“இன்ஷா அல்லாஹ்” பற்றிய வரலாறு
இன்ஷா அல்லாஹ் என்பதன் பொருள் ‘அல்லாஹ் நாடினால்’ என்பதாகும். இதனைக் கூறும் வழக்கத்திற்க்கு ‘இஸ்திஸ்னா’ என்று பெயர்.
இன்ஷா அல்லாஹ் என்று கூறாததன் காரணமாக நடந்தது என்ன?
மக்காக் குறைஷிகள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டுத் திணற வைத்து அவர்களுடைய மார்க்கத்தை போலி மார்க்கமாக்கச் சதி சூழ்ந்து யத்ரிபிலுள்ள யூத ரப்பிகளுடன் ஆலோசனை கலந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களை அணுகி குகைவாசிகள் பற்றி வினவினர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறாது. “நாளை இதற்குப் பதிலுரைக்கிறேன்” என்று மறுமொழி பகர்ந்தனர். இவ்வாறு அவர்கள் இன்ஷா அல்லாஹ் என்று கூறாததன் காரணமாக இறைவனிடமிருந்து அவர்களுக்கு இரண்டு வார காலமாக வஹீ வராது நின்று விட்டது.
வாக்களித்த வண்ணம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடுத்த நாள் விடையிறுக்காததைக் கண்ட குறைஷிகள் அண்ணல் நபி அவர்களைப் பொய்யரென எங்கணும் இழித்துரைக்கத் துவங்கினர். அண்ணல் நபி (ஸல்) அவர்களோ கண்ணீரும் கம்பலையுமாய் இறைவனிடம் தம் பாவம் பொறுத்தருளுமாறு இறைஞ்சினர்.
இதுபற்றி திருக்குர் ஆனில்
அப்பொழுது இறைவனிடமிருந்து, “(நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்துவிடுவேன்" என்று நீங்கள் கூறாதீர்கள். (18:23)” “ஆயினும், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுங்கள். நீங்கள் இதனை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உங்கள் இறைவனின் பெயரைக் கூறுங்கள். தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்" என்றும் கூறுங்கள்.(8:24)” என்றும் அருள் எச்சரிக்கை வந்தது. அத்துடன் குகைவாசிகளைப் பற்றிய சில விபரங்களையும் இறைவன் கூறினான்.
“இன்ஷா அல்லாஹ்” என்று கூறுவதன் முக்கியத்துவம்
ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்துணைச் சிறியதாயிருப்பினும் அதனை அளிக்கும் முன் “இன்ஷா அல்லாஹ்” என்று கூறின் அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறைவேற்ற முயற்சி செய்யக் கடமைப்பட்டவராகிறார். மேலும் அல்லாஹ் அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றி வைக்கப் போதுமானவன்.
ஒருவர் “இன்ஷா அல்லாஹ்” என்று கூறாது ஒரு செயலைக் செய்வதாகக் கூறி அதனைச் செய்வதற்கு முன் இறந்துவிடின் அவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றாத பொய்யராகி விடுகிறார். இதன் காரணமாகவும் அவனன்றி அணுவும் அசையாது என்ற காரணத்தாலும் “இன்ஷா அல்லாஹ்” என்று கூறுவது இன்றியமையாததாகும்.
வாக்குறுதியை அளிக்கும் முன் “இன்ஷா அல்லாஹ்” என்று கூறுவது மேலானது
ஒரு செயலைச் செய்வதாகக் கூறும் பொழுதே “இன்ஷா அல்லாஹ்” என்று கூறாவிட்டாலும் தாமதித்தேனும் அதனைக் கூறலாம் என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருவசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் பகர்ந்துள்ளனர். ஆனால் இதனை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
எந்த வாக்குறுதியையும் அளிக்கும் முன்பும், “இன்ஷா அல்லாஹ்” என்று கூறுவதே வாக்குறுதி அளித்த பின் கூறுவதை விட மிக மிக மேலானதாகும். ஒர் அரசர் திருமணத் தொடர்பு பற்றி மற்றோர் அரசருக்கு எழுதிய மடலில், “என் மகளைத் தங்களின் மகனுக்கு மண முடித்துத் தர விரும்புகிறேன். இன்ஷா அல்லாஹ்” என்று குறிப்பிட்ட பொழுது, “நாங்கள் இத்திருமணத் தொடர்பை விரும்பவில்லை. ஏனெனில் தாங்களோ ஒரு செயலைத் துணிந்து விட்டு இறைவனின் உதவியை நாடுகின்றவர்கள். நாங்களோ இறைவனிடம் உதவியை இறைஞ்சி விட்டு ஒரு செயலைத் துணிபவர்கள்” என்று பதில் எழுதினார் அவ்வரசர்.
