்

        ரமலான் பிறை 17 இஸ்லாமிய சமுதாய வரலாற்றில் இந்த நாள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நாள்! ஏனெனில் இந்தச் சமுதாயம் வாழுமா அல்லது வரலாற்றில் மட்டும் சொல்லப்பட வேண்டிய சமுதாயமாக மறைந்து விடுமா என்பதைத் தெளிவாக முடிவு செய்த நாள் இந்த நாள் இன்றைக்குச் சரியாக 1442 ஆண்டுகளுக்கு முன் அந்த நிகழ்ச்சி நடந்தது.

        ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டு ரமலான் மாதம் 17ஆம் நாள் (கி.பி. 624 மார்ச் 16 ஆம் நாள்) வெள்ளியன்று, இஸ்லாத்தின் கொடிய விரோதிகள் எத்தனை பேர் இருந்தார்களோ அத்தனை பேரும் அங்கே அணி திரண்டு இருந்தார்கள். அதே போல அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒப்புக்கொண்டு வாழ்ந்திருந்த முஸ்லிம் வீரர்கள் எவ்வளவு பேர் இருந்தார்களோ அவ்வளவு பேரும் அந்தக் களத்திற்கு வந்து இருந்தார்கள். இந்த களம் அமைவதற்கான காரணக் காரியங்களை இப்போது சொன்னால் தான் அதன் முக்கியத்துவம் புரியும்.

அகிலத்தின் இருள் அகற்ற ஒளி தோன்றியது

        காரிருள் கவிழ்ந்திருந்த மக்கா நகரின்  அருகில் உள்ள ஹிரா என்ற மலைப் பொதும்பில், அகிலத்தின் இருள் அகற்ற ஒளி தோன்றியது. ஆனால் அந்த ஒளியை மக்கா நகர் மாந்தர்கள் அந்நகரிலேயே - அதன் மண்ணின் அடி வயிற்றிலேயே - புதைத்து விட இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்தார்கள்.

வாயால் ஊதிப் பார்த்தார்கள்.

வாளால் வீசிப் பார்த்தார்கள்.

வஞ்சகத்தால் வீழ்த்தப் பார்த்தார்கள்.

ஆனால் அந்த ஒளி இருள் அகற்ற தோன்றியதே தவிர இருளால் மடிய தோன்றியது அல்ல. இறைவன் அருளால் அது மக்காவை விட்டு அகன்று யத்ரிபிலே விடியத் தலைப்பட்டது. அதன் ஒளிக் கதிர்களை எட்டுத்திசைகளிலும் வீசத் தொடங்கியது

இஸ்லாமிய ஞானத்தைக் குழி தோண்டிப் புதைக்க விரும்பிய காஃபிர்கள்

இஸ்லாமிய அருள் ஞானத்தைக் குழி தோண்டிப் புதைக்க விரும்பிய காஃபிர்கள், அது மதீனாவிலிருந்து குன்றிலிட்ட தீபமாகப் பிரகாசிப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும். எனவே அதை வேரறுக்க வேண்டிய ஏற்பாடுகளில் ஒரு கட்டமாக மக்கா நகரில் வாழ்ந்த அத்தனை வணிக வேந்தர்களும் சேர்த்துக் குவித்த பண்டங்களைச் சிரியா நாட்டுக்குச் சென்று விற்று பொருளாக்கி வர ஒரு ஒட்டகக் கூட்டத்தில் தம் வணிகப் பொருள்களை ஏற்றி அனுப்பி வைத்தார்கள். அதற்குத் தலைமை தாங்கிச் சென்றவர் அன்று மக்கா நகரில் வாழ்ந்த குறைஷி குலத் தலைவர்களில் ஒருவராக - அதே நேரத்தில் இஸ்லாத்தின் பொல்லாத எதிரியாக விளங்கிய அபூ ஸுஃப்யான்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அதிரடி நடவடிக்கைகள்

        ஆக நடந்து வரும் ஏற்பாடுகளை நாயகத் திருமேனி புரிந்து கொண்டார்கள். எனவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள், விரோதிகளான அவர்களின் வணிகக் கூட்டம் சிரியா நாடு செல்லாமலே அதைச் சிதைத்து விட்டால் குறைஷிகளின் கொட்டம் ஒரளவாவது அடங்கும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு , ஆகவே அந்த வணிகக் கூட்டத்தின் நடமாட்டத்தைத் தெரிந்து வர ஒற்றர்களை அனுப்பினார்கள். எதிர்பார்த்த இலக்கிலிருந்து அந்தக் கூட்டம் கடந்து சென்று விட்டது என்ற செய்தி கிடைத்தது. எனவே அந்த வணிகக்கூட்டம் திரும்பி வரும் போது அதைச் சந்திப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

அச்ச உணர்வில் மக்காவுக்கு அபூ ஸுஃப்யான் விரைவாக அனுப்பிய தூது

பெருமானார் (ஸல்) அவர்களின் ஒற்றர்கள் நடமாட்டத்தை அபூ ஸுஃப்யான் அறிந்து கொண்டு முஸ்லிம்கள் எதிர்பாராத வேறொரு வழியில் தம் கூட்டத்தை நடத்திச் சென்று விட்டார். ஆனாலும் பெருமானார் (ஸல்) அவர்களின் படை தன்னைப் பின்பற்றி பிடித்துக் கொள்ளக் கூடும் என்ற அச்ச உணர்வில் மக்காவுக்கு விரைவான தூது அனுப்பினார்.

