அக்லாக் - நற்குணங்கள்
உடலுறுப்புக்களைப் பயன்படுத்தும் முறை
மனிதனின் பேச்சு, பார்வை, கேள்வி, கைகளைப் பயன்படுத்துதல், கால்களால் நடத்தல், இதயத்தால் எண்ணுதல், மூளையால் சிந்தித்தல் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமுடையதாக இருத்தல் வேண்டும். இன்று உலகில் ஒரு இயந்திரத்தை தருவிக்கும் போது அதோடு அதனை இயக்கும் முறை பற்றிய புத்தகமும், அதனை இயக்கத் தெரிந்தவரையும் அனுப்பி வைப்பார்கள். புத்தகத்தில் காட்டியுள்ள முறையோடு அதை இயக்குபவர் கூறுவதைப் பின்பற்றினால் இயந்திரத்தை நன்முறையில் இயக்க முடியும்.
அதைப் போன்று மனித வாழ்க்கைக்குரிய வேத நூல் குர் ஆனாகும். மனித வாழ்க்கையின் வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாகும். உதாரணமாக ஒரு மோட்டார் வாகனம் இருக்கின்றது. அதில் பெட்ரோல் ஊற்ற டேங்கும், தண்ணீர் ஊற்ற ரேடியேட்டரும் இருக்கிறது. பெட்ரோலை பெட்ரோல் டேங்கிலும், தண்ணீரை ரேடியேட்டரிலும் ஊற்றும் போது வாகனம் இயங்கும். அதற்குப் பதிலாக இது தான் எனது வாகனமாயிற்றே என்று தனது விருப்பப்படி பெட்ரோல் ஊற்ற வேண்டிய இடத்தில் தண்ணீரை ஊற்றும் போது வாகனம் பயணம் செய்வதற்கு பதிலாக பழுதடைந்து விடும்.
வாகனத்தை நிறுத்த பிரேக்கும், அதன் வேகத்தை அதிகப்படுத்த அக்ஸிலேட்டரும் பயன்படுகிறது. வாகனம் எனக்குச் சொந்தம், ஆகவே எனது விருப்பம் போல் இயக்குவேன் என்று சொல்லி வாகனம் சென்று கொண்டு இருக்கும் போது பிரேக் போட வேண்டிய சந்தர்ப்பத்தில் ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் வாகனமானது விபத்துக்குள்ளாகி நொறுங்கி உயிருக்கே உலை வைத்து விடும். ஆகவே விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றும் போது விபத்துக்கள் தடுக்கப்படுகின்றன. இதைப் போல இறைவன் உருவாக்கிய இயந்திரம் மனிதன். மனித இயந்திரம் தன்னை எப்படி இயக்க வேண்டும் என்ற வழி முறைக்குப் பெயர் இஸ்லாமாகும். எனவே, மனித உயிர் மற்றும் உடலின் முழுப் பாதுகாப்பு இறைவனின் கட்டளையை ஏற்று நடப்பதிலும், மனித குலத்தின் முன்மாதிரியாய் இவ்வையகத்துக்கு வந்துதித்த ஹலரத் பெருமானார் (ஸல்) அவர்களைப் பின் பற்றுவதிலும் அமைந்துள்ளது.
ஹலால்-ஹராம்
எப்படியும் வாழலாம் என்பது மிருகத்தின் கோட்பாடு. இப்படித்தான் ஹலால்-ஹராம் பேணி வாழ வேண்டுமென்பது இஸ்லாமியக் கோட்பாடு ஆகும். ஹலால் என்றால் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டது. ஹராம் என்றால் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்று பொருள் படும். முதலில் மனித உடலுறுப்புகளை எவ்வாறு ஹலால் - ஹராம் பேணி பயன் படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
கண் :
மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கண்களாகும். தேவையான, அனுமதிக்கப்பட்ட காரியங்களுக்கு மட்டும் கண் பார்வையைப் பயன் படுத்த வேண்டும். பார்க்கத் தகாத இடத்தில் பார்வையைச் செலுத்துவது, அந்நியப் பெண்களைப் பார்ப்பதும் தடுக்கப் பட்டுள்ளது. தகாத பார்வை என்பது அல்லாஹ்வின் நினைவை உள்ளத்தை விட்டும் அகற்றி தவறான எண்ணத்தை தூண்டுவதாகும்.
