அபூபக்ர் (ரழி)
அபூபக்ர் (ரழி) அமீர் உல் முஃமினீன் (கி.பி573–கி.பி634) அவர்கள் அபூபக்ர் சித்தீக் என்ற புனைப்பெயரால் பொதுவாக அறியப்படுகிறார். அவரின் பெயர் அப்துல்லாஹ் இப்னு அபூகுஹாஃபா என்பது. இவர் நபி(ஸல்) அவர்களுக்கு பின் முதல் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். இவர் காலத்தில் உருவான குழப்பங்களை, இவர் எடுத்த திறமையான நடவடிக்கைகளால், இஸ்லாமிய மார்க்கம் அரேபிய நாட்டையும் தாண்டி வேகமாக பரவியது. இவர் இளமை முதலே பெருமானாரின் மிக நெருங்கிய தோழராக இருந்து வந்தார்.
அபூபக்ர் (ரழி) அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை
அபூ குஹாஃபா என்ற உஸ்மானுக்கும் சல்மா என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபக்கர் (ரழி) அவர்கள் மக்காவில் கி.பி 573ல் பிறந்தார்கள். இவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் அப்துல் கஃபா என்பது, இவர் இஸ்லாமை தழுவிய உடன் நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றினார்கள். இவர் தம் மகள் ஆயிசாவை நபி(ஸல்) அவர்களுக்கு மணம் முடித்துத் தந்த பின்னர் “கன்னியின் தந்தை” எனப் பொருள் படும் ‘அபூபக்ர்’ என்ற பெயரும், நபி(ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய போது வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் ”சித்தீக்” என்ற பெயரும் நிலைத்து நின்று விட்டது. அபூபக்ர்(ரழி) அவர்கள் மக்காவில் பெரும் செல்வந்தராகவும், பெரும் வணிகராகவும் இளம் வயது முதல் இருந்தார்கள். மக்காவில் கல்வி கற்றவராகவும், அரபுகளின் வம்சவழி பெயர்களில் அதிகமாக நிணைவற்றல் கொண்டவராகவும் திகழ்ந்தார்கள். தந்தை கஅபாவில் இருந்த சிலைகளை வணங்க சொல்லியும், அதில் ஆர்வமின்றி நல்ல ஒழுக்கசீலராகவும், மதுவை அறவே வெறுத்தவராகவும், மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் கொடையாளியாகவும் திகழ்ந்தார்கள். மக்காவில் இஸ்லாத்திற்கு முந்தைய கால கட்டத்திலும் இன்னும் அதற்குப் பின் வந்த கால கட்டத்திலும் மக்காவில் நன்கு மதிக்கப்பட்ட 10 தலைவர்களில் ஒருவராக அபூபக்ர் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள்.
அபூபக்ர் (ரழி) அவர்களின் குடும்பம்
அபூபக்ர்(ரழி) அவர்கள் நான்கு மனைவிகளை மணமுடித்திருந்தார்கள். 1.கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா, 2.உம்மு ரூமான் பின்த் ஆமிர் 3.அஸ்மா பின்த் உமைஸ் 4.ஹபீபா பின்த் ஹாரீஜா இவர்களில் கதீலாவைத் தவிர்த்து ஏனைய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். கதீலாவை விவாகரத்து செய்து விட்டார்கள். இந்நால்வரின் மூலம் அபூபக்ர்(ரழி) அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் என மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அபூபக்ர்(ரழி), அப்துர் ரஹ்மான் இப்னு அபூபக்ர்(ரழி) முஹம்மது இப்னு அபூபக்ர்(ரழி), ஆயிஷா பின்த் அபூபக்கர்(ரழி), அஸ்மா பின்த் அபூபக்கர்(ரழி), உம்மு குல்சூம் பின்த் அபூபக்ர்(ரழி) ஆகியோராவர். இவர்கள் அணைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
ஆரம்ப கால இஸ்லாமிய அழைப்பு பணி
இஸ்லாமிய அழைப்பு முதன்முதலாக விடுக்கப்பட்ட அந்த நாட்களில் அபூபக்ர் எமன் தேசத்திலிருந்தார். பின் எமனிலிருந்து திரும்பி மக்கா திரும்பியவரை அபு ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற மக்காவின் மிகப் பிரபலங்கள் அவரைச் சென்று வீட்டில் சந்தித்து, அபூதாலிப்பின் பாதுகாப்பில் வளரக் கூடிய அந்த அநாதை, தன்னை ஒரு இறைத்தூதரென்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார். நாங்கள் உங்களுடைய வருகைக்காகத் தான் காத்திருக்கின்றோம். நீர் வந்தவுடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றனர். ஆனால் அபூபக்ர்அவர்கள் தன்னைப் பார்க்க வந்த பெருந்தலைகளை விட்டு விட்டு, தன் ஆருயிர்த்தோழரைக் காண விரைந்து செல்கின்றார். நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா? ஆம்! என்றுரைத்தார் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். உங்களுடைய அந்த அழைப்பின் அர்த்தம் என்ன? லா இலாஹ இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரசூலுல்லாஹ்! என்ற ஓரிறைக் கொள்கையின் தத்துவத்தை அபுபக்கர் அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.
