ஈமான்
(இஸ்லாம் பற்றிய தொடர் - 4)
ஈமான் என்றால் என்ன?
‘ஈமான்’ என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் ‘இறைநம்பிக்கை’ என்று பொருள். அதாவது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எவற்றையெல்லாம் நம்ப வேண்டும் என்று கூறினார்களோ அவற்றில் எதையும் அதிகமாக்காமலும் எதையும் விட்டுவிடாமலும் உள்ளதை உள்ளபடி உண்மையென உள்ளத்தால் உறுதிகொள்வதே ‘ஈமான்’ என்பதாகும்
அ) கலிமா - பொருள் விளக்கம்
லாயிலாஹ இல்லல்லாஹு - வணக்கத்திற்குத் தகுந்தவன் அல்லாஹுத் தஆலாவைத் தவிர வேறு எவருமில்லை.
முஹம்மதுர் ரஸுலுல்லாஹி - முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுத் தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள்.
விளக்கம் : அல்லாஹ்தான் நம்மைப் படைத்து பரிபாலித்துக் கொண்டு இருக்கிறான். அவன் தான் சகல சக்திகளும் பெற்றவன். எல்லாப் பொருள்களின் ஆதிக்கமும் அவன் கைவசம் இருக்கிறது. படைக்கப்பட்ட பொருள்களுக்கு எந்த சக்தியுமில்லை. அல்லாஹ் நாடி ஒரு பொருளில் ஒரு பலன் வெளியாக வேண்டுமென்று நாடாத வரை அப்பொருளில் எந்தப் பலனும் உண்டாகாது. ஆகவே அல்லாஹுவையே வணங்க வேண்டும். அவனே வணங்கத் தகுந்தவன். அவனது சட்டத்திட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஒரு மனிதனுக்கு அல்லாஹ் நாடாத வரை எவரும் நன்மையோ, தீமையோ செய்ய முடியாது. எனவே மனிதன் அல்லாஹ்வுக்குப் பூரணமாக அடிபணிய வேண்டும். அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு மாறு செய்யக் கூடாது.
அல்லாஹ்வுடைய கட்டளை என்ன என்பதைத் தெளிவு படுத்திச் செய்து காட்டியவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆகும். இவர்கள் அல்லாஹ்வுடைய அடியாராகவும் இறுதித் திருத்தூதராகவும் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பின் எந்த நபியும் வரப்போவதில்ல்லை. இருதி நாள் வரை வரக்கூடிய மனித சமுதாயத்திற்கும் முழு உலகில் வாழக்கூடிய மனிதர்களுக்கும் இவர்கள் வழிமுறையே இம்மை மறுமை வெற்றிக்குரிய வழியாகும். இது தான் கலிமாவுடைய விளக்கமாகும்.
அல்லாஹ்வும் அவன் ரசூலும் அகில உலகத்திலும் எவ்வளவு சிறப்புடையவர்களோ அவ்வளவு அவர்களால் காட்டப்பட்ட வழிமுறையும் உயர்வுடையதும் மதிப்புடையதுமாகும். முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வு முறை அல்லாஹ்வுக்கு மிகப் பிடித்தமான வாழ்வு முறையாகும். அவர்களின் ஒவ்வொரு வழிமுறையும் நூர் - பிரகாசமாகவும், ஹிதாயத் - நேர்வழியாகவும் உள்ளது. ஒருவர் எந்த அளவு அவர்களின் வழிமுறையை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடக்கின்றாரோ, அந்த அளவுக்கு பிரகாசம் பெற்றுக் கொள்வார். எந்த அளவுக்கு விலகி நிற்கின்றாரோ அந்த அளவுக்கு இருளடைந்து போவார். உலக ஆசை, தவறான முறையில் பொருள் ஈட்டி ஜீவனம் நடத்துவது அத்தனையும் இருண்ட திரைகளாகும்.
கலிமாவின் கருத்தை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்ட மனிதன் முஃமின் (விசுவாசி) ஆகி விடுகிறான். பின்பு அநேக காரியங்களைச் செய்வதும், அநேக காரியங்களை விடுவதும் அவன் மீது கடமையாகிறது.
