மஹ்ஷர்
மஹ்ஷர் என்பதன் பொருள் கூட்டம் என்பதாகும். அரபியில் அஷ்ருன் என்பதும் மஹ்ஷர் என்பதும் ஒரே பொருள் கொண்ட சொற்களாகும். அஷ்ருன் என்றால் பத்து என்பது பொருள். பத்து என்ற எண்ணிக்கையே எண்ணிக்கையில் இறுதி எண்ணிக்கை ஆகும். அதிலிருந்தே எண்ணிக்கைகள் விரிந்து கொண்டு செல்கின்றன. எனவே, பெரும் கூட்டத்தைக் குறிக்க இச் சொல் பயன்படுத்தப் படுகிறது.
மறுமை வாழ்க்கை
ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மண்ணறை வாழ்க்கை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் எழுப்பப்படுதல், விசாரிக்கப்படுதல், கூலி வழங்கப்படுதல் என்று பல படித்தரங்கள் மறுமைக்கு இருக்கின்றன. ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்பட்டு மஹ்ஷர் எனும் வெட்டவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில், மனிதர்கள் பல நிலைகளில் இருப்பார்கள். அப்போது அனைவருக்கும் பொதுவான நிலைகளும் இருக்கின்றன.
மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிகவும் சமீபமாக இருக்கும். சூரியனுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு மைல் தூரம் தான் இடைவெளி இருக்கும். (அதன் வெப்பத்தால்) மக்கள் தங்களுடைய செயல்களுக்குத் தக்கவாறு வியர்வையில் மூழ்கி இருப்பார்கள். ஒருவரின் செயல் எந்தளவு தீயதாக இருக்குமோ, அந்தளவுக்கு வியர்வை அதிகமாக இருக்கும். சிலரின் வியர்வை கரண்டைக்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை முழங்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை இடுப்பு வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை வாய் வரை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் தமது வாயின் பக்கம் கையால் சமிக்கை செய்து காட்டி கூறுவார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாத் (ரழி), நூல் : முஸ்லிம்)
மேடு பள்ளமில்லாத, யாதொரு மறைப்புமில்லாத வெட்ட வெளி
உலக முடிவு நாளில் படைப்பினங்கள் அனைத்தும் அழிந்த பின் மனிதர்கள் மேடு பள்ளமில்லாத, யாதொரு மறைப்புமில்லாத வெண்மையான வெட்ட வெளியில் எழுப்பப் படுவார்கள். இவ்வெளிக்கே ‘மஹ்ஷர்’ என்று பெயர். இவ்வெளி இப்பொழுது பைத்துல் முகத்தஸ் இருக்கும் இடத்தில் இருக்கும் என்றும், சிரியா இருக்கும் இடத்தில் இருக்கும் என்றும் இரு வேறு விதமாகக் கூறப்படுகிறது.
இவ்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்ல இறைவன் புகையில்லாத நெருப்பை அனுப்புவான். மக்கள் நிர்வாணத்தோடும், காலணியின்றியும் வருவார்கள். எனினும், ஒருவர் மற்றவரின் இன உறுப்பைப் பார்க்க மாட்டார்கள். அப்பொழுது வானம் வெடித்து எண்ணெய் போல் உருகி வடியும், மலைகள் சுக்கு நூறாகிவிடும். சூரியன் மனிதர்களின் தலையின் அண்மையில் கொண்டு வரப்படும். அதன் காரணமாக, மனிதர்களின் உடல்களிலிருந்து வியர்வை கொப்புளித்து அவர்கள் முகம் கவிழும் வரை உயர்ந்துவிடும். அக்காலை அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறொரு நிழழும் இருக்காது. அதனைத் தான் விரும்பியவர்களுக்கு அவன் நல்குவான்.
அல்லாஹ் விரும்பியபடி அர்ஷின் நிழலை பெறும் அந்த ஏழு நபர்கள்
‘ஓர் அடியானுக்கு குடிமக்களின் பொறுப்பை இறைவன் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர் : மஅகில் (ரழி), நூல்: புகாரி)
‘மறுமை நாளில் நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை எந்த ஒரு அடியானின் இரண்டு கால்களும் அந்த இடத்தைவிட்டு நகராது. அவை: அவன் தமது ஆயுளை எவ்வாறு கழித்தான், அவன் தமது வாலிபத்தை எவ்வாறு செலவழித்தான், அவன் பொருளை எவ்வாறு சம்பாதித்து, எவ்வாறு செலவு செய்தான், அவன் கற்றபடி எவ்வாறு அமல் செய்தான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : முஆத்பின் ஜபல் (ரழி) நூல் : பைஹகீ)
‘ஊர்களில் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானது, அதில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்களாகும். ஊர்களில் இறைவனுக்கு மிகவும் வெறுப்பு தரக்கூடியது அங்கு அமைந்திருக்கும் கடைவீதிகளாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழி)
அல்லாஹ்விற்காக மட்டும் பிறருக்கு கொடுக்கிறாரோ, மேலும், அல்லாஹ்விற்காக மட்டும் கொடுப்பதை நிறுத்துகிறாரோ, மேலும் அவரை அல்லாஹ்விற்காக மட்டும் நேசிக்கிறாரோ, மேலும் அவர் அவரை அல்லாஹ்விற்காக மட்டும் வெறுக்கிறாரோ, அத்தகைய மனிதரின் இறை நம்பிக்கை பரிபூரணம் அடைந்து விட்டது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதி)
‘எவர் தமது இரு தொடைகளுக்கு மத்தியிலுள்ள மறைவிடத்தையும், தமது இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ள நாவையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாரோ, அவருக்கு சொர்க்கம் உண்டு என்பதை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி), நூல்: புகாரி)
‘தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ (திருக்குர்ஆன் 2:274).
‘இரண்டு கண்களை நரகம் தீண்டாது, 1) இறையச்சத்தால் அழுத கண், 2) இறைவழியில் விழித்திருந்து பாதுகாத்த கண்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : திர்மிதி)
மஹ்ஷரில் மக்களின் நிலை
அப்பொழுது மஹ்ஷரில் மக்கள் வானத்தைப் பார்த்த வண்ணம் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப 40, 70, 300, 50000 ஆண்டுகள் இவ்வெளியில் நின்று கொண்டிருப்பார்கள். இங்கு மக்கள் தாங்கள் செய்த குற்றத்தைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள். எனினும், அவர்கள் செய்த குற்றங்கள் அவர்களுக்கு நன்கு தெரியவரும். எனவே, அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, “ஏன் இதனைச் செய்தீர்? ஏன் இதனைச் செய்தீர்?” என்று வினவிக் கொள்வார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.