பிக்ஹு என்னும் இஸ்லாமிய அறநெறி
(இஸ்லாம் பற்றிய தொடர் - 15)
பிக்ஹு என்ற அரபிச் சொல்லிற்கு அறிந்து கொள்ளுதல் என்பது பொருளாகும். இஸ்லாம் மார்க்கத்தில் பிக்ஹு என்றால் அறநெறிகள், சட்டதிட்டங்கள் என்ற பொருளையும் குறிக்கும். ஒரு உண்மை முஸ்லிம் மார்க்க சட்ட திட்டங்களை, இஸ்லாமிய அறநெறிகளை பூரணமாக அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அவர் இஸ்லாத்தில் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செவ்வனே ஆற்ற முடியும். இதன் காரணமாகத்தான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள், “கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் இரு பாலருக்கும் கடமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
பிக்ஹின் மூலங்கள்
பாமர மக்கள் அவரவர்கள் நேரடியாக மார்க்கச் சட்டங்களைக் குர் ஆனிலிருந்தோ அல்லது ஹதீஸிலிருந்தோ பகுத்துணர முடியாது என்பதற்காகத் தான் ஸஹாபாக்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்களான இமாம்கள், 1) குர் ஆன், 2) ஹதீஸ், 3) இஜ்மாஉ (அறிஞர்களின் ஏகோபித்த முடிவு), 4) கியாஸ் (அனுமானம்) ஆகிய நான்கின் அடிப்படையில் சட்டங்களை வகுத்தனர். எனவே இவை நான்கும் பிக்ஹின் மூலங்களாகும்.
பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட வழிமுறைகள்
நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் மார்க்க சட்டதிட்டங்களை நபி(ஸல்) அவர்களிடமே நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அதற்குப் பின்னர் வாழ்ந்த மக்கள் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மூலமாக அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டனர். நாளடைவில் கருத்துக்களும், ஆதாரங்களும் மாறுபட்ட போது இமாம்களின் தீர்ப்புகளுக்கிடையில் வேறுபாடு உண்டானது.
அஹ்லுல் ஹதீஸ் என்று கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் திட்டங்களை கணித்தவர்களுக்கும், கியாஸ் என்ற அனுமான அடிப்படையில் - தங்களின் முயற்சியின் விளைவாக சட்டங்களைக் கணித்தவர்களுக்கும் சிறிது வேறுபாடுகள் காணப் பட்டாலும் அவைகள் செயல் முறைகளிலேயே காணப்படுகின்றன. ஆனால் கடமையான செயல்களில் பெரும்பாலும் மத்ஹபுகளுக் கிடையில் எவ்வித மாற்றங்களையும் காண முடியாது.
நான்கு மத்ஹபுகள்
மத்ஹபு என்ற அரபிச் சொல்லிற்கு “வழித்துறை” அல்லது “செயல்முறை” எனப் பொருள்படும். பெருமானாரின் வழிமுறைகள் சிற்சில சமயங்களில் சிறிது மாறுபட்டு இருக்கிறது. இவைகளை அலசி ஆராய்ந்த மார்க்கப் பெரியோர்கள் பெருமானாரின் வழி முறைகள் அனைத்தும் உலகில் உயிர்பிக்கப்பட வேண்டுமென்பதற்காக நான்கு செயல்முறைகளாகப் பிரித்திருக்கிறார்கள். இவைகள் நான்கும் உலக மக்களால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. அவைகள்,
ஆகிய நான்கு மத்ஹபுகள் ஆகும்.
உருவாகக் காரணம்
இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் இதயத்தில் அடிக்கடி எழும் சந்தேகம் ஒன்று உள்ளது. ஏன் இந்த மத்ஹபுகள்? ஏன் இந்தப் பிரிவினை? குர்ஆன், ஹதீஸ் இருக்க யார் இந்த இமாம்கள்? என்ற கேள்விகள் தொடுக்கப்படுகிறது. எனவே நான்கு மத்ஹபுகளும் உண்டான வரலாற்றையும் காரணங்களையும் மாணவர்கள் ஓரளவு அறிந்து கொண்டால் இந்த மனக்குழப்பம் தீரும்.