இஸ்லாத்தை பற்றி இதற்குப் பிந்தைய நாட்களில் கேள்விப்பட்ட அனைவரும் அந்தக்கொள்கையை முன்பு மறுத்து அல்லது தாமதப்படுத்தியோ தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அபூபக்ர் அவர்களோ உடனே ஏற்றுக் கொண்டார்கள். எந்தவிதசுணக்கமும் அவர்கள் காட்டவில்லை என்பது அவருக்கு இறைக் கொள்கையின் மீதுள்ள பற்றும் இன்னும் அதனைக் கொண்டு வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் அன்பும் தான் காரணமாகும். அபுபக்கர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரிசையில், அதாவது வயது வந்தோர்களின் வரிசையில் முதலாவது நபராகவும், இன்னும்சிறுவர்களின் வரிசையில் அலி (ரழி) அவர்கள் முதலாவது நபராகவும்இருந்தார்கள். எப்பொழுது இஸ்லாத்தை அபூபக்ர் (ரழி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ, அப்போதிருந்திருந்தே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது உடல், பொருள், ஆவி, திறமைகள், அனைத்தையும் வழங்கினார்கள். அபூபக்ர்(ரழி) தனக்கு மிக நம்பிக்கைக்கு உடையவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹுஅன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் முதலானோர் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டு இணைந்தனர்.
ஆரம்ப காலங்களில் கேட்க ஆள் இல்லாத அடிமை முஸ்லிம்கள் மீது குறைஷிகளின் உச்ச கொடுமையினை காண சகிக்காமல் ஆண்களில் நான்கு, பெண்களில் நான்கு என எட்டு அடிமைகளை மொத்தம் 40,000 தினார் விலை கொடுத்து வாங்கி அல்லாஹ்வின் பாதையில் உரிமை விட்டார்கள். அவர்களில் ஆண்கள் 1)பிலால் இப்னு ரிபாஹ, 2)அபூ ஃபாஹிக், 3)அம்மார் இப்னு யாஸிர் 4) அபூ ஃபுஹய்ரா மற்றும் பெண்கள் 1)லுபைனா 2)அல் நஹ்தியா 3)உம்மு உபாய்ஸ் 4)ஹரிதாஹ் பிந்த் அல் முஅம்மில் ஆகியோர் ஆவார்கள்.
பகிரங்க இஸ்லாமிய அழைப்பு பணி
பகிரங்க அழைப்பு பணியில் குறைஷிகள் நபி(ஸல்) அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து தனது சுயநினைவை இழந்து நபி மயங்கிக் கீழே விழுந்தார்கள் அந்தத் தருணத்தில் அபுபக்கர் (ரழி) அவர்கள் தனது ஆருயிர்த் தோழரை அந்தஇஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து காப்பாற்ற விரைந்து வந்தார்கள். அவரையும் அவர்கள் தாக்க ஆரம்பித்தார்கள், இப்பொழுது அபூபக்ர்(ரழி) அவர்களது மண்டை உடைந்துஇரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இப்பொழுது அபூபக்ர் (ரழி) அவர்களது உறவினர்கள்விரைந்து வந்து, எதிரிகளிடமிருந்து இருவரையும் காப்பாற்றுகின்றனர். படுகாயமுற்ற அபூபக்ர் (ரழி), அவருடைய இல்லத்திற்க எடுத்துச்செல்லப்பட்டார்கள். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. நீண்டநேரத்திற்குப் பின் அவருக்கு சுயநினைவு வந்தது. இந்த இக்கட்டான நிலையிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப்பற்றியல்லவா இவர் பேசுகின்றார்? இவர் அவரிடம் எத்தகைய பற்றும் பாசமும்வைத்திருப்பார் என வியப்புற்ற நிலையில் அபூபக்ரின் அன்னை அபூபக்ர் (ரழி) அவர்களைஆர்வத்துடன் நோக்கினார்.
