ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்)
ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா (கி.பி.605-கி.பி.632) அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பிற்கு மிகவும் நெருக்கமான புதல்வியாவர், ஏனையோர் ஜைனப், ருக்கையா, உம்மு குல்தூம் (ரழி) ஆகியோர் ஆவர். ’காத்தூனெ ஜன்னத்’ (சுவனத்தின் பேரரசி) என்று அழைக்கப்பட்ட இவர்கள் பெரும்பாலும் “ஸஹ்ரா” (பிரகாசமானவர்) என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்கள். மேலும் இவர்களுக்கு சித்தீகா, முபாராகா, ஸகிய்யா, ரலிய்யா, ராலிய்யா, முஹத்ததா, தாஹிரா முதலான பெயர்களும் உண்டு. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை மகள் என்ற முறையிலும், அலீ (ரழி) அவர்களின் துணைவியார் என்ற முறையிலும், ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகியவர்களின் அன்னையார் என்ற முறையிலும், இவர்களின் வழியிலேயே இன்று உலகிலே உள்ள நபி(ஸல்) அவர்களின் வழித்தோன்றல்கள் அனைவரும் தோன்றியுள்ளார்கள் என்ற முறையிலும், இவர்களின் மாண்பு தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது.
இன்னிசையில் அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் வரலாறு பாடல்களாக உள்ளது.
ஆரம்ப கால வாழ்வு
நபி (ஸல்) அவர்கள் மற்றும் கதீஜா (ரழி) ஆகிய தம்பதிகளுக்கு பாசமிகு கடைசி மகளாக ஃபாத்திமா (ரழி) அவர்கள் மக்காவில் கி.பி.605இல் பிறந்தார்கள். நபித்துவத்(நுபுவ்வத்)திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதாவது கஅபா புனர்நிர்மாணம் செய்யப்பட்ட ஆண்டு ரமலான் பிறை 20 அன்று பிறந்தார்கள். இவர்கள் பிறப்பதற்கு முன்பே, இந்தத் தம்பதிகளுக்கு மூன்று பெண் மக்கள் இருந்தார்கள்.
அன்றைய கால வழக்கப்படி, பிறந்த குழந்தையை பால் குடிப்பதற்காக பக்கத்துக் கிராமத்திற்கு அனுப்பி வைக்கின்ற வழக்கத்திற்கு மாற்றமாக, அன்னை கதீஜா (ரழி) அவர்கள் தனது இளைய மகளை தன்னுடனேயே வைத்துக் கொண்டு, பாலூட்டி வளர்த்து வந்தார்கள். கடைசி மகளை பாசத்தோடு வளர்ப்பதில் மிகவும் அக்கறை காட்டிய அன்னையவர்கள், பிறரிடம் தனது மகளை வளர்ப்பதற்காக விடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. சில ஆண்டுகளிலேயே, நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவப் பட்டமும் இறைவனால் வழங்கப்பட்டது.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது
நபி (ஸல்) அவர்களைத் தனது தூதராக அல்லாஹ் பிரகடனப்படுத்தியவுடன், தனது தந்தையார் அவர்களின் மார்க்கத்தை தனது தாயார் ஏற்றுக் கொண்ட ஆரம்பகாலப் பொழுதிலேயே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் கதீஜா (ரழி) அவர்களின் அருந்தவப் புதல்விகளான ஸைனப், ருக்கையா, உம்மு குல்தூம் (ரழி) ஆகியோர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போலவே, ஃபாத்திமா (ரழி) அவர்களும் இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்றுக் கொண்டார்கள்.
முஸ்லிம்களை சமூக பகிஷ்காரம் செய்தது
ஃபாத்திமா (ரழி) அவர்கள் தனது தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்கள். எனவே சத்தியத்திற்காகப் போராடும் குணம் அவருக்கு இயல்பாகவே வளர்ந்து வந்தது. இன்னும் தன்னால் இயன்ற நேரத்திலெல்லாம் தனது தந்தையாருக்கு வந்த எதிர்ப்புகளை எதிர்த்து நடை போட்டு வந்த வீரத்திற்குச் சொந்தக்காரராகவும் அவர் திகழ்ந்தார்.
