Home


மூஸா அலைஹிஸ்ஸலாம்

        மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களில் தோன்றிய மாபெரும் நபியும், “தெளராத்” அருளப் பெற்ற இறைவனின் திருத்தூதரும் ஆவார்கள். கொடுங்கோன்மையில் திளைத்திருந்த ஃபிர் அவ்னிடம் சென்று நீதி மார்க்கத்தை எடுத்துக் கூறுமாறு பணிக்கப்பட்டார்கள். அவ்வாறே மூஸா (அலை) அவர்கள் ஃபிர் அவ்னுடைய தர்பாருக்குச் சென்று தீன் நெறியை விளக்கிக் காட்டினார்கள். ஆனால், மமதை மிக்க மன்னனும் அவனது கூட்டத்தாரும் இறுதி வரை கர்வம் நிறைந்தவர்களாகவே இருந்ததோடு மூஸா (அலை) அவர்களுக்குப் பெரிதும் இன்னல் விளைவித்து வந்தனர். ஆகவே மூஸா (அலை) அவர்கள் தங்கள் கூட்டத்தாரை அழைத்துக் கொண்டு எகிப்து தேசத்தை விட்டு வெளியேறிச் சென்றார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றான் ஃபிர் அவ்ன். அதுபோது, இறைவனின் ஆணைக் கொப்ப மூஸா (அலை) அவர்கள் தமது கையில் இருந்த ‘அஸா’வால் (கைத்தடியால்) கடல் நீரை அடித்ததும், கடல் இரண்டாகப் பிளந்து வழி விட்டது மூஸா (அலை) அவர்கள் மற்றும் கூட்டத்தார் அக்கரை சென்றடைந்தனர். விரட்டி வந்த ஃபிர் அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தார்கள், பிளவு கண்ட கடல் வழியே இறங்கி விரைந்து கொண்டிருக்கையில் கடல் ஒன்றாக கூடிவிடவே அந்த கூட்டத்தார் அனைவரும் ஃபிர் அவ்ன் உட்பட கடலில் முழ்கி இறந்தனர்.

ஆரம்ப கால வாழ்வு

        மூஸா (அலை) அவர்களின் தந்தை பெயர் இம்ரான். அன்னை பெயர் யூகானிது. மூஸா (அலை) அவர்கள் பிறப்பதற்கு முன் எகிப்து நாட்டு அரசன் ஃபிர் அவுன், ஒரு கனவு கண்டு, தம் ஆட்சிக்கு முடிவு கட்டும் ஒரு குழந்தை அன்று பிறந்ததை அது முன்னறிவிப்பு செய்வதாக  நிமித்திகர்கள் மூலம் அறிந்து அது முதல் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொலை செய்தான். எனவே, இவர்களை ஈன்ற தாய் ஒரு மரப் பெட்டியை செய்து அதில் இவர்களை வைத்து நைல் (நீல) நதியில் விட்டார். அது ஃபிர் அவ்ன் மாளிகை அருகே ஒதுங்கியது.

ஃபிர் அவுன் இல்லத்தில் வளர்ந்த மூஸா (அலை)

        ஃபிர் அவ்னின் மக்கள் அதைத் திறந்து பார்த்தபொழுது அதில் அழகிய ஆண் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு அதனை மாளிகை எடுத்து வந்தனர். அதன் அழகின் வயப்பட்ட ஃபிர்அவ்னின் கரம் படாத அவன் பத்தினி மனைவி ஆசியா அம்மையார் அதனை எடுத்து வளர்த்தனர். ஃபிர் அவ்ன் அதனைக் கொல்ல முற்பட்ட பொழுது, “குழந்தையைப் பார்த்தால் தாங்கள் குறிப்பிட்ட தேதிக்கு முற்பட்டுப் பிறந்த குழந்தை போன்று பெரிதாக இருக்கிறது. எனவே, வீண் பாவத்தை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டாம்” என்று ஆசியா அம்மைய்யார் கூற, ஃபிர் அவ்ன் அமைதியுற்றான். அதன் பின் ஃபிர் அவ்னின் இல்லத்தில் இவர்கள் வளர்ந்து வந்தார்கள்.

