Home


முஸ்அப் இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு

        முஸ்அப் இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.594 - கி.பி.624) அவர்கள், அப்துத்தார் குடும்பத்தைச் சேர்ந்த அழகரானவர், அக்காலத்தில் மக்காவிலேயே அழகாக உடையணிபவராய் இருந்தார். இவர் ஹாஷிமின் கொள்ளுப் பேரராவார். இவரை நபி (ஸல்) அவர்கள் தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளராக மதீனாவிற்கு அனுப்பினார்கள். ‘அல்முக்ரி’ (குர் ஆனின் ஞானமுடையவர்) என்று முஸ்அப் முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப்பட்டார். இவர் உஹதுப் போரில் கலந்து கொண்டார். உருவில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒத்திருந்த இவரை இப்னு கமிஆ, அண்ணல் நபி(ஸல்) அவர்கள் என எண்ணி வெட்டினான். அப்போர்க்களத்திலேயே (ஷஹீது) வீர மரணம் எய்தினார்.

(இவரது தியாகத்தை சிறப்பித்து இன்னிசையில் இவரது வரலாறு இணைத்துள்ளதை கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து கேட்டுக் கொள்ளவும்.) இன்னிசையில் முஸ்அப் இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு

ஆரம்ப கால வாழ்வு

        முஸ்அப் இப்னு உமைர் (ரழி) மக்காவின் குறைஷி குலத்தில் பனூ அப்துத்தார் பிரிவை சேர்ந்த உமைர் இப்னு ஹாஷிம் மற்றும் ஹுனாஸ் பின்த் மாலிக் ஆகியோரின் மகனாக மக்காவில் பிறந்தார், மற்றும் இவரது பெற்றோர் செல்வந்தர்களாவர். இவர் பிறந்த வருடம் ஆதாரபூர்வமான தகவல் இல்லை. ஆனால் கி.பி.594க்கும் கி.பி.598க்கும் இடையில் பிறந்தார் என நம்பப்படுகிறது.

        இவர் இளம் வயதில் குறைஷிகள் கூட்டும் கூட்டங்களில் கலந்து கொள்ள இவரது பெற்றோர் அனுமதி அளித்திருந்தனர்.

இவரது தோற்றம்

இவர் மிகவும் அழகானவர் என்று கூறப்பட்டது. மேலும் இவர் மிகவும் அழகாக உடையணிபவராய் இருந்தார் என்று  கூறுகிறார்கள், இவர் கடைத்தெருவில்  செல்லும் போது, ​​எல்லோரும் இவரைப் பார்த்து திகைப்பார்கள். இவர் பார்வைக்கு நபி (ஸல்) அவர்களைப் போலவே இருந்தார். இவர் வழக்கமாக அணியும் ஆடை, மற்றும் இவரது காலணிகள் யேமனில் செய்யப்பட்டன, இது அந்த நேரத்தில் தீவிர செல்வத்தின் அடையாளமாக இருந்தது.

இஸ்லாத்தை தழுவியது

        அர்க்கமின் இல்லத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவாக இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு விபரம் கேட்டு செல்ல வந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) குர்ஆன் வசனங்களை செவிமடுத்து அதன் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக  இவர் இஸ்லாத்தைத் தழுவினார். ஆனால் அவரது வீட்டில் தெரிவிக்காமல் இரகசியம் காத்தார். பின்னர் இச் செய்தி மற்றவர்கள் மூலம் அவரது தாயாருக்குத் தெரிய வர அவர்கள் கண்டித்து, பின்னர்த் தம் அன்னையின் கொடுமை தாங்காது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆலோசனைப் படி அபிசீனியாவிற்குச் சென்று வாழ்ந்தார்.

        பனூஹாஷிம்கள் ஷுஃப அபூதாலிப் என்ற இடத்தில் அடைக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பொழுது இவரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து துன்பங்களைப் பகிர்ந்து கொண்டார். அதுவரை வந்திருந்த திருக்குர் ஆன் வசனங்கள் முழுவதும் இவருக்கு மனனமாய் இருந்தன, எனவே முதலாவது அகபா உடன்பாட்டிற்குப் பின் யத்ரிபுக்கு இஸ்லாத்தின் தூதுவராக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரையே அனுப்பி வைத்தார்கள்.

முதல் இஸ்லாமிய அழைப்பாளர்

முதல் அகபா ஒப்பந்தம் நல்லமுறையில் முடிந்தது. ஹஜ்ஜுடைய காலங்கள் கழிந்தப் பின் ஒப்பந்தம் செய்து கொடுத்தவர்களுடன் நபி (ஸல்) தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளரை மதீனாவிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த அழைப்பாளர் அனுப்பப்பட்டார். இப்பணிக்காக முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவரான முஸ்அப் இப்னு உமைர்(ரழி) என்ற வாலிபரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள்.

யத்ரிபில் (மதீனாவில்) இஸ்லாமிய அழைப்பு

முஸ்அப் இப்னு உமைர் (ரழி), அவர்கள் யத்ரிபில் அஸ்அது இப்னு ஜுராரவின் வீட்டில் தங்கினார். ‘அல்முக்ரி' (குர்ஆனின் ஞானமுடையவர்) என்று முஸ்அப் (ரழி) முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப்பட்டார். முஸ்அபும் அஸ்அதும் சேர்ந்து மதீனாவாசிகளிடையே மிக உற்சாகத்துடன் இஸ்லாமைப் பரப்பினார்கள்.