தம்தம் இப்னு அம்ருஅல் கிஃபாரி என்ற அந்த தூதன் மக்காவில் நுழைந்த உடன், தன் ஒட்டகத்தின் காதுகளை அறுத்து மூக்கையும் உடைத்து அதை அலங்கோலப்படுத்தி, தன்னுடைய சட்டையை முன்புறமும் பின்புறமும் கிழித்துக் கொண்டு “குறைஷிகளே உங்கள் வணிகமும் செல்வமும் சிதைந்து விட்டன! முஹம்மதும் அவர்களுடைய தோழர்களும் உங்கள் வணிகக் கூட்டத்தை வழி மறைக்கிறார்கள். நீங்கள் உடனே புறப்பட்டால் அதைக் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூவி அழுது பெருங்கூட்டத்தை திரட்டி விட்டான்.

முஸ்லிம்களை முறியடிக்க ஆர்த்தெழுந்த மக்கத்துக் காஃபிர்கள்

        எதை இழந்தாலும் பொருளை இழக்க முடியாத மக்கத்துக் காஃபிர்கள் ஆர்த்தெழுந்தார்கள். 1000 பேர் பூரண ஆயுதபாணிகளாக அணி வகுத்தார்கள். அன்று அவர்களின் தலைவர்களாக இருந்த உத்பா, ஷைபா, உமய்யா, அபூஜஹ்ல் ஆகிய அனைவருமே அந்த அணிவகுப்பின் முன்னணியில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பத்ர் களம் வந்து சேர்வதற்குள் அபூ ஸுஃப்யான் தப்பி மக்காவுக்கு சென்று விட்டார். எனவே குறைஷிகளின் பொருட்கள் வழிப்பறி செய்யப்படாததால் அமைதியாக மக்கா திரும்பி விட வேண்டும் என்பது நியாயமான மக்கத்துக் காஃபிர்கள் சிலரின் வாதம். ஆனால் அபூஜஹ்ல், உத்பா போன்ற வன்னெஞ்சர்களோ கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எதிரே திரண்டிருந்த முஸ்லிம்களை முறியடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

முஸ்லிம்களின் தரப்பில் அகதிகளும் ஆதரவாளர்களும் சேர்ந்து 313 பேர்கள்

        அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறப்படையில் 313 பேர்கள் தான் இருந்தார்கள். அவர்கள் ஏறி வந்த வாகனங்கள் 70 ஒட்டகங்களும் - 2 குதிரைகளுமே. எல்லோருடைய கையிலும் வாள் இருந்ததாகச் சொல்ல முடியாது. இராணுவ வீரர்களுக் கிடையே அவர்கள் அந்தஸ்தைப் பிரித்துக் காட்ட தனி ஆடை எதுவும் இல்லை.

        பிரதானக் கொடியை முஸ்அப் இப்னு உமைர் (ரழி) ஏந்தி இருந்தார். முஹாஜிர்கள் சார்பாக கொடியை ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களும், அன்சார்கள் சார்பாக கொடியை ஸஅத் இப்னு முஆத் (ரழி) அவர்களும் ஏந்தி இருந்தார்கள்.

போர் மூண்டது பெருமானார் (ஸல்) அவர்கள் கொஞ்சம் உயரமான இடத்தில் போடப்பட்டிருந்த கூடாரத்திலிருந்து யுத்தத்தின் போக்கைக் கவனித்து வந்தார்கள். அந்தகால வழக்கப்படி பிரதான வீரர்கள் சவாலுக்கு அழைக்க தனியார் யுத்தம் தொடங்கியது.

குறைஷிகளின் பெருமை முறியடிக்கப்பட்டது.

        குறைஷி காஃபிர்களின் தலைவர்களாகிய உத்பா பின் ராபியாவை ஹஜ்ரத் ஹம்ஸா (ரழி) அவர்களும், ஷைபாவை ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களும் சில நிமிடங்களில் முடித்து விட்டார்கள். அதே போல அபூஜஹ்லும் அஃப்ராவின் மைந்தர்களாகிய இரு இளைஞர்களால் கொல்லப்பட்டார். அபூஜஹ்ல் வெட்டி வீழ்த்தப் படுவதைப் பார்த்துக் கொண்டு இருந்த பெருமானார் (ஸல்) அவர்கள் “அதோ இந்தச் சமுதாயத்தின் ஃபிர் அவ்ன் அபூஜஹ்ல் சரிந்தான்” என்று குறிப்பிட்டார்கள்.