பெருமானார் மறைவுக்குப் பின் வெகு குறுகிய காலத்தில் இஸ்லாம் வெகு வேகமாக உலகில் பரவலாயிற்று. அந்நாடுகளில் ஏற்பட்ட பிரச்சனைகளைக் குர்ஆன், ஹதீஸ் இரண்டைக் கொண்டு தீர்க்க முடியாமல் மார்க்க அறிஞர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமில்லாத வகையில் பிரச்சனைகளைத் தீர்வு கண்டனர். இவ்வாறு தீர்ப்பளிப்பதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் மஆத் (ரழி) அவர்களுக்கு அனுமதியும் அளித்திருக்கிறார்கள். இவ்வகையான தீர்ப்பிற்கு “கியாஸ்” என்னும் அனுமானம் அல்லது முன் உதாரணம் எனப்பெயர். இத்துடன் “இஜ்மாஉ” என்னும் ஏகோபித்த அபிப்பிராயப் படியும் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
குர்ஆன், ஹதீஸ், கியாஸ், இஜ்மாஉ, இந்த நான்கின் அடிப்படையில் “பிக்ஹ்” என்ற இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அமைக்கப்பட்டன. சட்டச்சிக்கல் ஏற்படும் போது சுப்ரீம் கோர்ட்டிலுள்ள நீதிபதிகளில் மெஜாரிட்டி கூறுவதை தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு இஜ்மாஉ எனப்படும். கீழ்க்கோர்ட்டில் இது போன்ற பிரச்சனைக்கு இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை முன் உதாரணமாகக் கொண்டு மேல் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது இதற்கு “கியாஸ்” எனப்படும்.
தீர்ப்புகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி சட்டமாக்கியது
இன்னும் காலம் செல்லச் செல்ல இவ்விதம் முடிவு காணும் விஷயங்களில் இஸ்லாமிய உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களுக்கிடையில் கருத்து வேற்றுமைகள் உண்டாயின. எனவே குழப்பம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக அதுவரை அளிக்கப்பட்ட தீர்ப்புகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி சட்டமாக அமைப்பது மிகவும் அவசியமென உணரப்பட்டது. இப்பணியை முதன் முதலில் துவக்கி வைத்தவர் இமாமுல் அஃளம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்கள்.
ஏறக்குறைய அதே காலத்தில் இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்கள் மதீனமா நகரில் அதே விதமான பணியைச் செய்தார்கள். அன்னாருடைய தீர்ப்புகள் பெருமானாரின் ஹதீதுகளையே பெரும்பாலும் ஆதாரமாகக் கொண்டிருந்தன.
ஈராக் பகுதியில் கூபாவிலும், பக்தாதிலும் வாழ்ந்த அபூஹனிபா பாரசீக பரம்பரையில் பிறந்தவர். பாரசீகரின் ஆட்சியில் வெல்லப்பட்ட நாடான ஈராக்கில் புதுப்புது பிரச்சனைகள் தோன்றியதால் இமாம் அபூஹனீபாவின் தீர்ப்புகளில் கியாஸ் என்னும் அனுமானம் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
இமாம் மாலிக் அவர்களின் மாணவரான இமாம் ஷாபியீ பக்தாதிலும், பிறகு எகிப்திலும் தங்கள் பணியைச் செய்தார்கள். இமாம் அபூஹனீபா, மாலிக் ஆகிய இருவரின் தீர்ப்புகளுக்கு இடையிலுள்ள வேற்றுமைகளைச் சமாதானப் படுத்தும் முறையில் இமாம் ஷாஃபியீயின் தீர்ப்புகள் அமைந்தன.
இமாம் ஷாஃபியீயின் மாணவரான அஹ்மது இப்னு ஹன்பல் ஹதீஸை ஓர் எழுத்தும் பிசகாமல் பின்பற்ற வேண்டுமென்ற அடிப்படையில் தங்கள் தீர்ப்புகளை வழங்கினார்.
மக்கள் தங்களின் பகுதிக்கு பொருத்தமான மத்ஹபை பின்பற்றினர்
இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்பவர்கள் இந்த நான்கு மத்ஹபுகளில் தங்கள் பகுதியின் விசேஷத் தன்மைகளுக்குப் பொருத்தமான ஒரு மத்ஹபைப் பின்பற்ற ஆரம்பித்தனர். மத்ஹபு என்ற அரபுச் சொல்லிற்கு வழித்துறை எனப் பொதுவாகப் பொருள் சொல்லப்பட்டாலும் செயல்முறை என்பதே அதற்குச் சரியான பொருளாகும். ஹனபி, ஷாபி, மாலிகி, ஹன்பலி என்ற இந்த நான்கு மத்ஹபுகளுக்கிடையில் காணப்படும் வேற்றுமைகள் யாவும் சில சில்லறை விஷயங்களில் தான். அந்த வேற்றுமைகளுக்கும் அதைச் சார்ந்த இமாம்கள் ஆதாரங்கள் காட்டியிருக்கின்றனர்.
