Home


சுத்தம்

(இஸ்லாம் பற்றிய தொடர் - 6)

        அளவிலா அருளாளனும், நிகரில்லா அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனைத் தொழுவதற்குத் தூய்மையாக இருத்தல் மிகவும் அவசியமாகும். காரணம் பரிசுத்தம் ஈமானில் பாதியாகும் என ஹதீஸில் வந்துள்ளது.

        “உங்களுக்கு கஷ்டத்தை தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும் அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும் தன் அருட்கொடையை உங்கள் மீது பூரணமாக்கி வைக்கவுமே விரும்புகின்றான்.” (அல் குர் ஆன் : 5:6)

        தூய்மை எனக் குறிப்பிடும் போது உள்ளத்தூய்மை, உடல் தூய்மை, உடைத் தூய்மை மற்றும் இருப்பிடத்தூய்மை போன்றவையும் அடங்குகின்றன.

        “உமதிறைவனைப் பெருமைப்படுத்தும், ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும். அசுத்தங்களை வெறுத்திடும்.” (அல்குர் ஆன்: 74: 4, 5)

        உடல் தூய்மை இரு வகையாக இருக்கின்றது. ஒன்று பகுதித் தூய்மை, மற்றொன்று முழுத்தூய்மை, பகுதித் தூய்மைக்கு உதாரணமாகப் புற உறுப்புக்களைக் கழுவுவதைச் சொல்லலாம். இது போல முழுத் தூய்மைக்கு முழுக்கை நிறைவேற்றும் குளிப்பைச் சொல்லலாம்.

முழுக்கு

        இந்திரியம் வெளிப்பட்டாலும் அல்லது உடலுறவு ஏற்பட்டாலும் முழுக்கு எனப்படும். முழுக்கை நீக்க குளித்து உடல் முழுவதையும் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். எனவே தான் முழுக்கினை முழுத்தூய்மைக்கு உதாரணம் காட்டப்படுகிறது.

        திருமறையில் அல்லாஹ் முழுக்கினைப் பற்றி கூறுமிடத்து

“நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.” (அல் குர் ஆன் : 5:6)

         “நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்.)” (அல் குர் ஆன் : 4:43) எனக் கூறுகின்றான்.

குளிப்பு எப்பொழுது கடமையாகின்றது.

  1. இச்சையின் காரணமாகத் தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ இந்திரியம் வெளியான பின்.
  2. உடலுறவு (சேர்க்கை) செய்த பின்.
  3. ஹைளு மாதவிடாய் பருவமான பெண்களுக்கு மாதந்தோறும் வெளியாகும் அசுத்தமான இரத்தம் நின்றவுடன்.
  4. நிபாஸ் (பிரசவத்தீட்டு) - பெண்ணானவள் குழந்தை பெற்ற பிறகு அசுத்தமான இரத்தம் நின்றவுடன், குளிப்பு கடமை ஆகின்றது.

எப்படிக் குளிப்பது

  1. கடமையான குளிப்பை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன் என்று மனதால் உறுதியாக எண்ணம் கொள்வதே நிய்யத் ஆகும். நிய்யத் இல்லாமல் செய்யப்படுகின்ற எந்த ஒரு வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே முழுக்கை நீக்க குளிக்கிறேன் என நிய்யத்துச் செய்தல்.
  2. பிஸ்மில்லாஹ் சொல்லுதல்.
  3. இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று தடவை கழுவுதல்.
  4. மர்மத்தலத்தில் ஒட்டியிருக்கும் அசுத்தத்தை நீக்கல்.
  5. உடல் அல்லது ஆடையின் மீது ஒட்டியிருக்கும் அசுத்தத்தை நீக்கல்
  6. ஒளுச் செய்தல்
  7. உடல் முழுவதும் நனையும் படி குளித்தல்.

