முஹம்மது (ஸல்)
நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) (கி.பி 570 - கி.பி 632) அவர்கள் அரபு நாட்டின் மத. சமூக, மற்றும் அரசியல் தலைவர் மற்றும் இஸ்லாத்தை போதித்தவர் ஆவார்கள். இஸ்லாமிய கோட்பாடுகளின் படி ஆதம்(அலை), இப்ராகிம்(அலை), மூஸா(அலை), ஈஸா(அலை) மற்றும் அணைத்து நபிமார்களின் ஏகத்துவ போதனகளையும் உபதேசங்களையும் உறுதிப்படுத்த இறைவனால் அனுப்பபட்டவர். இந்த உலக மக்களுக்கு இறைவழிகாட்ட வந்த இறுதி இறைத்தூதர் ஆவார்கள்.
அரேபியாவில் அக்காலத்தில் மிகப்பெரிய வணிகக்கேந்திரமாகவும், புனிதகஅபாவிற்க்கு அரபு ஹஜ்யாத்திரிகர்கள் வரும் நகரமாக மக்கா விளங்கியது. நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 55 நாட்களுக்கு முன் யமன் நாட்டிலிருந்து அப்ரஹா என்பவன் கஅபாவை இடித்துத் தகர்க்க 13யானை கொண்ட பெறும் படை கொண்டு வந்தான், “முஹஸ்ஸிர்” என்ற பள்ளத்தாக்கை அடைந்த பின் யானைகள் கஅபாவை நோக்கிச் செல்ல மறுத்துவிட்டது. அந்நிலையில் அல்லாஹ் அவர்கள் மீது சிறிய பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்தான். அவை சுடப்பட்ட சிறிய கற்களை அவர்கள் மீது எறிந்தன. அதன் மூலம் அவர்களை தின்னப்பட்ட வைக்கோல்(சாணம்)களைப் போன்று அல்லாஹ் ஆக்கிவிட்டான். அல்லாஹ் தனது நபி மற்றும் புனித வீட்டின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான தொடக்கமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
மக்கா குறைஷியர் குலத்தில் அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ், வஹப் இப்னு அப்துமனாஃபின் மகள் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 570 ஏப்ரல் 20ம் தேதி (ரபீவுல் அவ்வல் பிறை 12) அதிகாலையில் அண்ணல் நபி பிறந்தார்கள். இவர் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் தந்தை அப்துல்லாஹ் காலமாகிவிட்டார். இவர் ஆறு வயது சிறுவராக இருந்தபோது, தாயார் ஆமினாவும் மறைந்தார். அதன் பிறகு தம் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். அண்ணல் எட்டு வயதை எட்டுமுன் பாட்டனாரும் காலமானார். அதன்பிறகு தம் பெரிய தந்தை அபூதாலிபால் வளர்க்கப்பட்டு, வாலிப நிலையடைந்தார்.
ஆடு, ஒட்டகம் மேய்ப்பது முதல் வணிகம் வரை பல தரப்பட்ட பணிகளைச் செய்தார். ஏட்டுப்படிப்பு அறவே பெறாவிட்டாலும், அறிவுக்கூர்மை மிக்கவராக திகழ்ந்தார். இளமை முதலே இனிய பழக்க வழக்கங்களின் இருப்பிடமாக இருந்து பெரியவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். எப்போதும் உண்மையே பேசினார். நேர்மையை எப்போதும் கடைப்பிடித்தார். இதனால், மற்றவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார். எல்லோரும் அவரை ‘அல் அமீன்’ என்றே அழைத்தார்கள்.