அபீதாலிப் பள்ளத்தாக்கில் தான், முஸ்லிம்கள் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கடுந் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். இதில் தனது தந்தை மற்றும் தாய், சகோதரிகள் மற்றுமுள்ள முஸ்லிம்களுடன் முஸ்லிம்களாக துயரங்களை ஃபாத்திமா (ரழி) உறுதியான மனநிலை கொண்டவராக அனுபவித்த சரித்திரத்திற்குச் சொந்தக்காரராகவும் அவர் இருந்தார்.
ஒட்டக குடல் அகற்றி சுத்தம் செய்தது
ஒரு சமயம், நபி (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத்திற்குள் தொழுது இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த பொழுது, அந்த நேரத்தில் தான் மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் ஒரு ஒட்டகத்தை பலி கொடுத்திருந்தனர். அறுக்கப்பட்ட அந்த ஒட்டகத்தின் மலம் மற்றும் குடலைப் பார்த்த அபூஜஹ்ல் என்பவனுக்கு ஒரு வித்தியாசமான திட்டம் உருவானது. தனது திட்டத்தை தனதுநெருங்கிய சகாவான மனித குலம் அருவருக்கத்தக்க இழி பிறவியான உக்பா பின் முஈத் என்பவனிடம் அபூஜஹல் தெரிவித்தான். அவன் நபி (ஸல்)அவர்கள் சிரம் தாழ்த்தி தனது இறைவனைத் தொழுது கொண்டிருந்த பொழுது, கழுத்திலேயே அந்தக் குடலை தூக்கி வந்து போட்டான்.
அந்த நேரத்தில் தனது வீட்டிலிருந்த ஃபாத்திமா (ரழி) அவர்களுக்குச் செய்தி எட்டியது தான் தாமதம், கஃபாவை நோக்கி விரைந்து வந்தார்கள். தனது தந்தையின் மீது போடப்பட்டிருந்த அந்த மலம் தோய்ந்த ஒட்டகக் குடலை, தனது பிஞ்சு விரல்களால் அப்புறப்படுத்தினார்கள். தனது தந்தையின் முதுகையும் சுத்தம் செய்து விட்டார்கள்.
கதீஜா (ரழி) அவர்களின் இழப்பு
சமூக பகிஷ்காரத்தைக் குறைஷிகள் நீக்கிக் கொண்டு விட்டதன் பின்னாள், நபி (ஸல்) அவர்களும், அவர்களது மகள் ஃபாத்திமா அவர்களும், அன்னை கதீஜா (ரழி) அவர்களை இழந்த சோகத்திற்கு ஆளானார்கள்.
குறைஷிகளின் தாக்குதல்களிலிருந்து நபி (ஸல்) அவர்களைப் பாதுகாக்கின்ற கேடயமாகத் திகழ்ந்த அபூதாலிப் அவர்களும் மரணமடைந்து விட்டார்கள். இதன் காரணமாக, நபி (ஸல்) அவர்கள் உதவி செய்வதற்கு யாருமற்ற அநாதையாகி விட்டார் என்று கருதி, நபி (ஸல்) அவர்கள் மீது சொல்லொண்ணா கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடத் துணிவு கொண்டார்கள் இந்தக் குறைஷிகள்.
மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்
இப்பொழுது மதீனாவிற்கு சத்தியத்தை பரப்புவதற்காக நபி (ஸல்) அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள், மதீனத்து மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற சுபச் செய்தியை நபி (ஸல்) அவர்களுக்கு எத்தி வைத்தார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்களை தங்களது மதீனத்து நகரத்தில் வந்து குடியேறி விடும் படியும், இன்னும் நபி (ஸல்) அவர்கள் விரும்புகின்ற எத்தகயை உதவியையும் தாங்கள் செய்வதற்கு சித்தமாக இருக்கின்றோம் என்றும் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். அல்லாஹ்வின் கட்டளைப் படி நபி (ஸல்) அவர்கள் மதீனத்து மக்களின் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதுடன், மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அதற்கு முன்பாக, தனது தோழர்களை மதினாவை நோக்கிப்பயணப்படுமாறு கட்டளையிட்ட நபி(ஸல்) அவர்கள், அவர்களை அடுத்து தனது ஆருயிர்த் தோழரான அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்களுடன் பயணப்பட்டார்கள். கதீஜா (ரழி) அவர்களது மறைவுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்ட ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி) அவர்களுடன், தனது இரண்டு பெண் மக்களையும் மக்காவில் உள்ள தனது இல்லத்தில் விட்டு விட்டு மதீனா சென்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
அதன் பிறகு சில காலங்கள் கழித்து, நபி (ஸல்) அவர்கள் இந்த மூன்று பெண்களையும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வரும்படி கட்டளையிட்டதற்கு இணங்க, ஹிஜ்ரத் செய்தவர்களின் பட்டியலில் இந்த மூன்று பெண்களும் தங்களது பெயர்களை வரலாற்றுப் பக்கங்களிலே பதித்துக் கொண்டார்கள்.
புகழ் மிக்க திருமணம்
ஃபாத்திமா (ரழி) அவர்கள் மதீனாவில் பருவமெய்திய பொழுது, இவர்களை அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), ஆகியோர் மணமுடிக்க விரும்பினர். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி), இவர்களுக்கு மஹராக 100 ஒட்டகை நிறைய மிஸ்ர் நாட்டுத் துணியும், 10,000 தீனாரும் தருவதாகக் கூறினர் என்றும், அதே தொகையைத் தாம் மஹராகத் தருவதாகவும், தாம் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபை விட இஸ்லாத்தை முன்னால் தழுவியவர் என்று உஸ்மான் (ரழி) அவர்கள் கூறியதாகவும், வரலாறு இருக்கிறது. ஆனால், இறை ஆணைப் படி அலீ (ரழி) அவர்களுக்கே தம் மகளை மணமுடித்துக் கொடுத்தனர் நபி (ஸல்) அவர்கள். ஃபாத்திமா - அலீ திருமணம் புகழ் மிக்கதாகும். அதற்குக் காரணம், அதன் எளிமை.
திருமணத்திற்குச் சம்மதம் கேட்டது
நபி(ஸல்) அவர்கள் தனது அருமை மகளார் ஃபாத்திமா (ரழி) அவர்களிடம் சென்று, தங்களுக்கு அலீ அவர்களை மணமுடித்து வைக்க நான் நாடுகின்றேன், நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். இதனைக் கேட்ட மாத்திரத்திலேயே மிகவும் அமைதியாக ஃபாத்திமா (ரழி) அவர்கள் விம்மி அழ ஆரம்பித்தார்கள்.
ஃபாத்திமாவே..! அலீ மிகவும் கற்ற ஞானமுள்ள மனிதர், இன்னும் இரக்கசுபாவமுள்ளவரும், வீரமுள்ள ஆண்மகனுமாவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களின் தேர்வை ஃபாத்திமா (ரழி)அவர்கள் ஏற்றுக் கொண்டு, திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்கள்.
அலீ (ரழி) அளித்த மஹர்
இப்பொழுது அலீ (ரழி) அவர்களிடம் வந்த நபி(ஸல்) அவர்கள், அலீயே..! எனது மகளுக்கு மஹர்ப் பணமாக நீங்கள் என்ன வைத்திருக்கின்றீர்கள், வைத்திருந்தால் அதனைக் கொண்டு வாருங்கள் என்றார்கள். அலீ (ரலி) அவர்களின் இளமைப் பருவம் முதலே அவர்களையும், அவர்களது பொருளாதார நிலைமையையும் நன்கு அறிந்தவர்களான நபி(ஸல்) அவர்கள், சரி..! உங்களிடம் எதுவுமே இல்லாயென்றால், உங்களது பாதுகாப்புக் கவச உடை இருக்கின்றதல்லவா, அதனையே எனது மகளுக்கு மஹராகக் கொடுத்து விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தனது கவச உடையை தனது அடிமையிடம் கடைத்தெருவுக்குக் கொடுத்து விட்ட அலீ (ரலி) அவர்கள், அதன் மூலம் நானூறு திர்ஹம்களைப் பெற்றுக்கொண்டார்கள். கவச உடையை விற்ற பணத்தைக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்த பொழுது, அதனைப் பெற்றுக் கொள்ளாமல், இதனை நீங்களே வைத்துக் கொண்டு திருணமத்திற்கு தேவையான பொருட்களையும், இன்னும் வாசனைத் திரவியங்களையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.