சமாதானம் செய்ய சென்ற இடத்தில் கொலை

‘சாமிரி’ என்பவனுக்கும் அரண்மனையில் ரொட்டி சுடும் ‘பாத்தூன்’ என்பவனுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அக்காலை சாமிரி ஃபிர் அவ்னின் வீட்டில் வளர்ந்து வந்த மூஸா (அலை) அவர்களிடம் உதவி வேண்டினான். இருவருக்கும் இடையே சமாதானம் செய்விக்க முயன்ற மூஸா (அலை) அவர்களை பாத்தூன் அடிக்கப் பாய்ந்த பொழுது அவர்கள் அவன் மீது ஒரு குத்துக் குத்தினர். அவன் கீழே விழுந்து இறந்தான். இச் செய்தி ஃபிர் அவ்னின் காதுக்கும் எட்டி, அவன் மூஸா (அலை) அவர்களைப் பிடித்து வருமாறு ஆணையிட, மூஸா (அலை) அவர்கள் நாடு விட்டு அகன்றனர்.

மத்யன் சென்று ஆடு மேய்க்கும் பணி

        அரச தண்டனைக்கு பயந்து மதியனுக்கு ஒடி வந்த மூஸா (அலை) அவர்கள் ஒரு மர நிழலில் வீற்றிருந்தனர். ஆங்கிருந்த கிணற்றின் மீதிருந்த பெருங்கல்லைச் சில இடையர்கள் வந்து புரட்டித் தம்முடைய ஆடுகளுக்கு நீர் இறைத்து அருந்தச் செய்து விட்டு அக்கிணற்றை மூடிச் சென்றனர். அப்பொழுது ஆங்குத் தங்களுடைய ஆடுகளுடன் ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்த இரு பெண்களை நோக்கி, “நீங்கள் யார்? வந்த அலுவல் யாது?” என்று மூஸா(அலை) அவர்கள் வினவ, தாங்கள் ஷுஐப் (அலை) அவர்களின் மகளிர் என்றும் இடையர்களின் ஆடு குடித்து எஞ்சிய தண்ணீரைத் தங்களின் ஆடுகளுக்குக் குடிப்பாட்ட இங்கு ஒவ்வொரு நாளும் வருவதாகவும் இன்று அவர்களின் ஆடுகள் நீர் அனைத்தையும் குடித்துச் சென்று விட்டன என்றும் கூறினர்.

        அவர்கள் மீது இரக்கமுற்ற மூஸா (அலை) அவர்கள், அக்கல்லைப் புரட்டி நீர் இறைத்து அப்பெண்களின் ஆடு மாடுகளுக்கு நீர் புகட்டினர். இதனை இல்லம் திரும்பியதும் சபூரா தம் தந்தையிடம் கூற, அவரை அழைத்து வருமாறு தம் மகளிடம் பணித்தனர். தம் இல்லம் வந்த மூஸா (அலை) அவர்களுக்கு அபயம் நல்கி உணவளித்தனர் ஷுஐப் (அலை) அவர்கள். அவர்கள் உடல் உரமும் ஒழுக்க உயர்வும் பெற்றவர் என்று கூறி அவர்களைத் தங்களின் ஆடுகளை மேய்க்கும் பணியில் அமர்த்துமாறு தம் தந்தையிடம் பரிந்துரைத்தனர் சபூரா. அவ்வாறே செய்தனர் ஷுஐப் (அலை) அவர்கள்.

திருமணம்

        சின்னாட்கழித்து, மூஸா (அலை) அவர்களிடம் ஷுஐப் (அலை) அவர்கள், “எட்டாண்டுகள் தம் ஆடுகளை மேய்ப்பின் தம் மகள் ஒருவரை மணமுடித்து வைப்பதாகக்” கூறினார். அவ்வாறே எட்டாண்டுகள் அவர்களின் ஆடுகளை மேய்த்துத் திருமணத்தின் மூலம் சபூராவின் கரம் பற்றினர் மூஸா (அலை) அவர்கள்.

இறைவனுடன் உரையாடி நபித்துவம் பெற்றது

        பின்னர் மூஸா(அலை) அவர்கள் எகிப்து நாடு திரும்பும் பொழுது சபூரா அவர்கள் நிறை கர்ப்பிணியாக இருந்தனர். அவர்களிருவரும் வழியில் ‘துவா’ என்னும் இடத்தை அடைந்த பொழுது இருட்டி விட்டது. சபூராவால் ஒர் அடியேனும் அதற்கு மேல் நடக்க இயலாத்தால் வழி தெரிந்து வரவோ அல்லது நெருப்புக் கொணரவோ எண்ணி தூரத்தில் தெரிந்த ஒரு நெருப்பை நோக்கி மூஸா (அலை) அவர்கள் மட்டும் தனியாக நடந்து சென்றார்கள். அப்பொழுது தான் இறைவன் மூஸா (அலை) அவர்களுடன் உரையாடினான்.