“பார்வை இப்லிசுடைய அம்புகளில் ஓர் அம்பாகும். எந்த மனிதர் அல்லாஹ்வுடைய அச்சத்தினால் அதிலிருந்து நீங்கியிருக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் ஈமானின் ஒளியை அருளுகிறான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். இறை சிந்தனையைப் போக்கி பாவச் செயல்களின் பக்கம் எண்ணத்தை திருப்பும் நிகழ்ச்சிகளைப் பார்த்தல் கூடாது.
“அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அலீ(ரழி) அவர்களிடம் கூறினார்கள்:” அலீயே! ஓர் அந்நியப் பெண் மீது திடீரெனப் பார்வை பட்டு விட்டால் உடனே பார்வையைத் திருப்பிக் கொள்ளும். அவள் மீது இரண்டாவது பார்வையைச் செலுத்தாதீர். முதல் பார்வை உம்முடையது. இரண்டாவது பார்வை உம்முடையதன்று. (ஷைத்தானுடையது.) (நூல்: அபூதாவூது)
நாவு :
மனித உறுப்புகளில் இரண்டாவது முக்கியமான உறுப்பு நாவாகும். மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டுள்ள காரியங்களுக்கு மட்டும் நாவைப் பயன் படுத்த வேண்டும். பொய் சொல்லுவது, புறம் பேசுவது, கோள் சொல்லுவது, தீய பேச்சுக்களைப் பேசுவது, கெட்ட வார்த்தைகளைக் கூறுவது, சண்டையிடுவது ஆகியவை நாவினால் செய்யும் ஹராமான காரியங்களாகும்.
நபிகள் பெருமானார் காலத்தில் இரண்டு பெண்கள் நோன்பு வைத்திருந்தார்கள். பொறுக்க முடியாத அளவுக்கு பசி ஏற்பட்டுத் துடித்தார்கள். உயிர் போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதையறிந்த நபியவர்கள் இருவரையும் வாந்தி எடுக்கச் சொன்ன போது இறைச்சித் துண்டுகளும், புதிய இரத்தமும் வெளிவந்தன. அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், “இவ்விரு பெண்களும் ஹலாலான உணவினால் நோன்பு வைத்தார்கள். ஆனால் ஹராமைச் சாப்பிட்டு விட்டார்கள். அதாவது பிறரைப் புறம்பேசி உள்ளனர்” என்று விளக்கினார்கள். ஒரு முறை நபியவர்கள் சில மனிதர்களைப் பார்த்து “உங்களுடைய பற்களைக் குத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் “நாங்கள் இன்று இறைச்சி சாப்பிடவில்லையே” என்று பதில் கூற “இன்ன மனிதருடைய இறைச்சி உங்கள் பற்களில் மாட்டிக் கொண்டிருக்கிறது” என்பதாக அவர்கள் புறம் பேசியதை நபிகளார் சுட்டிக் காட்டினார்கள்.
புறம் பேசுதல் என்றால் என்ன?
“புறம் பேசுதல் என்றால் என்ன?” என்பதாக ஒரு மனிதர் நபியவர்களிடம் வினவினார். “ஒருவருக்குப் பின்னால் அவருக்கு மனப் பொருத்த மில்லாத விஷயத்தைக் கூறுவது” என நபியவர்கள் பதில் அளித்தார்கள். “அவ்விஷயம் உண்மையிலேயே அவரிடம் இருந்தாலுமா” என மீண்டும் அவர் கேட்டார். “உண்மையிலேயே அவ்விஷயம் அவரிடம் இருந்தால் தான் புறம் பேசுவதாகும். அவரிடம் இல்லாத விஷயத்தைக் கூறினால் அது அவதூறு, இட்டுகட்டுப் பேசியதாகும்” என நபியவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: மிஷ்காத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “புறம் பேசுவது விபச்சாரத்தை விடக் கடுமையான பாவமாகும்.” மக்கள் வினவினார்கள், “அல்லாஹ்வின் தூதரே! புறம் பேசுவது விபச்சாரத்தைவிட கடுமையான பாவமாக இருப்பது ஏன்?” அண்ணலார் பதில் கூறினார்கள், “மனிதன் விபச்சாரம் செய்கிறான். பிறகு பாவ மன்னிப்புத் தேடினால் அல்லாஹ் அவனை மன்னித்து விடலாம். ஆனால் புறம் பேசியவனை அவன் எவரைப் பற்றிப் புறம் பேசினானோ, அவர் மன்னிக்காதவரை இறைவன் மன்னிப்பதில்லை.” (நூல்: மிஷ்காத)
அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள், “கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.” (புகாரீ, முஸ்லிம்)
“உன்னுடைய சகோதரரிடம் வாக்குவாதம் புரியாதே! அவரை கேலி செய்யாதே! வாக்குறுதி செய்து விட்டு அதனை மீறாதே! (திர்மிதீ)
“எந்த மனிதனிடம் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகனாவான். அவைகளில் ஒன்று இருந்தாலும் அவனிடம் நயவஞ்சகத்தின் ஒரு குணம் உள்ளது.” அவைகளாவன : 1. நம்பிக்கையாக ஒப்படைக்கப் பட்ட பொருளை மோசடி செய்வான். 2. பேசும் போது பொய் பேசுவான். 3. வாக்குறுதிக்கு மாறு செய்வன். 4. எவரிடமாவது சண்டை போட்டால் வசை மொழிகளால் ஏசுவான். (புகாரீ, முஸ்லிம்)
ஒரு செய்தியை கூறுவதற்கு முன் அது 1. உண்மையானதா 2, அது நல்ல செய்தியா. 3. அது பிறருக்குப் பயனளிக்குமா? என்று சிந்தித்துப் பிறரிடம் சொல்ல வேண்டும்.