திருமண நிகழ்வு
இந்த ஆரம்ப கட்ட வேலைகள் முடிந்ததன் பின், தனது உதவியாளரான அனஸ் பின்மாலிக் (ரழி) அவர்களை அழைத்த நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரழி), உஸ்மான் (ரழி), உமர் (ரழி), தல்ஹா (ரழி), சுபைர் (ரழி) போன்றவர்களையும், அன்ஸார்கள் மற்றும் முஹாஜிர் தோழர்களையும் இந்தத் திருமண வைபவத்தில் கலந்துகொள்ள அழைத்து வருமாறு அனுப்பி வைத்தார்கள். அனைத்துத் தோழர்களும் அங்கே குழுமியதன் பின்னால், அலீ (ரழி) அவர்களை அழைத்த நபி (ஸல்) அவர்கள், நீங்களே உங்களது திருமண உரையை வாசியுங்கள் என்றார்கள்.
இதன் பின்னர் ஃபாத்திமா (ரழி) அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தவர்களாக திருமண வாசகத்தை மொழிய ஆரம்பித்தார்கள். மஹர் தொகையை அறிவித்தவுடன், அங்குகூடியிருந்த தனது தோழர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள், அலீ (ரழி)அவர்களுக்கு ஃபாத்திமா (ரழி) அவர்களை மணமுடித்துக் கொடுக்குமாறு இறைவன் தான் எனக்கு கட்டளையிட்டான். இதன் பின்னர், தம்பதிகளின் சந்தோஷமான வாழ்க்கைக்காகவும், நல்ல எதிர்காலத்திற்காகவும் பிரார்தித்தார்கள். பின்னர் விருந்தினர்களுக்கு பேரீத்தம் பழம் வழங்கப்பட்டது. இறைவன் புதுமணத்தம்பதிகளுக்கு சந்தோஷமான வாழ்க்கை அமைவதற்காக அங்கு கூடியிருந்த அனைவரும் பிரார்த்தனை செய்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். தனது சகோதரனின் மகனாகிய அலீ (ரழி) அவர்களின் திருமணம் நடந்ததன் மறுநாள் ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) அவர்கள் ஒருஒட்டகத்தை அறுத்து தோழர்கள் அனைவருக்கும் விருந்தளித்தார்கள்.
நபி (ஸல்) தம் மகளுக்குக் கொடுத்த சீதனம்
புதுமணத்தம்பதிகளாக புது வீட்டுக்கு குடிபோக விருக்கின்ற தம்பதிகளுக்கு சில அடிப்படையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு படுக்கை, காய்ந்த பேரீத்தம் மர மட்டைகளால் ஆன தலையணை, ஒரு தட்டு, ஒரு தம்ளர், தோலால் செய்யப்பட்ட தண்ணீர்ப் பை ஒன்று மற்றும் மாவு அரைக்கக் கூடிய திரிகை ஒன்று இவை தான் நபி (ஸல்) அவர்களின் அன்புக்கினிய மகள் ஃபாத்திமா (ரழி) அவர்களின் திருமணத்திற்காக வாங்கப்பட்ட பொருட்களின் பட்டியலாகும்.
ஃபாத்திமா (ரழி) அவர்களின் இயல்புகள்
இத் திருமணம் நிகழும் பொழுது ஃபாத்திமா (ரழி) அவர்களுக்கு வயது 15. அலீ (ரழி) அவர்களுக்கு வயது 25. பெரிதும் நாண உணர்வுள்ள இவர்கள், திருமண நாளன்று காலில் தம் உடை தடுக்கி விழுந்து விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பாத்திமாவின் இரக்க இயல்பிற்குச் சிறந்த உதாரணம், தமக்குத் தந்தையார் எடுத்துத் தந்த திருமண உடையைத் திருமணம் நிகழ்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் ஏழை ஒருவருக்குக் கழற்றிக் கொடுத்ததாகும்.