பெருமானாரின் வழிமுறைகள் அனைத்தும் உயிர்ப்பிக்க
சூழ்நிலைக்கேற்ப பெருமானாரின் வழிமுறைகள் சிற்சில சமயங்களில் சிறிது மாறுபட்டும் இருக்கின்றன. சான்றாக போரில் வெளிக் கிளம்பி தூரம் செல்வது பத்ரின் சுன்னத். குன்றின் சாரலில் தங்கி போரிடுவது உஹதின் சுன்னத். அகழ் வெட்டி ஊருக்குள் இருந்து போரிடுவது கந்தக் என்னும் அகழ்ப்போரின் சுன்னத். இப்படி அலசி ஆராய்ந்த மார்க்க அறிஞர்கள் பெருமானாரின் வழிமுறைகள் அனைத்தும் உலகில் உயிர்ப்பிக்கப்பட வேண்டுமென்ற நன் நோக்கில் நான்கு மத்ஹபுகளை உருவாக்கி இன்னும் வேற்றுமைகள் உருவாவதைத் தடுத்து நிறுத்தினார்கள். இவை நான்கும் உலக மக்களால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நான்கை மறுப்பதோ அல்லது புதிதாக ஒன்றை உருவாக்குவதோ சமுதாயத்தில் இன்னும் பிரிவை உண்டாக்கி குழப்பம் ஏற்படுத்தும். குழப்பம் விளைவித்தல் கொலையை விட கொடியது எனக் குர் ஆன் கூறுகிறது. எனவே ஒரு முஸ்லிம் ஏக காலத்தில் ஒரே மத்ஹபைப் பின்பற்ற வேண்டுமென்ற நிபந்தனையைத் தவிர்த்து ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக் கொள்வதில் தடையில்லை நான்கு மத்ஹபுகளும் நபி வழி தான் என்பதைப் புரிய வேண்டும்.
மத்ஹபுகளைப் பின்பற்றும் நாடுகளும், மக்களின் எண்ணிக்கையும்
ஹனபி
மக்கள் எண்ணிக்கை 34 கோடி
வாழும் நாடுகள் : துருக்கி, பாக்கிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஜோர்டான், இந்தோனேஷியா, சைனா, ரஷ்யா
ஷாபி
மக்கள் எண்ணிக்கை 10 கோடி
வாழும் நாடுகள் : மொராக்கோ, அல்ஜீரியா, துனீசியா, சூடான், குவைத், பஹ்ரைன், இந்தியா, இலங்கை
மாலிகீ
மக்கள் எண்ணிக்கை சுமார் 5 கோடி
வாழும் நாடுகள் : பாலஸ்தீன், லெபனான், எகிப்து, ஈராக், சவூதி அரேபியா, எமன், இந்தோனேஷியா
ஹன்பலீ
மக்கள் எண்ணிக்கை சுமார் 50 லட்சம்
வாழும் நாடுகள் : சவூதி அரேபியா, லெபனான், சிரியா
நான்கு இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு
1. இமாம் அபூஹனீபா
பெயர் : நுஃமான் இப்னு தாபித்
பிறப்பிடம் : பாரசீகம்
வாழ்ந்த காலம் : ஹிஜ்ரீ 80 - 150
2. இமாம் ஷாஃபியீ
பெயர் : முஹம்மது இப்னு இதிரீஸ் அஷ்ஷாஃபி
பிறப்பிடம் : சிரியா
வாழ்ந்த காலம் : ஹிஜ்ரீ 150 - 204
3. இமாம் மாலிக்
பெயர் : மாலிக் இப்னு முஹம்மது அனஸ்
பிறப்பிடம் : மதீனா
வாழ்ந்த காலம் : ஹிஜ்ரீ 93 -179
4. இமாம் ஹன்பல்
பெயர் : அஹ்மது இப்னு ஹன்பல்
பிறப்பிடம் : சவூதி அரேபியா
வாழ்ந்த காலம் : ஹிஜ்ரீ 164 -241
மத்ஹபு பிரச்சினைக்குத் தீர்வு
நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் வாழ்ந்த காலம் ஹிஜ்ரீ 100 முதல் 200 வரையாகும். “சிஹாஹ் சித்தா” என்னும் ஆறு ஹதீஸ் நூல்களின் திரட்டுநர்கள் வாழ்ந்த காலம் ஹிஜ்ரீ 200 முதல் 300 வரையாகும். எனவே மத்ஹபுகளின் நபி வழி முறைகள் பெருமானார் வாழ்ந்த காலத்திற்கு மிகவும் நெருக்கமானது என்பது தெளிவாகிறது. ஹதீஸ் நூல்களில் ஓரே விஷயம் பல மாதிரி பலரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பெருமானார் தங்களின் வாயால் மொழிந்த ‘கெளலி’ என்ற ஹதீஸ்களில் கருத்து வேற்றுமைகளுக்கு இடமில்லை. உதாரணமாக “தாடி வையுங்கள், மீசையை கத்தரியுங்கள்” என்ற பெருமானாரின் வாய்மொழி ஹதீஸ். இதில் கருத்து வேற்றுமை நான்கு மத்ஹபுகளிலும் இல்லை. பெருமானார் செய்வதைப் பார்த்து அறிவித்த ‘ஃபிஃலீ’ என்ற ஹதீஸ்களிலும் பெருமானார் முன்பு செய்து அவர்கள் அங்கீகரித்த ‘தக்ரீரி’ என்ற ஹதீஸ்களிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் நிழல் ஒரு மடங்கு வந்தவுடன் அஸர் தொழுததாக ஒரு ஹதீஸிலும், இரண்டு மடங்கு நிழல் வந்தவுடன் அஸர் தொழுததாக மற்றொரு ஹதீஸிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஹதீஸை மொழிந்த ராவிகளின் சொற்களிலேயே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. சிறுநீர் உட்கார்ந்து கழிப்பது நபி வழி. ஒரு சமயம் பெருமானார் மழை பெய்து நீர் தேங்கி நின்ற போது மேட்டின் மீது நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக ஹதீஸ் அறிவிக்கிறது.
