நோன்பு
(இஸ்லாம் பற்றிய தொடர் - 8)
காலை கிழக்கு வெளுப்பதற்குச் சற்று முன்னிருந்து, சூரியன் மறையும் வரை உண்ணாமலும், பருகாமலும், உடலுறவு கொள்ளாமலும் அல்லாஹ்வுக்காக உள்ளச்சத்துடன் இருப்பது நோன்பாகும்.
நோன்பு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. நோன்பு அல்லாஹுத் தஆலாவிற்கு மிகப் பிரியமான வணக்கமாகும். நோன்பு நோற்கும் மனிதன் ஊண், குடிப்பு, உடலின்பம் ஆகியவற்றைத் தடுத்துக் கொள்வதால் அல்லாஹ்வின் குணத்தை மேற்கொண்டவனாகிறான். எனவே அல்லாஹ், “நோன்பு எனக்கே உரியது, அது என் இயல்பு, அது என் இலட்சணம். ஆகவே அதற்குக் கூலி நானே நேரடியாகக் கொடுப்பேன்.” என்று கூறுகிறான். மனித வாழ்க்கையில் அவனை எதிர்த்து நிற்கும் இச்சைகள், ஆசைகள், கெட்ட எண்ணங்கள் மற்றும் தீய சிந்தனைகள் போன்றவற்றிலிருந்து தப்பிச் செல்வது தான் பரிசுத்தத் தன்மையாகும். அத்தகைய பரிசுத்தப் பண்பை நோன்பானது நமக்கு நல்குகிறது. பசித்திருப்பது, தாகித்திருப்பதும் மட்டும் நோன்பின் நோக்கமல்ல. ஆசைகளை அடக்கி, தீய எண்ணங்களை நீக்கி பாவங்களை விட்டு விலகிப் பரிசுத்தமடைவதே நோன்பின் நோக்கமாகும்.
திருமறையில் நோன்பு
தரணி வாழ் மனித குலத்திற்கு தன்னிகரில்லா அருட்கொடையாகத் திகழும் தித்திக்கும் திருக்குர் ஆன் அல்லாஹுவினால் இம்மாதத்தில் தான் இறக்கி வைக்கப்பட்டது.
“ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!” (2 :185)
நம்மிடையே பரிசுத்தத் தன்மையை வளர்ப்பதே நோன்பின் நோக்கம் என்பதை அல்லாஹ் தன் அருள் மறையில் குறிப்பிட்டுள்ளான்.
“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.” (2 :183)
“குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். தவிர, (எக்காரணத் தினாலாவது நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதைவிட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்).” (2 :184)
நோன்பிற்காக சஹர் நேரத்தில் உண்ணவும் பருகவும் அனுமதியளித்த இறைவன் அதனை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கவும் கட்டளையிட்டுள்ளான்.
“இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்;” (2 :187)
நோன்பின் மேன்மையினை அதிக மாண்புடையதாக ஆக்குவது இஃதிகாபாகும். இத்தகைய சிறப்பு மிக்க இஃதிகாப் இருப்பவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆண்டவன் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கியுள்ளான்.
“........ இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்.”(2 :187)
ஹதீதில் நோன்பு
கண்ணியமிக்க ரமலான் மாதம் இறைவனால் முஸ்லிம்களுக்காக வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதியாகும். நோன்பினைப் பற்றி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் பலவகையான சிறப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “ரமலான் எத்தகைய மகத்துவம் வாய்ந்தது என்பது மனிதர்களுக்கு விளங்கி விடுமாயின் வருடமெல்லாம் ரமலானாகவே இருக்க வேண்டுமென்று விரும்புவர்” என்பது நாயகவாக்காகும்.
அண்ணல் நபி அவர்கள், “உங்களிடம் ரமலான் மாதம் வந்து விட்டது. அது பரக்கத்துடைய மாதம், அல்லாஹ் இம் மாதத்தில் உங்களின் பக்கம் கவனம் செலுத்தி தன்னுடைய விசேஷமான அருளை இறக்கிவைக்கிறான். பாவங்களை மன்னிக்கிறான், ஆண்டவன் இம்மாதத்தில் உங்களுடைய துஆக்களை ஏற்றுக் கொள்கிறான். உங்களைப் பற்றி மலக்குகளிடம் பெருமை பாராட்டுகிறான். ஆகவே, உங்களுடைய நன்மைகளை அல்லாஹ்விடம் காண்பியுங்கள். துர்பாக்கியவான் என்பவன் இம்மாதத்திலும் அல்லாஹ்வை விட்டு நீங்கி இருப்பவன் தான்.” என நவின்றுள்ளார்கள்.
