Home


கௌதம புத்தர்

கௌதமபுத்தர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். மனிதனின் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் கண்டுபிடித்த ஞானி இவர்.

பிறப்பு

சித்தார்த்தன்  கிமு 563 அல்லது 480

இடம்

லும்பினி, நேபாளம்

இறப்பு

கிமு 483 அல்லது 400 (வயது 80)

இடம்

குசிநகர், உத்தரப் பிரதேசம், இந்தியா

அறியப்படுவது

பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார்

பெற்றோர்

சுத்தோதனர் – மாயா

வாழ்க்கைத் துணை

யசோதரை

பிள்ளைகள்

ராகுலன்

கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் - மாயா தேவிக்கும்  இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு (ஆருடம்) கூறினார். புத்தர் பிறந்த ஏழு நாளில் அவரது அன்னை  மாயாதேவி இறந்ததால், இவரை இவரது தாயின் தங்கையும், சிற்றன்னையுமான மகாபிரஜாபதி கௌதமி வளர்த்தார்.

சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.

அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. அவை;

  1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
  2. ஒரு நோயாளி
  3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
  4. நாலாவதாக ஒரு முனிவன்

இக்காட்சிகளினூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்து கொண்டார் சித்தார்த்தர். பின்னர் மனித வாழ்க்கையின் துன்பம், கஷ்டம் முதலியன ஏற்படுவதற்கான காரணம் என்ன என யோசித்து விடை தேடி மனைவி குழந்தை அரண்மனை அணைத்தையும் விட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் வாழ்வின் இரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார். அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கம்.

கானகம் நோக்கிச் சென்ற சித்தார்த்தர், அப்போதைய வழக்கப்படி பட்டினி கிடந்து பல நாட்கள் குளிக்காமல் யோக நெறியில் தவத்தில் அமர்ந்தார். இவரின் தவத்தைக் கண்டு சில சீடர்கள் அவருக்குக் கிடைத்தனர்.

வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு நல்லறம் புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவாத்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்தச் சமய நூல்களில் அழைக்கப்படும்.

பல நாட்கள் கழித்து ஒரு இசைக்கலைஞன் அவர் தவம் புரிந்து கொண்டு இருந்த வழியாகச் சென்ற போது, தனது சீடனிடம் யாழ் பற்றியும் அதன் நுணுக்கம் பற்றியும் கூறிச் சென்றான். “ஒரு நாணை யாழில் இணைக்கும் பொழுது அதை அதிகமாக இழுத்துக் கட்டினால் நாண் அறுந்து விடும் என்றும், மிகத் தளர்வாகக் கட்டினால் இசை மீட்ட முடியாது என்றும் கூறிக் கொண்டு சென்றான்". சித்தார்த்தாவின் அறிவு அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. தனது கடந்த காலத்தில் போதையிலும், பெண் போகத்திலும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த தான் இப்போது அதற்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறேன் என்றும், இதே நிலை நீடிக்குமானால் தனது உடல் இறந்து விடும் என்றும்; தான் தேடி வந்த ஞானம் அடையும் முன்னமே தான் இறந்து விடுவோம் என்றும் உணர்ந்தார். எனவே கடுந்தவம் இருப்பதைக் கைவிட எண்ணினார். எனவே அதிக போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும், நெடிய தவம் இருந்தால் இவ்வுடல் அழிந்து விடும் என்றும் யோசிக்கத் தொடங்கினார்.

எனவே முதன் முறையாக அவர் அருகே இருந்த ஆற்றில் சென்று குளிக்க வேண்டுமென முடிவு செய்தார். ஆற்றில் இறங்கும் பொழுது அந்த ஆற்றின் இழுப்பைக் தன்னால் ஈடு கொடுக்க முடியாமையை உணர்ந்தார். அவ்வாறு ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுது, அங்கே இருந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுமி இவரின் நிலையைக் கண்டு தான் கொண்டு வந்த சோற்றை அவருக்கு ஊட்டி விட்டார்.

தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுஜாதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம் தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும் உணர்ந்தார். புரிந்துணர்வே ஞானத்தின் அடிக்கல் என்பதை உணர்ந்தார்.

இந்நிலையே “ததாகதர் நிலை” என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலையை உணர்ந்து கொண்டார்). புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

புத்தரின் கூற்றுக்கள்

        புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த (ஞான) நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த (ஞான) நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார். மேலும் புத்தர், ஆத்மாவைப் புறந்தள்ளி, அநாத்மா என்ற உடல் மற்றும் உலகத்திற்கு அதிகம் பொருள் தருகிறார். மேலும் வேதங்களையும், கடவுள் இருப்பையும் மறுக்காமல், அது குறித்து பேசாது விட்டார்.

        கௌதம புத்தர், வாரணாசியின் அருகிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா"வில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் காசி, கோசலம், மகதம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கும், அரசப் பெருமக்களுக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை எடுத்துரைத்து வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் தன் மகன் ராகுலன் மற்றும் சிற்றன்னை மகாபிரஜாபதி கௌதமி ஆகியோரை சங்கத்தில் இணைத்துக் கொண்டார். மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோர்களைப் பௌத்த சமயத்தைத் தழுவும்படி பணித்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தைப் பின்பற்றிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் புத்தர் அவருடைய நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", பஞ்ச சீலங்களையும் மற்றும் "எண்வகை மார்க்கங்களையும்" பின்பற்றி வாழும்படி கூறினார். பௌத்த இல்லறத்தார்களான உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய அறங்களை கூறினார்.

பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 483-ல் பரிநிர்வாணம் அடைந்தார். குசி நகரத்தைச் சேர்ந்தவர்கள் இவருடைய உடலுக்கு இறுதிக் கடன் ஆற்றினர். எரியூட்டப்பட்டு எஞ்சிய இவரது சாம்பலும் எலும்பும் எண்வகைப் பகுதிகளாக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு, பின் அவற்றின் மீது சைத்தியங்கள் எழுப்பப்பட்டன.

புதிய வெளியீடுகள்

Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Khan

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Esha

ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.