Home


ஆஷுரா நாள்

        ஆஷுரா, இது ஒரு ஹீப்ருச் சொல்லாகும். யூதர்களின் திஷ்ரி மாதத்தின் 10 ஆம் நாளாகும் இது. இன்று தான் அரபிகளின் முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளும் வருகிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த புதிதில் யூதர்கள் இந்நாளில் நோன்பு நோற்பதைக் கண்டு அதற்கான காரணத்தை வினவிய பொழுது இறைவன் ஃபிர்அவ்னையும், அவனுடைய படையினரையும் செங்கடலில் முழ்கடித்து மூஸா (அலை) அவர்களைக் காத்தருளிய நாள் இது என்றும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு மூஸா (அலை) அவர்கள் இன்றைய தினம் நோன்பு நோற்றனர் என்றும், எனவே தாங்களும் நோன்பு நோற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். அது கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அவ்விதமாயின் நானும் என் மக்களும் தாம் உங்களைவிட மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி தாங்களும் அந் நாளில் நோன்பு நோற்றதோடு, முஸ்லிம்களையும் அவ்வாறே நோற்குமாறு பணித்தனர்.

ஆனால் யூதர்கள் போன்று செய்யாதீர்கள்

        பின்னர் ரமலான் மாதத்தில் முப்பது நோன்புகள் நோற்பது கடமையாக்கப்பட்ட பின் இந் நோன்பினை நோற்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. எனினும் அவர்கள், “ரமலானுடைய நோன்பிற்குப் பிறகு சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். முஹர்ரம் ஒன்பதாம் நாளிலும், பத்தாம் நாளிலும் நோன்பு நோற்றிடுங்கள்! ஆனால் யூதர்கள் போன்று செய்யாதீர்கள்!!” என்று கூறியுள்ளனர். எனவே பத்தாம் நாள் மட்டும் நோன்பு நோற்பது ‘மக்ரூஹ் தன்ஸீஹ்’ (தவிர்க்கப்பட வேண்டியது) ஆகும். எனவே முஹர்ரம் திங்கள் 9. 10-ஆவது நாட்களிலோ அல்லது 10, 11-ஆவது நாட்களிலோ நோன்பு நோற்பது முஸ்தஹப் (விரும்பத்தக்கது) ஆகும்.

        இந்நாட்களில் ஒருவர் நோன்பு நோற்பது ஓராண்டு முழுவதும் நோன்பு நோற்பதற்குச் சமமாகும் என்றும், அது அவருடைய ஒராண்டுப் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். ஃபர்லான தொழுகைக்கு அடுத்த படியான முக்கியத்துவம் வாய்ந்தது தஹஜ்ஜுத் தொழுகை போன்று ரமலான் மாத நோன்புக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தது முஹர்ரம் மாதத்து நோன்பு தான்.

ஆஷுரா நாளின் விரும்பத்தக்க செயல்கள்

        ஆஷுரா நாளில் நோன்பு நோற்பதும், தர்மம் செய்வதும், குளிப்பதும், கண்களுக்கு அஞ்சனம் (சுருமா) இடுவதும், அனாதைகளின் தலையைத் தடவிக் கொடுப்பதும், மார்க்க அறிஞர்களைச் சென்று  காண்பதும், தம் குடும்பத்தினருக்குத் தாராளமாகச் செலவு செய்வதும், நகம் வெட்டிக் கொள்வதும், நஃபில் (அதிகப்படியான) தொழுகை தொழுவதும், குல்ஹுவல்லாஹு சூரத்தை ஆயிரம் முறை ஓதுவதும் முஸ்தஹப் (விரும்பத்தக்கது) ஆகும்.

இறைவன் தாராளமாக இரணமளிப்பான்

        “ஒருவன் ஆஷுரா நாளில் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் தாராளமாகச் செலவு செய்யின் இறைவன் அவ்வாண்டு முழுவதும் அவனுக்குத் தாராளமாக இரணமளிப்பான்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். “இதனை நாங்கள் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் சோதனை செய்து பார்த்து உண்மையெனக் கண்டோம்” என்று சுப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளனர்.