        இஸ்லாத்தில் சேர்ந்த காரணத்திற்காகச் சுடுமணலில் மல்லாக்கக் கிடத்தி - மார்பில் பாறாங்கல்லை ஏற்றி - சுடும் வெயில் நேரத்தில் கசையடி கொடுத்து ஹஜ்ரத் பிலாலைக் கொடுமை செய்து வந்த குறைஷித் தலைவன் உமய்யா இப்னு கலஃப். பத்ர் போர்க்களத்தில் அவனைக் கண்டார் ஹஜ்ரத் பிலால். பாய்ந்து சென்று வெட்டி வீழ்த்தி கணக்குத் தீர்த்துக் கொண்டார்.

        ஆக, மக்காவில் தங்கி விட்ட அபூலஹபும், தப்பி ஓடிவிட்ட அபூ ஸுஃப்யானும் போக - அன்று அறியப்பட்டிருந்த குறைஷிக் காஃபிர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். குறைஷிகளில் எழுபது பேர்களும், முஸ்லிம்களில் பதினான்கு பேர்களும் இதில் இறப்பெய்தினர். குறைஷிகளில் எழுபது பேர் சிறை செய்யப்பட்டனர். மற்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். இப்போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். குறைஷிகளின் பெருமை முறியடிக்கப்பட்டது.

பத்ர் போர்க்களத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை

        அன்று இஸ்லாம் காப்பாற்றப்பட்டது. அன்று அவர்களுக்கு கிடைத்த வெற்றி அல்லாஹ் அவர்களுக்கு புரிந்த அருளாகும். பெருமானார் (ஸல்) செய்த பிரார்த்தனையின் பலனாகும்.

        பத்ர் போர்களத்தில் பெருமானார் (ஸல்) தம்மைப் பின்பற்றியவர்களைப் பற்றி எவ்வளவு கவலை கொண்டவராக இருந்தார்கள் என்பதை அவர்கள் செய்த பிரார்த்தனைகள் எடுத்துக் காட்டுகின்றன.

        குறைஷி காஃபிர்களின் படைகள் அணிவகுத்து வந்த போது, “இறைவா உன்னுடைய தூதரைப் பொய்யர் என்று கூறிய குறைஷிகள் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் இதோ வருகிறார்கள்” என்று சொன்னார்கள்.  “அன்றி இறைவா நீ வாக்களித்த உதவியை நீ இன்று எங்களுக்குத் தந்து அருள்வாயாக, ஏனெனில் இந்த சின்னஞ்சிறு இராணுவம் இன்று அழிக்கப்பட்டு விட்டால் உன்னை வணங்குவதற்கு இன்னொரு கூட்டம் இல்லாமல் ஆகிவிடுமோ” என்று பிரலாபித்து துஆ செய்தார்கள்.

        அல்லாஹ் அவர்களுடைய துஆவை அங்கீகரித்துக் கொண்டான். பத்ர் போர்களம் தெளிவான வெற்றியை எழுதிக் காட்டி விட்டது. 1442 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட களம் தொடர்ந்து வெற்றியை இறைவனின் நல்லடியார்களுக்குத் தந்து கொண்டிருக்கிறது.

        அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்களிடம் உள்ள உண்மையின் காரணமாக எத்தனையோ பெரும்பான்மையினரை அவர்கள் பாரம்பரியம் வெற்றி கொண்டு இருக்கிறது. ஏனெனில் உண்மை வலிவு மிக்கது; பொய் அழியக் கூடியது. நிச்சயமாகப் பொய் அழிந்தே தீரும்! உண்மை வெற்றி பெற்றே தீரும்!.

இப்போர் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்

        8:17. (நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களை கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்த போது (அதனை நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ், செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

        8:18. நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை இழிவு படுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான்.

இதில் கலந்து கொண்ட நபி தோழர்களுக்கு ‘பத்ரிய்யூன்’ என மரியாதை

        இப்போரில் முஸ்லிம்கள் இறை மறுப்பவர்களை வெட்டவில்லை என்றும், தானே வெட்டியாதகவும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறை மறுப்பவர்கள் மீது கற்களை எறிந்த போதிலும் அவர்கள் எறியவில்லை என்றும், தானே எறிந்ததாகவும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.

        இதில் கலந்து கொண்ட நபித்தோழர்கள் ‘பத்ரிய்யூன்’ என்று அழைக்கப்பட்டுப் பெரிதும் மரியாதைக்குரியவர்களாக விளங்கினர். அவர்கள் மீது ‘பத்ர் மெளலிது’ என்ற பெயருடன் அரபியில் புகழ்ப்பாவும் இருக்கிறது.


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....


Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.