தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி)
தல்ஹா இப்னு உபைதுல்லா (ரழி) (கி.பி. 594 - கி.பி. 657) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரன்புடைய தோழர்களில் இவரும் ஒருவராக இருந்தார். உஹது போரில் நபி (ஸல்) அவர்களின் உடலுக்கு முன் கேடயம் போல் நின்று எதிரிகள் எய்த அம்புகளை அனைத்தையும் தன் உடம்பில் வாங்கி அரண் போல நபி (ஸல்) அவர்களை தன் உயிரை விட மேலாக பாதுகாத்தவர். அண்ணல் நபி(ஸல்) அவர்களால் இவ் உலகிலேயே சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார். மிகச் சிறந்த வியாபாரியும், உயர் பண்புடையவரும், பெருந் தன்மையுள்ளவரும், சிறந்த கொடையாளியாகவும் தல்ஹா (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். பூமிக்கு மேல் நடமாடும் ஷஹீது (உயிர் நீத்த தியாகி) என பாராட்டை நபி (ஸல்) அவர்களிடம் பெற்றவர்.
[தல்ஹா (ரழி) அவர்களை சிறப்பித்து பாடியுள்ள இன்னிசையை கேட்ட பின் கட்டுரையை படிக்கவும்.]
ஆரம்ப கால வாழ்வு
மக்கா குரைஷி குலத்தின் தைய்ம் பழங்குடியினரை சேர்ந்த உபைதுல்லாஹ் இப்னு உஸ்மான் என்பவருக்கும், குரைஷி குலத்தின் ஹத்ரம் கோத்திரத்தைச் சேர்ந்த அல்-சாபா பின்த் அப்துல்லா என்பவருக்கும் கி.பி.594இல் மக்காவில் தல்ஹா (ரழி) பிறந்தார்.
மக்காவில் அபூபக்ர் (ரழி) அவர்களின் நண்பராகவும், உயர் பண்புகளுடன், சிறந்த துணி வியாபாரியாகவும் இருந்தார்.
இஸ்லாத்தில் இணைவது
இவர் தனது இளம் வயதில் அருகில் உள்ள நாட்டில் சந்தையில் வியாபாரம் செய்கின்ற சமயம், மக்காவில் இருந்து யாரும் வியாபாரத்திற்கு வந்துள்ளார்களா? என விசாரித்து ஒருவர் தல்ஹாவை கண்டு அவரிடம் “ தங்களது ஊரில் (மக்காவில்) புதிதாக ஒரு நபி தோன்றி உள்ளாரா?” என விசாரிக்க இவர் எனக்கு தெரியவில்லை என பதிலளித்தார். பின்னர் மக்கா வந்த உடன் அங்கு விசாரித்து, இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில் அபூபக்ர் (ரழி) அவர்கள் மூலம் நபி(ஸல்) அவர்களை சந்தித்து சத்திய மார்க்கத்தை ஏற்று கொண்ட முதன்மையான எட்டு பேரில் இவர்களும் ஒருவர்.
ஆரம்ப கால இன்னல்கள்
இவர்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டதும், மக்கா குரைஷிகளின் எதிர்ப்புடன், இவரது வீட்டிலும் கொடுமைகள் தொடங்கி பெரும் இன்னலுக்கு ஆளானார். இவர்களின் சகோதரன் உஸ்மான் இப்னு உபைதுல்லா இவரை தூணில் கட்டி வைத்து சவுக்கால் அடித்து துன்புறுத்தினர். உணவு அளிக்காமல் பட்டினி போட்டு கொடுமைகள் புரிந்தனர். இறைவனின் திருப்பொருத்தை எண்ணி அனைத்தையும் பொறுமையுடன் சகித்து கொண்டார்கள்.
சிறந்த கொடையாளர்
தல்ஹா (ரழி) அவர்கள் இஸ்லாத்தினை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பின்னர், தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் விற்பனை செய்து, அந்த பணத்தின் மூலம் இஸ்லாமான நூறு அடிமைகளை வாங்கி அவர்களை உரிமை விட்டு, அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தல்ஹா (ரழி) அவர்களை கொடை கொடுப்பவர், வள்ளல் தன்மை மிக்கவர் என பாராட்டியுள்ளார்கள்.