“உங்களுடைய வணக்கங்களை விட்டு விட்டு நோன்பாளிகள் துஆக்களுக்கு ஆமீன் சொல்லிக் கொண்டு இருங்கள்” என்பதாக எல்லாம் வல்ல இறைவன் புனித நோன்பு மாதத்தில் அர்ஷை சுமக்கும் மலக்குகளிடம் கூறியுள்ளதாக ஒரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“இம் மாதத்தில் எந்த மனிதர் ஒரு நபிலான நற்செயலைச் செய்து அல்லாஹ்விடம் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறாரோ அவர் ரமலான் அல்லாத மற்ற மாதங்களில் ஒரு பர்ளை நிறைவேற்றியவர் போன்றவராவார். இம்மாதத்தில் ஒரு பர்ளை நிறைவேற்றியவர் 70 பர்லுகளை நிறைவேற்றியவர் போன்றவராவார்.” என நபிகள் பெருமானார் இயம்பியுள்ளார்கள்.
ரமலான் மாதத்தில் அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதற்காக நான்கு காரியங்களை அதிகமாகச் செய்யுமாறு சொல்லப் பட்டுள்ளது.
ரமலான் மாதத்தை பற்றிக் கூறிய அண்ணல் நபி அவர்கள் புனித ரமலான் மாதத்தில் ஒரு வினாடி நேரத்தைக் கூட வீணாகக் கழித்து விடக்கூடாது என்றும், தங்களிடம் இருக்கும் வேலைக்காரர்களின் மீது இரக்கம் காட்டி வேலைகளை எளிதாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ரமலானின் சிறப்பு
இம்மாதம் பொறுமையின் மாதமாக இருக்கிறது. பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும். இது மனிதர்களுடன் கலந்துறவாடி அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிற மாதம், இச் சிறப்பு மிக்க மாதத்தில் ஹலரத் ஜிப்ரீல் (அலை) குர் ஆன் ஷரீப் முழுவதையும் நபிகள் பெருமானுக்கு ஓதிக் காண்பிப்பார்கள் எனவும் நபிகள் நாயகம் அவர்கள் ஓதுவதை ஜிப்ரீல் (அலை) கேட்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
எவராவது ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிப்பாரானால் அது அவருடைய பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கும், நரக நெருப்பில் இருந்து விடுதலை பெறுவதற்கும் காரணமாகி விடும். நோன்பு வைத்தவருடைய நன்மையைப் போன்று இவருக்கும் நன்மைகள் கிடைக்கும் (ஹதீஸ்)
நோன்பாளிக்குரிய நன்கொடைகள்
“என்னுடைய உம்மத்தார்களுக்கு ரமலான் மாதத்தில் ஐந்து விஷயங்கள் பிரத்தியேகமான முறையில் கொடுக்கப் பட்டுள்ளன. அவை ஐந்தும் அவர்களுக்கு முன்னுள்ள எந்த உம்மத்தினருக்கும் கொடுக்கப்பட வில்லை அவையாவன.
நோன்பு நோற்காதவர் சாபத்திற்குரியவரே
கஅப் அப்னு உஜ்ரா (ரழி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றதாக அறிவிக்கிறார்கள். “ஒரு முறை அண்ணல் நபி அவர்கள் எங்களை நோக்கி அனைவரும் மிம்பருக்கு அருகில் வாருங்கள்” எனக் கூறினார்கள். பிறகு, அண்ணல் நபியவர்கள் மிம்பர் படியில் ஏறிய போது “ஆமீன்” என்றும் மூன்றாவது படி ஏறிய போதும் “ஆமீன்” என்றும் கூறினார்கள். அவர்களுடைய உபதேசத்தை முடித்த பின் “ஆமீன்” சொன்னதைப் பற்றி வினவிய போது அதற்கு நபியவர்கள் (நான் முதற்படியில் கால் வைத்து ஏறிய போது) ஹஜ்ரத் ஜிப்ரீல் அவர்கள் என் முன் தோற்றமளித்து, எந்த மனிதன் ரமலான் மாதத்தை அடைந்தும் தன் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற வில்லையோ அவன் நாசமடைவானாக” என்று கூறினார்கள். நான் “ஆமீன்” என்று கூறினேன். பின்பு இரண்டாம் படி ஏறும் போது, “தங்களின் திருநாமம் கூறப்பட்டு தங்களின் மீது ஸலவாத்துச் சொல்லாத மனிதன் நாசமடைவானாக,” என்று கூறினார்கள். நான் “ஆமீன்” என்றேன். நான் மூன்றாவதாக படியில் ஏறியபோது “எந்த மனிதன் வயோதிக மடைந்த தாய் தந்தை இருவரையோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்திருந்து அவர்கள் அவனை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யவில்லையோ அவன் நாசமடைவானாக” என்று கூறினார்கள். நான் “ஆமீன்” என்று கூறினேன். (நூல் : தர்கீப்)
“எந்த, மனிதர் ரமலான் மாதத்தில் எவ்விதக் காரணமுமின்றி, நோயின்றி (வேண்டுமென்றே) ஒரு நாள் நோன்பை விட்டு விடுகிறாரோ அவர் ரமலான் அல்லாத காலம் முழுவதும் நோன்பிருந்தாலும் (அதற்குப் பகரமாக) நன்மையை அடைய முடியாது” என நபி (ஸல்) கூறியதாக அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
