Home


ஈஸா (அலைஹிஸ்ஸலாம்)

ஈஸா (அலை) இது சிரிய மொழிச் சொல்லென்று ஜெளஹரி கூறுகின்றார். யஹோஷுவா என்பதே ஈஸா என்பதன் மூலம் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் யஹோவா (கடவுள்) காப்பாற்றுகிறார் என்பதாகும் என்றும் சொல்லப்படுகிறது. பைளாவியோ இது ஹீப்ரு மொழிச் சொல் என்று கருதுகின்றார். ஆனால் ஏனையோர் இது வெள்ளை என்று பொருள் படும் ஈஸ் என்னும் அரபிச் சொல்லிலிருந்து தோன்றியது என்றும் சொல்கின்றனர்.

முற்காலத்தில் ஈஸா என்னும் சொல் சிலருடைய பெயராக இருந்திருக்கிறது. சிராச் மகன் ஈஸா, பண்டிரா மகன் ஈஸா ஆகியோர் ஈஸா (அலை) அவர்கள் பிறப்பதற்கு முன் இவ்வுலகில் வாழ்ந்துள்ளனர். அவர்களில் சிராச் மகன் ஈஸா யூதர்களிடையே அறிவுரை வழங்கி வந்தார் என்று 15ஆவது நூற்றாண்டு பைபிளில் கூறப்பட்டுள்ளதாக “என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா”வில் பாகம் 7, பக்கம் 890 இல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜீஸஸ் கிறைஸ்ட்

ஆனால் ஈஸா மஸீஹ் என்னும் பெயர் ஈஸா (அலை) அவர்களுக்கு மட்டுமே கூறப்படுகிறது. இதுவே கிரேக்க மொழியில் ‘ஜீஸஸ் கிறைஸ்ட்’ என்று ஆகி தமிழில் ஏசு கிறிஸ்து என்று மருவியுள்ளது. மஸஹ் என்றால் ’தடவுதல்’ என்று பொருள் படும். இவர்கள் நோயாளிகளைத் தம் கைகளால் தடவி அவர்களின் நோயை நீக்கியதன் காரணமாக இவர்களுக்குத் ‘தடவுபவர்’ என்று பொருள் படும் மஸீஹ் என்னும் பட்டம் ஏற்பட்டதென்று கூறுவர். அதுவே கிரேக்க மொழியில் ’கிறைஸ்ட்’ என்று ஆகியிருக்கிறது.

‘ரூஹுல்லாஹ்’

இறைவன் இவர்களைத் தன் திருமறையில் ஈஸா இப்னு மர்யம் (மர்யமுடைய மகன் ஈஸா) என்று கூறுகின்றான். இவர்களின் அன்னை மர்யம் ஒரு நாள் தனித்திருக்கும் போது ஜிப்ரில் (அலை) அவர்கள் அவர் முன் தோன்றி அல்லாஹ் தன்னுடைய ஆகுக என்னும் சொல்லைக் கொண்டு ஒரு நன்மகவை அவருக்கு அளிக்க இருப்பதாக நன் மாராயம் கூறி அவருடைய உடலில் ஊதினார். இவ்வாறு அவர் இறைவனுடைய ஆவியை ஊதி, இவர்கள் பிறந்ததன் காரணமாக இவர்கள் ‘ரூஹுல்லாஹ்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டனர்.

இறைவனின் தூதுவர் ஈஸா மஸீஹ்

இதன் பின் கருவுற்ற மர்யம் அவர்கள் இறை ஆணைப்படி பைத்துல் முகத்தஸைவிட்டு  நீங்கினார். பைத்துல் லஹ்ம் (பெத்லகேம்) என்னும் இடத்தை அடைந்ததும் பிரசவ வேதனை மீக்குற்று ஈஸா (அலை) அவர்களை ஈன்றெடுத்தனர். இப்பொழுது கவலை மிகுதியால் மர்யம் அவர்கள் அழ, இறைவன் அசரீரி மூலமாக ஆறுதல் கூறி ஆங்கு நின்று கொண்டிருந்த ஒரு பட்டுப் போன பேரீச்சம் பழ மரத்தின் கிளைகளைப் பிடித்து உலுக்குமாறு கூற, அவர்களும் அவ்விதமே செய்ய, கனிகள் உதிர்ந்தன. அவற்றை உண்டு அங்கிருந்த ஊற்றிலிருந்து நீரெடுத்து அருந்தினர் மர்யம் அவர்கள். அப்பொழுது சின்னஞ் சிறு குழந்தையான ஈஸா (அலை) அவர்கள் வாய் திறந்து “உமக்கு நன்மாராயம் உண்டாவதாக! நான் இறைவனின் தூதுவர் ஈஸா மஸீஹாவேன்” என்று கூறினார். இப்பயணத்தின் போது மர்யம் அவர்களுடன் இருந்தவர் அவர்களின் உறவினர் யூசுஃபுல் புகாரியாவார்.