மக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அபூதாலிபிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய கூறினார்கள். அபூதாலிப் சிறுவரான நபி(ஸல்) அவர்களை முன்னிருத்தி கையேந்தி பிரார்த்தித்தார். மாநபிக்காக மாபெரும் மழையால் கணவாய்களில் வெள்ளம் கரை புரண்டோடியது. மக்கா நகரும் அதன் சுற்றுபுறங்களும் பசுமையாக மாறின. நபி(ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக ‘ஷாம்’(சிரியா) தேசத்திற்க்கு அழைத்து சென்றார். அங்கு புஸ்ரா நகரில் ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி வணிகக் கூட்டத்தை பிளந்து கொண்டு வந்து சிறுவரான நபி(ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றி “இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர்! என்று கூறி அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். நபி(ஸல்) அவர்களின் 20வயதில் உக்காள் சந்தையில் குறைஷியரும் கினானாவும் கைஸ் அய்லான் குலத்தவருடன் சண்டையிட்டனர், இதில் கலந்து கொண்டு தந்தையின் சகோதரர்களுக்கு அம்பு எடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் 25 வது வயதில் கதீஜா அவர்களின் வணிகப் பொருட்களுடன் ஷாம் சென்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக வணிகம் செய்து பெறும் வருவாயுடன் மக்கா திரும்பினார்கள். கதீஜா தங்களது பொருளில் இதற்குமுன் கண்டிராத பெரும் வளர்ச்சி மற்றும் நபி(ஸல்) அவர்களின் பேச்சில் உண்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை கண்டார். கணவரை இழந்திருந்த கதீஜாவை பல குறைஷித் தலைவர்கள் மணமுடிக்க விரும்பியபோது அதனை மறுத்து வந்த கதீஜா தனக்கு எற்ற கணவர் முஹம்மது (ஸல்) அவர்கள் தான் என முடிவு செய்து, தனது எண்ணத்தை தோழி நஃபீஸா பின்ந் முநப்பிஹ் இடத்தில் கூற நபி(ஸல்) அவர்களும் அதை ஒப்புக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தனது தந்தையின் சகோதரர்களிடம் கூறினார்கள். அவர்கள் கதீஜாவின் தந்தையுடைய சகோதரரிடம் பேசி திருமணம் நடைபெற்றது. நபி(ஸல்) அவர்கள் 20 மாடுகளை மஹராகக் கொடுத்தார்கள். அப்போது கதீஜா(ரழி) அவர்களுக்கு வயது 40, நபி (ஸல்) அவர்களின் வயதோ 25. அவர் அறிவாலும், செல்வத்தாலும், குடும்பத்தாலும் மிகச் சிறந்த பெண்மணியாக விளங்கினார். நபி(ஸல்) அவர்களுக்கு இவரே முதல் மணைவி. இவர் மரணித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் வேறு பெண்ணை மணமுடித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களின் பிள்ளைகளில் இப்றாஹீமைத் தவிர அனைவரும் அன்னை கதீஜாவுக்கு பிறந்தாவர்களே! முதல் குழந்தை காஸிம், பிறகு ஜைனப், ருகைய்யா, உம்முகுல்ஸும், ஃபாத்திமா, அப்துல்லாஹ் ஆகியோர் பிறந்தனர். ஆண் மக்கள் அணைவரும் சிறு வயதிலேயே மரணமடைந்தனர். பெண் மக்கள் அணைவரும் இஸ்லாம் வரும் வரை வாழ்ந்து, இஸ்லாத்தை ஏற்று ஹிஜ்ரத்தும் செய்தார்கள். ஃபாத்திமாவைத் தவிர்த்து மற்ற மூவரும் நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே மரணமடைந்து விட்டனர்.
நபி(ஸல்) அவர்களின் 35வது வயதில் குறைஷியர்கள் கஅபாவைப் புதுப்பித்தனர். அதில் ஹஜ்ருல் அஸ்வதின் இடம் வந்தபோது யார் எடுத்து வைப்பது என சர்ச்சையாகி போராகும் நிலையில் அபூ உமய்யா “கஅபாவில் முதல் முதலாக நாளை நுழைபவரின் ஆலோசனை ஏற்பது” என கூறினார். அதை மக்கள் ஏற்றனர். அதிகாலை நபி(ஸல்) அவர்கள் நுழைந்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம் விஷயத்தைக் கூறி தீர்ப்பு வழங்க வேண்டினர். அதற்க்கு சம்மதித்த நபி தம் மேல் துண்டை எடுத்து விரித்தார். அதன் நடுவில் கல்லை தூக்கி வைத்தார். அதன் நான்கு மூலைகளையும், சர்ச்சை செய்த நான்கு குடும்பத் தலைவர்கள் பிடித்து தூக்கி வரும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே தூக்கிவர அதற்குரிய இடத்தில் நாயகம் அக்கல்லை எடுத்து வைத்தார். இதனால் ஏற்படவிருந்த சச்சரவு நீங்கி எல்லோருக்குமே மகிழ்ச்சி ஏற்பட்டது.
இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்டிருந்த நாயகம் 38 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். தம்மைச் சுற்றி நாள்தோறும் நடைபெறும் மது, சூது, விபச்சாரம் போன்ற சமூக ஒழுக்கக்கேடான செயல்கள் அவரை அதிகம் வருத்தின. அறியாமையினாலும், மூட நம்பிக்கையினாலும் இறைவன் பெயரால் அவர்கள் இழைத்து வரும் அநீதியான அனாச்சாரச் செயல்கள் அவரைப் பெரிதும் சிந்திக்கத் தூண்டின. இத் தீய போக்கிலிருந்து மக்களை மீட்க வழி தேடினார்.
மக்கா நகருக்கு அருகில் உள்ள ஹிரா குகையில் நாட்கணக்கில் தனிமை தவம் இருந்தார். தியான முறைகள் மூலம் தம் உள்ளொளியைப் பெருக்க முனைந்தார். அங்கு இறைவனைக் குறித்தும், படைப்பின் அற்புதங்களைக் குறித்தும் ஆழ்ந்த சிந்தனையிலும் தியானத்திலும் ஈடுபடலானார். இதற்காகப் பல நாட்கள் பசித்திருந்தார், தனித்திருந்தார், மனதை அடக்கி அறிவு வழி சிந்திக்க தவமிருந்தார். இவ்வாறு நாட்கள் வாரங்களாகவும் மாதங்களாகவும் ஆண்டுகளாவும் உருண்டோடின.
கி.பி.610 ரமலான் மாதம் 21வது பிறை (அவரின் நாற்பதாம் வயதில் ஒரு நாள்) இரவு ஹிரா குகையில் தியானத்தில் இருந்த முஹம்மது ‘ஒதுவீராக’ எனும் குரல் கேட்டுத் திடுக்கிட்டார். அவர் முன் காட்சியளித்த ஒர் உருவம் ‘நான் தான் ஜிப்ரயீல்’ என்று கூறியது. “இறைவனுடைய செய்திகளையும், அவனுடைய வேத வெளிப்பாடுகளையும் மனித இனத்திற்கு அறிவிப்பதற்காக நீர் இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கிறீர் என்பதை உமக்குத் தெரிவிப்பதன் பொருட்டு இறைவனால் அனுப்பப் பட்ட வானவர் நான்” என்று அவ்வுருவம் தன்னை அடையாளம் காட்டி கொண்டது. அத்துடன் முஹம்மது இறைவனின் நபியாக, தூதராக நியமிக்கப்பட்டுள்ளதையும் அறிவித்து, அவரை ஓதப் பணித்தது. நான் ஓதுபவன் அல்லனே (எனக்கு ஓதத் தெரியாதே!) இதை கேட்ட வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) அண்ணலாரை இறுகத் தழுவினார். பின் ‘ஓதுக’ என்றார். அப்போதும் பெருமானார் ஓதவில்லை. மொத்தம் மும்முறை ஜிப்ரீல்(அலை) தழுவிய பின்னர் பெருமானார் வாயைத் திறந்து ஓதத் தொடங்கினார். ‘இக்ர உ’ என தொடங்கும் இறை மறை வசனங்கள் ஐந்து பெருமானார் வாய் மூலம் முதன் முதலாக வெளிப்பட்டன.
இந்த அற்புத நிகழ்ச்சியைத் துணைவியார் கதீஜாவிடம் கூறினார். பெருமானார் கூறிய அனைத்தையும் அம்மையார் நம்பினார். பெருமானாரை இறைதூதராக ஏற்றுக் கொண்டார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மது அவனுடைய திருத்தூதர் என்பதில் முழு நம்பிக்கை வைத்து இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை முதன்மையாளராக இணைத்துக் கொண்டார். பின்னர் நபி(ஸல்) அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாஸா(ரழி), நபி(ஸல்) அவர்கள் பராமரிப்பில் இருந்த சிறுவர் அலி(ரழி), உற்ற தோழரான அபூபக்ர்(ரழி) ஆகிய அணைவரும் அழைப்புப் பணியின் முதல் நாளிலேயே இஸ்லாமைத் தழுவினார்கள். பிறகு அபூபக்ர்(ரழி) தனக்கு மிக நம்பிக்கைக்கு உடையவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் முதலானோர் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டு இணைந்தனர்.