தகுந்த காரணமின்றி எவர் ரமலான் மாதத்தில் பகிரங்கமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாரோ அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட வேண்டும் என்பதாக புகஹாக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
“மறதியாக ஏதேனும் உட்கொண்டு, பருகி விட்டால் (அதனால் நோன்பு முறிவதில்லை) அவர் தம் நோன்பை தொடர்ந்து பூரணமாக்கிக் கொள்வாராக. எனெனில் மறதியால் நடந்த அச் செயல் ஆண்டவன் எண்ணத்தின் படி நிகழ்ந்ததாகும்” என நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரி)
திராவீஹின் மகத்துவம்
சிறப்பு மிக்க ரமலான் மாதத்தில் பகல் பொழுதில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாக இருப்பதுடன் இரவு நேரங்களில் சிறப்பு வணக்கமாக தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தாகும். தராவீஹ் தொழுகை கடமையாக இல்லா விட்டாலும் மிக உயர்ந்த சிறப்பும் பெரும் பாக்கியங்கள் நிறைந்ததாகவும், பாவங்கள் மன்னிக்கப்பட காரணமாகவும் இருக்கின்றது.
ரமலான் மாதத்தின் இரவுகளில் எந்த மனிதர் நம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்கின்றாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன என்று எம் பெருமானார் இத் தொழுகையின் மகத்துவம் பற்றிக் கூறியுள்ளார்கள்.
இஃதிகாப் (பள்ளி வாசலில் தங்குவது)
உலக சம்பந்தமான எல்லா காரியங்களையும் ஒதுக்கி விட்டு இறைவன் சன்னிதானத்தில் அவனுடைய தியானத்திலேயே தங்கி இருப்பது இஃதிகாப் என அழைக்கப்படுகின்றது.
கண்ணியமிக்க, ரமலான் மாதத்தின் சிறப்பு வணக்கங்களில் இஃதிகாஃப் இருப்பது ஒன்றாகும். இஃதிகாஃப் இருக்கும் போது மனிதன் எல்லாவித ஈடுபாடுகளையும் துறந்து, மறந்து அல்லாஹ்வின் தலைவாசலிலேயே கிடக்கின்றான். இரவும் பகலும் அல்லாஹ்வின் நினைப்பிலே அவனது தியானத்திலேயே இருக்கின்றான். அல்லாஹ்வின் ஆற்றலை எண்ணித் துதிபாடி அவனிடத்தில் மன்னிப்பையும் அருளையும் வேண்டி நிற்கின்றான்.
நபிகள் பெருமானார் அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். இது அவர்களின் மரணம் வரை வழக்கமாக நடந்து வந்தது என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
“ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து இரவுகளிலே நபிகள் நாயகம் அவர்கள் இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். வீட்டினரையும் விழித்திருக்கச் செய்வார்கள். மிகுந்த ஊக்கத்துடன் (துஆவிலும், தொழுகையிலும், திக்ரிலும்) மிக அதிகமாக ஈடுபட்டிருப்பார்கள்.” என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அருளியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
இஃதிகாஃப் இருப்பவர் பாவங்களை விட்டுப் பாதுகாக்கப் படுகிறார். மேலும் நன்மைகள் அனைத்தும் செய்பவரைப் போன்று நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன” என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக ஹலரத் இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : மிஷ்காத்)
இஃதிகாஃப் இருப்பவர் தூங்கும் நேரம், விழிக்கும் நேரம் அனைத்தும் வணக்கங்களாகக் கணக்கிடப்படுகின்றன இதனால் அல்லாஹ்வின் நெருக்கமும் ஏற்படுகின்றது.
எந்த மனிதர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடியவராக ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பாரோ அவருக்கும் நரகத்திற்குமிடையே அல்லாஹு த ஆலா மூன்று அகழிகளை ஏற்படுத்துகின்றான். அவை ஒவ்வொன்றின் அகலம் வானம் பூமிக்கிடையே உள்ள தூரத்தைவிட அதிகமாகும் என ஒரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோன்பு வைக்க நிய்யத்து
“நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ளி ரமலான ஹாதிஹிஸ்ஸனத்தி லில்லாஹித் தஆலா.”