        இதனை ஒருவர் மக்களிடம் எடுத்துரைக்க, ஒருவர் அதன்படி ஆஷுரா நாளில் தீனார் அறம் வழங்கி அதற்குப் பகரமாக இறைவன் தமக்குப் பத்தாயிரம் தீனார் இரணம் அளிப்பான் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அவ்விதம் ஆகவில்லை. அடுத்த ஆண்டு ஆஷுராவின் போது முன்பு கூறிய ஹதீதை முன்னர்க் கூறிய மனிதரே கூட்டத்தில் எடுத்துரைத்த பொழுது, “நிறுத்தும் உம் ஹதீதை! அதனை நான் உண்மையென ஏற்றுக் கொள்ள இயலாது” என்றார் அந்த மனிதர். இவ்வாறு கூறி விட்டு அவர் இல்லம் சென்ற போது ஒருவர் அவரிடம் குதிரை மீது இவர்ந்து வந்து பத்தாயிரம் தீனார் உள்ள ஒரு பண முடிப்பை அவரிடம் கொடுத்து, “இதோ நீர் விரும்பிய பணத்தை எடுத்துக் கொள்ளும்! ஆனால், அந்த ஹதீதை மட்டும் உண்மையல்லவென்று கூறாதீர்!” என்று சொல்லி விட்டு மறு பேச்சுப் பேசாது விரைந்து சென்று விட்டார் என்று ஒரு வரலாறு கூறுகிறது.

ஆஷுரா நாளில் நடந்த  சிறப்பு சம்பவங்கள்

  • இந் நாளில் தான் வானம், பூமி, சூரியன், சந்திரன், கோளங்கள், சுவனம், நரகம், லெளகு, கலம் ஆகியவையெல்லம் படைக்கப்பட்டன.
  • இந் நாளில் ஜிப்ரயீல் மற்ற வானவர்கள் அனைவரும் படைக்கப்பட்டனர்.
  • இந் நாளில் தான் முதன் முதலாக உலகில் மழை பெய்தது.
  • ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் படைக்கப்பட்டதும் இந்நாளிலேயாகும்.
  • அவ்விருவரும் சுவர்க்கம் சென்றதும் இந்நாளிலேயாகும்.
  • நூஹ் (அலை) அவர்கள் கப்பலிலிருந்து கரை இறங்கியதும் இந்நாளிலேயாகும்.
  • யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளி வந்ததும் இந்நாளிலேயாகும்.
  • யூஸுப் (அலை) அவர்கள் சிறையிலிருந்து வெளிவந்ததும் இந்நாளிலேயாகும்.
  • தாவூது (அலை) அவர்களின் பாவ மன்னிப்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப் பட்டதும் இந்நாளிலேயாகும்.
  • சுலைமான் (அலை) அவர்களுக்கு அரசாங்கம் மீண்டதும் இந்நாளிலேயாகும்.
  • இப்ராஹீம் (அலை) அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு ‘கலீல்’ என்னும் பட்டம் இறைவனால் சூட்டப் பட்டதும் இந்நாளிலேயாகும். அவர்கள் நம்ரூத் மூட்டிய நெருப்பிலிருந்து விடுதலையானதும் இந்நாளிலேயாகும்.
  • மூஸா (அலை) அவர்களின் இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொண்டதும் இந்நாளிலேயாகும்.
  • ஹிள்ரு (அலை) அவர்களின் அறிவை இறைவன் அதிகப்படுத்தியதும்,
  • ஈஸா (அலை) அவர்களை விண்ணகத்திற்கு இறைவன் உயர்த்திக் கொண்டதும் இந்த நாளிலேயாகும்.
  • ஹுஸைன் (ரழி) அவர்கள் கர்பலாக் களத்தில் தம் உயிரை அர்ப்பணம் செய்த நாளும் இந்நாளேயாகும்.
  • இந்நாளில் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆணைப் படி ஒவ்வோராண்டும் கஅபாவின் கதவுகள் திறக்கப் படுகின்றன.
  • இந்நாளில் தான் உலகம் முடிவுறும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

        இந்நாளில் குழந்தைகளுக்குக் கல்வி துவக்கி வைப்பின் அவர்கள் கல்வியில் சிறந்து விளக்குவர் என்று கூறுவர்.

        


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....


Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.