முழுக்கின் பர்ளுகள் (ஹனபி)

  1. ஒரு தடவை வாயை நன்றாக கொப்பளித்தல்.
  2. ஒரு தடவை மூக்கில் தண்ணீர் செலுத்துதல்.
  3. உடல் முழுவதும் (ஒரு ரோமக்கால் விடாமல்) நனையும் படி குளித்தல்.

குளிப்பு எப்போது நிறைவேறாது :

        மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பர்ளுகளில் ஒன்று விடுபட்டாலும் உடலில் இம்மியளவு கழுவாது விடுபட்டுப் போனாலும் குளிப்பு நிறைவேறாது.

குளிப்பு கடமையுள்ளவர்கள் செய்யக்கூடாதவை :

  1. தொழுதல்
  2. குர் ஆனைத் தொடுதல்
  3. குர் ஆனை ஓதுதல்
  4. பள்ளிக்குள் நுழைதல்
  5. கஃபாவை தவாப் செய்தல்

ஒலு

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். அன்றி, (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) "மஸஹு" செய்து கொள்ளுங்கள்.” (அல் குர் ஆன் : 5:6)

அல்லாஹு த ஆலா ஒலுவினை திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மூலமாக மக்களுக்கு காண்பித்துள்ளான். உடலின் முகம், கை, கால், தலை, காது, மூக்கு போன்ற அவயங்கள் ஆடையின்றித் திறந்திருப்பதால் அழுக்கும், தூசிகளும் படிகின்றன. இவ்வாறு படிகின்ற அழுக்கு, தூசி போன்றவைகளை ஐங்காலத் தொழுகையின் போது ஒலு என்ற முறையில் முகம், கை, கால் இவைகளைக் கழுவப் படுகிறது. இவ்வாறு செய்யும் போது உடல் உறுப்புக்கள் பரிசுத்தமடைகின்றன. இதை ஒலு என்று சொல்லப்படுகிறது.

ஒலுவினைப் பற்றி அண்ணல் நபி

  1. சுத்தம் ஈமானில் பாதி எனவும் ஒலு தொழுகையின் திறவுகோல் எனவும் திரு நபி கூறியுள்ளார்கள்.
  2. ஒலு இருக்க ஒலு செய்தல் ஒளிக்கு மேல் ஒளியாகும்.
  3. ஒருவர் ஒலுவுடன் தூங்கும் போது அன்றைய இரவில் அவர் இறந்து விட்டால் அவர் அல்லாஹ்விடம் ஷஹீதானவரைப் (உயிர்த்தியாகி) போன்றவராவார்.
  4. ஒலுவுடன் உறங்குவதானது பகலில் நோன்பு நோற்று இரவெல்லாம் வணங்கியது போன்றதாகும்.

ஒலு        

ஹனபி        

 ஷாபி

பர்ளுகள்        

4        

6

சுன்னத்துகள்

13        

9

முறிப்பவை

10        

5

                                                                                                

பர்ளுகள் 4 (ஹனபி)

  1. மேலே நெற்றியின் உரோமக் காலிலிருந்து கீழே நாடிக்குழி வரையிலும், ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரையிலும் முகத்தை அடைய வளைந்துக் கழுவுதல்.
  2. முழங்கை வரை இரண்டு கைகளையும் கழுவுதல்.
  3. தலையில் நான்கில் ஒரு பங்கிற்குக் குறையாமல் மஸஹ் செய்தல் (ஈரக்கை கொண்டு தடவுதல்)
  4. கணுக்கால் வரை இரண்டு கால்களையும் கழுவுதல்.

பர்ளுகள் 6 (ஷாபி)

  1. நிய்யத்து செய்தல்
  2. முகம் கழுவுதல்
  3. முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவுதல்
  4. தலையில் சிறு பகுதியை மஸஹ் செய்தல் (நனைத்தல்)
  5. இரு கால்களையும் கரண்டை வரை கழுவுதல்
  6. மேற்கண்ட முறைகளை வரிசைக் கிராமமாக நிறைவேற்றல்.

