Home


இஸ்திஹ்ஃபார்

        இஸ்திஹ்ஃபார் இதன் பொருள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவது என்பதாகும். ‘அஸ்தஹ்ஃபிருல்லாஹல் அளீம் வ அதூபு இலைஹி’ என்று கூறி இறைவனிடம் அழுது கெஞ்சிப் பாவமன்னிப்புக் கோருவதே இஸ்திஹ்ஃபார் ஆகும்.

ஆதம் (அலை) அவர்கள் அழுது கெஞ்சி இறைஞ்சி பெற்ற பாவமன்னிப்பு

        ஆதம் (அலை) அவர்கள் தம் தவற்றை ஒப்புக் கொண்டு அதனை நினைந்து வருந்தி, அதற்காகத் தம்மையே தாம் பழித்து கொண்டு இறைவன் பால் திரும்பி அவனுடைய பேரருளில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துத் தம்முடைய பாவம் பொறுத்தருளுமாறு அழுது கெஞ்சி இறைஞ்சியதன் காரணமாக அவர்கள் பாவம் பொறுக்கப்பட்டார்கள். இப்லீஸ் இதற்கு மாற்றமாக நடந்து கொண்டதால் இறைமுனிவுக்கு ஆளானான்.

இப்லீஸ் இறைவனிடம் வேண்டியதன் காரணமாக கிடைத்த பயன்

        இதன்பின் இப்லீஸ் இறைவனை நோக்கி, “இறைவனே! நீ என்னை ஆதத்தின் காரணமாகச் சுவனத்திலிருந்து வெளியாக்கி விட்டாய். எனவே என்னை அவர் மீதும் அவருடைய  சந்ததிகள் மீதும் சாட்டி வைப்பாயாக!” என்று வேண்டினான். அதற்கு இறைவன், “ஆதத்திற்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பகரமாக உனக்கும் ஒரு குழந்தை பிறக்கும். அவர்களின் இதயங்களில் புக உனக்கு வழி உண்டு. அவர்கள் பாவ வழியில் செலவிடும் ஒவ்வொரு காசிலும் உனக்குப் பங்குண்டு. அவர்கள் என் பெயர் கூறித் துவங்காத ஒவ்வொரு செயலிலும் உன் ஆதிக்கம் இருக்கிறது” என்று கூறினான்.

ஆதம் (அலை) அவர்கள் இறைவனிடம் அபயம் தேடி பெற்ற பாக்கியங்கள்

        இதனை அறிந்த ஆதம் (அலை) அவர்கள் இறைவனிடம் அபயம் தேட, “ஆதமே! உமக்கு ஒரு குழந்தை பிறப்பின் அதற்குப் பாதுகாவலாக ஒரு வானவரை நான் படைப்பேன். உம் வழித் தோன்றல் ஒரு நன்மை செய்தால் அதற்குப் பிரதியாக அவனுக்குப் பத்து நன்மைகளை அளிப்பேன்” என்று கூறினான். அது கேட்ட ஆதம் (அலை), “இவை பற்றாது” என்று கூறிய பொழுது, “அவன் இப்லீஸின் கலைப்பால் தான் செய்த பாவத்தை நினைத்து வருந்தி என்னிடம் மன்னிப்புக் கேட்டு இறைஞ்சின் நான் அவனுடைய பாவம் பொறுத்து அவனை ஆட்கொள்வேன்” என்று அருண்மொழி பகர்ந்தான். அது கேட்ட ஆதம் (அலை) “இவைபோதும்” என்று நன்றிப் பெருக்குடன் கூறினார்கள் என ஒரு வரலாறு கூறுகிறது. பாவம் செய்தவர்களின் பாவங்களைப் பொறுப்பதன் காரணமாகவே இறைவனுக்கு கஃப்ஃபார் (குற்றங்களை மன்னிப்பவன்) என்றும், கஃபூர் (பாவங்களைப் பொறுப்பவன்) என்றும், அஃபுவ்வு (குற்றங்களை அழிப்பவன்) என்றும் பெயர்கள் ஏற்பட்டுள்ளன.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாவமன்னிப்பு பற்றி கூறியவைகள்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நாளொன்றுக்கு எழுபது தடவை இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டனர் என்று ஒரு ஹதீதும், நூறு தடவை பாவமன்னிப்புக் கேட்டனர் என்று மற்றொரு ஹதீதும் இருக்கின்றன. இவ்வாறு தாம் செய்ததாகக் கூறி இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்குமாறு அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுரை பகர்ந்துள்ளனர்.