மேலும் தன்னிடம் இருந்த நிலமனைத்தும் உஸ்மான் (ரழி) அவர்களிடம் விற்று தபூக் யுத்தத்தில் கலந்து கொண்ட வீரர்களுக்கு தானம் செய்தார்கள். மேலும் போர் செய்யும் தோழர்களுக்கு ஆங்காங்கே உள்ள குடி நீர் நிலைகளை விலைக்கு வாங்கி தாகம் தீர்க்க அர்ப்பணித்தார்கள்.
திருமணம்
மக்காவில் உத்பத்திப்னு ரபீஆவின் மகளான ஸபிய்யாவிற்கு திருமணம் முடிக்கும் நிலை, மக்கத்து குப்பார்களும் முஸ்லிம்களில் சிலரும் பெண் கேட்டார்கள். அவர்களை மணந்து கொள்வதில் போட்டி ஏற்பட்டது. பெண் கேட்டவர்களில் தல்ஹா (ரழி) அவர்களும் ஒருவர். நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என தல்ஹா (ரழி) கேட்ட போது ஸபிய்யா அவர்கள் உடன் சம்மதித்தார்கள். பிறிதொரு காலத்தில் ஸபிய்யா (ரழி) யிடம் ஏன் தல்ஹாவை தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்ட போது, தல்ஹா நல்லவர், வள்ளல் தன்மை உள்ளவர், நான் அவருக்கு வேலை செய்து கொடுத்தால் நன்றி பாராட்டுவார். தவறு நிகழ்ந்தால் மன்னிப்பார் என்று அவர் குணத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன், அதனால் தான், சம்மதித்தேன் என்றார்கள்.
உஹத் போரில் படைகளின் கட்டமைப்பு
நபி (ஸல்) தங்களது படையைக் கட்டமைத்தார்கள். பல அணிகளாக அவர்களை நியமித்த பின்பு திறமையாக அம்பெய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த 50 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலைவராக பத்ர் போரில் கலந்து கொண்ட அவ்ஸ் கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் இப்னு நுஃமான் அல் அன்ஸாரி (ரழி)யை நியமித்தார்கள். பின்பு அவர்களை ‘கனாத்' என்ற பள்ளத்தாக்கின் வடக்குப் பக்கம் அமைந்துள்ள மலையில் நிலையாக தங்கி, முஸ்லிம்களை பாதுகாக்கவேண்டுமென்று பணித்தார்கள். இம்மலை முஸ்லிம்களின் ராணுவ முகாம்களிலிருந்து தென் கிழக்கில் சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தது.
நபி (ஸல்) இந்த அம்பு எறியும் வீரர்களுக்குக் கூறிய அறிவுரைகளிலிருந்துஇப்படையினரை அங்கு நியமித்ததின் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். நபியவர்கள்தளபதிக்குக் கூறிய உபதேசம் வருமாறு: ‘‘எதிரிகளின் குதிரைப் படை எங்களை நெருங்கவிடாமல் அம்பெய்து அவர்களை நீர் தடுக்க வேண்டும். எதிரிகள் எங்களுக்குப் பின்புறத்திலிருந்து வந்துவிடக் கூடாது. போர் நமக்கு சாதகமாக அல்லது பாதகமாக அமைந்தாலும் நீர் உனது இடத்தில் நிலையாக இருக்க வேண்டும். உமது வழியாக எதிரிகள் எங்களை தாக்கிவிடக் கூடாது.'' (இப்னு ஹிஷாம்)
இவ்வாறு தளபதிக்கு உபதேசம் செய்த பிறகு, மற்ற வீரர்களுக்கு நபி (ஸல்)பின் வருமாறு அறிவுரை கூறினார்கள்: ‘‘நீங்கள் எங்களின் முதுகுப் பக்கங்களை (பிற்பகுதியை) பாதுகாத்து கொள்ளுங்கள், நாங்கள் போரில் கொல்லப்படுவதைப் பார்த்தாலும் நீங்கள் எங்களுக்கு உதவ வராதீர்கள் நாங்கள் வெற்றி பெற்று பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தாலும் அதிலும் நீங்கள் எங்களுடன் இணைந்து விடாதீர்கள்.'' (முஸ்னது அஹ்மது, முஃஜமுத் தப்ரானி)
போரில் அம்பெறியும் வீரர்களின் பங்கு