ஒலுவின் சுன்னத்துகள் 13 (ஹனபி)

  1. ஒலு செய்வதாக நிய்யத்து செய்தல்
  2. பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று சொல்லுதல்.
  3. இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல்
  4. மூன்று தடவை வாய் கொப்பளித்தல்
  5. (மிஸ்வாக்) பல் குச்சியால் பல் துலக்கல்
  6. மூன்று தடவை மூக்கில் தண்ணீர் செலுத்துதல்
  7. தாடி ரோமத்தை விரல்களால் கோதுதல்
  8. முழு தலையையும் இரண்டு காதுகளையும் மஸஹ் செய்தல்
  9. கை கால்களின் விரல்களைத் தனித்தனியாகச் சுத்தம் செய்தல்
  10. ஒவ்வொரு  உறுப்பையும் வலப்புறமிருந்து கழுவ ஆரம்பித்தல்
  11. மூன்று தடவை ஒவ்வொரு உறுப்பையும் கழுவுதல்
  12. ஒவ்வொரு உறுப்பையும் வரிசைக் கிரமமாகக் கழுவுதல்
  13. உளுவின் ஒழுங்கை வரிசையாகச் செய்தல்

ஒலுவின் சுன்னத்துகள் 9 (ஷாபி)

  1. பிஸ்மி சொல்லுதல்
  2. இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல்
  3. வாய் கொப்பளித்தல்
  4. வாய்க்கு நீர் செலுத்தும் போது மூக்கிற்கும் நீர் செலுத்துதல்.
  5. தலையில் நான்கில் ஒரு பங்கு மஸஹ் செய்தல்
  6. இரு காதுகளையும் மஸஹ் செய்தல்
  7. விரல்கள், தாடி இவைகளைக் கோதிவிடல்
  8. வலப்புறங்களை முதலில் கழுவுதல்.
  9. கிப்லாவை முன்னோக்கி இருந்து ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுவுதல்

மிஸ்வாக் (நார் உள்ள குச்சி)

        நார் உள்ள குச்சியால் பற்களை சுத்தம் செய்வதற்கு மிஸ்வாக் என்று பெயர். இது சுன்னத் ஆகும். மிஸ்வாக் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது.

  1. இது இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுத் தந்து பரிசுத்தப் படுத்தும் கருவியாகும்.
  2. மிஸ்வாக் நபிமார்களின் வழியாகும். எனவே உங்கள் வாய்களை மிஸ்வாக்கை கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
  3. மிஸ்வாக்கின்றி தொழும் 70 (எழுபது) தொழுகைகளை விட மிஸ்வாக் செய்து தொழும் ஒரு தொழுகை சிறந்ததாகும்.

ஒலுவை முறிப்பவை 10 (ஹனபி)

  1. மல பாதை வழியாக மலம், காற்று முதலியவை வெளியாகுதல்.
  2. சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் (மூத்திரம்), வெட்டை, விந்து முதலியன வெளிப்படல்.
  3. புண்ணிலிருந்து இரத்தம், சீழ் கசிந்து வடிதல்.
  4. ஆண், பெண் குறிகள் திரையின்றி ஒன்றாகத் தொடும்படி செய்தல்.
  5. மயக்கம் உண்டாகி விடுதல்.
  6. வாய்நிறைய வாந்தி எடுத்தல்.
  7. மதுவருந்தி போதையாகி விடுதல்.
  8. ஒரு பொருளின் மீது சாய்ந்து நித்திரை செய்தல்.
  9. ருகூஉ, ஸஜ்தாவில் (தொழுகையில்) சப்தமிட்டு சிரித்தல்.
  10. பைத்தியம் பிடித்தல்.