காது :
எவ் விஷ்யங்களை நாவினால் கூறுவது கூடாதோ, அவற்றைக் காது கொடுத்துக் கேட்பதும் கூடாது. “புறம் பேசுபவரும், அதனைக் கேட்பவரும் பாவத்தில் கூட்டாளியாக இருக்கின்றனர்.” என நபி (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். தீய எண்ணங்களை உருவாக்கும் பேச்சுகளையும், பாடல் களையும், சங்கீதங்களையும் கேட்பது காதுகளால் செய்யும் பாவமாகும்.
எவராவது பிறரைப் பற்றி புறம் அல்லது தகாத செய்திகளைக் கூறினால் தயவு செய்து என்னிடம் இது போன்ற செய்திகளைக் கூறாதீர், எனச் சொல்லி விடுவது சாலச் சிறந்தது.
இதர உறுப்புகள்:
மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ள காரியங்களைச் செய்வதை விட்டு கைகளையும், ஹராமான செயலின் பக்கம் நடப்பதை விட்டு கால்களையும் தடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறே உடலின் மற்ற உறுப்புகளையும் பாதுகாக்க வேண்டும்.
வயிறு :
பாவச் செயல்களுக்கு ஊட்டம் தருவது வயிறாகும். எனவே, பசித்துப்புசி, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பொன்மொழிகளைப் பேண வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நிரப்பக்கூடிய பாத்திரங்களில் மிகக் கெட்டது வயிறு. மனிதனுக்கு அவனுடைய இடுப்பு நேராக நிமிர்ந்து நிற்கும் அளவிற்குச் சில பிடிகள் உணவு போதுமானது. ஒரு மனிதர் சாப்பிடுவதின் மீதே முற்றிலும் விருப்பம் உடையவராக இருப்பின், அவர் வயிற்றில் மூன்றிலொரு பாகம் உணவிற்காகவும், மூன்றிலொரு பாகம் தண்ணீருக்காகவும், இன்னும் மூன்றிலொரு பாகம் (மூச்சு விடக்) காலியானதாகவும் வைத்துக் கொள்ளட்டும்.”