        இவர்களுடன் 12,400 செய்திகளைப் பேசி, இவர்களின் சகோதரர் ஹாரூனுடன் ஃபிர் அவ்னிடம் சென்று அவனை நேர்வழிப் படுத்துமாறு இறைவன் ஆணையிட்டான். இவ்வாறு இவர்களுக்கு நபித்துவம் ஏற்பட்ட பொழுது இவர்களின் வயது 49 ஆண்டுகளும் 37 நாள்களுமாய் இருந்தது.

ஃபிர் அவ்னுக்கு ஒரிறையை வணங்க அறிவுரை

        எகிப்தை அடைந்த இவர்கள், தங்கள் சகோதரர் ஹாரூனுடன் ஃபிர் அவ்னின் அரண்மனைக்குச் சென்று தானே இறைவனெனக் கூறிக் கொள்ளும் மூடத்தனத்தை விட்டொழித்து உலகெலாம் படைத்துப் பரிபாலிக்கும் உருவமற்ற ஒரிறையை வணங்குமாறு அவனுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். அதனைக் கேளாது இவர்களைப் பற்பல சோதனைகளுக் குள்ளாக்கினான் அவன்.

தெளிவானதொரு அத்தாட்சி கேட்ட ஃபிர் அவ்ன்

        இவர்கள் கூறுவது உண்மையென நிரூபிக்க தெளிவானதொரு அத்தாட்சியைக் காட்டுமாறு ஃபிர் அவ்ன் கூறினான். உடனே மூஸா (அலை) அவர்கள் தம் கைத்தடியை எறிய அது பெரிய மலைப் பாம்பாக மாறியது. பின்னர் அதனைத் தொட அது முன்பு போல் கோலாக மாறியது. அவர்கள் தங்களின் கரங்களைச் சட்டைப் பையில் இட்டு எடுக்க, அவை ஒளி உருவாகத் திகழ்ந்தன. இவற்றையெல்லாம் கண்ட ஃபிர் அவ்ன் மூஸாவின் இறைவனை இறைவனென ஏற்றுக் கொள்ள எண்ணினான் என்றும், அவ்விதம் செய்யாது அவனின் அமைச்சன் ஹாமான் தடுத்து விட்டான் என்றும் கூறுவர்.

சூனியக்காரர்களுடன் போட்டி

        மூஸா (அலை) அவர்களை ஒரு சூனியக்காரர் என்று கருதி ஃபிர் அவ்ன் நாட்டிலுள்ள சூனியக்காரர்களை எல்லாம் வரவழைத்து மூஸா (அலை) அவர்களின் சூனியத்தை வெல்லுமாறு கூற, அவர்கள் தங்களின் கயிறுகளையும் தடிகளையும் எறிய, அவை பாம்பாயின. மூஸா (அலை) அவர்களும் தங்களின் தடியை எறிய, அது பெரும் மலைப்பாம்பாக மாறி சூனியக்காரர்களின் சிறு பாம்புகளையெல்லாம் தூக்கி விழுங்கி விட்டது. அக்கணமே அந்த சூனியக்காரர்கள் அனைவரும் தரையில் விழ்ந்து, “அகிலத்தின் அதிபனாகிய இறைவனையே நாங்கள் விசுவாசித்தோம்” என்று கூறினர். அவ்விதம் கூறியதற்காக அவர்களையெல்லாம் கொன்றொழித்தான் ஃபிர் அவ்ன், அதே போன்று ஒரே இறைவணக்கத்தை மேற்கொண்டிருந்த கிஜ்பீலையும் அவரின் மனைவி மக்களையும் கொன்றொழித்தான்.

செங்கடலை பிளந்து வழி ஏற்படுத்தி கொடுத்த இறைவன்

        இதைத் தொடர்ந்து ஃபிர் அவ்னையும், அவனது கிப்திகளையும் பல சோதனைகள் சூழ்ந்தன. இறுதியாக இவர்கள் இறை ஆணைப்படி இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது இவர்களைப் பிடிக்க எண்ணி ஃபிர் அவ்ன் படை நடத்திச் சென்றான். வழியில் செங்கடல் குறுக்கிட அதனை இறை ஆணைப்படி இவர்கள் தங்கள் ‘அஸா’வால் (கைத்தடியால்) அடிக்க அது 12 பாதைகளாகப் பிளந்தது. அதில் இவர்களும், இஸ்ரவேலர்களும் தப்பிச் செல்ல, இவர்களைப் பின் தொடர்ந்து ஃபிர் அவ்னும் அவன் படை வீரர்களும் அந்த பிளவு பாதை வழியே விரட்டி வர கடல் மூடிக் கொண்டது. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கிச் செத்தார்கள்.

