அஹ்லுல் பைத்
அஹ்லுல் பைத் : இது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாரைக் குறிக்கும் ஒரு சொற்றொடராகும். இதில் பனூஹாஷிம்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவி மக்கள் ஆகியோர் அடங்குவர்.
ஆனால் ஷீயாக்களோ, அண்ணல் நபி (ஸல்), அலீ (ரழி), பாத்திமா (ரழி), ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகிய ஐவருமே அஹ்லுல் பைத் என்று கூறுகின்றார்கள். நஜ்ரானிலிருந்த கிறிஸ்தவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்த பொழுது அவர்கள் ஈஸா (அலை) அவர்கள் பற்றிய இறை வசனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த சமயம், “எவர் பொய்யுரைக்கின்றாரோ அவர் மீது இறைவனின் முனிவை இறைஞ்சுவோம்” என்று கூறி அடுத்த நாள் காலையில் கறுப்புக் கம்பளி போர்த்திக் கொண்டு அலீ (ரழி) அவர்களையும் பாத்திமா (ரழி) அவர்களையும் அப்போர்வைக்குள்ளாக்கி ஹஸன் (ரழி) அவர்களையும் ஹுஸைன் (ரழி) அவர்களையும் தம் இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு வந்து, “நான் இறைஞ்சும் பொழுது நீங்கள் ஆமீன் கூறுங்கள்!” என்றனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். பின்னர், “இல்லத்தாரே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் விரும்புகின்றான்” என்ற 33:33 ஆவது திருவசனத்தை ஓதினர். இதிலிருந்து அந்நால்வரும் அஹ்லுல் பைத் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.
ஆனால் (அதற்காக) அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியரெல்லாம் ‘அஹ்லுல் பைத்’ கள் அல்ல என்று நாம் கருதிவிடக் கூடாது. ஏனெனில் அதற்கு முன் உள்ள திருவசனம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியரை வீட்டில் தங்கியிருக்குமாறும் அரியாமைக் காலத்தில் வெளிவந்தது போன்று வெளியில் வந்து கொண்டிருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துவதாக உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே அவர்களை ‘அஹ்லுல் பைத்’ என்று அழைத்து மேலே கூறப்பட்ட 33:33 ஆவது திருவசனத்தையும் கூறுகின்றான் இறைவன். இதிலிருந்து அஹ்லுல் பைத் என்ற சொற்றொடர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியரையும் உள்ளடக்கியது என்பது நன்கு பெறப்படுகிறது.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி நெருங்கி விட்ட பொழுது, “நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று அல்குர்ஆன். மற்றொன்று அஹ்லுல் பைத். அல்குர்ஆனை உங்களிடம் அமானிதமாக விட்டுச் செல்கிறேன். அது உங்களுக்கு வழி காட்டியாக விளங்கும். என்னுடைய அஹ்லுல் பைத்துகளுடன் நேர்மையாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று முஸ்லிம்களை நோக்கிக் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கதாகும். அஹ்லுல் பைத்துகளை நேசிப்பதை ஒரு கடமையென உலகில் தோன்றிய எல்லா மகான்களும் கருதி வந்தனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உடலுக்கு வாரிசுகளான அஹ்லுல் பைத்துகளையும் ஆன்மாவுக்கு வாரிசுகளான ஆலிம்களையும் உள்ளன்போடு நேசித்துக் கண்ணியப் படுத்தாத எவரும் ‘விலாயத்’தின் ஆரம்பப் படித்தரத்தைக் கூட அடைவதில்லை.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.