ஆலமுல் அர்வாஹ் (ஆன்மாக்களின் உலகம்)
ஆலமுல் அர்வாஹ் இதன் பொருள் ஆன்மாக்களின் உலகம் என்பதாகும். இதற்கு ஆலமுல் ஜபரூத் என்னும் பெயரும் உண்டு. இறைவன் ஆதம் (அலை) அவர்களைப் படைத்துத் தன் வலக்கையால் அவர்களின் முதுகை தடவினான். பின்னர் தன் இடக்கையால் அவர்களின் முதுகைத் தடவினான். தடவியதும் தன் இரு கைகளையும் மூடிக் கொண்டு, “ஆதமே! இவற்றில் நீர் விரும்பியதைத் தேர்ந்தெடும்!” என்று கூறினான்.
உலக முடிவு நாள் வரை தோன்றும் சுவனவாசிகள் மற்றும் நரகவாசிகள்
இறைவனின் இரு கைகளும் பாக்கியம் பெற்றவையாயினும் ஆதம் (அலை) அவர்கள் அவனுடைய வலக்கையைத் தேர்ந்தெடுத்தனர். அதனை இறைவன் விரிக்கவே அதிலிருந்து சிற்றெறும்பின் அளவில் ஒருவர் பின் ஒருவராக ஒளிமுகத்தினர் வெளியில் வந்தனர். “அவர்கள் யார்?” என்று ஆதம் (அலை) அவர்கள் இறைவனை வினவ, “அவர்கள் தாம் உம் வழித்தோன்றல்களில் உலக முடிவு நாள் வரை தோன்றக்கூடிய நல்லோர், சுவன வாசிகளின் செயல்களில் ஈடுபடுபவர்” என்றான் இறைவன். பின்னர் அவன் தன் இடக்கையை விரிக்கவே அதிலிருந்து சிற்றெறும்பின் அளவில் ஒருவர் பின் ஒருவராக இருள் முகத்தினர் வெளிப் போந்தனர். “அவர்கள் யார்?” என்று ஆதம் (அலை) அவர்கள் இறைவனை வினவ, “அவர்கள் தாம் உம் வழித்தோன்றல்களில் உலக முடிவு நாள் வரை தோன்றக் கூடிய தீயோர், நரக வாசிகளின் செயல்களில் ஈடுபடுபவர்” என்று கூறினான்.
ஆதம் (அலை) அவர்களின் முதுகந் தண்டிலேயே மீண்டும் புகச் செய்தான்
அப்பொழுது இறைவன் அவர்கள் அனைவரையும் நோக்கி, “நான் உங்களுடைய நாயனல்லவா?” என்று கேட்டான். “ஆம்” என்று அவர்கள் ஒருமித்துப் பதிலுரைத்தனர். பின்னர் இறைவன் அவர்களை நோக்கி, “நான் உங்களின் இறைவன். எனக்கு நீங்கள் இணை வைத்து மாறு செய்யாதீர்! செய்யின் உங்களை வேதனை செய்வேன். உங்களிடம் என் தூதுவர்களை அனுப்பி வைப்பேன். அவர்கள் நீங்கள் இப்பொழுது கூறிய உறுதிமொழியை நினைவுறுத்துவர். உங்களுக்கு வேதங்களை அனுப்பி வைப்பேன்” என்று கூறினான்.
அப்பொழுது ஆங்கிருந்த அனைவரும், “நீ தான் எங்களின் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதி கூறுகின்றோம்” என்று ஒருமித்துக் கூறினர். அப்பொழுது இறைவன் அவர்கள் இவ்வாறு உறுதி மொழி அளித்ததற்கு ஒருவரை மற்றொருவருக்குச் சான்றாக ஆக்கி அவர்களின் இரணம், பிறப்பு, இன்பதுன்பங்கள் ஆகியவற்றை நிர்ணயம் செய்து பின்னர் அவர்களை ஆதம் (அலை) அவர்களின் முதுகந் தண்டிலேயே மீண்டும் புகச் செய்தான்.
மற்றொரு வரலாறு ‘சுஜூது’ செய்தவர்கள் மற்றும் செய்யாதவர்கள்
இதைப் பற்றி மற்றொரு வரலாறு பின்வருமாறு உள்ளது: இறைவன் அவ்வான்மாக்கள் அனைவரையும் நோக்கி, “நான் உங்களைப் படைத்து வளர்க்கின்ற இறைவனல்லவா?” என்று வினவினான். சிலர் இறைவனுக்கு வழிப்படவும், சிலர் அவனுக்கு மாறு செய்யவும் மனத்தில் எண்ணிக் கொண்டனராயினும் வெளியில் “ஆம்” என்று பதில் கூறினர். எனவே இறைவன் அவர்களை நோக்கி தனக்கு சுஜூது (சிரவணக்கம்) செய்யுமாறு கூறினான். உடனே சிலர் மட்டும் இறைவனுக்கு சுஜூது செய்தனர். அவர்கள் தலையை உயர்த்தியதும் மீண்டும் அவர்கள் அனைவரையும் தனக்கு சுஜூது செய்யுமாறு கூறினான் இறைவன். அப்பொழுது முன்பு ‘சுஜூது’ செய்தவர்களில் ஒரு பிரிவினரும், சிலரும் இறைவனுக்கு ‘சுஜூது’ செய்தனர்.
