தொழுகை
(இஸ்லாம் பற்றிய தொடர் - 7)
வமா கலக்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லா லியஃபு தூன் (அல் குர் ஆன்: 51:56)
எனும் இறை மறை வசனத்தில் அல்லாஹு த ஆலா மனிதர்களையும், ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்திருக்கின்றேன் என்று குறிப்பிடுகிறான். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று தொழுகை. முஸ்லிமாக இருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயமாகத் தொழுதே ஆக வேண்டும். முஃமின்களின் மிஃராஜ் என்று அழைக்கப்படும் தொழுகை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்றிருந்த போது அல்லாஹ்வால் கடமையாக்கப் பட்டதாகும். தொழுகை மனிதனை மானக்கேடானவைகளை விட்டும், தீமைகளை விட்டும் தடுக்கிறது. எனவே, அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை உட்லுக்குச் சிரசு (தலை) போன்றது எனக் குறிப்பிடுகிறார்கள். அத் தொழுகையின் அம்சங்களையும் நிறைவேற்றும் முறைகளையும் இங்கே காண்போம்.
பாங்கு
அல்லாஹு த ஆலாவை வணங்குவதற்காக முஸ்லிம்களை அழைக்கும் முறைக்கு பாங்கு அல்லது அதான் எனப்படும். பாங்கானது பலம் வாய்ந்த சுன்னத்தாகும். இதனைச் சொல்பவருக்கு முஅத்தின் என்று சொல்லப்படுகிறது.
பாங்கு எப்படிச் சொல்ல வேண்டும்
பாங்கினை ஐவேளை பர்ளுத் தொழுகைகளுக்கும், களாத் தொழுகைகளுக்கும் சொல்லுவது (கட்டாய) சுன்னத் முஅக்கதாவாகும். தனியாகத் தொழுதாலும் இதனை விட்டுவிடலாகாது. ஒருவர் பாங்கினை சொல்லும் போது அவர் கிப்லா திசையை நோக்கி நின்று கொண்டு தமது இரு ஆட்காட்டி விரல்களை இரண்டு காதுகளிலும் வைத்து உரத்த குரலில் பின்வரும் வாக்கியங்களைச் சொல்ல வேண்டும்.
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்…...
(அல்லாஹ் மிகப் பெரியவன்)
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்…...
(அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் யாரும் இல்லையென்று நான் சாட்சி கூறுகிறேன்)
அஷ்ஹது அன்ன முகம்மதர் ரசூலுல்லாஹ்…...
(முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் திருத்தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்)
(தொழுகைக்கு விரைந்து வாருங்கள்)
(வெற்றி பெற விரைந்து வாருங்கள்)
குறிப்பு : பஜ்ரு (அதி காலை) தொழுகைக்கு மட்டும் இதன் கீழ் உள்ளதை பயன் படுத்தவும்.
அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்…. அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்….
(தூக்கத்தை விட தொழுகை மேலானது)
(அல்லாஹ் மிகப் பெரியவன்)
(அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை)
பாங்கின் போது “ஹய்ய அலஸ்ஸலாஹ்” என்று 2 முறை கூறும் போது முகத்தை வலது பக்கமும், “ஹய்ய அலல் ஃபலாஹ்” என்று 2 முறை கூறும் போது முகத்தை இடது பக்கமும் திருப்ப வேண்டும்.
பாங்கிற்கு எவ்வாறு பதில் கூறுவது
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், சுத்தமாக இருந்தாலும், குளிக்க வேண்டியவராக இருந்தாலும் பாங்கிற்குப் பதில் சொல்லுவது (முஸ்தஹப்) விரும்பத்தக்கதாகும். பாங்கு சொல்லப்படும் போது வேறு எவ்வித பேச்சுக்களையும் பேசாமல் கவனமாகக் கேட்க வேண்டும். மெதுவாக அதே தொடர்களை திரும்பவும் கூற வேண்டும். “ஹய்ய அலஸ்ஸலாஹ்” மற்றும் “ஹய்ய அலல் ஃபலாஹ்” என்று கூறப்படும் போது “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி” என்று பதில் கூற வேண்டும். “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலல்லாஹ்” என்று பாங்கில் முதல் தடவை சொல்லும் பொழுது “ஸல்லல்லாஹு அலைக்க யாரசூலல்லாஹ்” என்ற பதிலும், பாங்கில் இரண்டாவது தடவை சொல்லும் பொழுது “கர்ரத் அய்னீபிக்க யாரசூலல்லாஹ்” என்றும் பதில் கூற வேண்டும்.
