Home


இஸ்லாத்தின் கடமைகள்

(இஸ்லாம் பற்றிய தொடர் - 3)

இஸ்லாமிய மார்க்கம் கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் என்ற ஐம்பெரும் கடமைகளைக் கொண்டுள்ளது. இதைத் தான் நபி (ஸல்) அவர்கள், “இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள்.

கலிமா (உறுதிமொழி)

        இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் முதலாவதாகவும், முக்கியமானதாகவும் கலிமா இருக்கிறது. ஏனெனில் கலிமா சொல்லாதவன், கலிமாவை ஏற்றுக் கொள்ளாதவன் அடுத்த நான்கு கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாது.லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்பதே அக்கலிமாவாகும். இது இஸ்லாத்தின் மூல மந்திரமாகும்.

        “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்” என்பதே இதன் பொருள். இக்கலிமாவை நாவால் உச்சரித்து மனதால் உறுதி கொள்ள வேண்டும்.

கலிமா பற்றிய குர்ஆனின் வசனங்கள்

நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே. (37:4.)

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.(112:1)

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.(6:153.)

எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.(2:82. )

தொழுகை (இறை வணக்கம்)

        இஸ்லாத்தின் ஈடு இணையற்ற இரண்டாவது கடமை தொழுகையாகும். முஸ்லிம் ஆண், பெண் அனைவருக்கும் வயது வந்தது முதல் இறுதி மூச்சு வரை தொழுகை முக்கியக் கடமையாகும். பெண்களுக்கு மட்டும் மாதவிடாய் மற்றும் பிரசவ தீட்டு ஆகிய காலங்களில் தொழ வேண்டியதில்லை. மற்றபடி அவர்களுக்கு அது நீங்காத கடமையாகும். மேலும் தொழுகை மார்க்கத்தின் தூணாகும். எவர் தொழுகையை நிலை நாட்டினாரோ அவர் மார்க்கத்தை நிலை நாட்டினவராவார். எவர் தொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் மார்க்கத்தை இழந்தவராவார் என்பது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுதவாக்காகும். ஐவேளை தொழுகைகள் ஒவ்வொன்றிற்கும் தனிச் சிறப்புகளும் காரணங்களும் இருக்கின்றன.

        மேலும் தொழுகை என்பது மார்க்கத்தில் எந்த அளவு அந்தஸ்து வகிக்கிறது என்றால் நம் உடலில் தலை எவ்வளவு பிரதானமானதாக உள்ளதோ அதைப் போன்றதாகும். தலை இல்லையானால் அவனை மனிதன் என்று சொல்லுவதில்லை. முண்டம் என்று தான் சொல்லுகிறோம். தொழுகையை விட்டவனின் இஸ்லாமும் அதைப் போன்றதாகும்.

தொழுகை பற்றி அல்குர்ஆன்

        பகலின் இரு ஓரங்களிலும், இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நல்லவை தீயவற்றைப் போக்கிவிடும். இது (அல்லாஹ்வை) நினைவு கூர்வோருக்கு நல்லுபதேசமாகும் (அல்குர்ஆன் 11:114).

(நபியே!) அவர்கள் கூறுபவை குறித்து நீர் பொறுமையாக இருப்பீராக! சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உமது இறைவனின் புகழைக் கொண்டு துதிப்பீராக. மேலும், இரவு வேளைகளிலும், பகலின் ஓரங்களிலும் (அவனைத்) துதிப்பீராக! (இதன் நன்மைகளால்) நீர் திருப்தி அடைவீர் (அல்குர்ஆன் 20:130).

சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை தொழுகையையும், இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலைநாட்டுவீராக! நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை சாட்சிக் கூறத்தக்கதாக இருக்கின்றது (அல்குர்ஆன் 17:78).

நீங்கள் மாலைப்பொழுதை அடையும் போதும், காலைப்பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்யுங்கள். வானங்கள் மற்றும் பூமியில் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. முன்னிரவிலும் நண்பகலிலும் இருக்கும் போதும் (துதி செய்யுங்கள்) (அல்குர்ஆன் 30:17, 18).

நோன்பு

        இஸ்லாத்தின் மூன்றாவது கடமையாகத் திகழ்வது நோன்பாகும். அதாவது ரமலான் மாதம் முழுவதும் இறை கட்டளைக்கு இணங்கி பகற்காலங்களில் உண்பது, பருகுவது, தாம்பத்திய உறவு கொள்வது போன்ற ஆகுமான செயல்களை விட்டும் தடுத்து இருப்பதாகும். இஸ்லாத்தில் மனிதனின் பண்பு, ஒழுக்கம் சிறக்கவும், அவனின் ஆன்மிக உணர்வு வளர்ந்து அவன் சுயகட்டுப்பாட்டோடு அறவாழ்வு வாழவும், நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. மேலும் நோன்பு நோற்பதினால் ஆன்மீக பலமும், உடல் பலமும் இன்னும் அநேக பயன்களும் உண்டாகின்றன.