கலிமா ஒதுபவர்கள் தீய செயல்களைச் செய்வதினின்றும் அக்கலிமா தடுத்து விடுகிறது. ஆதலால், கலிமா ஓதுகிறவர்கள் ஒவ்வொரு சமயத்திலும், அல்லாஹ்வுடைய கட்டளைகளை நினைவில் வைத்து நடப்பது அவசியம், வணிகம், விவசாயம், கொடுக்கல், வாங்கல், குடும்ப உறவு இன்னும் இவை போன்றவைகளைச் செய்வதில் அல்லாஹ்வின் கட்டளைகளைத் தெரிந்து அவன் எதைச் செய்யக் கூடாதென்று தடுக்கிறானோ அதைச் செய்யாது இருப்பதும் கலிமாவின் கடமையாகும்.
ஆ) ஈமானின் அம்சங்கள் ஆறு ஆகும்.
அவைகளாவன:
1- அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளுதல்
அல்லாஹுத் தஆலா ஒருவன், தூய்மையானவன், இணை துணையற்றவன், தேவையற்றவன், அவன் எவரையும் பெறவுமில்லை, அவன் எவராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. எங்கும் எப்போதும் வியாபித்திருப்பவன். அரூபியானவன், சகல பொருள்களின் பேரில் வல்லமை உள்ளவன், நாடியதை செய்பவன், சகல அறிவிற்கும் அதிபதி, சகல பொருள்களையும் பார்க்கின்றான். அனைத்தையும் கேட்கின்றான். நிரந்தரமானவன், சகல செய்திகளையும் வெளியாக்கக் கூடியவன். அவனுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. அவனுக்கு சரிசமமாக ஒன்றுமில்லை. தன் மீது விசுவாசித்து, தன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தவர்களுக்கு சுவனத்தையும், மாறு செய்தவர்களுக்கு துரோகிகளுக்கு நரகில் தண்டனையையும் கொடுக்கக் கூடியவன்.
இத்தகைய ஆற்றலுள்ள அல்லாஹ்வின் மீது நம்பிக்கை விசுவாசம் கொள்வது ஈமானில் உள்ளதாகும்.
2- மலக்குகளின் மீது ஈமான் கொள்ளுதல்
மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள், இவர்கள் ஆடவருமல்லர் பெண்டிருமல்லர், ஊண், உறக்கம், கெடுதல், வஞ்சகம், கோபம், பொறாமை முதலியவற்றை விட்டும் தூய்மையானவர்கள். சதா அல்லாஹ்வின் வணக்கங்களிலும், கட்டளைகளுக்கு வழிபடுதலிலும் ஈடுபடுவார்கள், இறைவனின் உத்தரவுக்கு சிறிதும் மாறு செய்யாதவர்கள், இறைவனின் உத்தமப் பணியாளர்கள்.
சிலர் வானம், பூமி, மலை, கடல், தரை, சுவர்க்கம், நரகம், அர்ஷ், குர்சி, கப்ரு ஆகிய இடங்களிருப்பர். இவர்களின் ஆகாரம் அல்லாஹ்வை புகழ்வதாகும். இவர்களில் ஹஜ்ரத் ஜிப்ரயீல், மீக்காயீல், இஸ்ராயீல், இஸ்ராஃபீல் ஆகியோர் முக்கியமானவர்களாகும். ஜிப்ரயீல் இறைவனால் அருளப்படும் வேதங்களை நபிமார்களிடம் சேர்க்கவும், மீக்காயில் மழையைப் பெய்விக்கவும், இஸ்ராயீல் மக்களின் உயிரை வாங்கவும், இஸ்ராஃபீல் கியாம நாளின் சூர் ஊதவும் நியமிக்கப் பட்டுள்ளனர். இத்தகைய, கண்பார்வையை விட்டு மறைவாக இருக்கின்ற மலக்குகளின் மீது நம்பிக்கை கொள்வது ஈமானில் உள்ளதாகும்.