நபி (ஸல்) அவர்கள் மலையின் மீது நிறுத்திய வீரர்கள் இஸ்லாமியப் படைக்குச்சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தனர். காலித் இப்னு வலீதின் தலைமையின் கீழ், பாவி அபூ ஆமின் உதவியுடன் எதிரிகள் மூன்று முறை இஸ்லாமியப் படையின் இடது பாகத்தை முறியடிக்க முயன்றனர். முஸ்லிம்களின் பின்புறமாகத் தாக்குதல் தொடுத்து அணியில் சேதங்களையும் குழப்பங்களையும் உண்டுபண்ணி, அதைத் தொடர்ந்து பெரும் தோல்வியை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திவிடலாம் என்று மூன்று முறை இம்மலைப் பகுதியின் மீது எதிரிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால், மலை மீதிருந்து அம்பெறியும் வீரர்கள் இவர்களின் மீது அம்பு மழை பொழிந்து இவர்களின் மூன்று தாக்குதல்களையும் முறியடித்தனர். (ஃபத்ஹுல் பாரி)
இணைவைப்பவர்களுக்குத் தோல்வி
முஸ்லிம்களின் தாக்குதலை தடுக்க இணைவைப்பவர்கள் முழு முயற்சி செய்தும் அது முடியாமல் போனதால், தங்களின் தோல்வியையும் இயலாமையையும் உணர்ந்தனர் துணிவை இழந்தனர். கொடி ஏந்தியிருந்த ‘சூஆப்' என்பவர் இறுதியாகக் கொல்லப்பட்ட பிறகு அவர்களின் கொடியை எடுத்து நிமிர்த்தி அதைச் சுற்றிலும் தொடர்ந்து போர் புரிவதற்கு யாரும் துணியவில்லை. இதனால் பழிவாங்க வேண்டும் தங்களது கண்ணியத்தையும் மதிப்பையும் நிலைநாட்ட வேண்டும் என்று தங்களுக்குள் பேசி வந்ததையெல்லாம் மறந்து விட்டு, உயிர் பிழைத்தால் போதுமென்று தலைதெறிக்க தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.
அம்பெறி வீரர்களின் மாபெரும் தவறு
வெற்றி அல்லது தோல்வி எது ஏற்பட்டாலும் அம்மலையைவிட்டு நகரக் கூடாது என்று இந்த அம்பெறியும் வீரர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையின் வாசகங்களை நாம் முன்பு கூறியிருந்தோம். இவ்வளவு ஆணித்தரமாக நபியவர்கள் கட்டளையிட்டிருந்தும் வெற்றி கிடைத்து எதிரிகளின் பொருட்களை முஸ்லிம்கள் ஒன்று திரட்டுவதைப் பார்த்த அத்தோழர்களில் சிலருக்கு உலக ஆசை ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள் ‘‘இதோ வெற்றிப் பொருள்! இதோ வெற்றிப் பொருள்! உங்களது தோழர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இதற்குப் பின்பும் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கூறினர். அச்சமயம் அவர்களின் தளபதி அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) நபி (ஸல்) அவர்களிட்ட கட்டளையை அவர்களுக்கு நினைவூட்டினார். மேலும் ‘‘அல்லாஹ்வின் தூதர் உங்களுக்கு கூறியதை நீங்கள் மறந்து விட்டீர்களா?'' என்று தோழர்களை எச்சரித்தார். என்றாலும் அந்தக் கூட்டத்தின் பெரும்பாலானோர் இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாமும் மக்களுடன் வெற்றிப் பொருளைச் சேகரிப்போம்'' என்று கூறி அப்பிரிவினரின் நாற்பது அல்லது நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மலையிலிருந்து இறங்கி படையுடன் சேர்ந்து பொருளை சேகரித்தார்கள். இதனால் முஸ்லிம் படையினரின் பின்பகுதி பாதுகாப்பற்றதாக ஆகிவிட்டது. அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்களும், அவர் தோழர்களில் ஒன்பது அல்லது அதை விடக் குறைவானவர்கள் மட்டுமே தங்களுக்கு அனுமதி அல்லது மரணம் வரும் வரை அவ்விடத்திலேயே நிலையாக இருந்துவிட வேண்டுமென்று அங்கேயே தங்கி விட்டனர்.
