தெளஹீது - (ஓரிறை நம்பிக்கை)
இஸ்லாம் என்னும் அரபிச் சொல்லுக்கு சாந்தி என்று பொருள்படும். மேலும் இச் சொல்லுக்கு அடிபணிதல் - கீழ்ப்படிதல் என்னும் பொருளும் உண்டு. அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் வழிப்பட்டு அவன் ஏவியவற்றை எடுத்து நடந்து, விலக்கியவற்றிலிருந்து விலகியும் வாழும் நெறியே இஸ்லாம். “The complete surrender or submission to the will of God” இம்மார்க்கத்தைப் பின் பற்றுவோர் “இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோர்” என்னும் பொருள் கொண்ட “முஸ்லிம்” என்று அழைக்கப் பெறுவர்.
இஸ்லாம் என்னும் கட்டிடம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. “புனியல் இஸ்லாமு அலா கம்ஸின்”
ஆகிய இவை ஐந்தும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயம் கடமையாகும்.
இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் தலையாயது “லாஇலாஹ இல்லல்லாஹு” என்னும் ஓரிறைக் கொள்கையான தெளஹீது ஆகும். இதன் பொருள் ஒன்றாகக் கொள்ளுதல், ஒன்று என வலியுறுத்துதல் ஆகும். “வணங்குதற்குரியவன் அல்லாஹ் ஒருவனே” என்ற நம்பிக்கையைச் சிந்தையில் உறுதிப் படுத்துதல் - ‘இறைமையில் ஒருமை நிறுவுதல்’ தெளஹீது ஆகும்.
அல்லாஹ்வின் இயல்பு :
(மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. (2:163) (நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன் தான். (112:1) (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) (112:2) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) (112:3) (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. (112:4)
வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குடையதே! அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். (57:2) அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை "ஆகுக!" எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது. (2:117) அவன்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்தும் பின்னர், ஒரு இந்திரியத் துளியிலிருந்து, பின்னர், கருவிலிருந்தும் படைத்தான். பிறகு அவனே உங்களை ஒரு சிசுவாகவும் வெளிப்படுத்துகிறான். பின்னர், (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் நீங்கள் முதியோராகின்றீர்கள். இதற்கு முன்னரும் உங்களில் பலர் இறந்துவிடுகின்றனர். (40:67) நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (30:21)
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (30:22) தன்னுடைய வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது அனைவரையும் நன்கறிந்தவனும் மிகைத்தவனுமால் அமைக்கப்பட்டது. (36:38) ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? மேகத்தில் இருந்து (மழையை இறக்கிப்) பூமியில் (தானியங்களை முளைக்கச் செய்து) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இதற்கு) உங்களுடைய அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" (27:64)
அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (57:3) அவனே தீர்ப்பு நாளின் அதிபதி. மனிதர்களுக்கு நேர்வழி காட்டுபவன், என்றும் எங்கும் உள்ளவன், எல்லாம் அறிந்தவன், தன்னிலே தானாய் உருவானவன். மனிதனின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் தாயிற் சிறந்த தயாளன். மன்னிக்கும் மாண்பாளன். தவறிழைத்தவர்களைக் கண்டிப்பதிலும் தண்டிப்பதிலும் கடுமையானவன். பெரும் பாவமிழைத்த அடியார்கள் பச்சாத்தாபப் பட்டு அவனிடம் மன்னிப்பு வேண்டி, தொழுது, அழுது இறைஞ்சினால் அவர்களுடைய பாவங்களை மன்னித்துப் பேரருள் புரிவதிலும் மிகச் சிறந்த மன்னிப்பாளன்.