“பாவம் நோய். அதற்குரிய மருந்து இஸ்திஹ்ஃபார்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் அவர்கள் “நீங்கள் வானத்தை அளாவும் வண்ணம் அத்துணைப் பெரிய பாவம் செய்திருப்பினும் நீங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சின் உங்களின் பாவம் பொறுத்தருள்வான்” என்று கூறியிருக்கின்றனர்.

ஒரு தடவை அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “பாவம் செய்ததன் காரணமாக சுவனத்தை அடைபவர்களும் உள்ளனர்” என்று கூறிய பொழுது “ஒருவன் நன்மை செய்தால் தானே சுவனம் புக இயலும்? பாவம் புரிந்து எவ்வாறு சுவனம் சேர்வ்து? என்று தோழர்கள் வினவிய பொழுது “ஒருவன் ஒரு பாவத்தைச் செய்து அதன் பின் அதைப்பற்றி நாணமுறுவானாயின் அந்த நாணம் அவன் சுவனம் புகும் வரை அவனை விட்டு அகலாது. அவன் கண் முன்னே நின்று கொண்டிருக்கும்” என்று திருவாய் மலர்ந்தனர்.

மேலும் அவர்கள், “பாவம் செய்தவர்கள் தம் பாவம் நினைந்து வருந்தி முனங்குவது இறைவனைத் துதி (தஸ்பீஹ்) செய்யும் வானவர்களின் தஸ்பீஹ் ஒலியை விட இறைவனுக்கு உவகையளிப்பதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

திருமறை குர்ஆனில் இறைவனிடம் பாவமன்னிப்பு கோருவது பற்றி

        இறைவனும் தன் திருமறையில் “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” (71:10) என்றும் கூறுகின்றான். மேலும் “அவனிடம் பாவமன்னிப்பு கேட்பின் அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.” (71:11) என்றும் “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.” (71:12) என்றும் இறைவன் கூறியுள்ளான். எனவே ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் எவரேனும் வந்து தம் துன்பங்களை எடுத்துரைப்பின் இறைவனிடம்  மன்னிப்புக் கோருமாறு கூறுவர் என்றும் அதற்கு காரணம் வினவப்படின் மேற்கண்ட இறைவசனங்களைக் கூறுவர் என்றும் சொல்லப் படுகிறது.

        நோய்களுக்கு நன்மருந்து ‘இஸ்திஹ்ஃபார்’ என்றும் கூறப்படுகிறது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டிய இஸ்திஹ்ஃபார் நஃபில் தொழுகை 

        ஒருவன் வறுமையோ துன்பமோ அடையின் அது அவன் செய்த பாவச் செயல்களின் பலனேயாகும்.  எனவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவற்றிற்குப் பின்வருமாறு பரிகாரம் கூறியுள்ளனர்.