மறுநாள் காலை, உம்முல் கைர் என அழைக்கப்பட்ட சல்மா பிந்தி சக்ர் அதாவதுஅபூபக்ர்(ரழி) அவர்களின் அன்னை இஸ்லாத்தைத் தழுவும் ஆர்வம் கொள்ளவே, அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார். அபூபக்ர் (ரழி)அவர்கள், கருணையே உருவான நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய இனிய விளக்கமொன்றைஅந்த அம்மையாருக்கு வழங்கினார்கள். அடுத்து, அவர் ஏகத்துவ கலிமாவை மொழிந்துஇஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
ஹிஜ்ரத்
முதலில் ஒரு குழு அபீசீனியாவிற்குப் பயணம் சென்றபின், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களையும் அபீசீனியாவிற்குப் பயணமாகும் படி உத்தரவிட்டார்கள். அவர் பயணமாகிக் கொண்டிருந்த வழியில் காரா கோத்திரத்தாரின் தலைவராகிய இப்னு துக்னாவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அபூபக்ர் (ரழி) அவர்களை அழைத்து வந்து குறைஷிகளிடம் பேசி பாதுகாப்பு ஒப்பந்தம் அபூபக்ர்(ரழி)க்கு மட்டும் போட்டு மக்காவில் பிரச்சனையின்றி தங்குகிறார். அபூபக்ர்(ரழி) அவரது வீட்டு அருகில் பள்ளிவாசல் கட்டி சத்தமாக குர் ஆன் ஒதி மக்கள் மனசை கெடுகிறார் என திரும்ப துக்னா விடம் குறைஷிகள் முறையிட, அபூபக்ர் அல்லாஹ் என்னை பாதுகாப்பான் என துக்னாவின் பாதுகாப்பை நிராகரித்தார்கள்.
மதீனாவில் இருந்து வந்த சிலர்இஸ்லாத்தின் செய்திகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக கவனமாகவும், ஆழ்ந்த கவனத்தோடும் செவிமடுத்ததன் பின்பு, ஒரு மிகப் பெரிய மாற்றம் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஏற்பட்டது. அதன் காரணமாக, இரண்டு மூன்று ஆண்டுகளில் முழுமதீனாவுமே முழு இஸ்லாமிய பிரச்சாரக் கேந்திரமாக மாறித்தான் போனது. இப்பொழுது மதீனா முஸ்லிம்களைப் பாதுகாக்கக் கூடிய பிரதேசமாக, முஸ்லிம்கள்அடைக்கலம் தேடிச் செல்லும் இடமாக மாறிப் போனதன் பின்பு, இறைத்தூதர் (ஸல்)அவர்கள் மக்காவில் உள்ள தனது தோழர்களை மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யும்படிபணித்தார்கள். மிகப் பெரும் தோழர்களான உமர் (ரழி) அவர்கள் முதற்கொண்டு, இறைத்தூதர் (ஸல்)அவர்களுக்கு முன்பாகவே ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்று விட்டார்கள். அதன் பின் நான்கு மாதங்கள் கழித்து, அல்லாஹ்வின் உத்தரவு கிடைத்த பின் நபி (ஸல்)அவர்களே மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து, சென்று விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனா ஹிஜ்ரத் சென்ற போது உடன் அபூபக்ரையே அழைத்துச் சென்றார்கள். பெருமானாரோடு தெளர் குகையில் ஒளிந்திருந்து பின் மதீனா சென்றார்கள். பெருமானார் பங்கேற்ற அனைத்துப் போர்களிலும் அபூபக்ர்(ரழி) பங்கு கொண்டுள்ளார். பத்ரு போர், உஹத் போர், அகழ்ப்போர், பனூ குரைஜா போர், கைபர் போர், ஹூனைன் போர், தாயிப் முற்றுகை, மக்கா வெற்றி போன்ற அனைத்து போர்களத்திலும் தீரமுடன் போரிட்டதோடு, அதற்காக தமது செல்வத்தையும் வாரி வழங்கினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்களுக்குப் போர் ஆலோசனை வழங்குபவராகவும் இருந்தார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை
நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்கு ஹஜ் செய்யும் நிமித்தமாகக் தோழர்களுடன் கிளம்பினார்கள். மக்கத்துக் குறைஷிகள் நபி (ஸல்)அவர்கள் மக்காவிற்கு நுழைவதைத் தடுக்கும் பொறுட்டு திரண்டு நிற்பதாகத் தகவல் கிடைத்தவுடன், வழக்கமான பாதையை விட்டு விட்டு, பாதையை மாற்றி ஹுதைபிய்யா என்ற இடத்தை ஒட்டிய பகுதி வழியாகத் தன்னுடைய பயணத்தைத் தொடர்கின்றார்கள். போர் செய்யும்நோக்கமோ அல்லது குறைஷிகளுடன் விவாதம் செய்யும் நோக்கத்துடனோ நாம் இந்தப்பயணத்தைத் தொடரவில்லை என்பதனை குறைஷிகளுக்குத் தெளிவாக விளங்க வைக்க நபி(ஸல்) அவர்கள் தனது ஒட்டகையுடன், ஒரு தூதரை அனுப்பி குறைஷிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வரும்படி பணித்தார்கள். அவரை குறைஷிகள் கொன்று விட்டார்கள் என செய்தி கேட்டு, புதிதாக உருவெடுத்துள்ள இந்தப் பிரச்னையில், அனைவரும் உறுதியோடு இருந்துபோராடுவோம் என்று அனைவரிடமும் நபி(ஸல்) அவர்கள் பைஅத் என்று சொல்லக் கூடிய சத்தியப் பிரமாணம்பெற்றுக் கொண்டார்கள்.