காலித் முஸ்லிம்களைச் சுற்றி வளைக்கிறார்
இந்தச் சூழ்நிலையைக் காலித் இப்னு வலீத் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.முஸ்லிம்களை பின்புறம் தாக்குவதற்காக அம்பெறியும் வீரர்கள் இருந்த மலையைநோக்கி அதிவேகமாகச் சென்றார். அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்களையும் அவரது தோழர்களையும் அதிவிரைவிலேயே கொன்று விட்டு முஸ்லிம்களின் படையின் பின்புறமாகச் சென்று தாக்கினார். காலிதின் குதிரை வீரர்கள் இதை உணர்த்தும் பொருட்டு பெரும் சப்தமிட்டவுடன், தோல்வியுற்று புறமுதுகுக்காட்டி ஓடிக்கொண்டிருந்த இணைவைப்பவர்கள் தங்களுக்கு ஒரு புதிய முன்னேற்றம் கிடைத்து விட்டதை அறிந்து முஸ்லிம்களை நோக்கித் திரும்பினர்.
‘அம்ரா பின்த் அல்கமா' என்ற பெண் மண்ணில் வீசப்பட்டிருந்த இணை வைப்பவர்களின் கொடியை உயர்த்திப் பிடித்தாள். இணை வைப்பவர்கள் தங்களது கொடியைச் சுழற்றியவர்களாக சிலர் சிலரைக் கூவி அழைத்தனர். பிறகு ஒன்று சேர்ந்து முஸ்லிம்கள் மீது பாய்ந்தனர். இதனால் முஸ்லிம்கள் முன்னும் பின்னும் தாக்கப்பட்டனர்.
நபியவர்களின் நிலை
நபி (ஸல்) அவர்கள் ஒன்பது நபர்கள் கொண்ட தங்கள் தோழர்களின் ஒரு சிறிய கூட்டத்தில் இருந்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) முஸ்லிம்களின் வீரத்தையும், அவர்கள் இணைவைப்பவர்களை விரட்டுவதையும் படையின் பின்பகுதியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நபியவர்கள் திடீரென காலிதின் குதிரை வீரர்களால் சூழப்பட்டார்கள்.
நபியவர்களைச் சுற்றி கடும் சண்டை
முஸ்லிம்களில் இதற்கு முன் கூறப்பட்ட பிரிவினர்கள் எதிரிகளால் சூழப்பட்டு கடுமையான தாக்குதலைச் சமாளித்துக் கொண்டிருந்த அதே வேளையில் இங்கே நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்களையும் குறைஷிகள் தாக்கினர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் ஒன்பது நபர்கள் மட்டுமே இருந்தனர் .இப்போது தான் நாம் முன்னால் கண்டவாறு நபியவர்கள் ‘‘முஸ்லிம்களே என்னிடம் வாருங்கள். நான் அல்லாஹ்வின் தூதர்'' என்று அழைத்தார்கள். அப்போது நபியவர்களின் சப்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்திலிருந்த மற்ற எதிரிகளும் நபியவர்கள் இருந்த திசை நோக்கிப் பாய்ந்தனர். அதனால் நபியவர்களுடன் இருந்த ஒன்பது நபித்தோழர்களுக்கும் தாக்க வந்த எதிரிகளுக்குமிடையில் கடுமையான சண்டை நடந்தது. அச்சண்டையில் அந்தத் தோழர்கள் நபியவர்கள் மீது வைத்திருந்த அன்பும் அவர்களுக்காக தங்களையே அர்ப்பணிக்கும் தியாக உணர்வும் நன்கு வெளிப்பட்டது.