நற்குணங்கள் :
மக்களின் எண்ணங்களையும், செய்கைகளையும் சீர் செய்வதும், அவர்களுக்குள் இருக்கும் தீய குணங்களின் வேர்களைப் பிடுங்கி ஏறிவதும், அவற்றிற்குப் பதிலாக நற்குணங்களை உருவாக்குவதும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய நபித்துவத்தின் நோக்கமாகும். இந்த தூய்மைப் படுத்தும் பணியே அவர்களின் தலையாய நோக்கமாகும். எனவே அவர்கள் தம் சொல்லாலும், செயலாலும் எல்லா நற்குணங்களையும் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தினார்கள். எல்லாவிதமான நிலைகளிலும் அவற்றை விடாமல் பற்றிப் பிடித்து வாழ்க்கையில் கடைபிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்கள். இதைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், “நான் அல்லாஹ்வின் பாலிருந்து நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்காக அனுப்பப் பட்டுள்ளேன்.” (-முஅத்தா)
“நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.” (-புகாரீ, முஸ்லிம்)
“எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பால் உள்ளதாகும்.” (-அபூ தாவூது)
ஒரு முறை எங்களைச் சந்திக்க அண்ணலார் வந்த போது புழுதி படிந்த தலைவிரி கோலமாக ஒருவரைப் பார்த்து “இவரிடம் ஆடையைத் துவைக்க ஏதும் பொருள் (சோப்பு) இல்லையா?” என்று கேட்டார்கள். (-மிஷ்காத்)
“தன் நாவையும், வெட்கத்தலத்தையும் பாதுகாத்துக் கொள்வதாக ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனபதி கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். (-புகாரீ)
ஒரு முஸ்லிம் பிறருக்குச் செய்யும் கடமைகள் :
ஒரு முஸ்லிம் தன் நலனை மட்டும் பேணாமல் பிறர் நலனையும் பேண வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒரு காகிதத்தை மற்றொரு காகிதத்தோடு இணைக்கப் பசை பயன் படுகிறது. ஒரு பலகையை மற்றொரு பலகையுடன் இணைக்க ஆணி அல்லது ஆப்பு பயன்படுகிறது. இதைப் போன்று உலக மக்கள் அனைவரும் இணைந்து ஒரு தாய் மக்களாக வாழ நபியின் வழி முறை பயன் படுகிறது. இஸ்லாத்தில் நிறம், மொழி, நாடு, செல்வம், உயர்வு, தாழ்வு போன்ற மனப்பான்மைகள் இல்லை. எல்லா நாடும், எல்லா மொழியும், எல்லா நிறமும் முஸ்லிம்களுக்கு ஒன்றே! அரசனும் அடிமையும் தொழுகையில் ஒரே வரிசையில் நிற்பதைக் கொண்டு உயர்வு, தாழ்வு என்ற பேதம் நீங்குகிறது. சொத்து, செல்வத்தில் பிறருக்கு ஜகாத் முறையில் பங்குண்டு. உலகில் சாந்தியும், சமாதானமும் சுக வாழ்வும் ஏற்படுத்தக் கூடிய தன்மை இஸ்லாத்தில் இருக்கின்றது. உலக மக்களை ஒன்றிணைத்து உருப்படியாக வாழ வைக்கும் பிணைப்பு சக்தியாக இஸ்லாமிய சகோதரத்துவம் விளங்குகிறது.
அண்டை வீட்டார், விருந்தாளிகள், நோயாளிகள், பயணத் தோழர்கள் ஆகியோரின் உரிமைகள் யாவற்றிலும் முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவரும் சம உரிமை பெற்றவர்கள் என்பதை நபிகள் நாயகம் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய (ஹக்) கடமைகள் ஆறு என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். “எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அந்த அல்லாஹ் மீது சத்தியமாக! தான் விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பாத வரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.” (புகாரீ)
“நிச்சயமாக! நீங்கள் உங்கள் சகோதரனின் கண்ணாடியாகும். எனவே, அவர் கஷ்டத்திலிருப்பதைக் கண்டால் நீங்கள் அவரை அதிலிருந்து விடுவிக்கவும்.” (-மிஷ்காத்)
“ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளை விட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும், இருவரும் பாதையில் சந்தித்தால் முகம் திருப்பிக் கொள்வதும் கூடாது. எவர் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்வாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவராவார்.” (புகாரீ, முஸ்லிம்)
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிராணிகளின் முகத்தில் அடிப்பதையும், அவற்றின் முகத்தில் சூடு போடுவதையும் தடுத்துள்ளார்கள்.” (முஸ்லிம்)
இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்
மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் எக்காரணத்தைக் கொண்டும் நாம் தீங்கு விளைவிக்கக் கூடாது. மற்றவர்களுக்கு உதவுவதையே நம் மனப்பான்மையாகக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மனம் நோகாத வண்ணம் மென்மையாகப் பழகுவதும், மற்றவர்கள் மீது நல்லெண்ணம் கொள்வதும், மற்றவர்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்வதும் சிறந்த செயல்களாகும். மற்றவரின் மனம் புண்படும் படியான செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
மூன்று பேர் இருக்கும் போது இருவர் இரகசியம் பேசுதல், மற்றவர் அறியாத மொழியில் இருவர் மட்டும் பேசிக் கொள்ளல் போன்றவற்றைத் தவிர்த்தல் அவசியமாகும். தன் தேவையை பிற்படுத்தியோ, அல்லது விட்டுக் கொடுத்தோ, பிறர் தேவையை நிறைவேற்றுவது இஸ்லாம் கூறும் சகோதரத்துவமாகும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.