3- வேதங்களின் மீது ஈமான் கொள்ளுதல்
வேதம் என்பது அல்லாஹ், ரசூல்மார்கள் மூலமாக அடியார்களுக்கு அருளிய கட்டளைகளாகும். அதில் ஆண்டவனைப் போற்றிப் புகழவும், ஏவல்களை எடுத்து நடக்கவும், விலக்கல்களை விட்டு விலக்கவும், அறிவுறுத்தப் பட்டிருக்கும். மேலும் படைப்புகளுக்குரிய கடமைகள், இறை நிராகரிப்பு, கர்வம், பெருமை ஆகிய உணர்வுகள் தவறானது எனப்படிப்பினை ஊட்டக் கூடிய முன்னோர்களின் சரித்திரக் குறிப்புகள், நன்மை செய்தோருக்குக் கிடைக்கும் இன்பம், தீமைப் புரிவோருக்குக் கிடைக்கும் துன்பம் மற்றும் அவசியமான சட்டங்களும் அதில் விவரிக்கப் பட்டிருக்கும்.
அல்லாஹுத் தஆலா பல நபிமார்களுக்கு, பல வேதங்களை அருளியுள்ளான். அவைகளில் நான்கு வேதங்களும், 110 ஸுஹ்புகள் என்னும் இறைகட்டளைகளும் அடங்கும். ஆதம் (அலை) அவர்களுக்கு 10, ஷீத் (அலை) அவர்களுக்கு 30, இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு 30, இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு 30, மூஸா (அலை) அவர்களுக்கு 10, ஆக மொத்தம் 110 இறைகட்டளைகளை அருளினான். ஹலரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெளராத்து வேதம் இப்ரானி மொழியிலும், ஹலரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸபூர் வேதம் யூனானி மொழியிலும், ஹலரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஞ்சீல் வேதம் ஸுர்யானி மொழியிலும், ஹலரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குர் ஆன் வேதம் அரபி மொழியிலும் இறக்கப்பட்டன. இத்தகைய அவனுடைய வேதங்கள் உண்டென நம்பிக்கை கொள்வது ஈமானில் உள்ளதாகும்.
4- நபிமார்கள் மீது ஈமான் கொள்ளுதல்
நபிமார்கள் அல்லது ரசூல்மார்கள், மக்களை நேர் வழியில் திருத்துவதற்காக அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களுள் மாணிக்கம் ஆவார்கள். தூய்மையான நற்குணமுடையவர்கள். துர்க்கிரிகைகளை விட்டும் சுத்தி செய்யப் பட்டவர்கள். இறைவனால் அளிக்கப்படும் கட்டளைகளை அப்படியே விளக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்கள், ஆண்டவனுக்கு மற்றெல்லாரையும் விடப் பிரியமானவர்கள், ஆண்டவனுக்கு வழிப்படுதலில் முதன்மை பெற்றவர்கள், அவர்களை விசுவாசம் கொள்ளாத எந்த மனிதனுக்கும் பாதுகாப்பு கிடைக்காது; அவர்களை விசுவாசித்தவன் ஆண்டவனை விசுவாசித்தவனாகவும், அவர்களை மறுத்தவன் ஆண்டவனை மறுத்தவனாகவும் ஆகிறான். எல்லா நபிமார்களும் ஏகத்துவத்ததைப் போதித்தார்கள். ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்கள் முதல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை சுமார் 1.24.000 நபிமார்கள் உலகத்திற்கு வந்தார்கள்.
தனக்கு கொடுக்கப்பட்ட வேதத்தைக் கொண்டு மக்களை நேர் வழிப்படுத்தியவர் ரசூல் எனப்படுவார். முந்தைய வேதத்தை மெய்பித்து மக்களை நேர் வழியிலாக்க முயற்சித்தவர் நபி எனப்படுவார்.
குர் ஆன் ஷரீப்பில் 25 நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளது. அதில் தனிச்சிறப்புடையவர்கள் : ஹஜ்ரத் ஆதம், நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) ஆகியோர் ஆவார்கள். சகல நபிமார்களுக்கும் தலைவர் கடைசி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவர். நபிமார்களில் சிலர் சிலரைவிட பதவியில் சிறந்தவர்கள். இவர்களுக்கு வேதவசனங்களும்; மனிதர்களின் வழமைக்கு மாற்றமான முஃஜிஸா என்னும் அற்புதங்களும் கொடுக்கப் பட்டன. இத்தகைய நபிமார்கள் இறைவனால் அனுப்பட்டவர்கள் என நம்பிக்கை கொள்வது ஈமானின் உள்ளதாகும்.