நபியவர்களின் வாழ்க்கையில் மிக இக்கட்டான நேரம்
நபி(ஸல்) அவர்களுடன் ஒன்பது தோழர்களில் இரண்டு குரைஷித் தோழர்கள் ஏழு அன்சாரி தோழர்கள் இருந்தனர். முதலில் அன்சாரி தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக சண்டையிட்டு ஷகீதாகிய பின் ஏழுவது அன்சாரித் தோழர் இறுதியாக எதிரிகளிடம் சண்டையிட்டவர் உமாரா இப்னு யஜீத் (ரழி) என்பவராவார். இவர் சண்டையில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அதன் பிறகு இருந்த இரண்டு குறைஷித் தோழர்கள் (தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் மற்றும் ஸஅது இப்னு அபீ வக்காஸ்) மட்டும்தான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து சண்டையிட்டு நபி(ஸல்) அவர்களை பாதுகாத்தனர்.
இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொன்று தீர்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இருந்தனர். ஆனால், அவர்களை எதிர்த்து ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) ஆகிய இருவரும் மிக வீரத்துடனும் துணிவுடனும் போரிட்டனர். எனவே, எதிரிகள் தங்களது நோக்கத்தை அடைய முடியவில்லை.. மேலும், இவ்விரு தோழர்களும் அம்பெய்வதில் மிக தேர்ச்சி பெற்றவர்களாக இருந்ததால் நபியவர்களைத் தாக்க வந்த எதிரிகளின் கூட்டத்தை நபியவர்களுக்கு அருகே நெருங்க விடாமல் தடுத்தனர்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வின் வீரத்தைப் பற்றி ஜாபிர் (ரழி) அறிவிப்பதை இமாம் நஸயீ (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். அஃதாவது: உஹுத் போரில் எதிரிகள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். நபியவர்களுடன் சில அன்சாரி தோழர்களும் இருந்தனர். அப்போது நபியவர்கள் ‘‘யார் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவார்?'' என்று கேட்டார்கள். தல்ஹா (ரழி) ‘‘நான்'' என்று முந்திக் கொண்டு பதில் கூறினார்கள். ஆனால், உடன் இருந்த அன்சாரிகளும் அதற்குத் தயாராகவே நபி (ஸல்) அன்சாரிகளுக்கு அனுமதியளித்தார்கள் ஒவ்வொரு அன்சாரியாக எதிரிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் எய்தினார்கள். அதற்குப் பின் தல்ஹா (ரழி) எதிரிகளுடன் சண்டையிட்டார்கள். அவர்களது சண்டை 11 நபர்களின் சண்டைக்குச் சமமாக இருந்தது. அவரது கையில் பல வெட்டுகள் விழுந்தன. சிலவிரல்கள் துண்டிக்கப்பட்டன. அப்போது ‘ஹஸ்'!! (வேதனையில் கூறும் வார்த்தை)என்றார்கள். அதற்கு நபியவர்கள் ‘‘நீ ‘பிஸ்மில்லாஹ்' என்று சொல்லியிருந்தால் மக்கள் பார்க்கும் அளவுக்கு வானவர்கள் உன்னை உயர்த்திருப்பார்கள்'' என்றார்கள். இறுதியாக அல்லாஹ் எதிரிகளை விட்டும் நபியவர்களை பாதுகாத்தான். (ஃபத்ஹுல் பாரி)
‘‘39 அல்லது 35 காயங்கள் தல்ஹா (ரழி) அவர்களுக்கு இப்போரில் ஏற்பட்டன.அவர்களது ஆட்காட்டி விரலும் அதை அடுத்துள்ள பெரிய விரலும் வெட்டப்பட்டன.'' (ஃபத்ஹுல் பாரி)
கைஸ் இப்னு அபூ ஹாஸிம் கூறியதாக ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ளது: ‘‘உஹுத்போர்க் களத்தில் நபி (ஸல்) அவர்களை நோக்கி சீறி வந்த அம்புகளை எந்தக்கையால் தல்ஹா (ரழி) தடுத்துக் காத்தாரோ அந்தக் கை உஹுத் போருக்குப் பின் செயலிழந்து போனதை நான் பார்த்தேன்.''