தந்தையார் அது பற்றி வினவ, “ தாங்கள் தாமே, ‘நீங்கள் விரும்பும் ஒன்றைப் பிறருக்கு கொடுங்கள்’ என்று கூறினீர்கள். அவ்விதமே நான் விரும்பும் ஒன்றை வாசலில் வந்து நின்று கொண்டிருந்த ஏழைக்கு கொடுத்துவிட்டேன்” என்றார்கள் இவர்கள்.
இவர்கள் இனிய இயல்பினர்: அடக்க உணர்வினர். சபையில் இவர்கள் ஒரு மூலையில் போய்த்தான் அமர்வார்கள். இவர்களுக்கு உயர்தர ஆடைகள் அளிக்கப்பட்டால், “நான் வழக்கமாக அணியும் துணி தான் எனக்கு பிடித்தமானது.” என்று கூறிவிடுவர்.
”ஏழைப் பெண்களில் இவர்களைப் போல் கொடையாளியைக் கண்டதில்லை” என்று பிறர் கூறும் வண்ணம் வாழ்ந்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நோன்பிருந்து நோன்பு திறக்கப் போகும் பொழுது வாயிலில் ஏழையின் கூவல் கேட்டு, இருந்ததை கொடுத்து விட்டு, மூன்று நாட்களும் தண்ணீரை மட்டும் அருந்திக் கொண்டிருந்த பெருமை இவர்களுக்கு உண்டு.
உஹுத் போரில் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காயமுற்றதைக் கேள்வியுற்றுக் களத்திற்கே சென்று தந்தையாருக்கு உதவினார்கள் இவர்கள். அகழ்ப் போரின் போது தந்தையார் பசியோடிருப்பதை அறிந்து, அபாயம் பற்றிக் கவலைப்படாது உணவுடன் களம் சென்றார்கள் இவர்கள். தந்தையார் மீது இவர்களுக்கு அத்துணை அன்பு!
அதே போன்று அண்ணல் நபி (ஸல்) அவர்களும் இவர்களைப் பெரிதும் நேசித்தனர். “ஃபாத்திமா என் இதயத்தின் துண்டு” என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் “ எவர் ஃபாத்திமாவை மகிழ்விக்கிறாரோ, அவர் என்னை மகிழ்விக்கிறார். எவர் என்னை மகிழ்விக்கிறாரோ, அவர் இறைவனை மகிழ்விக்கிறார்” என்று மொழிந்தார்கள்.
மகிழ்வுடன் இல்ல பணிகள்
கணவரின் இல்லம் புகுந்த இவர்கள், கணவரின் எளிய வாழ்வில் பங்கேற்று வாழ்ந்தனர். வீட்டில் திரிகையில் மாவரைப்பது, வீட்டைக் கூட்டிப் பெருக்குவது, துணி துவைப்பது போன்ற வேலைகளை இவர்கள் மகிழ்வுடன் செய்தனர். அப்பொழுதெல்லாம் இவர்களின் நாவில் இறைமறை தவழ்ந்து கொண்டிருக்கும்.
ஒரு போரின்பொழுது அதிகமான செல்வங்களும், போர்ப் பொருட்களும், கைதிகளாக ஆண்களும், பெண்களும் முஸ்லிம்கள் வசமாகின. அப்பொழுது தனது துணைவியாரான ஃபாத்திமா (ரழி) அவர்களை அழைத்த அலீ (ரழி) அவர்கள், ஃபாத்திமா அவர்களே..! வீட்டுவேலைகளின் நிமித்தம் நீங்கள் அதிகக் களைப்படைந்து விடுகின்ற காரணத்தால், உங்கள் தந்தையிடம் சென்று, கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வந்துள்ளவர்களில் உங்களுக்கென ஒரு வேலைக்காரியைத் தருமாறு கேளுங்களேன் என்றார்கள். அலீ (ரலீ) அவர்களின் ஆலோசனையைக் கேட்ட பின், நேராகத் தனது தந்தையைத் தேடி வீட்டிற்குச் சென்றார்கள். இவர்கள் தேடிச் சென்ற நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாத காரணத்தால், தான் வந்த நோக்கத்தை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்துவிடுமாறு ஆயிஷா (ரழி) அவர்களிடம் தெரிவித்துவிட்டு வந்து விடுகின்றார்கள்.