இன்றைய உலக மக்களில் நான்கில் ஒருவர் வீதம் நம்பிக்கை வைத்துள்ள இஸ்லாம் மார்க்கம் இவ்வாறு தான் வளர்ந்தது. நல்லவர்கள் சிலர் மக்காவில் நபிகள் நாயகம்(ஸல்) போதித்த இஸ்லாமிய நெறியில் நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களாகி, நல்வழி நடந்தனர். இதைக் கண்டு குறைஷிகள் கோபமும் கொதிப்பும் கொண்டனர்.
மக்காவாசிகள் பல தெய்வ உருவ வழிப்பாட்டில் மூழ்கிக் கிடந்தனர்.”உருவமற்ற, இணை-துணை இல்லாத அல்லாஹ் ஒருவனே இறைவன்” என்று பெருமானார் கூறுவதை ஏற்க மறுத்தனர். தீய வழிகளில் ஒழுக்கக் கேடர்களாக வாழ்ந்த மக்காவாசிகளில் சிலர் பெருமானார் கூறும் நன்னெறிகளைக் கேட்டு வெகுண்டனர். மிரட்டி அடக்கி ஒடுக்க முயன்றனர். பல வகையான தீங்குகளை இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு ஏற்படுத்தினர். எண்ணற்ற இடர் ஏற்பட்டபோதிலும் நபிகள் நாயகம் (ஸல்) உறுதி குறையாமல் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி வந்தார்கள், மக்கா வந்த மதீனாவாசிகள் சிலரும் இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
இதனால் கலக்கமடைந்த எதிரிகள் நபிகள்நாதரை பெருஞ்செல்வத்துக்கு அதிபதியாகவும், மன்னராகவும் ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறினர். அதற்குப் பகரமாக “ஒரே இறைவன்” என்ற கொள்கையை விட்டுவிடும் படியும் வேண்டினர். இதற்கெல்லாம் சற்றும் இணங்காமல் தொடர்ந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வந்தார் நபிகள் நாயகம். இறுதியில் அவரைக் கொல்ல திட்டம் தீட்டினர். அப்போது இறை கட்டளைபடி நபிகள் நாயகமும், தோழர் அபூபக்ரும் மக்காவை விட்டு வெளியேறினர். மதீனா செல்லும் வழியில் இருந்த தெளர் குகையில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரிகள் அவர்களைத் தேடி குகையின் வாயிலை அடைந்தனர். அங்கே இறையருளால் சிலந்தி வலை பின்னியிருந்தது. கூட்டில் புறா முட்டையிட்டு இருந்தது. அதனால் குகையினுள் யாரும் இருக்க முடியாது என எண்ணித் திரும்பி விட்டனர்.
மீண்டும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அபூபக்ர்(ரழி) அவர்களும் மதீனா நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். இவ்வாறு பெருமானார்(ஸல்) மக்காவிலிருந்து மதீனா சென்ற நிகழ்ச்சியே ‘ஹிஜ்ரத்’ என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து தான் இஸ்லாமிய ஆண்டான ‘ஹிஜ்ரி’ தொடங்குகிறது.முன்னரே இஸ்லாமிய நெறியில் தங்களை இணைத்துக் கொண்டிருந்த மதீனா வாசிகள் பெருமானாரை வரவேற்றனர். தங்களுடன் தங்க வைத்துக் கொண்டனர்.
நாளடைவில் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்ட மக்காவாசிகள் மதீனா வந்து சேர்ந்தனர். மதீனாவில் முதன்முதலாக தொழுகைக்கான பள்ளிவாசல் ஒன்றை நபிகள் நாயகம்(ஸல்) கட்டினார். அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்று விடுதலை பெற்ற கருப்பரான பிலால் அவர்களுக்கு தொழுகைக்கு அழைக்கும் ‘பாங்கு’ சொல்லும் பணியை அளித்தார்.
மதீனாவில் வேகமாக இஸ்லாம் பரவி வருவதைக் கண்டு மக்காவாசிகள் வெகுண்டனர். அவர்கள் பெரும்படையுடன் மதீனா மீது படையெடுத்துச் சென்றனர். “பத்ரு” எனுமிடத்தில் நடந்த முதற்போரில் பொருமானார்(ஸல்) மிகச்சிறு படையுடன் சென்று எதிரிகளுடன் போரிட்டார். இதில் பொருமானாருக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.