அரீஹா என்ற பகுதிக்கு சென்று அறப்போர்

        இதன் பின் சிரியா நாட்டிலுள்ள அரீஹா என்னும் பகுதிக்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்த உருவத் தொழும்பர்களுடன் அறப்போர் செய்யுமாறு ஆணை வர, இவர்கள் இஸ்ரவேலர்களைத் தங்களுடன் அங்கு வருமாறு அழைக்க, “நீரும், உம் இறைவனும் போய்ப் போர் செய்யுங்கள்! நாங்கள் இங்கேயே இருக்கிறோம்” என்று கூறிவிட்டார்கள் அவர்கள். இதன் காரணமாக, அவர்கள் இறை முனிவுக்கு இலக்காகி நாற்பதாண்டுகள் பாலையில் பசியும் பட்டினியுமாய் அலைந்து திரிந்தார்கள். இதற்கிடையில் மூஸா (அலை) அவர்கள் அரீஹா சென்று அதனை எளிதில் வெற்றி கொண்டார்கள்.

விண்ணிலிருந்து வந்த உணவு மன்னு-சல்வா

        இதன் பின் பனூ இஸ்ராயீல்களின் பாவம் பொறுத்தருளுமாறு இவர்கள் இறைஞ்சியதன் காரணமாக அவர்களை இவர்கள்பால் சேர்த்தான் இறைவன். தங்களுக்கு உணவு தருமாறு இறைவனிடம் இறைஞ்சுமாறு அவர்கள் இவர்களை வேண்ட, இவர்களும் இறைஞ்ச இறைவன் விண்ணிலிருந்து மன்னு-சல்வாவை இறக்கி வைத்தான். பின்னர், பனூ இஸ்ராயீல்கள் இறை கட்டளைக்கு மாறு செய்ததன் காரணமாக அவர்கள் கொள்ளை நோய்க்கு ஆளானார்கள்.

பத்து கட்டளைகளும், தெளராத் வேதமும்

        பின்னர் இவர்கள் இறை கட்டளைப்படி தூர் ஸீனாய் சென்றார்கள். அப்பொழுது இவர்கள் தங்கள் பிரதிநிதியாய்த் தங்கள் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களை நியமித்து விட்டுச் சென்றார்கள். தூர் ஸீனாயில் வைத்து இறைவன் பத்துக் கட்டளைகளையும் “தெளராத்” வேதத்தையும் இவர்களுக்கு வழங்கினான். அவை எழுதப்பட்ட பலகைகளை எடுத்துக் கொண்டு வந்த பொழுது சாமிரியின் துர்ப் போதனைகளால் பனூ இஸ்ராயீல்கள் ஒரு காளை மாட்டைச் செய்து அதனைக் கடவுளென  வணங்கிக் கொண்டிருப்பதை இவர்கள் கண்டார்கள். அது கண்டு வெஞ்சினம் கொண்ட இவர்கள், அக் காளை மாட்டைக் கல்லால் அடித்து உடைத்துக் கடலில் தூக்கி எறிந்தார்கள். அதன் பின் இவர்கள் தங்கள் கூட்டத்தினரின் பாவம் பொறுத்தருளுமாறு இறைஞ்ச அவ்விதமே செய்தான் இறைவன்.

        பின்னர் இவர்கள் இறைவனைத் தொழ ஒர் ஆலயத்தை நிருமாணித்துச் சனிக்கிழமையை எல்லாரும் அங்குக் கூடி வணங்குவதற்கான நாளாக்கினர்.

“கலீமுல்லாஹ்” வின் இறுதி காலம்

        “ரசூலுன் கரீமுன்” (கண்ணியமிக்க தூதுவர்) என்று இறைவனால் புகழ்ந்துரைக்கப் பட்ட இவர்கள் இறைவனுடன் உரையாடியதன் காரணமாக “கலீமுல்லாஹ்” என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகின்றனர்.

        இவர்கள் காலமாகும் போது இவர்களுக்கு வயது 150. இவர்களின் அடக்கவிடம் எதுவென்று திட்டமாகக் கூறுவதற்கில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விண்ணேற்றத்தின் போது இவர்களின் அடக்கவிடத்தைச் சிவப்பு நிற மணல் மேடொன்றில் கண்டதாயும் அதில் இவர்கள் நின்று தொழுது கொண்டிருந்ததாயும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவர்களின் பாதம் பதிந்த கல் ஒன்றைத் திமிஷ்கிற்குத் தெற்கே இரண்டு மைல் தொலைவில் உள்ள “மஸ்ஜிதுல் அக்தாம்” (பாதச் சுவடுகளின் பள்ளிவாசல்) என்ற இடத்தில் தாம் பார்த்ததாக இப்னு பதூதா குறிப்பிடுகிறார்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...