Home


ஹஜருல் அஸ்வத் பற்றிய வரலாறு

        ஹஜருல் அஸ்வத் இதன் பொருள் ‘கருநிறக் கல்’ என்பதாகும். இது கருஞ் சிவப்பு நிறமாய் இருந்தது. அரை வட்ட வடிவுள்ள இது ஆறு அங்குல உயரமும் எட்டு அங்குல அகலமும் உள்ளதாய் இருந்தது. இது தண்ணீரில் மிதக்கும் தன்மையுடையது. விண்ணகத்திலிருந்து வந்ததென்றும் பாலைவிட வெண்மையாய் இருந்ததென்றும் ஆதமுடைய மக்களின் பாவங்களின் காரணமாக இது கரு நிறம் எய்திவிட்டதென்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (திர்மிதி). இதன் ஒளி நெடுந்தொலை பாய்ந்ததென்றும் அது பாய்ந்த தொலை புனித பூமி (ஹரம்) என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் நிருணயித்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஹஜருல் அஸ்வத் பற்றிய வரலாறு

        விண்ணகத்திலிருந்து இதனை ஆதம் (அலை) அவர்கள் கொண்டு வந்தார்கள் என்றும் பின்னர் நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் இது அபுல் குபைஸ் மலையில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட தென்றும் கூறப்படுகிறது. இப்ராஹீம் (அலை) அவர்கள் இதனைத் தேடி கண்டுபிடித்து இதனை கஅபாவின் தென் கிழக்கு மூலையில் பதித்துக் கஅபாவைச் சுற்றி வருவதற்கான தொடக்க இடமாக இக் கல் பதிக்கப்பட்ட மூலையைச் செய்தார்கள். பனீ ஜுர்ஹம்கள் மக்காவை காலி செய்து விட்டு கிளம்பும் பொழுது இதனை ஜம் ஜம் கிணற்றில் போட்டுப் புதைத்து விட்டு சென்றார்கள். பின்னர் அப்துல் முத்தலிப் ஜம் ஜம் கிணற்றைத் தோண்டும் பொழுது இதனைக் கண்டு பிடித்துக் கஅபாவின் சுவரில் இதற்குரிய மூலையில் பதித்தார்.

        அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு முப்பத்தைந்து வயதான பொழுது கஅபா திரும்பப் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பொழுது இதனை இதற்குரிய மூலையில் எடுத்து வைக்கும் பேறு அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கே கிடைத்தது. பின்னர் கஅபாவிற்கு ஒரு பெண் சாம்பிராணிப் புகை போடும் பொழுது அதன் திரையில் தீப்பிடித்துக் கொண்டதன் காரணமாய் இக்கல் அதிகமான கருமையை அடைந்தது. ஹிஜ்ரி 64 இல் ஏற்பட்ட நெருப்பில் இது மூன்று பெரிய துண்டுகளாய் நொறுங்க, இதனை அப்துல்லாஹ் இப்னு  ஸுபைர் வெள்ளிக் கம்பியால் பிணைத்து இதற்குரிய இடத்தில் பதித்தார்.  கராமிதாக்களின் தலைவர் அபூ தாஹிர் இதனைத் தம்முடைய தலைநகரான ஹஜருக்கு எடுத்துச் சென்று ‘தாருல் ஹிஜ்ரத்’ என்ற இடத்தில் மரியாதையுடன் வைத்திருந்தார். இதனை மீண்டும் கஅபாவிற்கு எடுத்துச் சென்று இதற்குரிய இடத்தில் பதித்து விடுமாறு  உபைதுல்லாஹ் மஹ்தியும் துருக்கி அரசாங்கமும் எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவில்லை. மக்கள் இதன் காரணமாய்த் தம் தலைநகருக்கு யாத்திரை வருவர் என்று அவர் எதிர்பார்த்ததும் வீணாயிற்று. ஹிஜ்ரி 322 இல் அவர் இறக்க, அதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின் கராமிதாக்களின் தலைவர் முனீர் இப்னு ஹுஸைன் இதனை மக்கா எடுத்து வந்து கஅபாவில் இதற்குரிய இடத்தில் பதித்து, “அல்லாஹ்வின் நாட்டப்படி நாம் இதனை எடுத்துச் சென்றோம். அல்லாஹ்வின் நாட்டப்படி நாம் இதனைக் கொணர்கிறோம்” என்று கூறினார். இவ்வாறு இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் இது இதற்குரிய இடத்தில் அமர்ந்தது.

இந்த கல்லை முத்தமிடுவதால் ஏற்படும் நன்மை

        இதனை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டுள்ளார்கள். இதனை ஒட்டகத்தில் இருந்த வண்ணம் தங்கள் கைத்தடியால் தொட்டு அந்தக் கைத்தடியின் நுனியை அவர்கள் முத்தமிட்டுள்ளார்கள். “நீ ஒரு கல்லேயன்றி வேறில்லை. உன்னால் நன்மையோ தீமையோ செய்ய இயலாது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதால் நானும் உன்னை முத்தமிடுகிறேன். இல்லையெனில், மாட்டேன்” என்று உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

        அதனைச் செவியுற்ற அலீ (ரழி) அவர்கள், “உமர் அவர்களே! சற்று நிதானியுங்கள்! முத்தமிடுவதால் இது நன்மையையும் முத்தமிடாததால் இழப்பையும் ஒருவனுக்கு நல்குகிறது” என்று கூறினார்கள். சற்று விளக்கமாகக் கூறுமாறு உமர் (ரழி) அவர்கள் வேண்ட, “ஆன்ம உலகில் நாம் அல்லாஹ்விடம் அறுதிமானம் செய்த உறுதிப் பிரமாணம் எழுதப்பட்ட சத்திய நாமா இந்தக் கல்லின் வாயினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அதனையே நாம் முத்தமிடுகின்றோமேயன்றி இக்கல்லையல்ல. நாம் காட்டும் மரியாதை அனைத்தும் அதற்கேயன்றி இதற்கல்ல” என்றார்கள் அலீ (ரழி). அது கேட்ட உமர் (ரழி) தாம் கூறியதற்குப் பெரிதும் வருந்தி, “அலீ இல்லாவிடின் உமர் அழிந்திருப்பான்” என்று கூறினார்கள்.

ஹஜருல் அஸ்வத் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள்

        விஷக்கல் விஷத்தை உறிஞ்சி விடுவது போன்று இது இதனை முத்தமிடுபவர்களின் பாவத்தை உறிஞ்சி எடுத்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. “இதனைத் தொடுவதால் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் பைஅத் (கரம் தழுவி உறுதிப் பிரமாணம்) செய்வது போலாகும்” என்று ஹதீதில் வந்துள்ளது. நியாயத் தீர்ப்பு நாளின் போது இது இரண்டு கண்களையும், நாவையும் பெற்றிருக்கும் என்றும் தன்னைத் தொட்டு முத்தமிட்டவர்களை இது அடையாளம் கண்டு இறைவனிடம் சான்று பகரும் என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

        உம்ரா, ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகள், தங்களின் தவாஃபை துவங்குவதும், நிறைவு செய்வதும் இந்த ஹஜருல் அஸ்வதின் இடத்தில் இருந்து தான். தவாஃபை துவங்கும் முன் முடிந்தால் அதை முத்தமிடுவது அல்லது முன்னோக்கி ஆரம்பிப்பது நபி வழி ஆகும்.


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....


Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.