இந்த பைஅத் நடந்து முடிந்த பின் தான், தமக்குக்கிடைத்த செய்தி தவறான செய்தி என்பதையும், இன்னும் இந்த வருடம் ஹஜ்ஜுச்செய்யாமல் திரும்பி விட்டால், அடுத்த வருடம் தாராளமாக வந்து ஹஜ் செய்துவிட்டுப் போகலாம் என்ற நிபந்தனையுடன் கூடிய செய்தியை, சுஹைல் அவர்களிடம்குறைஷிகள் தெரிவித்து அனுப்பி விட்டனர். மிக நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்பு, இருதரப்பிலும் ஒரு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்களை இருவரும் எழுதிக் கொள்ளச் சம்மதித்தனர். செய்து கொண்டஒப்பந்தமானது குறைஷிகளுக்குத் தான் மிகவும் சாதகமானதாக இருக்கின்றது என்றுஅபிப்பராயப்பட்ட உமர் (ரழி) அவர்கள், தனது கருத்தை அபூபக்ர் (ரழி)அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். உமர் (ரழி) அவர்களது ஆலோசனையை மறுத்த அபூபக்ர் (ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களது கருத்தை ஏற்குமாறு ஆலோசனை வழங்கியதோடு, நபி(ஸல்) அவர்களது வழிமுறையை இறுகப்பற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஒப்பந்தத்திற்குப் பின், முஸ்லிம்களும் மக்கத்துக் குறைஷிகளும் நட்பு முறையில் சந்தித்துக் கொண்டார்கள், முன்பு இந்த சந்திப்பு போருக்கான சந்திப்பாகத் தான் இருந்தது. இப்பொழுது, இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளாத மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் தூதை எடுத்துச் செல்வது மிகவும் எளிதாகவும் இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின்பு தான் இஸ்லாத்தின் தூதை ஏராளமான பேர்கள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதுவே மாபெரும் இரத்தம் சிந்தா மக்கா வெற்றிக்கு வாய்ப்பாகியது. அபூபக்ர் (ரழி)அவர்களின் தந்தையாரும், மக்காவின் வெற்றிக்குப் பின் இஸ்லாத்தினைத் தனதுவாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
அபூபக்ர் (ரழி) அவர்களின் கொடை வள்ளல் தன்மை
அரேபியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் துணையுடன் ஹிராக்ளியஸ் மதீனாவின் மீதுபடையெடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றான் என்ற செய்தி நபி(ஸல்)அவர்களை அடைந்த பொழுது, தற்காப்புக்காக போர் செய்ய வேண்டிய சூழ்நிலையில் மதீனாவில் பஞ்சம், தோழர்களிடம் நிதி திரட்டும் பொழுது, அபூபக்ர் அவர்களே..! தாங்கள்என்ன கொண்டு வந்தீர்கள்? என நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள். இதோ யாரசூலுல்லாஹ்..! என்று தான் கொண்டு வந்த செல்வத்தை நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்த பொழுது, தங்களது குடும்பத்தாருக்காக எதனை விட்டு வந்திருக்கின்றீர்கள்? என்றார்கள், நபி(ஸல்) அவர்கள்..! ஆம்..! யா! ரசூலுல்லாஹ்..! அல்லாஹ்வையும், அவனது தூதர் (ஸல்) அவர்களையும் விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள்..! அதாவது, இந்த உலக வாழ்க்கைக்கான எதனையும் நான் விட்டு வரவில்லை, மாறாக, மறுமைக்கானவற்றையும், இறைவனுடைய பாதுகாப்பையும், அவனது தூதரதுவழிமுறையையும் விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள். அப்பொழுது, உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள் ”இனி, எப்பொழுதும் நான் அபூபக்ர் (ரழி) அவர்களை கொடை கொடுப்பதில் மிஞ்சவே முடியாது” என்றார்கள்.