பைத்துல் முகத்தஸ் திரும்பிய மர்யம் (அலை)

இதன் பின் குழந்தையுடன் மர்யம் அவர்கள் பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்) நகர் வந்த பொழுது வீண் அபவாதம் ஏற்பட்டது. மர்யம் அவர்களை கொன்றுவிடச் சிலர் சதி சூழ்ந்தனர். அப்பொழுது ஈஸா (அலை) அவர்கள் வாய் திறந்து தம் அன்னையின் தூய்மையை எடுத்துரைத்து தாம் இறைதூதராகிய ஈஸா மஸீஹ் என்று தெரிவித்தார். அது கேட்டு அவர்கள் வியப்பெய்தி, தம் தீய எண்ணத்தை விட்டொழித்தனர்.

எகிப்தில் சில காலம்

ஆனால் ஐரதூஸ் அரசன் மர்யம் அவர்களைக் கொன்று விட எண்ணிய பொழுது மர்யம் அவர்கள் தம் குழந்தையுடன் யூசுபுல் புகாரியுடனும் எகிப்து சென்று அங்கு நூல் நூற்றுத் தம் காலத்தைக் கழித்து வந்தனர்.

இதன் பின் ஐரதூஸ் அரசன் இறக்கவே இவர்கள் பைத்துல் முகத்தஸ் மீளும் வழியில் நாஸரத் என்ற இடத்தில் சில காலம் தங்கியிருந்தனர்.

ஒரிறை கொள்கை பற்றி போதனை

இஞ்சீல் வேதம் அருளப்பெற்ற இறைதூதராக பைத்துல் முகத்தஸ் நகரத்திற்குள் நுழைந்த ஈஸா (அலை) அவர்கள் உருவமற்ற ஒரே இறை வணக்கத்தை மக்களிடம் போதித்தனர். களி மண்ணால் வெளவால் போன்று செய்து அதனை உயிர் பெற்று விண்ணிலே பறந்து செல்லுமாறு செய்தனர். பிறவிக் குருடரையும் வெண்குஷ்ட நோயாளியையும் தம் கைகளால் தடவி நலம் பெறச் செய்தனர். இவ்விதமான அற்புதங்கள் புரிந்தும் பனீ இஸ்ராயீல்(யூதர்)கள் இவர்களின் அறபோதம் கேட்கவோ இவர்களை இறைதூதர் என்று ஏற்றுக் கொள்ளவோ செய்யவில்லை. அதற்கு மாறாக சூனியக்காரர் என்று இவர்களை ஏசினர்.

அற்புதங்களை நிகழ்த்தியும் மாற்றம் இல்லை

இதன் பின் இவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்துக் காட்டினர். பனீ இஸ்ராயீல்களின் வேண்டுகோள் மீது இவர்கள் தமக்கு  நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த நூஹ் ( அலை) அவர்களின் மகன் ஸாம் என்பவரையும் அவருடைய புதை குழியிலிருந்து உயிர் பெற்றெழுமாறு செய்தனர். எனினும் அவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைதூதர் என ஏற்றுக்கொள்ள வில்லை. இன்னும் ஈஸா (அலை) அவர்கள் எத்தனை எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய போதிலும் இந்நிலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

ஹவாரிய்யீன்கள்

எனினும் பனிரெண்டு பேர் இவர்களை இறைதூதுவரென ஏற்றுக்கொண்டு இவர்கள் கூறிய அறவுரையின் படி செயலாற்றினர். அவர்கள் தாம் வரலாற்றில் ‘ஹவாரிய்யீன்’ என்று அழைக்க பெறுகின்றனர்.

தம் சீடர்களான ஹவாரிய்யீன் களுடன் காடு, மேடு, மலைகளில் இவர்கள் சுற்றித்திருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளின் மீது இவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு விண்ணகத்திலிருந்து நாற்பது நாட்கள் வரை உணவுத்தட்டு வந்து கொண்டிருந்தது. அதிலுள்ளவற்றை எடுத்து ஆயிரத்து முந்நூறு பேர்கள் வரை உண்டனர். அதன் காரணமாக அவர்கள் தாங்களின் நோய் நீங்கப் பெற்று நலன் பெற்றனர். இந்த அற்புதத்தைக் கண்ட பின்னரும் அவர்கள் இறை நம்பிக்கை கொள்ளவில்லை. அதனை வயிரார உண்ணுமாறும் அடுத்த நாளுக்கென எடுத்து அதனைப் பத்திரப் படுத்தி வைக்க வேண்டாமென்று இறைஆணை வர அதற்கு மாறாக நடந்து கொண்ட நானூறு பேர்கள் பன்றிகளாக உருமாற்றப் பெற்று மூன்று நாட்களுக்குள் செத்து மடிந்தனர். எனினும் ஏனையோர் அறிவு பெற்றார்களில்லை.