பேராற்றல் பொருந்திய அவனன்றி ஓர் அணுவும் அசையாது. அவன் தீர்ப்பை எவராலும் ஓர் அணுவளவும் மாற்ற முடியாது. அவன் கொடுக்க நாடிவிட்டால் இவ்வகிலம் முழுவதும் சேர்ந்து தடுத்தாலும் தடுத்தல் இயலாது. அவன் ஒன்றைத் தடுக்க நாடிவிட்டால் இவ்வுலகம் முழுவதும் ஒன்று திரண்டாலும் அதைக்கொடுக்க இயலாது. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் எவரும் பரிந்து பேசும் சக்தியற்றவர். அவனே மனிதனுக்கு உயர்ந்த வாழ்வையும், தாழ்வையும், இலாபத்தையும், நட்டத்தையும், மகிழ்ச்சியையும், துக்கத்தையும், நீண்ட ஆயுளையும். அகால மரணத்தையும் தருகின்றான். அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப் பட்டவைகளே. படைப்பினங்கள் அனைத்தும் மரணித்தே தீரும். படைத்தவனாகிய அல்லாஹ் மட்டுமே என்றும் நிலைத்திருப்பவன்; காலம் கடந்தவன்.
அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவன் அவனே. (6:102) அல்லாஹ்வின் அருள் மறையில் அவனுடைய ஒப்பற்ற தன்மைகளைக் கூறி அவனையே வணங்க வேண்டும் என அழகு படக் கூறுகிறான். இத்தகைய அளப்பரிய ஆற்றல்கள் கொண்ட அல்லாஹ்வின் தன்மைகளை அறிந்து அவனை வணங்க வேண்டிய முறையறிந்து அவற்றின் படி ஒழுக வேண்டும்.
ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை. (51:56)
அல்லாஹ்தான் நம்மைப் படைத்தான். அவனையே வணங்க வேண்டும். பிறிதெவரையும் வணங்கக் கூடாது. அனைத்துத் தேவைகளையும் அவனே தர வல்லவன். அனைத்துத் தேவைகளையும் அல்லாஹ்விடமே கேட்க வேண்டும். பிறிதெவருக்கும் யாதொரு சக்தியுமில்லை. ஆகவே எத்தகைய துன்பம் வரினும் அல்லாஹ்வின் கட்டளைகட்கு மாறு செய்யாது, முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டு நடக்க வேண்டும். இதுவே தெளஹீது நெறிப்பட்ட உயர்ந்த வாழ்க்கையாகும்.
அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவனிடமே உதவிகள் அனைத்தையும் தேட வேண்டும் என்னும் ஒருமைத் தன்மை தெளஹீது ஆகும். சூரத்துல் ஃபாத்திஹாவில் உள்ள “இய்யாக்க நஃபுது வ இய்யாக நஸ்தஈன்” - உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவியும் தேடுகிறோம் எனும் இறைவசனத்தின் மூலம் வலியுறுத்தப் படுகிறது.
“மன்கால லாஇலாஹ இல்லல்லாஹு தகலல் ஜன்னா”
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை அபூஹுரைரா (ரழி) அவர்களை நோக்கி, எவர் லா இலாஹ இல்லல்லாஹு என்று கூறுகின்றாரோ அவர் சுவர்க்கம் புகுவார் (“மன்கால லாஇலாஹ இல்லல்லாஹு தகலல் ஜன்னா”) என்று மக்களிடம் சொல்லி விட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பினார்கள். செல்லும் வழியில் உமர் (ரழி) அவர்கள் அபூஹுரைரா (ரழி) அவர்களைச் சந்தித்து, எங்கு செல்கின்றீர் என வினவ அவர்கள் நபிகள் பெருமானார் நவின்ற செய்தியை மக்களிடம் சொல்லி விட்டு வருவதற்காகச் செல்கின்றேன் என விடையளித்தனர். அதற்கு உமர் (ரழி) அவர்கள் அபூஹுரைரா (ரழி) அவர்களை மீண்டும் நாயகம் (ஸல்) அவர்கள் சமூகம் அழைத்து வந்து, பெருமானாரிடம், நீங்கள் கூறியதை நான் உண்மை என ஏற்றுக் கொண்டேன். எனினும் அதைப் பிற மக்களிடம் கூறினால் அவர்கள் மற்ற நல்ல அமல்களைச் செய்யாதிருந்து விடுவார்களே எனக் கூறினார்கள். இதைக் கேட்ட பெருமானார் (ஸல்) அவர்கள் அவ்வாறாயின் இச் செய்தியை மக்களிடம் கூற வேண்டாம் என அபூஹுரைரா (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.
