இக்லாஸ் (உளத்தூய்மை)
இக்லாஸ் இதன் பொருள் ‘தூய்மை’ என்பதாகும். மாசு மறுவற்ற முறையில் அல்லாஹ்வுக்கு அடிபணிவதையே இது குறிக்கும். “அகில உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் இறைவன் ஒருவன். அவனுக்கு இணை எவருமில்லை. அவனே வணக்கத்திற்குரியவன்” என்று மனம், வாக்கு, உடல் இவைகளால் அறுதியிட்டு உறுதி கூறி அவ்விதமே செயலாற்றுவதே இக்லாஸ் ஆகும்.
மனித சமுதாயத்தை படைத்த இறைவன் மனிதனின் எண்ணங்களை பலவாறாக அமைத்து வைத்துள்ளான். மனிதர்கள் யாராக இருப்பினும் அவர்கள் எந்தவொரு காரியத்தைப் பற்றிப் பேசினாலும் யாரையும் ஆதரிப்பதாக இருந்தாலும் எச்செயலை செய்தாலும் அதற்கு பின்புலமாக ஏதாவது ஒரு எண்ணம் அல்லது நோக்கம் (அதாவது அல்லாஹ்விற்காக, முகஸ்துதிக்காக, (பிறருக்காக) சுயநலனுக்காக, பொதுநலனுக்காக, பேருக்காக, புகழுக்காக, பிறர் பாராட்டுதலுக்காக) இருக்கும். அது இல்லாமல் எவரும் எச்செயலையும் எப்பேச்சையும் பேசுவதுமில்லை, செய்வதுமில்லை.
இது குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள் :செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும். அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப்(ரலி) நூல்: புகாரி
திருமறை அல்குர்ஆனில் இக்லாஸ்
திருக்குர்ஆனின் 112-ஆவது அத்தியாயத்திற்கு சூரத்து இக்லாஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்குக் காரணம் அதில், “(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். (112:1.) (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) (112:2.) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)(112:3.) (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. (112:4.)” என்னும் திருவசனங்கள் மூலம் அல்லாஹ், தன்னைப்பற்றி கருத்தாழமிக்க தெளிவான விளக்கத்தை உலக மக்களுக்கு விளக்கி, "இறைவன் ஒருவன்" மட்டுமே என்ற ஏகத்துவ தத்துவத்தை தெளிவுபடுத்தியுள்ளான்.
இஃது அல்லாஹ்வையன்றி வணங்குவதற்குரியோன் வேறொருவனுமில்லை என்ற உறுதிப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ளுமாறு ஒருவனைச் செய்து அவனை இறைவனுக்கு இணை வைப்பதை விட்டும் தூய்மைப் படுத்துகிறது. இஸ்லாத்தின் மூலக் கொள்கை இதில் பொதிந்துள்ளது.
"அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன், அவனுக்கே என்னுடைய வணக்கம் அனைத்தும் உரித்தானது என்று" (நபியே) நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் 39:11.)
மற்றொரு இடத்தில் கூறும் போது
(ஷிர்க்-ரியாயின்றி) உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன் எனவும் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:14.)
இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதராலும் சொல்லப்பட்டுள்ள எந்தவொரு வணக்கமானாலும்; அவற்றையெல்லாம் ஷிர்க் (இணையாக்காமலும்) ரியா (முகஸ்துதி) யின்றி முழுக்க முழுக்க இறைவனின் திருப்தியை நாடியே மட்டும் செய்ய வேண்டும் அப்போது தான் அந்த காரியங்கள் அல்லாஹ்விடம் ஏற்கப்படும்.
சூரத்து இக்லாஸ் அத்தியாயத்தின் சிறப்புகள்
சூரத்து இக்லாஸ் என்ற இந்த அத்தியாயத்தை மூன்று முறை ஓதுவது திருக்குர் ஆன் முழுவதையும் ஒரு முறை ஓதுவதற்கு நிகராகும் என்றும் கூறப்படுகிறது. “இதனை ஓதி வருபவர் தங்களின் இம்மை, மறுமை பற்றிய நாட்டங்களை எய்தப் பெறுவர் என்றும் இதனைப் பத்து முறை ஓதுகிறவருக்கு சுவனத்தில் ஓர் இல்லம் எழுப்பப்படும் என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளனர்.
குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி:
உங்களில் எவருக்கும் ஓரிரவில் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலாது?'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) கேட்டதற்கு, ஒரு இரவில் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை எவரால் ஓத முடியும்?' என ஸஹாபாக்கள் கேட்டார்கள். ''குல்ஹுவல்லாஹு அஹத்'' சூரா ஓதுவது 'குர்ஆனின் மூன்றிலொரு பகுதி ஒதியதற்கு சமம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)
சுவர்க்கத்தில் மாளிகை
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சயீது இப்னு முசய்யப்(ரழி) கூறுகிறார்கள். எவரொருவர் 'குல்ஹுவல்லாஹு' அத்தியாயத்தை பத்து தடவை ஓதுகிறாரோ, அவருக்கு சுவர்க்கத்தில் அல்லாஹ் ஒர் மாளிகை கட்டுகிறான். எவர் இருபது தடவை ஓதுகிறாரோ, அவருக்கு சுவர்க்கத்தில் அல்லாஹ் இரண்டு மாளிகை கட்டுகிறான். எவர் முப்பது தடவை ஓதுகிறாரோ, அவருக்கு சுவர்க்கத்தில் அல்லாஹ் மூன்று மாளிகை கட்டுகிறான். அப்போது உமர்(ரழி) அவர்கள், எங்கள் மாளிகையை அதிகரித்தால்? எனக் கேட்டார்கள். அதற்கு, இது(சுவர்க்கம்) அதை(மாளிகையை) விட விசாலமானது என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரமீ)
அபூ நுவாஸ் இறந்த பின் அவர் ஏராளமான அருட்கொடைகளைப் பெற்று மகிழ்வுடன் இருப்பதாக ஒருவர் கனவு கண்டு அதற்கான காரணத்தை அவரிடம் வியப்புடன் வினவிய பொழுது, “ஒரிரவு நான் அடக்கப்பட்டிருக்கும் மயானத்திற்குச் சில நல்ல மனிதர்கள் வந்து அங்கு தங்களின் தொழுகை விரிப்புகளை விரித்து இரண்டு ரக்அத் தொழுது அதன் பின் அங்கு அமர்ந்து இரண்டாயிரம் தடவை சூரத் இக்லாஸை ஓதி அதனை அங்கு அடங்கப் பெற்றுள்ள அனைவருக்கும் அன்பளிப்புச் செய்து விட்டுச் சென்றனர். அதன் காரணமாக அங்கு அடங்கப்பட்டிருந்த அனைவருக்கும் இறைவன் விமோசனம் அளித்தான். அவர்களில் நானும் ஒருவன்” என்று பதிலுரைத்தாராம் அவர்.
இக்லாஸ் என்பதன் பொருள் மற்றும் அதற்கு எதிர் மறைச் சொல் பற்றி
இக்லாஸ் என்பதற்கு விடுதலை என்று ஒரு பொருள் உண்டென்றும் மரணத் துன்பம், மறுமைத் துன்பம் ஆகியவற்றிலிருந்து இது மனிதனுக்கு விடுதலை நல்குவதால் இதற்கு இக்லாஸ் என்னும் பெயர் ஏற்பட்டது என்றும் சிலர் கூறுகின்றார்கள்.
இக்லாஸுக்கு எதிர் மறையான சொல் ‘ஷிர்க்’ என்பதாகும். இஃது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதைக் குறிக்கும். பிற்காலத்தில் இச்சொல் சுயநலநோக்குடன் நற்செயல்கள் ஆற்றுவதைக் குறிப்பதற்குப் பயன் படுத்தப் பட்டு வருகிறது.
இதே போன்று இக்லாஸ் என்னும் சொல்லும் எவ்விதச் சுயநல நோக்குமின்றி அல்லாஹ்வுக்காகச் செய்யப்படும் தூய பணியைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
அறம் செய்வதை அல்லாஹ்வுக்காகச் செய்யாது பிறர் மெச்ச செய்தால் தீமையே
அறம் செய்வதை அல்லாஹ்வுக்காகச் செய்யாது பிறர் மெச்சவதற்காகச் செய்தல் அறம் செய்வதான நன்மையைக் கெடுத்து விடுவதோடு தீமையையும் ஒருவருக்குக் கொணருகிறது. ஆனால் தான் செய்யும் நல்லறங்களைக் கண்டு பிறரும் அவ்விதமே செய்யட்டும் என்ற எண்ணத்துடன் வெளிப்படையாக நல்லறங்களைச் செய்வது குற்றமல்ல. இதன் காரணமாகவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜுன்தப் (ரழி) அவர்களை நோக்கி, “உமக்கு இரகசியத்துடையவும், பரகசியத்துடையவும் இரண்டு கூலிகள் கிடைக்கும்” என்று கூறினர்.
ஆனால் பிறர் மெச்சுவதற்காக எச்செயலையும் ஆற்றுவது இணைவைப்பதற்கு நிகராவதால் அது சிறிய ஷிர்க் என்று கூறப்படுகிறது. “அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி இருப்பதெல்லாம் பிறர் மெச்சச் செயலாற்றுகின்றவர்களுக்கு தான்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர். அவர்களுக்கென ஓர் ஓடை நரகத்தில் சித்தப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவ்வோடையை விட்டுத் தன்னைக் காத்தருள் புரியுமாறு நரகம் நாளொன்றுக்கு நூறு முறை இறைஞ்சுகின்றதென்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளனர்.
இறைவனுக்கும் அவன் அடியானுக்கும் இடையிலுள்ள இரகசியம்
“இக்லாஸ் என்பது எனக்கும், என் அடியானுக்கும் இடையிலுள்ள இரகசியம். இதில் வானவர்களுக்கும், ரசூல்மார்களுக்கும் இடமில்லை” என்று இறைவன் ஹதீது குத்ஸியில் கூறியிருப்பதிலிருந்து இதன் பெருமை நன்கு புலனாகும்.
இக்லாஸ் பற்றி ஸகீகுல் பல்கீ (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்ட பொழுது, “சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து பால் பிரிவதைப் போன்று செயல்களைக் குறைகளை விட்டும் பிரித்து ஒதுக்குவது தான் இக்லாஸ்” என்று அவர்கள் விளக்கம் பகர்ந்தார்கள்.
“எவர் நாற்பது நாட்கள் அல்லாஹ்வுக்காக இக்லாஸாக இருந்து அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருப்பாரோ அவரின் இதயத்தில் நின்றும் நாவில் நின்றும் ஞான ஊற்றை இறைவன் ஒலித்தோடச் செய்வான்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.