5- முடிவு நாளின் மீது ஈமான் கொள்ளுதல்
உலக அழிவு நாள் உண்டு என்று ஈமான் கொள்ளுதல், அந்த நாள் வருவதற்கு முன் சில ஆண்டுகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள் பற்றி நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவைகள் வருமாறு :
மக்களின் தன்மைகள் :
மார்க்கக் கல்வி எடுபட்டு மூட நம்பிக்கை அதிகமாகும். பொய், மோசடி, நம்பிக்கை துரோகம், மது பானம் அருந்துதல், விபச்சாரம் மற்றும் பெண்களின் ஆதிக்கம் அதிகமாகும். அதிகாரம் தகுதியில்லாத மனிதனிடம் போய்ச் சேரும். அநியாயக்காரன் பாராட்டப்படுவான். ஜகாத்தை அபராதமாக நினைப்பார்கள். இந்த சமயம் சிவந்த சூறாவளிக்காற்று சுழன்று அடிப்பதும், சிலர் பூமியில் புதைந்து விடுவதும், கல்மாரி பொழிவதும், ரூபங்கள் மாறி விடுவதும், காபிர்களின் ஆரவாரம் அரசாட்சி அதிகமாவதும் நடைபெறும். அப்போது முஸ்லிம்கள் மரணத்தை எதிர்பார்ப்பார்கள்.
இமாம் மஹ்தி (அலை), தஜ்ஜால், நபி ஈஸா (அலை):
இமாம் ஹஸன் (ரழி) அவர்கள் வம்சத்தில் தோன்றி மதீனாவில் வசித்துவிட்டு நாற்பதாவது வயதில் இமாம் மஹ்தி (அலை) மக்கா வந்தடைந்து மார்க்க நெறி முறைகள் வழுவாமல் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையை பின் பற்றி முஸ்லீம்களுக்கு வழிகாட்டி வருவார்கள். பிறகு மதீனாவில் ஜியாரத்தை முடித்து விட்டு டமாஸ்கஸ் வந்தடைவார்கள். அச்சமயம் யூதர்களின் வம்சத்தில் கலகத்தையும், குழப்பங்களையும் உண்டாக்கக் கூடிய தஜ்ஜால் புறப்பட்டு எமன் தேசம் வந்து டமாஸ்கஸ் நகரத்தை நோக்கிப் புறப்படுவான். இச் சமயம் இரண்டாவது வானத்தில் இருக்கும் ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள், இரு மலக்குகளின் தோள் மீது கைகளை வைத்துக் கொண்டு டமாஸ்கஸ் நகரத்து பள்ளியின் மேற்கு பக்கத்தின் மினாராவில் இறங்குவார்கள். அப்பொழுது இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இமாமாக நின்று தொழ வைப்பார்கள். ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் தஜ்ஜால் சேனையுடன் போர் செய்து அவனைக் கொன்று விடுவார்கள். இருவரும் மக்களை நேர்வழியில் நடத்திக் கொண்டிருப்பார்கள். உலகம் முழுவதும் இஸ்லாம் பின் பற்றப்படும்.
பிறகு ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இறந்தவுடன் மதீனாவில் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தில் விடப்பட்டிருக்கும் காலியிடத்தில் அடக்கம் செய்யப்படுவார்கள்.