அபூபக்ர்(ரழி) அவர்களது தலைமையில், நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒரு குழுவினரை ஹஜ் செய்யும் நிமித்தமாக மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த வருடத்தில் முஸ்லிம்களுடன், இணை வைப்பாளர்களும் இணைந்து ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள். இந்த வருடத்திற்குப் பின்பு, இணை வைப்பாளர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைவதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜத்துல் விதா
ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு நபி(ஸல்) அவர்கள், ஹஜ்ஜத்துல் விதா என்ற இறுதிஹஜ்ஜை நிறைவேற்றிய தன் பின்னால், மதீனா திரும்பிய நாளில் இருந்து, அதாவது ஸஃபர் மாதம் இறுதி அல்லது ரபிய்யுல் அவ்வல் மாதத்தின் ஆரம்ப நாட்களில்இருந்து சுகவீனத்திற்கு ஆளானார்கள். அதுவே அவர்களது இறுதி வாழ்வுக்கான ஆரம்பமாகவும் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் இந்தப் பள்ளிக்குள் மக்கள் நுழைவதற்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கின்ற அனைத்து வழிப் பாதைகளையும் அடைத்து விடுங்கள், அபூபக்ர் (ரழி) அவர்களது வீட்டிலிருந்து வருகின்ற பாதையைத் தவிர என்றுகூறினார்கள். அபூபக்ர் அவர்களை விட உதவிகரமாக இருந்த ஒருவரை நான் அறியமாட்டேன் என்றும் கூறினார்கள். எனக்கு உற்ற தோழர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படிப் பணிக்கப்பட்டால், நான் அபுபக்கர் அவர்களைத் தான் தேர்ந்தெடுப்பேன் என்றார்கள். இந்தத் தோழமையும், சகோதரத்துவமும் இறை நம்பிக்கையினால் விளைந்ததுவாகும், இவை யாவும் இறைவன் நம்மை ஒன்று கூட்டும் நாள் வரைத் தொடர வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு நோயின் கடுமை அதிகமாகியது. எனவே, அபூபக்ர் (ரழி) அவர்களையே தொழுகையை முன்னின்று நடத்துமாறு கேட்டுக்கொண்டார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, எனது தந்தை இளகியமனம் படைத்தவர், திருமறைக் குர்ஆனை ஓதும் போது அவருக்கு அழுகை வந்துவிடும். எனவே, பின் நிற்பவர்கள் திருமறைக்குர்ஆனை சரியாகச் செவி மடுக்கமுடியாது, எனவே, அவருக்குப் பதில் வேறு ஒருவரை நியமியுங்கள் என்றுகூறினார்கள். ஆனால், ஆயிஷா (ரழி) அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நபி(ஸல்) அவர்கள், மீண்டும் அபூபக்ர் (ரழி) அவர்களையே தொழவைக்கும்படி ஏவினார்கள். மீண்டும் ஆயிஷா (ரழி) அவர்கள் வலியுறுத்தியும் நபி(ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களையே தொழ வைக்கும் படி உத்தரவிட்டார்கள்.