நீர் ஒரு முஃமினா? என்று வினவ ஹனஃபீ மத்ஹபில் பதில் கூறவேண்டியது
ஒரு முஃமினை (இறை நம்பிக்கையாளரை)ப் பார்த்து, “நீர் ஒரு முஃமினா?” என்று வினவப் படின், “நான் ஒரு முஃமின் தான். இன்ஷா அல்லாஹ்” என்று கூற வேண்டும் என ஷாஃபி மத்ஹபில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறுவது ஐயப்பாட்டுடன் கூறுவது போல் தெரிவதால் ஹனஃபீ மத்ஹபில், “நிச்சயமாக நான் முஃமின் தான் அல்ஹம்து லில்லாஹ்” என்று கூறுமாறு பணிக்கப் பட்டிருக்கிறது.
சுலைமான் (அலை) அவர்களின் வரலாற்றில்
சுலைமான் (அலை) அவர்கள், “இன்றிரவு நான் எழுபது மனைவியைரை மருவி, மார்க்கப் போரில் ஈடுபடக்கூடிய எழுபது ஆண் மக்களை ஈன்றெடுப்பேன்” என்று இன்ஷா அல்லாஹ் கூறாது மொழிந்ததால் ஒரு மனைவியைத் தவிர வேறு எவரும் அன்றிரவு கருத்தரிக்கவில்லை என்றும் கருத்தரித்த பெண் ஈன்ற மகவும் ஒரு மாமிசப் பிணமாக இருந்ததென்றும் வரலாறு கூறுகிறது.
ஒருவர் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறும் வழக்கத்தை மேற்கொண்டு வரின், ஒரு செயலை அது நிறைவேற்றப் பட வேண்டிய உரிய நேரத்தில் இறைவனருளால் நினைவுறுத்தப் படுவார் என்றும் கூறப்படுகிறது.
ஒரு செயலை செய்யாமல் தட்டிக்கழிக்க மக்கள் பயன்படுத்தியது
பிற்காலத்தில் ‘இன்ஷா அல்லாஹ்’ என்ற சொற்றொடரை ஒரு செயலைச் செய்யாமல் தட்டிக்கழிக்க மக்கள் பயன்படுத்தத் துவங்கியது வருந்தத்தக்கதாகும். இதனை முல்லா நஸீருத்தின் மிகவும் மென்மையாகப் பின்வருமாறு கண்டிக்கிறார்: “இன்ஷா அல்லாஹ், நாளை தருகிறேன்” என்று பல நாட்களாகச் சாக்குப் போக்குக் கூறி வந்த தையக்காரனை நோக்கி ஒரு நாள் முல்லா நஸீருத்தின் சற்றுக் கோபத்துடன், “நல்லது தையற்காரரே! இன்ஷா அல்லாஹ் இல்லாமல் எப்பொழுது தைத்து தருகிறீர் கூறும்!” என்று இடக்காகக் கேட்டார். தையற்காரன் விழித்தான். தான் இறைவனின் திருப் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக வருந்தினான்.
உதுமான் இப்னு மர்ஸுக் என்பவரைப் பின்பற்றிய அல் மராஸிகா என்னும் பிரிவினர் ‘பித்அத்’ தில் விழும் அளவுக்கு ‘இன்ஷா அல்லாஹ்’ என்பதை அளவுக்கு மீறிப் பயன்படுத்துபவர்களாகத் தம்முடைய காலத்தில் எகிப்தில் வாழ்ந்து வந்ததாக ஸையித் முர்த்தளா கூறுகின்றார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.