முதன் முறையும் இரண்டாவது முறையும் இறைவனுக்கு ‘சுஜூது’ செய்தவர்கள் இஸ்லாத்தில் பிறந்து இறை நம்பிக்கையுடன் இறப்பர் என்றும், முதன் முறை ‘சுஜூது’ செய்து இரண்டாம் முறை ‘சுஜூது’ செய்யாதவர்கள், இஸ்லாத்தில் பிறந்து இறை மறுப்புடன் இறப்பர் என்றும், முதன் முறை ‘சுஜூது’ செய்யாது இரண்டாம் முறை ‘சுஜூது’ செய்தவர்கள் இறைமறுப்பவர்களில் பிறந்து இறை நம்பிக்கையாளராய் இறப்பர் என்றும், இரு முறையும் ‘சுஜூது’ செய்யாதவர்கள் இறை மறுப்பவர்களில் பிறந்து இறை மறுப்பவராகவே இறப்பர் என்றும் கூறப்படுகிறது.
இந் நிகழ்ச்சி மக்காவுக்கும், தாயிஃபுக்கும் நடுவில் நிகழ்ந்ததென்றும், விண்ணகத்தில் நடந்ததென்றும் இரு வேறு விதமாகக் கூறப்படுகிறது. இச்சமயம் ஆன்மாக்கள் இறைவனிடம் செய்து கொடுத்த உறுதிப் பாட்டுக்கு ‘மீதாக்’ என்றும் இந் நாளிற்கு ‘யெளமுல் மீதாக்’ என்றும் கூறப்படுகிறது.
இது பற்றி திருமறை அல் குர் ஆனில் உள்ள வசனங்கள்
(நபியே!) உங்களது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து (அவர்களை நோக்கி) "நான் உங்கள் இறைவனாக இல்லையா?" என்று கேட்டதற்கு, "ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்" என்று அவர்கள் கூறியதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ஏனென்றால் (இதனை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்" என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும், (7:172.)
அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கிய தெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்துவிடலாமா?" என்று கூறாதிருப்பதற்காகவே (இதனை நாம் ஞாபகமூட்டுகிறோம் என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.) (7:173.)
அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காக (நம்முடைய) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரித்துக் கூறுகிறோம். (7:174.)
ஆன்ம உலகில் இறைவனிடம் மக்கள் அனைவரும் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தது இன்னும் தம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பதாக துன்னூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஆன்ம உலகில் ஆதம் (அலை) அவர்கள் ஆயுளிலிருந்து வழங்கிய 40 ஆண்டுகள்
ஆன்ம உலகில் இறைவனின் வலப்புறத்தில் ஆணழகர் ஒருவர் அழுத வண்ணம் வீற்றிருப்பதைக் கண்டு, “யார் அவர்?” என்று ஆதம் (அலை) அவர்கள் இறைவனை வினவ, “அவர் உம் வழித் தோன்றல் தாவூத் ஆவார். தாம் செய்த தவற்றை எண்ணி நைந்துருகிறார்” என்று பதிலிறுத்தான் இறைவன். “அவருடைய வயது என்ன?” என்று ஆதம் (அலை) அவர்கள் வினவ, “அறுபது ஆண்டுகள்” என்றார் இறைவன். அவருக்கு அதிக வயதை அளிக்குமாறு ஆதம் (அலை) அவர்கள் வேண்ட, “எழுது கோல் உலர்ந்து விட்டது. எனவே இனி மேல் எழுதுவதற்கில்லை. நீர் விரும்பின் உம்முடைய ஆயுளிலிருந்து ஏதேனும் அவருக்குக் கொடுத்து அவரின் ஆயுளை அதிகப்படுத்தி வையும்!” என்று இறைவன் கூற அவ்விதமே ஆதம் (அலை) அவர்கள் தம் ஆயுளில் இருந்து நாற்பது ஆண்டுகளைத் தாவூது (அலை) அவர்களுக்கு வழங்கியதாகக் கூறினர். இறைவன் வானவர்களை நோக்கி, “நீங்கள் இதற்குச் சான்று” என்று கூறினான்.
ஆதம் (அலை) அவர்களின் மக்களும் மறதியுள்ளவர்களாக இருக்கின்றனர்
பின்னர் இஸ்ராயீல் (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களின் உயிரை வாங்க வந்த பொழுது, “எனக்கு இறைவன் ஆயிரம் வயதை அல்லவா நல்கினான்? இன்னும் நாற்பது ஆண்டுகள் பாக்கியுள்ளனவே” என்று அலறினார்கள் அவர்கள். “அவற்றைத் தாம் நீர் உம் மகன் தாவூதுக்கு வழங்கிவிட்டீரே!” என்று இஸ்ராயீல் (அலை) அவர்கள் கூற, “அப்படியொன்றும் நான் வழங்கவில்லை” என்றனர் ஆதம் (அலை) அவர்கள், “நிச்சயமாக நீர் ஆன்ம உலகில் வழங்கினீர். அதற்கு நாங்கள் சான்று” என்று அமரர்கள் ஒருமித்துக் கூறினர். அதைக் கேட்டு ஆதம் (அலை) அவர்கள் விழித்தனர், அவர்கள் மீது இரங்கி அவர்களுக்கு ஏற்கெனவே அளித்திருந்த வண்ணம் ஆயிரம் வயதாக்கினான் இறைவன். இதைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறும் பொழுது, “ஆதம் (அலை) அவர்கள் தாம் கூறியதை மறந்தார்கள். எனவே தான் அவர்களின் மக்களும் மறதி உள்ளவர்களாக இருக்கின்றனர்” என்றனர். இதன் காரணமாகவே உடன்பாடுகளை எழுதிக் கொள்ளுமாறு இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.