முதல் கலீபாவாக தேர்வு
ஹிஜ்ரி 11-ல் ரபிய்யுல் அவ்வல் பிறை12ல் பொருமானார் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். இதை உமர்(ரழி) உள்பட நிறையா சஹாபிகள் ஏற்று கொள்ள முடியாமல் பாசத்தால் குழப்பம் மேல் ஓங்கியது. அபூபக்ர்(ரழி) இறைவசன மேற்கோள் காட்டி உண்மையை புரியவைத்து குழப்பத்தை அகற்றினார்கள். மதீனா அன்சாரிகள் தனியாக கலீபா தேர்தெடுக்க ஒன்று கூடினார்கள், அவர்கள் கூட்ட்த்தில் அபூபக்ர்(ரழி) உமர்(ரழி) இருவரும் சென்று அவர்களிடம் கருத்து கேட்டு அதற்கு சரியான பதில் உரையாற்றி மக்களை ஒற்றுமை படுத்தி ஜனநாயக முறையில் அணைவரின் ஏகோபித்த முடிவாக அபூபக்ர்(ரழி) முதல் கலீபாவாக தேர்ந்தேடுக்கப் பட்டார்கள். நபி(ஸல்)அவர்கள் மரணித்த நாள் திங்கட் கிழமை ஆகும். அடுத்த நாள் அவர்களின் உடல் குளிப்பாட்டி கபனிடப்பட்டது. மாலைநேரத்திற்குள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருவுடல் அவர்கள் மரணித்த அதே அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அபூபக்ர் (ரழி) அவர்களைநோக்கிய உமர் (ரழி) அவர்கள், அபூபக்ர் (ரழி) அவர்களே, நீங்கள் மிம்பரில் ஏறிக் கொள்ளுங்கள், என்று கூறினார்கள். சற்று தயக்கத்திற்குப் பின்னர், உமர் (ரழி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று மிம்பரில் ஏறிய அபூபக்ர் (ரழி)அவர்கள், நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக அமர்ந்த முதல் படியில் அமராது, அதற்கும் ஒருபடி கீழே உள்ள படியில் உட்கார்ந்தார்கள். இப்பொழுது பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து அபூபக்ர் (ரழி)அவர்களின் கரங்களில் உறுதிப்பிரமாணம் வழங்கினார்கள்.
முதல் கலீபா அவர்களின் நடவடிக்கைகள்
அபூபக்ர்(ரழி)அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்து, முதன் முதல் உத்தரவாக, உஸாமா(ரழி) அவர்களுடன் ரோமர்களை எதிர்ப்பதற்காக தயார் செய்யப்பட்ட படை கிளம்பத்தயாராகட்டும், என்று உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) இறந்ததன் பின்பு, மதீனாவின் சமூகச் சமநிலை பாதிக்கப்பட்டது, அமைதி அழிந்து காணப்பட்டது, புதிதாக பொய்த் தூதர்கள் பலர்தோன்ற ஆரம்பித்தார்கள். இதனை சாக்காக வைத்துக் கொண்டு, கிறிஸ்தவர்களும், யூதர்களும் திட்டமிட்ட முறையில் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களின் மீது புரியப்படுகின்ற இந்த அடக்கு முறைகளையும், சித்தரவதைகளையும் பற்றிக் கேள்விப்பட்ட அபூபக்ர்(ரழி) அவர்கள், எதிரிகளுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்றுமுடிவெடுத்தார்கள். படைக்குத் தலைமைப் பொறுப்பை தானே ஏற்று படையை நகர்த்த ஆரம்பித்தார்கள் அபூபக்ர் (ரழி) அவர்கள். படை இப்பொழுது துல்கஸ்ஸா வழியாக, ரப்தா என்ற பகுதியில் உள்ள அப்ரக் என்ற இடத்தை அடைந்தது. எதிரிகள் மீதுதாக்குதல் தொடுக்கப்பட்டது, எதிரிகள் நிர்மூலமாக்கப்பட்டார்கள்.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தேவையானஅளவுக்கு ஜகாத் - லிருந்து நிதியும் வந்து சேர்ந்திருந்தது. இப்பொழுதுஅப்ரக் கில் தங்கிக் கொண்டு, பொய்த் தூதர்களின் அட்டகாசங்களைஅடக்குவதற்குண்டான தயாரிப்புகளைச் செய்ய ஆரம்பித்தார்கள் கலீபா அபூபக்ர் (ரழி) அவர்கள். பொய்த் தூதர்களின் கொட்டங்களை அடக்குவதற்கென்றே, பதினொரு படைப் பிரிவுகளை உருவாக்கி, நாட்டின் பல பாகங்களுக்கு அந்தப் படைகளைஅபுபக்கர் (ரழி) அவர்கள் அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள்
இன்றைக்கு இருப்பது போல அன்றைய நாட்களில் கூலிக்கு ஆள் அமர்த்திப் போராடும்படைப் பிரிவுகள் இருக்கவில்லை. முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின்மார்க்கம் மேலோங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், தங்களது உயிர், பொருள், உடமைகளை அற்பணிக்க முன் வந்ததோடு, அதற்கான கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடன் மட்டுமே போர்க் களத்திற்குள் நுழையக் கூடியவர்களாக இருந்தார்கள், எனவே அல்லாஹ் வெற்றியை, உதவியை அதிகமாக்கி கொடுத்தான்.