        “உன்னுடைய வாழ்வில் வறுமையோ துன்பமோ ஏற்படின் உன் தேவைகளை அல்லாஹ்விடம் சாட்டி, இஸ்திஹ்ஃபார் நஃபில் இரண்டு ரகஅத் தொழுவாயாக! முதல் ரக அத்தில் சூரா ஃபாத்திஹாவும், சூரத்துல் கத்ரு (இன்னா அன்ஸல்னாவும்) ஓதிய பின் ‘அஸ்தஹ்ஃபிருல்லாஹ்’ என்று 15 தடவை ஓதி ‘ருகூஉ’க்குச் செல்ல வேண்டும். அதில் ‘தஸ்பீஹ்’ செய்த பின் 10 தடவை ‘அஸ்தஹ்ஃபிருல்லாஹ்’ ஓதித் தலையை கிளப்பி நிற்கும் சிறு நிலையில் 10 தடவை ‘அஸ்தஹ்ஃபிருல்லாஹ்’ ஓதிப் பின்னர் முதலாவது ஸஜ்தாவில் ‘தஸ்பீஹ்’ செய்த பின் 10 தடவை ‘அஸ்தஹ்ஃபிருல்லாஹ்’ ஓதித் தலையைக் கிளப்பி சிறு இருப்பு நிலையில் 10 தடவை ‘அஸ்தஹ்ஃபிருல்லாஹ்’ ஓதிப் பின்னர் இரண்டாவது ஸஜ்தாவில் ‘தஸ்பீஹ்’ செய்த பின் 10 தடவை ‘அஸ்தஹ்ஃபிருல்லாஹ்’ ஓதி எழுந்த பின்னர் மீண்டும் மேலே கூறப்பட்ட வண்ணம் இரண்டாவது ‘ரகஅத்’திலும் செய்ய வேண்டும். இறுதி இருப்பில் 10 தடவை ‘அஸ்தஹ்ஃபிருல்லாஹ்’ ஓதிப் பின்னர் அத்தஹிய்யாத் ஓதி ஸலாம் கொடுத்து அல்லாஹ்விடம் உன் குறைகளை எடுத்துரைத்து ‘துஆ’ கேட்பின் வறுமை நீங்கி மகிழ்ச்சியுறுவாய்!”

இத்தொழுகையில் மொத்தம் 140 தடவை  ‘அஸ்தஹ்ஃபிருல்லாஹ்’ கூறுவது அமைந்துள்ளது.

உலகிற்கு இறைவன் அருளிய இரு பெரும் அபயங்கள்

        உலகிற்கு இறைவன் அருளிய இரு பெரும் அபயங்களில் ஒன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்றும், அவர்கள் மறைந்து விட்டார்கள் என்றும், மற்றொன்று இஸ்திஹ்ஃபார் என்றும், அது உலகில் உள்ளதென்றும் அலீ (ரழி) அவர்கள் கூறி “நீங்கள் அவர்களுக்கிடையில் இருக்கும் வரையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். அன்றி, அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான்.” (8:33) என்னும் திருவசனங்களை ஓதிக்காட்டினர்.

        ஒருவனுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்பட்டோலை எழுதப்படுகிறது என்றும் அவன் அந்நாளில் இஸ்திஹ்ஃபார் செய்திருப்பின் அது ஒளி பெற்று இலங்கும் என்றும் இல்லையெனில் கறுத்திருக்கும் என்றும் ஒருவரின் ‘இஸ்திஹ்ஃபார்’ மூலம் பேரருள் பெற்ற வானவர்கள் படைக்கப் படுகின்றனர் என்றும் அவர்கள் அவனுக்காக இறைஞ்சுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினாலன்றி மன்னிப்பு கிடையாது

        நற்செயல்கள் செய்வதன் மூலம் ஒருவனின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். ஆனால் அவனுடைய பாவங்கள் அவன் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரினாலன்றி மன்னிக்கப் பெறமாட்டா என்றும் சொல்லப்படுகிறது.

        சிறு பாவங்களை இவை சிறு பாவங்கள் தாமே என்று எளிதாக எண்ணக்கூடாது. ஏனெனில் அவை நாளடைவில் ஒருவனை அவன் அறியாமலேயே பெரும் பாவம் செய்யுமாறு செய்து விடும். ஆதலின் சிறு பாவமாயினும் அதனைப் பெரும் பாவம் போன்று கருதி அதனை விட்டும் வெருண்டோடுகின்றவனே உய்வடைவான் என்பதில் ஐயமில்லை.


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....


Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.