“இந்த வருட ரமலான் மாதத்தின் ஃபர்லான நோன்பை அல்லாஹுவுக்காக நாளை நோற்க நிய்யத்து செய்கின்றேன்.”
நோன்பு திறக்கும் நிய்யத்து
“அல்லாஹும்ம லக்க ஸும்து வபிக்க ஆமன்த்து வ அலைக்க தவக்கல்த்து வ அலா ரிஜ்கிக்க அப்தர்த்து ஃபதகப்பல் மின்னீ.”
“இறைவா! உனக்காகவே நான் நோன்பு நோற்றேன். உன்னையே ஈமான் கொண்டேன். உன் மீதே பொறுப்புச் சாட்டினேன். நீ அளித்த உணவாலேயே நோன்பு திறக்கின்றேன்.”
ஸஹர்
“ஸஹர்” என்பது “சுபுஹுக்குச் சமீபத்தில் உள்ள நேரத்தில் சாப்பிடும் உணவு” என்பதாகக் காமூஸ் என்ற அரபி அகராதியில் எழுதியுள்ளார்கள். இந்நேரமாகிறது பாதி இரவு சென்ற பின் தொடங்கி கிழக்கு வெளுக்கும் வரையில் இருக்கிறது.
“ஸஹர் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் அதில் பரக்கத் இருக்கின்றது” என்றும் அவர்கள் எப்பொழுதாவது ஸஹர் சாப்பிடுவதற்கு சஹாபாக்களை அழைத்தால் “பரக்கத்துடைய உணவைச் சாப்பிட வாருங்கள்” என்றும் கூறுவார்கள். உணவு ஏதும் இல்லாவிட்டால் ஒரு துண்டு பேரீச்சம் பழம் அல்லது ஒரு மிடறு தண்ணீராவது குடித்துக் கொள்ளுங்கள் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நோன்பைப் பற்றிச் சில அறிஞர்களின் கருத்து
நோன்பின் ஃபர்லுகள்
நோன்பின் சுன்னத்துகள்
நோன்பு எவர் மீது கடமை
நோன்பை முறிப்பவை
நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்
மேற்கூரிய ஐந்து நாட்களிலும் நோன்பு வைப்பது கூடாது.
ஈதுல் பித்ரு (ஈகைப் பெருநாள்)
இறைவனை அடைவதற்காக மனோ இச்சைகளை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி இறைவனின் விருப்பத்திற்காகத் தன் விருப்பங்களை தியாகம் செய்து பயிற்சி பெறும் புனித மாதமாக ரமலான் திகழ்கின்றது. “ஈதுல் பித்ரு” உயர்ந்த பொருளைத் தன்னுள் கொண்டுள்ளது. “ஈத்” என்றால் மீண்டும் மீண்டும் வரும் இன்பம் என்று பொருள். “பித்ர்” என்ற அரபிச் சொல், வழங்கும் ஈகையைக் குறிப்பதாகும். ரமலான் முடித்து ஷவ்வால் முதல் தேதி ஈதுல் பித்ர் வருகிறது. அப்பெருநாள் அன்று புதுமணம் பூசி நல் ஆகாரம் புசித்து இன்புற்றிருக்க வேண்டியப் பெருநாளாக, இந்நாள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
ஈதுத் தொழுகை என்ற சிறப்பு வணக்கமும் இந்த ஈதுப் பெருநாளிலே இடம் பெறும் விசேஷ அம்சமாகும். இந்த தொழுகைக்கு செல்லும் முன் “ஸதகத்துல் ஃபித்ரு” (பித்ரா பணம்) தனக்காகவும், தன் சிறு குழந்தைகளுக்காகவும் கொடுப்பது வாஜிபு. ஆனால் பருவமடைந்த தன் பிள்ளைகளுக்காகவும், தன் மனைவிக்காகவும் ஃபித்ரா கொடுப்பது வாஜிபல்ல. பருவமடைந்த பிள்ளைகளிடம் “ஸதக்கத்துல் ஃபித்ரு” கொடுக்க கடமைப்பட்ட அளவுக்குச் சொத்து இருந்தால் அவர்கள் கொடுப்பது கடமை. மேலும் மனைவி, சிறு குழந்தைகளுக்கும், தனிச் சொத்திருந்தால் அதிலிருந்து கொடுக்க வேண்டும்.
(பெருநாள் பற்றியும், ஃபித்ரா பற்றியும் இன்ஷா அல்லாஹ் விரிவான கட்டுரை வெளி வர உள்ளது. விரைவில் எதிர் பார்க்கவும்.)
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.