தம் வெறுமேனியில் ஒரு சிறு கம்பளித் துணியைப் போட்டுக் கொண்டு இவர் யத்ரிபில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ததோடு அங்கிருந்த நிலைமையை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொண்டும் இருந்தார்.

        இவருடைய கையில் தான் ஸஅத் இப்னு  முஆதும், உஸைத் இப்னு ஹுதைரும் இஸ்லாத்தைத் தழுவினர்.

பத்ரு போர்க்களத்தில்

        ஒரு காலத்தில் செல்வச் சிறப்பில் இருந்த இவர், பின்னர் ஒரே ஒரு கிழிந்த உடையை மட்டும் அணிந்திருப்பதைக் கண்ட அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கண்ணீர் உகுத்தார்கள்.

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்கான பொதுவான தலைமைத்துவத்தின் வெள்ளைக் கொடியை ‘முஸ்அப் இப்னு உமைர்' (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள்.

        பத்ருப் போர்களத்தில் போர் முடிந்ததற்குப் பின்பு முஸ்அப் இப்னு உமைர் (ரழி) தனது சகோதரர் அபூஅஜீஸ் இப்னு உமைரைப் பார்த்தார்கள். இவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் கலந்திருந்தார். மதீனாவாசிகளில் ஒருவர் அவரது இரு கைகளையும் கட்டிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த முஸ்அப் அவரிடம் ‘‘நீங்கள் அவரை நன்றாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவரது தாய் மிகுந்த செல்வமுடையவர். உங்களிடமிருந்து இவரை அதிக கிரயம் கொடுத்து விடுவிப்பார்'' என்றார்கள். இதைக் கேட்ட அவரது சகோதரர் ‘‘எனது சகோதரனே! இதுதான் நீ எனக்காக செய்யும் பரிந்துரையா?'' என்றார். அதற்கு முஸ்அப் ‘‘இவர்தான் எனது சகோதரர் நீ அல்ல!'' என்றார்கள்.

உஹது போர்க்களத்தில்

         அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கொடி தாங்கி இவர் உஹதுப் போரிலும் கலந்து கொண்டார். முஸ்அப் இப்னு உமைரும் போரில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி எதிரிகளுடன் சளைக்காமல் சண்டையிட்டார். தனது கையில் கொடியை ஏந்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களைத் தாக்கச் சென்று கொண்டிருந்த இப்னு கமிஆ மற்றும் அவனது நண்பர்களை எதிர்த்து சண்டையிட்டார். அவர்கள் முஸ்அபின் வலக்கரத்தை வெட்டிவிடவே கொடியை தனது இடக்கரத்தால் பற்றிக் கொண்டார். பின்பு, இடதுகையையும் வெட்டிவிடவே மண்டியிட்டு தனது கழுத்தாலும் நெஞ்சாலும் அதை அணைத்துக் கொண்டார். முஸ்அப் தோற்றத்தில் நபியவர்களைப் போன்று இருந்தார். எனவே, எதிரி இப்னு கமிஆ முஸ்அபைக் கொன்றுவிட்டு, தான் நபியவர்களைக் கொன்றதாக எண்ணி, இணைவைப்பவர்களிடம் சென்று ‘‘நிச்சயமாக முஹம்மது கொல்லப்பட்டார்'' என்று கூச்சலிட்டான். (இப்னு ஹிஷாம்)

        இவரை வெட்டி வீழ்த்தியதும், தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களையே வெட்டி வீழ்த்தி விட்டதாகக் இப்னு கமிஆ கூக்குரலிடவே அது கேட்டு முஸ்லிம்கள் பெரிதும் சோர்வுற்றார்கள். முஸ்லிம்களுக்குத் தோல்வி முகம் காட்டத் தொடங்கியது. பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருப்பதை அறிந்து முஸ்லிம்கள் வீரத்துடன் போரிட்டார்கள்.

        முஸ் அப் (ரழி) கொல்லப்பட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் கொடியை அலீ இப்னு அபூதாலிபிடம் வழங்கினார்கள். நபியவர்களிடமிருந்து கொடியை வாங்கிய அலீ (ரழி) கடுமையாக எதிரிகளை தாக்கி கதிகலங்க வைத்தார்.

உடல் நல்லடக்கம்

        போரில் உயிர் நீத்த தியாகிகளின் காட்சி முஸ்லிம்களின் உள்ளங்களை கசக்கிப் பிழிந்தது. கண்களைக் குளமாக்கியது. தியாகிகளின் உடலை மறைப்பதற்குப் போதுமான துணிகள் கிடைக்கவில்லை.

        அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: “முஸ்அப்(ரழி) கொல்லப்பட்டார். அவர் என்னை விட மிகச் சிறந்தவர். அவர் உடலை ஒரு சிறிய போர்வையால்தான் போர்த்தப் பட்டது. அவரது தலைப் பக்கம் துணியை இழுத்தால் கால் தெரிந்தன. கால்களின் பக்கம் துணியை இழுத்தால் தலை தெரிந்தது. இந்நிலையைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “அப்போர்வையால் அவரது தலையை மறைத்து, அவரது கால்களுக்கு ‘இத்கிர்’ என்ற செடியைப் போர்த்தி விடுங்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

        நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி உஹத் மலைச்சாரலில் இவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.        


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...