நபி (ஸல்) அவர்கள் தல்ஹாவைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: ‘‘யார் பூமிக்குமேல் நடமாடும் ஷஹீதை (உயிர் நீத்த தியாகியை) பார்க்க விரும்புகிறார்களோஅவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வைப் பார்க்கட்டும்.'' (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)
ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: உஹுதுப் போரைப் பற்றி அபூபக்ருக்கு முன்பேசப்பட்டால் அன்றைய தினம் முழுவதும் (அதாவது அன்றைய தினத்தில் நபி (ஸல்)அவர்களைப் பாதுகாத்த நன்மையெல்லாம்) தல்ஹாவையே சாரும் என்று கூறுவார்கள். (ஃபத்ஹுல் பாரி)
மேலும், தல்ஹாவைப் பற்றி அபூபக்ர் (ரழி) இவ்வாறு ஒரு கவிதை கூறுவார்கள்:
‘‘தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வே!!
உனக்காக பல சொர்க்கங்கள் உண்டு.
இன்னும் பல கண்ணழகிகளும் உண்டு.''
இந்த சிரமமான நெருக்கடியான நிலையில், அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குத் தனது மறைமுகமான உதவியை இறக்கினான்.
நபியவர்கள் அருகே தோழர்கள் திரளுதல்
மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிகளெல்லாம் கண் சிமிட்டும் சில நிமிடங்களில் மின்னல்வேகத்தில் நடந்து முடிந்தன. நபி (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமான பலதோழர்கள் போரில் முதல் அணியில் நின்று எதிரிகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். திடீரென போரின் நிலை இவ்வாறு மாறும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை அல்லது நபியவர்களின் சப்தத்தை அவர்கள் உடனடியாகக் கேட்டிருந்தால் நபியவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விரைந்துச் சென்று நபியவர்களைப் பாதுகாத்திருப்பார்கள். ஆனால், இவர்கள் நபியவர்களிடம் வருவதற்கு முன்னதாகவே நபியவர்களுக்கு அத்தனை காயங்களும் ஏற்பட்டு விட்டன ஆறு அன்சாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் .ஏழாவதாக ஓர் அன்சாரி தோழர் காயமடைந்து, குற்றுயிராக பூமியில் விழுந்து கிடந்தார் அவரும் சிறிது நேரத்தில் மரணித்தார். ஸஅது, தல்ஹா (ரழி) ஆகிய இருவர் மட்டும் எதிரிகளை நபி (ஸல்) அவர்களை நெருங்க விடமால் எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு முன் தல்ஹா (ரழி) தன்னையே தடுப்பாக ஆக்கி நெஞ்சை நிமிர்த்தி எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நபியவர்களைப் பாதுகாத்தார்கள்.
படையின் முன்அணியில் இருந்து சண்டை செய்து கொண்டிருந்த சிறப்புமிக்க நபித்தோழர்கள் நிலைமையறிந்து நபியவர்களிடம் விரைந்து வந்து, அவர்களைச்சுற்றி வலையாகப் பின்னி நின்று, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக கடும்போர் புரிந்தனர். இவ்வாறு திரும்பிய தோழர்களில் முதலாமவர் நபியவர்களின் குகைத் தோழரான அபூபக்ர் (ரழி) ஆவார்கள்.
இதோ... அந்த தோழரின் அருமை மகளார் நமது அன்னை ஆயிஷா (ரழி) தனது தந்தை அபூபக்ர் ஸித்தீக் (ரழி) கூறியதாக அறிவிக்கிறார்கள்:
‘‘உஹுத் போரன்று மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டும் பல திசைகளில் சிதறி விட்டார்கள். பின்பு நான் தான் முதலில் நபியவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்களுக்கு முன் ஒருவர் அவர்களைப் பாதுகாத்தவராக எதிரிகளிடம் சண்டை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் என் மனதிற்குள் ‘‘நீ தல்ஹா தானே! எனது தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும். நீ தல்ஹா தானே! எனது தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும். எனக்குத் தான்வாய்ப்பு தவறிவிட்டது. எனது இனத்தை சேர்ந்த உனக்காவது நபியவர்களைப் பாதுகாக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறிக்கொண்டேன். அதற்குள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரழி) பறவையைப் போன்று விரைந்து வந்து என்னை அடைந்தார். நாங்கள் இருவரும் நபியவர்களை நோக்கி விரைந்தோம். அங்கு நாங்கள் சென்றடையும் போது தல்ஹா (ரழி) நபியவர்களுக்கு முன் மயங்கி விழுகிறார்.
நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்களது சகோதரரைக் காப்பாற்றுங்கள்! அவர் தனக்கு சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்டார்'' என்று கூறினார்கள். மீண்டும் நபியவர்கள் ‘‘உங்களது சகோதரரைக் காப்பாற்றுங்கள். அவர் தனக்கு சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்டார்'' என்றுகூறினார்கள். நாங்கள் தல்ஹா (ரழி) அவர்களைத் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தோம். அவருக்கு பத்து வாள் வெட்டுகள் விழுந்திருந்தன. சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் மீண்டும் தல்ஹா (ரழி) நபியவர்களிடம் வந்துவிட்டார்கள்.'' (ஜாதுல் மஆது, இப்னு ஹிப்பான்)
நபியவர்களுக்கு தல்ஹா தோள் கொடுக்கிறார்
நபி (ஸல்) அவர்கள் மலையை நோக்கி ஒதுங்க முயன்ற போது வழியில் ஒரு பாறை குறுக்கிட்டது. அதன் மீது ஏறிதான் செல்ல வேண்டும் ஆனால், அவர்களால் ஏற முடியவில்லை. காரணம், அவர்களின் உடல் கனமாக இருந்தது இரண்டு கவச ஆடைகள் அணிந்திருந்தார்கள் அத்துடன் பலத்த காயங்களும் ஏற்பட்டிருந்தன. எனவே, தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) பாறைக்குக் கீழ் உட்கார்ந்து கொள்ள, நபியவர்கள் அவர் உதவியால் மேலே ஏறினார்கள். பிறகு, ‘‘தல்ஹா (சொர்க்கத்தை) தனக்கு கடமையாக்கிக் கொண்டார்'' என்று நபி (ஸல்) அவருக்கு நற்செய்தி கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
கலந்து கொண்ட மற்ற போர்கள்
தல்ஹா (ரழி) அவர்கள் அகழிப் போரிலும், அல்லாஹ்வின் தூதருடனான அனைத்து போர்களிலும் கலந்து போராடினார்கள்
ஒட்டகப்போர் மற்றும் மரணம்
ஒட்டகப் போர் ஒரு புறத்தில் அலி (ரழி) மற்றும் மறுபுறம் ஆயிஷா (ரழி), தல்ஹா (ரழி) மற்றும் ஜுபைர் (ரழி) ஆகியோருக்கு இடையே 656 டிசம்பர் 10 ஆம் தேதி சண்டை நடைபெற்றது. அந்த போரின் போது, ஆயிஷா (ரழி) யின் அதே பக்கத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த மர்வான் இப்னுல்-ஹக்காம் என்பவர், தல்ஹா (ரழி) யின் தொடையில் அம்பு எய்த அதிகமான இரத்தம் வெளியேறியது. தல்ஹா தனது குதிரையை கட்டிப்பிடித்து போர்க்களத்திலிருந்து வெளியேறினார். அவர் ஒரு தலையணையாக ஒரு கல்லைப் பயன்படுத்தி படுத்துக் கொண்டார், அதே நேரத்தில் அவரது துணைவர்கள் இரத்த ஓட்டத்தைத் தடுக்க முயன்றனர். அவர்கள் அழுத்துவதை நிறுத்திய போதெல்லாம், இரத்தப்போக்கு மீண்டும் தொடங்கியது. இறுதியில் தல்ஹா, "இதை நிறுத்துங்கள், இது இறைவன் அனுப்பிய அம்பு" என்று கூறினார். இந்த காயத்தால் அவர் மரணமடைந்தார், அவரது அடக்கஸ்தலம் ஈராக் நாட்டில் பஸரா நகரத்தில் உள்ளது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி இத்ரீஸ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.