ஒரு வேலைக்காரியை விடச்சிறந்தது
அன்றைய இரவு, தூங்கச் செல்வதற்கு சற்று முன்னால் நபி (ஸல்) அவர்கள் தனது மகளாரைத் தேடி மகளின் வீட்டிற்கு வருகின்றார்கள். அப்பொழுது, மகளே..! ஒரு அடிமைப் பெண்ணை விடச் சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு தரட்டுமா..! என்று கேட்டு விட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து கூறக் கூடிய சில வசனங்களை தனது மகளாருக்குக் கற்றுக் கொடுக்கின்றார்கள். மகளே..! நான் சொல்லித்தரக் கூடிய இந்த வசனங்கள் ஒரு வேலைக்காரியை விடச்சிறந்தது. நீங்கள் 33 தடவை சுப்ஹானல்லாஹ் என்றும், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் என்றும், இன்னும் 34 முறை அல்லாஹு அக்பர் என்று கூறுங்கள் என்று கற்றுக் கொடுத்தார்கள்.
சுவனத்தின் இளைஞர்களது தலைவர்கள் பிறந்தது
அலீ (ரழி) மற்றும் ஃபாத்திமா (ரழி) தம்பதிகளுக்கு ஹிஜ்ரி 3 ம் ஆண்டு ரமலான் மாதத்தில் முதல் குழந்தை பிறந்தது. தனக்குப் பேரக் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தனது மகளையும், பேரனையும் காண விரைந்து சென்றார்கள். பேரனுக்கு ஹஸன் என்ற பெயரைச் சூட்டி, அதானும் கூறினார்கள். பிறந்ததிலிருந்து ஏழாவது நாளில் தலை முடியைச் சிரைத்து சுத்தமாக்கி, அந்தமுடியின் எடையின் அளவுக்கு வெள்ளியை நிறுத்து, அதனை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார்கள்.
ஹிஜ்ரி 4 ம் வருடம் ஷஃபான் மாதம் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹுஸைன் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். அந்தக் குழந்தையின் காதிலும் பாங்கு சொன்னார்கள். மூன்றாவது குழந்தையாக முஃஸின் என்பவர் பிறந்தார், அவர் குழந்தையாக இருந்தபொழுதே இறந்து விட்டார் என்று கூறப்படுகின்றது. தனது இரண்டு பேரக் குழந்தைகளையும் மிகவும் நேசித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். மேலும், அவர்களைக் குறித்து, ''இவர்கள் எனது வாச மலர்கள், இன்னும் சுவனத்தின் இளைஞர்களது தலைவர்கள்" என்று பெருமை படக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
பெண் குழந்தைகள்
ஹிஜ்ரி 5 ம் ஆண்டு, ஃபாத்திமா (ரழி) அலீ (ரழி) தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஸைனப் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். மீண்டும் ஹிஜ்ரி 7 ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு உம்மு குல்தூம் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். ஸைனப் பின்த் அலீ (ரழி) அவர்கள் பருவமடைந்ததன் பின்னர், அப்துல்லா பின் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள்.