தோல்வியடைந்த மக்கா குறைஷியர் அடுத்த ஆண்டே மீண்டும் படையெடுத்துச் சென்று “உஹத்” எனுமிடத்தில் போரிட்டனர். இதில் முஸ்லிம்களே இறுதி வெற்றி பெற்றனர். இஸ்லாம் வேகமாக வளர்ந்து எங்கும் பரவியது.
நபிகள் நாயகத்தை வெற்றி கொள்ள இயலாது என்பதை நாளடைவில் குறைஷியர் உணர்ந்தனர். உம்ரா செய்வதற்கு 1400 முஸ்லிம்களுடன் பெருமானார்(ஸல்) மக்கா நேக்கிப் புறப்பட்டார். போரில் வீணாக மக்கள் மடிவதை தவிர்க்க ஹுதைபிய்யா எனுமிடத்தில் பெருமானார் குறைஷிகளோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி அடுத்த ஆண்டு உம்ரா – ஹஜ் செய்ய வருவதாக கூறி பெருமானார் மதீனா திரும்பினார். ஒப்பந்தப்படி குறைஷிகள் நடக்கவில்லை. அடுத்த வருடம் ஹுதைபியாவில் கலந்து கொண்ட தோழர்கள் அணைவருடனும் ‘உம்ரத்துல் கழா” உம்ராவை நபிகள் நிறைவேற்றினார்கள். மக்காவிலிருந்தும் மதீனாவை சுற்றிலும் மக்கள் பெரும் அளவு இஸ்லாத்தில் இணைந்தார்கள். இதன் காரணமாக சிறிய அளவிலும் பெரிய அளவிலும் பல போர்கள் உருவாயின, நபிகள் நாயகம் தற்காப்புக்காக முஸ்லிம் படை பிரிவுகள் உருவாக்கி பல வித சதிகள் அனைத்திலும் வெற்றி பெற்றார்கள்.
ஹிஜ்ரி 8, ரமழான் பிறை 10ல் நபி(ஸல்) 10,000 தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். மக்கா அருகில் உள்ள குன்றின் மேல் தங்கினர். இரவில் நீண்ட வரிசையாக அடுப்பு மூட்டினர். மிகப்பெரும் பரப்பில் அடுப்பெரிவதால் மாபெரும் படையுடன் அண்ணலார் வந்து தங்கியிருப்பதாகக் குரைஷிகள் கருதினர். இனி எக்காரணம் கொண்டும் முஸ்லிம்களை வெல்ல முடியாது என்று கருதினர். பெருமானாரிடம் சரணடைவது என முடிவு செய்தனர். பின் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து குறைஷியர் தம் தோல்வியை ஒப்புக்கொண்டனர். இவ்வாறு போர் ஏதும் இன்றி, மாநபி மக்கா நகரைக் கைப்பற்றி வெற்றி பெற்றார்கள். எதிரிகள் பலரும் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டு இணைந்தனர்.
இதனால் பெருமானாரின் பெருமையும் புகழும் திசை எங்கும் பரவின. இஸ்லாமிய மார்க்கத்தின் நன்னெறிகளை அறிந்துணர்ந்த பிற பகுதி மக்கள் முஸ்லிம்களாயினர். இதனால் அரேபியாவெங்கும் அடுத்துள்ள நாடுகளிலும் இஸ்லாம் வலுவாக வளர்ந்து உலகப் பெரும் மார்க்கமாக நிலை பெற்றது. ஹிஜ்ரி 10ம் ஆண்டு அல்லாஹ்வின் விருப்ப படி ஹஜ்ஜத்துல் விதா ஹஜ்ஜை நிறைவேற்றி தம் இறுதி இறைத்தூதை முழுமைப் படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) இறை வாக்குப்படி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதர் ஆவார்.
உலகுக்கோர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய அண்ணலார் ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் தம் அறுபத்து மூன்றாம் வயதில் மதினாவில் காலமானார்கள். பெருமானார் மதீனாப் பள்ளியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
சுருங்கக் கூறின் நபி (ஸல்) முழுமை பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது.அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக்கற்றுக் கொடுத்தான்.
