Home


ஆதம் (அலை)

இறைவன் மனிதனைப் படைக்க விரும்பி பூமியிலிருந்து மண் எடுத்து வர வானவர்களை அனுப்பினான். ஜிப்ரீல் (அலை)  அவர்களும் மீக்காயீல் (அலை) அவர்களும் பூமி மண் தர மறுத்து விட்டது என்று கூறித் திரும்பினர். இஸ்ராயீல் (அலை) அவர்கள் மட்டும், பூமி மண் தர இயலாது என்று இறைவன் மீது ஆணையிட்டு மறுத்துரைத்தும் கேளாது மண் எடுத்து வந்தார். இஸ்ராயீல் (அலை) அவர்கள் கொண்டு வந்த மண்ணைத் தன் திருக்கைகளால் குழைத்து 60 அடியில் ஒர் உருவம் அமைத்து கிடத்தாட்டினான் இறைவன். அந்த உருவத்திற்குள் தன் ஆன்மாவை ஊதினான் இறைவன். ஆதம் (அலை) அவர்கள் உயிர் பெற்றார்கள். இறைவனைப் புகழ்ந்தார்கள். இது முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நிகழ்வுற்றது.

வானவர்களிடம் இறைவன் காட்டினான்

ஆதம் (அலை) அவர்கள் அறுபது அடி உயரமுள்ள ஆணழகராக இருந்தார்கள். இறைவன் இவர்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும், எல்லா மொழிகளையும் கற்றுக் கொடுத்தான். ஒரு நாள் இறைவன் வானவர்களை ஒருங்கழைத்து, ஆதம் (அலை) அவர்களைச் சுட்டிக் காட்டினான். “இவரை விட மேலான படைப்பை நீ படைத்ததுண்டா?” எனறு வினவினார்கள் வானவர்கள். “என்னுடைய கையால் படைக்கப்பட்டதைவிட என்னுடைய ‘ஆகுக!’ என்னும் சொல்லால் படைக்கப்பட்டது எவ்வாறு மேலாக இருக்க முடியும்?” என்று பதிலளித்தான் இறைவன். அதன் பின் ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியுமாறு அவர்களுக்கு ஆணையிட்டான் இறைவன். இப்லீஸைத் தவிர ஏனையோர் அனைவரும் அவர்களுக்குப் பணிந்தார்கள். “மண்ணால் படைக்கப்பட்ட ஆதத்திற்கு நெருப்பால் படைக்கப்பட்ட நான் எவ்வாறு பணிவது?” என்று இப்லீஸ் வாதிட்டான். இறைவன் வெகுண்டு அவனைச் சபித்தான். இப்லீஸ் ஆதம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களை வழி கெடுக்கப் போவதாக கூறினான்.

ஆதம் (அலை) ஹவ்வா (அலை) இவர்களின் திருமணம்

விண்ணகத்தில் ஆதம் (அலை) அவர்கள் வாழும் பொழுது தம்முடன் உறவாடத் தம்மைப் போன்ற ஒருவரில்லையே என்று ஏங்கினார்கள். இதனை அறிந்த இறைவன் ஒருநாள் இவர்கள் உறங்கும் பொழுது இவர்களின் வலப் புறத்திலிருந்து எலும்பு ஒன்றை எடுத்து ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்தான். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து சுவனத்திலுள்ள ஒரே ஒரு மரத்தின் கனிகளை மட்டும் உண்ண வேண்டாமென்றும் மற்ற மரத்துக் கனிகளை புசித்து மகிழும்படியும் கூறினான். ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் அவ்விதமே செய்வதாக உறுதி கூறினர்.