நோன்பு பற்றிய திருமறை வசனங்கள்

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)

ஜகாத் (கட்டாய பொருள் தானம்)

        ஜகாத் என்றால் சுத்தப்படுத்துதல் என்பது பொருளாகும். தொழுகைக்குப் பிறகு முன்னணியாக நிற்பது ஜகாத் என்ற கடமையாகும். ஜகாத் மனிதனிடம் உள்ள உலோபித்தனம், கஞ்சத்தனம் இவைகளை அகற்றி அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருகிறது. எவரிடம் தனது தேவைகள் போக அதிகமாக 90 கிராம் (11 பவுன் 2கிராம்) தங்கம் அல்லது 630 கிராம் வெள்ளி அல்லது அதன் கிரையத்திற்குரிய பணம் இருந்து ஒரு ஆண்டு முடிவுற்றால் அதற்கு இரண்டரை (2 ½) சதவீதம் ஜகாத் எனும் கட்டாய தர்மத்தை ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்து விட்டால் மீதியிருக்கும் பணம் சுத்தமானதாகி விடுகிறது. அந்த செல்வத்தில் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் திட்டத்தில் ஜகாத் முதலிடம் வகிக்கிறது.

ஜகாத் பற்றி அல்குர்ஆன்

நாம் சம்பாதிக்கும் செல்வம் என்பது முழுவதுமே நமக்குரியதில்லை. நம்முடைய தேவைக்கும் அதிகமாகத் தான் இறைவன் செல்வத்தைத் தருகிறான். எனவே இறைவன் நமக்குத் தரும் செல்வத்தில் ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உரிமை உள்ளது. அவர்களுக்குரிய உரிமைகளை நாம் முறையாக வழங்கி விட வேண்டும். அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும். (அல்குர்ஆன் 70:24, 25)

தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிறவர்களே இறை நம்பிக்கை கொண்டவர்கள். (அல்குர்ஆன் 5:56)

இது குர்ஆனின் - தெளிவான வேதத்தின் - வசனங்கள். இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், நற்செய்தியுமாகும். அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தை வழங்குவார்கள். மறுமையை அவர்களே உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் 27:1-3)

வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 24:37)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:56)

ஹஜ் (புனித பயணம்)

        இஸ்லாத்தில் மனிதனை புனிதனாக்கும் இறுதிக் கடமை ஹஜ்ஜாகும். ஹஜ் செய்வது வசதி மற்றும் உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் மீது கடமையாகும். ஹஜ்ஜின் ஒவ்வொரு கிரியைகளிலும் அநேக தத்துவங்களும், பிரயோஜனங்களும் பொதிந்துள்ளன. ஹஜ்ஜைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஹஜ்ஜு முடித்து வருபவர்கள் அன்று பிறந்த பாலகனைப் போன்று அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு பரிசுத்தமானவர்களாகத் திரும்பி வருகிறார்கள்”. துல்ஹஜ்ஜு மாதம் குறிப்பிட்ட நாட்களில் மக்காவிலுள்ள கஃபத்துல்லா, மினா, அரபாத், முஸ்தலிபா போன்ற இடங்களில் செய்யப்படும் கிரியைகளுக்கு ஹஜ் எனப்படும். உலக ஒருமைப்பாட்டுக்கு ஹஜ் ஒரு முக்கியமான கடமையாகத் திகழ்கிறது.

        இஹ்ராம் என்னும் வெள்ளுடை அணிந்து அரசனும், ஆண்டியும், உள்ளவரும், இல்லாதவரும் ஒரே நோக்கத்தோடு ஒரே முழக்கத்தோடு ஏக இறைவனுக்கு அடிபணியும் அற்புத கடமையே ஹஜ். ஒன்றே இறைவன்! ஒன்றே மக்கள்! என சமாதான குரலெழுப்பும் ஒருமைப்பாட்டு பயணம் ஹஜ் ஆகும்.

ஹஜ் பற்றிய குர்ஆனின் வசனங்கள்

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (2:197)

ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! (22:27)

தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் (ஹஜ்ஜுக்குரிய)அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். (22:28)

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (3:97)


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.