எவர் ஒருவர் அல்லாஹ்வின் ஒருமைத் தன்மையை ஏற்றுக் கொள்கின்றாரோ அவர் சுவர்க்கம் புகுவார். வணங்குதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை என்பதை ஏற்றுக் கொள்ளாதவர், எவ்வளவு தான் நற்கருமங்கள் செய்திருப்பினும் அவர் சுவர்க்கம் புகமாட்டார் என்பது இஸ்லாமிய கொள்கையாகும்.
முக்கியத்துவம் :
இஸ்லாமிய நெறிப்பட்ட வாழ்க்கைக்குத் தெளஹீது என்ற ஓரிறை நம்பிக்கை முக்கியமானதாகும். இது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று. இது இஸ்லாம் எனும் கட்டிடத்திற்கு அடித்தளமாகவும் திகழ்கிறது. கட்டிடத்தின் அடித்தளம் உறுதியாகவும் செம்மையாகவும் அமைய வில்லையானால் கட்டிடம் எவ்வளவு உயரமாகவும், சிறப்பாகவும், அழகுடனும் கட்டப்பெறினும் அது நிலைத்தல் இயலாது. அடித்தளத்தின் உறுதியைப் பொறுத்தே கட்டிடத்தின் வலிமை அமையும்.
இஸ்லாம் எனும் கட்டிடம் உறுதியாக நிலை பெற வேண்டுமானால் அதன் அடித்தளமாகிய தெளஹீது என்னும் ஓரிறை நம்பிக்கை உள்ளத்தில் உறுதியாக அமைய வேண்டும். கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போன்று இஸ்லாத்திற்குத் தெளஹீது அமைகிறது.
ஷிர்க் என்னும் இணை வைத்தல்
ஈடிணையற்ற அல்லாஹ்வின் சக்திகள் அல்லது அவற்றில் சில அவனுடைய படைப்பினங்களாகிய விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள் முதலியவைகளுக்கு உண்டு என்று கருதுவது இறைவனுக்கு இணைவைப்பதாகும்.
ஷிர்க் நான்கு வகைப்படும். அவை
முதலாவது ஷிர்க் அடியானை அல்லாஹ்வின் அருளினின்றும் பிரித்து நிரந்தர நரகவாதியாக்கி விடும்.
இரண்டாம் ஷிர்க் அல்லாஹ்வை நெருங்க விடாது தடுத்து விடும்.
மூன்றாம் ஷிர்க்கும், நான்காம் ஷிர்க்கும் அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையே திரையை ஏற்படுத்தி அல்லாஹ்வின் தரிசனத்தைத் தடுத்து விடும்.
அல்லாஹ் ஒருவனையே வணங்குகள். அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள். இணை, துணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன் பரிசுத்தமானவன். ஆகவே
லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி "என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்" என்று கூறினார். (31:13) இவை அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மையையும், அவனுக்கு இணை வைத்தல் பெரும் பாவம் என்பதையும் புலப்படுத்துகின்றன.
ஹசன் பசரீ (ரஹ்) என்னும் பெரியாரிடம் ஒரு முறை மக்கள் சென்று “தாங்கள் எப்பொழுதேனும் மகிழ்ச்சியுற்றதுண்டா?” எனக் கேட்க அதற்கு அவர்கள் என் அண்டை வீட்டிலிருந்த பெண் தன் கணவனிடம் ‘உன் அன்பைப் பெறுவதற்காகவே நீ எதைச் செய்த போதும் நான் பொறுமையுடன் சகித்துக் கொண்டேன். ஆனால் இன்று நீ பிறிதொரு பெண்ணைக் கூர்ந்து நோக்கியதை மட்டும் என்னால் சகிக்க முடியவில்லை. எப்போதும் இதை என் மனம் பொறுத்துக் கொள்ளாது’ என்று கூறக் கேட்டு நான் அகம் மிக மகிழ்ந்தேன். திருமறையை ஓதிய போது இதற்கு ஆதரவான வசனம் ஒன்றைக் கண்டேன். அதில், “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கின்றார். (4:116) என்ற திருவசனத்தைக் கண்டதும் என் மகிழ்ச்சி எல்லையற்றதாயிற்று” என விடையிறுத்தனர்.
அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றார். அத்தகையோரின் பரிதாப நிலை பற்றியும் அதினின்றும் மக்கள் மீட்சி பெற வேண்டுமென்பதையும் அல்லாஹ் தன் திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வுக்கு இணை வைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்தவனைப் போலாவான். அவனை (காகம், கழுகு போன்ற) பறவைகள் இறாய்ந்துக் கொண்டு போய்விடும் அல்லது காற்று வெகு தூரத்திற்கு அடித்துக்கொண்டு சென்றுவிடும்.(22:31) நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள். என்னை தியானித்துக்கொண்டே இருக்கும் பொருட்டு தொழுகையைக் கடைப்பிடியுங்கள்." (20:14) (அன்றி) அவன் தன்னையே வணங்கும்படியாகவும், யாதொன் றையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கின்றான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தாம். (24:55) என்றும் அல்லாஹ் இணைவைப்போரின் பரிதாப நிலையை எடுத்துரைக்கின்றான்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே! அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். மேலும் இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான். இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் (அல்லாஹ்வாகிய) தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை) சமமாக்குகின்றனர். (6:1) அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். (21:22) அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகள் துஷ்ட ஷைத்தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அன்றி "நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டுபண்ணி (பிசாசு களுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்" (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி (இத்தகைய) ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கின்றானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்து விடுவான். (4:119) என்றும், அல்லாஹ்வையன்றி அவர்கள் பிறவற்றை அழைப்பதன் தீய விளைவுகள் பற்றி அல்லாஹ் குர் ஆனில் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் உதவிக்கு அழைக்கும் அவற்றிற்கு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் சக்தி உண்டு என்று உண்மையில் நீங்கள் கருதினால் நீங்கள் அவர்களை அழையுங்கள். உங்கள் அழைப்புக்கு விடை தரட்டும் என்று அவற்றின் சக்தியற்ற நிலையைக் குறித்து அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்.
“(சிலை வணங்குபவர்களே! நீங்கள் வணங்கும்) அவைகளுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு நடக்கின்றனவா? அவைகளுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவைகளுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனவா? அவைகளுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு கேட்கின்றனவா? (7:195) இத்தகைய அற்ப சக்திகளைக் கூடக் கொண்டிராத அவை இறந்தவர்களை உயிர்ப்பிக்குமா?” என்று அல்லாஹ் வினவுவதால் அவற்றின் ஆற்றலற்ற போலித்தன்மை புலனாகிறது.
அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ அவை யாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (22:73) அல்லாஹ்வையன்றி எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவைகளாக இருப்பதுடன், தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவைகளாக இருக்கின்றன.(7:197) என்பதையும் குர் ஆன் தெளிவுபடுத்துகிறது.
எந்த பொருளுக்கும் எந்த ஒரு நன்மையையோ, தீமையையோ செய்வதற்கு யாதொரு சக்தியுமில்லை. அவை அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடக்கின்றன.
இவையனைத்தும் "நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்" என்பதற்கும் அத்தாட்சி களாக இருக்கின்றன. (31:30)
‘அல்லாஹ் ஒருவன்’ என்ற உறுதியான நம்பிக்கையை இஸ்லாத்தின் பிற கடமைகளைச் செவ்வனே செய்வதற்கும், இஸ்லாமிய நெறியில் வாழ்வதற்கும் அடிப்படையாக அமைகிறது. ஆதலால் தான் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் தம் பிரதான தோழர் ஹலரத் முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களை விளித்து “நீர் தூக்கிலிடப் பட்டாலும், அல்லது துண்டு துண்டாக வெட்டப்பட்டாலும், அல்லது தீயிலிட்டுக் கரிக்கப்பட்டாலும் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்” என்று எச்சரித்துள்ளார்கள்.
எனவே எத்தகைய நிலையிலும் இறைவனின் கட்டளைகட்கு முற்றிலும் வழிப்பட்டு அவனையே முழுமையாக நம்பி வாழ்வதும், படைப்பினங்களுக்கு மனிதனின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய இறை சக்தி இல்லை, அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு என்று முழுமையாக நம்பிக்கை கொள்வதும் தவ்ஹீதாகும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.