ரோம மற்றும் பாரசீகப் பேரரசுகள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மீது எப்பொழுதும் போர் தொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே இருப்பதால், அபூபக்ர் (ரழி) அவர்கள் இப்பொழுது ரோமப் பேரரசின் நடவடிக்கைகள் குறித்து எப்பொழுதும், ஒரு உஷாராகவே இருந்தார்கள். ஈராக்கை வெற்றி கொண்டதன் பின்னாள், காலித் பின் ஸயீத் (ரழி) அவர்களது தலைமையில் ஒரு படையை சிரியாவைநோக்கி அபூபக்ர்(ரழி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். எதிரிகள் போரைத் திணிக்கும் பட்சத்தில் நம்முடைய பகுதிகளைத் தற்காத்துக் கொள்வதற்குண்டானமுறையில் போர் செய்யுமாறும் கலீபா அபூபக்ர் (ரழி) அவர்கள் தனது தளபதிக்குஉத்தரவிட்டிருந்தார்கள். ஹிராக்கிளியஸ் ன் நடவடிக்கைகள் பற்றி கலீஃபா அபூபக்ர் (ரழி)அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த அபூபக்ர் (ரழி) அவர்கள், சற்றும் தாமதிக்கமால், அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு போரைத் துவக்குமாறு, காலித் பின் ஸயீத் (ரழி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.போரைத் துவக்குங்கள், எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம், இறைவனிடம் உதவி கோரி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றும் அபூபக்ர் (ரழி)அவர்கள் அறிவுரை கூறினார்கள். கலீபா அவர்களின் உத்தரவினை ஏற்றுக் கொண்ட காலித் பின் ஸயீத் (ரழி) அவர்கள்சற்றும் தாமதிக்காமல், தனது படைகளை நகர்த்தினார். எதிரிகள் இப்பொழுது களைந்து புறமுதுகிட்டு ஓட ஆரம்பித்தார்கள். இதில் மகிழ்ச்சிக்குரிய செய்திஎன்னவென்றால், முஸ்லிம்களை எதிப்பதற்காக களமிறங்கிய அரபுக் குலத்தவர்கள் பலர் சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
07, ஜமாதுல் ஆகிர் ஹிஜ்ரி 13, ஆம் ஆண்டில், ஒரு குளிர் நாளில் அபூபக்ர் (ரழி) அவர்கள் குளித்து விட்டு வரும் பொழுது அடித்த குளிர் காற்றில்அவர்களது மேனியில் தாக்கப்பட்டதன் காரணமாக, உடனே அவர்களுக்கு காய்ச்சல் காணஆரம்பித்து விட்டது. அதுவே அவர்களது மரணத்திற்கும் காரணமாக அமைந்தது. பதினைந்து நாட்களாக அவர்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள். அவர்களதுநிலைமை மிகவும் மோசமாக ஆனதுடன், பள்ளிவாசலுக்குச் சென்று தொழவே மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே, உமர் (ரழி) அவர்களை இமாமாக நியமித்து தொழுகைகளை நடத்தும் படி உத்தரவிட்டார்கள்.
இப்பொழுது கலீஃபா அபூபக்ர் (ரழி) அவர்கள், தனக்குப் பின்ஆட்சிப் பொறுப்பிற்கு யாரை நியமிப்பது என்றும், அவ்வாறு தான் செய்யவில்லையாயின் மக்கள் தங்களுக்குள் முட்டி மோதி, ஒரு குழப்பமான நிலை உருவாகி விடுமே என்றும் கருதலானார்கள். தனது விருப்பத்தை நபி(ஸல்) அவர்களின் மூத்த தோழர்களிடம் கலந்தாலோசனை செய்து, இறுதியாக உமர் (ரழி)அவர்களை தனக்குப் பின் அடுத்த கலீஃபாவாக நியமிப்பது என்ற முடிவுக்குவந்தார்கள்.