மற்ற நிகழ்ச்சிகள் :
சில காலம் நீதமான ஆட்சிக்குப்பின் அநீதம் அதிகரிக்கும். பிறகு வானத்திலிருந்து புகை மண்டலம் தோன்றும், இதனால் மூஃமின்களுக்கு ஜலதோஷமும் காபிர்களுக்கு கடுந்துன்பமும் ஏற்படும். இது நாற்பது நாள் வரை நீடிக்கும். பிறகு குர்பானி பெருநாளைக்குப் பின் ஒரு இரவு மூன்று இரவுகளுக்குச் சமமாக இருக்கும். பிறகு சூரியன் பிரகாசம் குறைந்து மேற்கு திசையில் உதயமாகி சுமார் 10 மணி நேரம் உயரும். பின்னர் அதே திசையில் மறைந்து விடும். பின்னர் பாவமன்னிப்பின் தலைவாசல் அடைக்கப்படும். பின்னர் வழக்கப்படி சூரியன் கிழக்கே உதிக்கும். இதற்கு அடுத்த நாள் மக்காவிலுள்ள ஸபா மர்வா என்னும் மலை பிளந்து அதிலிருந்து “தாப்பத்துல் அர்லு” என்ற பிராணி தோன்றி வெகு விரைவில் உலக மெங்கும் சுற்றி முஸ்லிம் யார்? என்ற அடையாளம் போட்டு விட்டு மறைந்து விடும். அதற்குப் பின் ஷாம் தேசத்தின் பக்கத்திலிருந்து குளிர்ந்த காற்று வீசும். இது பட்டவுடன் ஈமான் கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் மரணமடைந்து காபிர்கள் மட்டும் மீதியாகிவிடுவர். பிறகு ஹபசிக் காரர்கள் ஆட்சி ஏற்பட்டு கஃபத்துல்லாஹ்வை இடித்து அதன் கீழிருக்கும் புதையல்கள் எடுக்கப்படும். பின் சிலை வணக்கம் உண்டாகும். குர் ஆன் ஷரீப் காகிதங்களிலிருந்து எடுபட்டு விடும். எங்கும் பாவங்கள் நிறைந்து காணப்படும். பிறகு ஒரு நெருப்பு உண்டாகி எல்லா மக்களையும் ஷாம் தேசத்தின் பக்கம் கொண்டு வந்து சேர்க்கும். இதற்குப் பின் சூர் ஊதப்படும். இத்துடன் உலகம் அழிந்து விடும். இந்நிகழ்ச்சிகளுக்கு பிறகு நடைபெறும் உலக முடிவு நாள் மீது விசுவாசம் கொள்வதும் ஈமானில் உள்ளதாகும்.
6- தக்தீரின் பேரில் ஈமான் கொள்ளுதல்
நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு நடைபெறுகிறது. ஒரு கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் முன்பே அது பற்றிய அமைப்பு, வரைபடத்தை தீர்மானித்துக் கொள்வது போல, அல்லாஹுத்த ஆலா இவ்வுலகங்களைப் படைக்கும் முன்பே அதனுடைய நிலமைகளைக் குறித்து என்னென்ன அளவின் பேரில் நடத்தப்படும் என்ற செய்தியை முன்னதாகவே நிச்சயத்துக் கொள்கின்ற திட்டமே தக்தீராகும். நன்மை செய்தால் சொர்க்கமும், தீமை செய்தால் நரகமும் கிடைக்கும். அல்லாஹ் நன்மை செய்யும் படியும் தீமையை விட்டு விலகியிருக்கும் படியும் உத்தரவிட்டுள்ளான்.
மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்புதல் பற்றி ஈமான் கொள்ளுதல்
முதல் சூர் ஊதி உலகம் அழிந்த பின் அல்லாஹ் இஸ்ராஃபீல் (அலை) அவர்களை உயிர்பித்து மறுமுறை சூர் ஊதும் படி கட்டளையிடுவான். ஜிப்ரயில், மிக்காயீல், முதலிய மலக்குகள் இறங்குவார்கள். பின்னர் ஒரு மழை பெய்யும், அதில் மக்கள் உயிர் பெற்று எழுவார்கள். முதலில் நாயகம் (ஸல்) அவர்களும், ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களும், மற்ற நபிமார்களும், சித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்கள், முஃமின்கள், காபிர்கள் முறையாக எழுப்பப்படுவார்கள். மனிதன் எந்த நிலையில் மரித்தானோ அதே நிலையில் எழுப்பப்படுவான்.
ஒவ்வொருவரின் நன்மை தீமைகள் பற்றிய ஏடுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். எவரின் வலக்கரத்தில் கொடுக்கப்படுகிறதோ அவர் சுவனவாசி என்பதற்கு அறிகுறி, அல்லாஹுத் தஆலா, முதன் முதலில் உயிரினங்களில் நியாயம் வழங்குவான். பிறகு காபிர்களும் அவர்கள் வணங்கிய பொருள்களும் நரகத்தில் தள்ளப்படும். பிறகு நபிமார்களையும் அவர்களின் உம்மத்தார்களையும் விசாரிக்கப்படும். நன்மை செய்தோர் சுவர்க்கத்திற்கும், தீமை செய்தோர் நரகத்திற்கும் அனுப்பப்படுவர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.