‘‘நிச்சயமாக நீங்கள் நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.'' (அல்குர்ஆன் 68:4)
என்று அவர்களைப் புகழ்ந்து கூறியிருக்கிறான்.
இந்த நற்பண்புகள் நபியவர்கள் மீது மக்களுக்கு விருப்பத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது. நாம் அணைவரும் நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகளை பின் பற்றி நபியவர்கள் மீது விருப்பத்தையும்நெருக்கத்தையும் ஏற்படுத்தி கொண்டு இருலக வாழ்விலும் வெற்றி அடைய வேண்டுகிறோம்..
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளின் வருட தொகுப்பு | |
கி.பி 570 | நபி(ஸல்) அவர்களின் தகப்பனார் அப்துல்லாஹ் அவர்கள் மரணம். |
கி.பி 570 | அரபு நாட்டில் மக்காவில் ரபியுல் அவ்வல் பிறை 12 அன்று பிறந்தார்கள் |
கி.பி 577 | நபி(ஸல்) அவர்களின் தாயார் ஆமினா அவர்கள் மரணம். |
கி.பி 583 | நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் சிரியா (“ஷாம்)க்கு அழைத்து செல்லல் |
கி.பி 595 | கதீஜா பிராட்டியாரின் சந்திப்பு - திருமணம் |
கி.பி 597 | முதல் மகள் ஜெய்னப் பிறப்பு- பின் தொடர் ஆண்டுகளில் ருக்கையா, உம்மு ஹுல்தும் மற்றும் ஃபாத்திமா ஜொஹாரா பிறப்பு |
கி.பி 610 | அல் குர் ஆனின் மறுமலர்ச்சி மக்கா அருகில் ’ஜபல் அன் நூர்’ மலையில் உள்ள ஹிரா குகையில் இருந்து தொடங்கியது. |
கி.பி 610 | 40 வயதில் ஹிரா குகையில் வானவர் ஜிப்ரீல்(அலை) தோன்றி “அல்லாஹ்வின் தூதரே” என்று அழைத்தார்கள். |
கி.பி 610 | அல்லாஹ்வின் பக்கம் இரகசிய அழைப்பு பணி தொடங்கினார்கள். |
கி.பி 613 | மக்காவில் பகிரங்க அழைப்பு பணி தொடங்கினார்கள் |
கி.பி 614 | நபி(ஸல்) மற்றும் தோழர்களுக்கு அதிகமான துன்புறுத்தல் ஆரம்பம் |
கி.பி 615 | முஸ்லிம்களில் ஒரு குழு எத்தியோப்பியா(ஹபஷா)விற்கு குடிபெயர்தல். |
கி.பி 616 | பனூ ஹாஷிம் குலத்தவர்களை முழுமையாக ஒதுக்கி வைத்தல் ஆரம்பம். |
கி.பி 619 | பனூ ஹாஷிம் குலத்தவர்களை ஒதுக்கி வைத்தல் முடிவுக்கு வந்தது. |
கி.பி.619 | நபி(ஸல்) அவர்களின் மனைவி கதீஜா(ரழி) மரணம்,&அபூதாலிப் மரணம் |
கி.பி 620 | மிஃராஜ் என்னும் விண்ணுலக பயணம் நடந்தது |
கி.பி 622 | யாத்ரிப் என்னும் மதீனாவுக்கு குடிபெயர்தல்(ஹிஜ்ரத்) |
கி.பி 623 | பத்ரு போர் – முஸ்லிம்களின் முதல் போர் – முஸ்லிம்கள் வெற்றி |
கி.பி 625 | உஹுத் போர் – இறுதியில் முஸ்லிம்கள் வெற்றி |
கி.பி627 | மதீனா அகழ் யுத்தம் அல்லது முற்றுகை போர் |
கி.பி 628 | ஹுதைபிய்யா உடன்படிக்கை |
கி.பி 629 | மக்காவை வெற்றி கொள்வது |
கி.பி 632 | நபி(ஸல்) அவர்களின் (ஹஜ்ஜத்துல் விதா) ஹஜ் |
கி.பி 632 | ரபீஉல்அவ்வல் பிறை12 நபி (ஸல்) அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. |
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.