ஒலுவை முறிப்பவை 5 (ஷாபி)

  1. இந்திரியமின்றி வேறு எதுவும் முன், பின் துவாரத்திலிருந்து வெளியாகுதல்.
  2. சரியான முறையில் உட்காராமல் பித்தட்டுச் சரியாக அமையாமல் இருந்து நித்திரை செய்தல்.
  3. மறைவகத்தில் அகங்கை படுதல்.
  4. மயக்கத்தால் சுய உணர்வு இல்லாது போகுதல்.
  5. திருமணம் செய்ய விலக்கப்படாத பெண்களைத் தொடுதல்

தயம்மும்

        தண்ணீர் கிடைக்கா விட்டாலும் அல்லது தண்ணீரை உபயோகிப்பதால் வியாதி அதிகமாகுமென்று அச்சமிருந்தாலும் அல்லது எதிரிகளின் பயமிருந்தாலும் ஒலுவுக்குப் பிரதியாகச் செய்யும் துப்புரவுக்குத் தயம்மும் என்று பெயர்.

திருக்குர் ஆனில் தயம்மும்

        “நீங்கள் நோயாளிகளாக இருந்தோ அல்லது பயணத்தில் இருந்தோ அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தோ அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தோ (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதனை)க் கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான்.” (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக! ( அல் குர் ஆன் : 5:6)

தயம்மும் செய்வதற்கு நிபந்தனைகள்

  1. ஒன்று முதல் மூன்று மைல் தூரம் வரை நான்கு திசைகளிலும் தண்ணீர் இல்லாமல் இருத்தல்.
  2. கிணறு இருந்தும் தண்ணீர் எடுக்க பாத்திரமும், கயிறும் இல்லாமலிருத்தல்.
  3. திருடர்கள் அல்லது எதிரிகள் பயம் இருத்தல்
  4. விஷ ஜந்துக்களின் பயம் இருத்தல்
  5. தன்னிடம் உள்ள தண்ணீரை உபயோகித்து விட்டால் தானும் தனது பிராணிகளும் தாகத்துடன் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுதல்.
  6. தண்ணீரைத் தொட்டால் நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகப்படும் என்ற காரணம் இருத்தல்.

மேலே கூறப்பட்ட ஆறு காரணங்களுள் எதுவும் இருந்தால் மட்டுமே தயம்மும் செய்ய அனுமதியுண்டு.

தயம்முமின் பர்ளுகள்

  1. தயம்மும் செய்வதாக மனதில் நிய்யத் செய்தல்.
  2. சுத்தமான மண் மீது இரண்டு கைகளையும் அடித்து தட்டி முகத்தில் (ஒலுவிற்குப் போல்) தடவிக் கொள்ளல்.
  3. மறுபடியும் மண் மீது இரண்டு கைகளையும் அடித்து தட்டி (ஒலுவிற்குப் போல்) முழங்கை வரை இரண்டு கைகளையும் தடவிக் கொள்ளல்.

தயம்மும் செய்ய உபயோகிக்கும் பொருள்கள்

        மண் இனத்தைச் சார்ந்தவைகள் மட்டும் தயம்மும் செய்ய உரியவைகள். அவை பின்வருமாறு

  1. மண்
  2. மணல்
  3. சுண்ணாம்பு
  4. சுர்மா
  5. சுவர்

        மேற்குறிப்பிட்ட மண் இனத்தைச் சார்ந்த ஐந்திலும் புழுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தயம்மும் செய்யலாம். அதே நேரத்தில் மண் இனம் அல்லாத தங்கம், வெள்ளி, சாம்பல், கோதுமை, இரும்பு இவைகளின் மீது புழுதி ஒட்டியில்லாத நிலையில் தயம்மும் செய்தல் கூடாது.

தயம்மும் எப்போது முறிகின்றது.

  1. ஒலு முறிகின்ற எல்லா காரணத்தாலும்
  2. (போதுமான) தண்ணீர் கிடைத்து விட்டாலும்
  3. ஏற்பட்ட குறையானது நீங்கி விட்டாலும்.


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.