பனீ இஸ்ராயில்களின் எதிர்ப்பு தீவிரம்

நாளுக்கு நாள் ஈஸா (அலை) அவர்களின் ஒரே இறைவணக்கப் பிரச்சாரம் தீவிரமாகிக் கொண்டு வந்தது. அதே போன்று பனீ இஸ்ராயீல்களின் எதிர்ப்பும் தீவிரமாக்கிக் கொண்டு சென்றது. இப்பொழுது ஈஸா (அலை) அவர்கள் பனீ இஸ்ராயில்களை நோக்கி, “மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதனாவேன். நான் எனக்கு முன்னுள்ள தெளராத்தையும் உண்மைப்படுத்துகின்றேன். எனக்குப் பின்னர் அஹ்மது என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப்பற்றியும் நான் உங்களுக்கு நன்மாராயம் கூறுகின்றேன்” (61:6) என்று எடுத்துரைத்தனர். பனீ இஸ்ராயீல்களோ இவர்கள் கூறுவதற்குச் சிறிதேனும் செவிசாய்க்க வில்லை. அதற்கு மாறாக இவர்களைக் கொன்றொழிக்க அவர்கள் சதி செய்தனர்.

இறைசெய்தி வந்தது

இப்பொழுது இறைவனிடமிருந்து, “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்முடைய ஆயுளை நிறைவு செய்வேன். உம்மை என்னளவில் உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்போரின் அவதூற்றிலிருந்து நான் உம்மைத் தூய்மைப் படுத்தி வைப்பேன் உம்மைப் பின்பற்றுவோரை உலக முடிவு நாள் வரை நிராகரிப்போர் மீது மேலாக்கியும் வைப்பேன்” என்னும் செய்தி வந்தது.

இதன் பின் வந்த இறை ஆணைப்படி இவர்கள் தம் சீடர்களைப் பல ஊர்களுக்கும் ஒரே இறைவணக்கப் பிரச்சாரம் செய்து வர அனுப்பி வைத்தனர்.

ஈஸா (அலை) அவர்களை வானிற்கு உயர்த்தியது

இப்பொழுது பனீ இஸ்ராயீல்(யூதர்)கள் இவர்களைப் பிடித்து ஒரு வீட்டில் சிறை வைத்து இவர்களின் தலை மீது முட்கிரீடத்தைச் சூட்டி இவர்களைத் துன்புறுத்தினர். அடுத்த நாள் இவர்களை அழைத்து வருமாறு யூதாஸை அனுப்பி வைக்க எண்ணினர். அவனும் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக ஈஸா(அலை) அவர்களைக் காட்டிக் கொடுக்க முன் வந்தான். ஆனால் சூழ்ச்சிக்காரர்களிலெல்லாம் பெரிய சூழ்ச்சி காரனாகிய இறைவன் இவர்களை வானிற்கு உயர்த்தி யூதாஸை இவர்களின் உருவிலாக்கி விட்டான். எனவே பனீ இஸ்ராயீல்கள் யூதாஸை ஈஸா (அலை) என எண்ணி யூதாஸ் தாம் ஈஸா அல்லவென்று எவ்வளவோ மறுத்துரைத்தும் கேளாது அவனைச் சிலுவையில் அறைந்து கொன்றனர்.

கொல்லப்பட்டவர் ஈஸா என்றால் யூதாஸ் எங்கே?

இதன் பின் தான் பனீ இஸ்ராயீல்களுக்குச் சிறிது ஐயம் ஏற்பட்டது. ”கொல்லப்பட்டவன் யூதாஸ் என்றால் ஈஸா எங்கே? கொல்லப்பட்டவர் ஈஸா என்றால் யூதாஸ் எங்கே? என்று அவர்கள் ஒருவர் மற்றவரைக் கேட்டுக் கொண்டனர். அதன் பின் அவர்கள் சிலுவையில் அறையப் பெற்ற யூதாஸின் உடலை உற்று நோக்கினர். “முகம் என்னவோ ஈஸாவின் முகம் போன்றுதான் இருக்கிறது. ஆனால் உடலைப் பார்த்தாலோ யூதாஸின் உடல் போன்றுள்ளதே” என்று அவர்கள் கூறிக்கொண்டார்கள்.

ஈஸா (அலை) பற்றி திருமறை குர் ஆனின் கூற்று

இறைவன் தன் திருமறை குர் ஆனில், “ அவரை அவர்கள் வெட்டவுமில்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை” என்று சொல்கின்றான். (4:157) மேலும் அதற்கு அடுத்த திருவசனத்தில் “அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான்” என்று கூறுகின்றான். அப்பொழுது ஈஸா (அலை) அவர்களுக்கு வயது முப்பத்து மூன்று. இது ரமலான் இரவொன்றில் நடந்தது.

புதிய வெளியீடுகள்

Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Khan

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.