சமயோசித புத்தியுடன் செயல் படுவது நபி வழி
தண்ணீர் உட்கார்ந்து குடிப்பது நபி வழி. ஜன நெருக்கடி இருப்பதால் மக்காவில் ஜம்ஜம் நீர் நின்று குடிப்பது நபி வழி.
ஸலாம் சொல்லுவது நபி வழி. ஆனால் வாகனத்தில் செல்லுபவருக்கு ஸலாம் சொல்லுவது நபி வழி அல்ல. காரணம் வாகன ஓட்டியின் கவனம் சிதறி விபத்து நேரலாம்.
எனவே சமயோசித புத்தியுடன் செயல் படுவது நபி வழி என அறிகிறோம். எனவே பெருமானாரின் ஹதீஸ்களில் அபிப்பிராய பேதங்கள் உண்டாக காரணமிருக்கிறது என அறிகிறோம்.
தொழுகையில் நெஞ்சில் கைகட்டுவதும் நபி வழி. தொப்புளுக்குக் கீழ் கட்டுவதும் நபி வழி.
பஜ்ரு தொழுகையில் குனூத் ஓதுவதும் நபி வழி. இரவு வித்ரு தொழுகையில் ஓதுவதும் நபி வழி.
அல்ஹம்து சூரா ஓதியவுடன் ஆமீன் சப்தமாக ஓதுவதும் நபி வழி மெளனமாக ஓதுவதும் நபி வழி.
இமாமுடன் தொழும் போது சூரத்துல் ஃபாத்திஹா முக்ததி ஓதுவதும் நபி வழி. ஓதாமல் மெளனமாக இருப்பதும் நபி வழி.
ருகூவிலிருந்து நிலைக்கு வரும் போது (ரஃப்உல் யதைன்) கைகளை தூக்குவதும் நபி வழி. தூக்காமலிருப்பதும் நபி வழி. இருப்பில் விரலை தூக்குவதும் நபி வழி. ஆட்டுவதும் நபி வழி.
பர்லு தொழுகைக்குப் பின் கூட்டுத் துஆ ஓதுவதும் நபி வழி. தனியாக ஓதிக்கொள்வதும் நபி வழி. ஒரு கையால் முஸாபஹா செய்வதும் நபி வழி. இரண்டு கைகளால் செய்வதும் நபி வழி. தராவீஹ் 8 ரக் அத்துகள் தொழுவதும் நபி வழி. 20 ரக் அத்துகள் தொழுவதும் நபி வழி.
தலையாய சுன்னத் (நபி வழி)
இவைகளுக்கெல்லாம் தலையாய சுன்னத் ஒற்றுமை. இது சுன்னத் மட்டுமல்ல : குர் ஆன் வலியுறுத்தும் கட்டாயக் கடமையாகும். கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி நான்கு மத்ஹபுகள் ஆகும். எனவே எந்த ஊருக்குச் செல்லுகிறோமோ, எந்த நாட்டிற்குச் செல்லுகிறோமோ, அங்கே மக்கள் பள்ளிவாசலில் பெரும் எண்ணிக்கையில் எந்த மத்ஹபை (வழி முறை) பின்பற்றுகிறார்களோ அதையே நாமும் பின் பற்றி ஒழுகுவது தான் இன்றைய பிரச்சனைக்குத் தீர்வாகும். நான்கு வழி முறைகளும் நபி வழியில் அமைந்தது தான் என்பதைப் புரிந்து செயல்படுவது தான் விவேகமான செயலாகும். இச் சிறு விஷயங்களில் பிடிவாதம் பிடித்து சண்டை இடுவது, பிரிந்து செல்வது சமுதாயத்தின் கண்ணியத்தை சீர் குழைத்து, வலு இழக்கச் செய்யும் பேரபாயம் உண்டாகும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.