தனது வீட்டின் மாடிப் பகுதிக்குச் சென்ற அபூபக்ர் (ரழி) அவர்கள், மிகவும் தளர்ந்து போயிருந்த காரணத்தால், தனது மனைவியான அமிஸ் அவர்களின் மகளான அஸ்மா அவர்களின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டவராக அங்கே கூடி நின்ற மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். எனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்துவதற்குரியவராக, உமர் (ரழி) அவர்களையே நான் தேர்வு செய்துள்ளேன். நான்சொல்வதை செவிதாழ்த்திக் கேளுங்கள், எனது விருப்பத்திற்கு நீங்கள்ஒத்துழைப்புத் தாருங்கள் என்று தனது உரையை முடித்தார்கள் அபூபக்ர் (ரழி)அவர்கள்.
அங்கு கூடியிருந்த அனைவரும் ஒருமித்த குரழில், ''நீங்கள் சொல்வதை நாங்கள்ஏற்றுக் கொள்கின்றோம், அதற்கு கட்டுப்படுகின்றோம்”” என்று கூறினார்கள்.
இறைவா..! என்னை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக..! இன்னும்நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வாயாக..! என்றும்பிரார்த்தித்தார்கள். 23 ஆகஸ்ட் 634 அன்று 22, ஜமாதுல் ஆகிர் மாதம் திங்கட்கிழமை அன்று மக்ரிப்க்கு பின் தனது 60 வது வயதில் மரணமடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது.)
ஜனஸா நல்லடக்கத் தொழுகையை உமர் (ரழி) அவர்கள் முன்னின்று நடத்தினார்கள்.அன்றைய இரவே ஆயிஷா (ரழி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்அடக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கு மிக அருகில், தன்னுடைய தலைவருக்கு மிகஅருகிலேயே அவரின் உற்ற நண்பரும் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அபூபக்ர்(ரழி) அவர்களுக்கு இறைக் கொள்கையின் மீதுள்ள பற்றும் இன்னும் அதனைக் கொண்டு வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவற்றை நாமும் கடைபிடித்து நாம் ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய கொள்கைக்காக நமது உடல், பொருள், ஆவி, திறமைகள், அனைத்தையும் வழங்கி ஒற்றுமையுடன் வாழ இன்ஷா அல்லாஹ் முயற்சி மேற்கொள்வோமாக.
அபூபக்ர் (ரழி) அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளின் வருட தொகுப்பு | |
கி.பி 573 | அபூபக்ர்(ரழி) அவர்கள் பிறப்பு |
கி.பி 591 | சிரியா(ஷாம்) தேசத்திற்க்கு முதல் முதலாக வியாபரத்திற்கு சென்றது |
கி.பி 610 | ஏமன் சென்று திரும்பியது |
கி.பி 610 | இரகசிய அழைப்பு பணியில் பங்கேற்றது |
கி.பி 613 | பகிரங்க அழைப்பு பணியில் |
கி.பி 614 | குறைஷிகள் அடிமைகளை கொடுமை செய்வதை சகிக்காமல் அடிமைகள் விடுதலைக்கு ஏற்பாடு |
கி.பி 615 | அபீசீனியாவிற்குப் பயணமாகி இடையில் மக்கா திரும்புதல் |
கி.பி 620 | ஆயிசா(ரழி)திருமணம் – மிஃராஜ் பயணத்தை உண்மைபடுத்தல் |
கி.பி 622 | மதீனாவுக்கு நபி(ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் |
கி.பி 623 | பத்ரு போர் |
கி.பி 628 | ஹுதைப்பியா நிகழ்வு |
கி.பி 631 | ஹஜ் க்கு தலைமை ஏற்பு |
கி.பி 632 | நபி(ஸல்) அவர்கள் மரணம் – முதல் கலீபாவாக தேர்வாகுதல் |
கி.பி 632 | ரோமர்களை எதிர்த்து போர், நஃகரா போர், முஸைலிமா போன்ற பல பொய்யர்கள் மீது படை |
கி.பி 633 | ஈராக் தொடர் போர், ஸன்ஆ போர், வாலாஜ் போர்,உலைஸ் போர், அன்பர் & அயன் அல் தம்ர் போர், |
கிபி 634 | அபூபக்ர்(ரழி) அவர்கள் மரணம். |
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...
உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.