உம்மு குல்தூம் (ரலி) அவர்களை உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் மணந்து கொண்டார்கள். இவர்களுக்கு ஸைத் மற்றும் ருக்கைய்யா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன. உம்மு குல்தூம் (ரலி) அவர்களை உமர் (ரழி) அவர்கள் மணந்து கொண்டதன் பின்னர், தனது தோழர்களாக அன்ஸார்களையும், முஹாஜிர்களையும் அழைத்து, தனக்கு வாழ்த்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதற்கான காரணத்தை அந்தத் தோழர்கள் வினவிய பொழுது, அலீ (ரழி)அவர்களது மகளாரான உம்மு குல்தூம் (ரழி) அவர்களை நான் மணந்து கொண்டதன் மூலம், நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாருடன் நான் சம்பந்தம் என்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டேன் அல்லவா! அத்தகைய சந்தோஷமான, சிறப்பு மிக்க கௌரவத்தை நான் அடைந்து கொண்டதற்காக, என்னை வாழ்த்துங்கள் என்று உமர் (ரழி) அவர்கள் சந்தோஷமாகக் கூறினார்கள்.
ஒரு பெண் இறைவனின் அருகில் எப்பொழுது இருக்கிறாள்?
அரிதாக வெளியில் சென்று வந்த இவர்கள், வியாழன் அல்லது சனி அன்று மறைந்த நல்லவர்களின் அடக்கவிடங்களுக்குச் சென்று, அவர்களின் ஆன்ம நலனிற்காக இறைஞ்சி விட்டு வருவர். “ஒரு பெண் இறைவனின் அருகில் எப்பொழுது இருக்கிறாள்?” என்று இவர்களிடம் வினவப் பட்டபொழுது, “அவள் பர்தாவினுள் இருக்கும் போது” என்று கூறினார்கள்.
இரவு பகலாக அழுதார்கள்
தம் தந்தையார் காலமானதை இவர்களால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. துக்கம் தாளாது இவர்கள் இரவு பகலாக அழுதார்கள். இதை கண்ட நபிதோழர்கள், “இவ்வாறு இரவு பகலாக அழுது கொண்டிருந்தால் என்னாவது? ஒன்று பகலில் வேண்டுமானால் அழுங்கள். அல்லது இரவில் மட்டும் அழுங்கள்” என்று கூறினர். உலகில் அதிகம் அழுதவர்கள் (பக்கா) ஆதம் (அலை), நூஹ் (அலை), யஃகூபு (அலை), யூசுப் (அலை), ஷுஐப் (அலை), தாவூது (அலை), ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) ஆகிய எழுவர் என்றும் அவர்களில் எட்டாமவராக இவர்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்களின் மறைவு
தந்தை இறந்து ஆறு மாதங்களுக்கு பின் ரமலான் பிறை 3 இல் காலமானார்கள். இவர்களின் இறுதி வேண்டுகோளின் படி, இவர்களின் உடல் தூக்கி செல்லும் சந்துக்கின் மேல் மூடி போட்டு இரவில் எடுத்துச் செல்லப்பட்டு ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுவனத்துப் பெண்களில் மேலானவர்கள் நால்வர் என்றும், அவர்கள் ஃபாத்திமா(ரழி), கதீஜா(ரழி), ஆசியா(அலை) , மர்யம்(அலை) ஆகியவைகளென்றும், அவர்களில் ஃபாத்திமாவே தலைசிறந்தவர்கள் என்றும், பெண்களில் இவர்களே முதன் முதலாகச் சுவனம் புகுவர் என்றும், இவர்களின் பரிவுரையின் மீதே பெண்கள் சுவனம் புகுவர் என்றும், எனவே இவர்களுக்கு ‘சையிதத்துன்நிஸா’, ‘காத்தூனெ ஜன்னத்’ என்ற புகழ்ப் பெயர்கள் ஏற்பட்டன என்றும் கூறப்படுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''ஒருநாள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஃபாத்திமா (ரழி) அவர்கள் சுவனத்துப் பெண்களின் தலைவியாக இருப்பார்கள்" என்ற நன்மாராயத்தைக் கூறினார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் ஃபாத்திமா (ரழி) பற்றி அறிவிக்கின்றார்கள் :
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் போலவே (குணாதிசயங்களைப் பெற்று) இருந்தார்கள். அவர்களது பேச்சு, உட்காரும் முறை, எழுந்திருக்கும் முறை மற்றும் நடக்கும்முறை இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் அவர்களது அனைத்து குணநலன்களும் மற்றும் பாவனைகளும் (நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)) அவர்களைப் போலவே இருந்தது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.