இப்லீஸின் முயற்சி

ஆதம் ( அலை) அவர்களையும் அவர்களின் மனைவியையும் வழி கெடுக்க இப்லீஸ் எப்படியாவது சுவனத்தின் உள்ளே நுழைய முயன்றான். மயில் ஒன்றின் மூலம் சுவனத்து பாம்பின் தயவைப் பெற்று உள்ளே நுழைந்த அவன் ஆதம் (அலை) அவர்களையும் ஹவ்வா (அலை) அவர்களையும் கண்டு குறிப்பிட்ட அந்த மரத்தின் கனியை உண்டால்தான் அவர்கள் அழியாதிருக்க இயலும் என்றும், இல்லையேல் அழிந்து விடுவார்கள் என்றும் கூறினான். ஹவ்வா (அலை) அவர்கள் இப்லீஸின் பேச்சை நம்பி ஆதம் (அலை) அவர்களையும் அந்த மரத்துக் கனியைப் பறித்து உண்ணத் தூண்டினார்கள். அதன் படி இருவரும் அதை பறித்து உண்டனர். அதனை உண்ட அடுத்தகணம் அவர்கள் இருவரும் நாண உணர்வு பெற்றனர்.

பூமியை வந்தடைந்தது

தங்களின் மானத்தை மறைக்க அங்குமிங்கும் ஓடினர். மரங்களிடம் இலை கேட்டனர். அத்தி மரம் மட்டும் இலை கொடுத்தது. அதனைக் கொணடு அவர்கள் தம் மானத்தை மறைத்துக் கொண்டார்கள். இவர்கள் நிர்வாணமானதற்கான காரணத்தை இறைவன் கேட்டான். இறைவனுக்கு மாறுசெய்ததான தம் பிழையை ஒப்புக்கொண்டு அதற்குக் காரணம் ஹவ்வா (அலை) அவர்களின் தூண்டுதலே என்றார் ஆதம் (அலை) அவர்கள். இறைவன் அவ்விருவரையும், மயிலையும், பாம்பையும், இப்லீஸையும் மண்ணிலே தூக்கி எறிந்தான். ஆதம் (அலை) அவர்கள் சரந்தீவில் வந்து விழுந்தார்கள். அப்பொழுது அவர்கள் தம்முடன் ஹஜருல் அஸ்வத், அஸா (இதுவே பின்னர் மூஸா(அலை) அவர்களிடம் வந்தது.) இரும்பு ஆகியவற்றைக் கொண்டு வந்தார்கள். ஹவ்வா (அலை) அவர்கள் (சவுதிஅரேபியாவில் உள்ள) ஜித்தாவில் போய் விழுந்தார்கள். (இலங்கையில் உள்ள) சரந்தீவின் மலை உச்சியில் கிடந்து இருநூறு ஆண்டுகள் தம் பவம் நினைந்து அழுதார்கள். இறுதியாக இறைவன் ஆதம் (அலை) அவர்களின் பாவம் பொறுத்தருளி மண்ணகத்தில் தனக்கு ஒர் ஆலயம் எழுப்பி அதைச் சுற்றி வந்து இறைஞ்சுமாறு கூறினான்.

மக்காவில் கஃபாவை கட்டியது

ஆதம் (அலை) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் மக்கா வந்து கஃபாவை எழுப்பினர். அதன் ஒரு மூலையில் ஆதம் (அலை) அவர்கள் தாம் சுவர்கத்தில் இருந்து கொணர்ந்த ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லையும் பதித்தனர். பல்லாண்டுகள் பின் ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் அரஃபாத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இதன் பின் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து ஒரே சூலில் ஒர் ஆணும், ஒரு பெண்ணுமாகப் பல குழந்தைகளை பெற்றனர். முதல் சூலில் பிறந்த ஆணுக்குக் காபீல் என்றும், பெண்ணுக்கு இக்லிமா என்றும் இரண்டாம் சூலில் பிறந்த ஆணுக்கு ஹாபீல் என்றும், பெண்ணுக்கு யஹுதா என்றும் பெயரிட்டனர்.

ஆதம் (அலை) அவர்களின் இறுதி காலம்

ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர். இவர்கள் இறக்கும் தறுவாயில் இவர்களின் வழித்தோன்றல்கள் இவ்வுலகில் 40 ஆயிரம் பேர் வாழ்ந்து வந்தார்கள். நிஸான் மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆதம் (அலை) அவர்கள் உயிர் நீத்தார்கள். இவர்களது ஆன்மா சுவனம் திரும்பியது. இவர்களது உடல் அபுல் குபைஸ் மலையின் ‘மகாரத்துல் குன்ஸ்’ என்ற குகையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...