பஜ்ருடைய பாங்கில் “அஸ்ஸலாது கைரும் மினன் நவ்ம்” என்னுமிடத்தில் “சதக்த்த வ பரர்த்த வபில் ஹக்கி நதக்த்த” என பதில் கூற வேண்டும்.
பாங்கு சொல்லி முடிந்ததும் ஓத வேண்டிய துஆ
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி ஸய்யிதினா முஹம்மதனில் வஸீலத்த வல் ஃபளீலத்த வத்தரஜத்தர் ரஃபீ அத்த வப் அத்ஹு மக்காமம் மஹ்மூதனில்லதீ வ அத்தஹு வர்ஜுக்னா ஷபாஅத்தஹு எவ்மல் கியாமத்தி இன்னக்க லா துஃலிஃபுல் மீஆத்.
இகாமத்
ஜமா அத்துத் தொழுகை நடத்த தயாராகிவிட்டதை அறிவிக்கும் அறிவிப்புக்கு இகாமத் எனப்படும். இகாமத் பர்லாக்கப்பட்ட தொழுகைகளுக்கும். ஜும் ஆ தொழுகைக்கும் சுன்னத்தாக இருக்கிறது. இது பாங்கைப் போன்றதுதான், என்றாலும் பாங்கில் “ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு “கத்காமத்திஸ் ஸலாத்” என இரு முறை கூறவேண்டும்.
இகாமத்தை சீக்கிரமாகச் சொல்வதும் வரிசையாகச் சொல்வதும் சுன்னத்தாக இருக்கிறது. பர்லாக்கப்பட்ட தொழுகைக்கு தவிர வேறு எந்த தொழுகைக்காகவும் இகாமத் சொல்வது சுன்னத் ஆகாது. இகாமத் சொல்லும் போது காதுகளில் கை விரல்களை வைக்க வேண்டியதில்லை. இதனைச் சாதாரண குரலில் சொல்ல வேண்டும். இகாமத்தின் போது “ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் பலாஹ்” என்று உச்சரிக்கும் போது வலப்புறமும், இடப்புறமும் முகத்தை திருப்ப வேண்டியதில்லை. காமத்தை பாங்கு சொன்னவரே சொல்வது ஏற்றமாகும். அல்லது பாங்கினை சொன்னவரின் அனுமதி பெற்று மற்றவர் இகாமத்தைச் சொல்லலாம்.
தொழுகை
உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் இறைவனுக்கு வழிபட்டு வணங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. எந்தப் பொருளும் அவைகளின் இரட்சகனைத் துதிக்காமலில்லை; எனினும் நீங்கள் அவைகளின் துதியை அறிய மாட்டீர்கள் என்று அல்லாஹ் தன் அருள் மறையாம் திருமறையிலே குறிப்பிடுகின்றான். மிருக வர்க்கங்கள் (ருகூஃ) குனிந்தும், மரம் செடிகள் (கியாம்) நின்றும், மலைகள் (கஃதா) இருப்பிலிருந்தும், ஊர்வன ஜந்துகள் படரும் கொடிகள் (சுஜுது) சாஷ்டாங்கம் செய்தும் வணக்கம் புரிந்து கொண்டிருக்கின்றன. இந்த நான்கு நிலைகளும் தொழுகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மனிதனை சீரிய முறையில் படைத்து அறிவையும் கொடுத்து சிறந்தவனாக்கிய இறைவனுக்கு மனிதன் சிறந்த முறையில் நன்றி செய்யக் கடமைப்பட்டவனாக இருக்கின்றான். மனிதனுக்குப் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட காரணத்தால் தான் இதர படைப்பினங்கள் மீது தொழுகை விதிக்கப்படாமல் மானிட வர்க்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ளது.
“நிச்சயமாக நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள். என்னை தியானித்துக்கொண்டே இருக்கும் பொருட்டு தொழுகையைக் கடைப்பிடியுங்கள்.” (அல்குர் ஆன் 20:14)
தொழுகையைக் காட்டிலும் மற்ற எவ்வணக்கமும் அல்லாஹு தஆலாவுக்கு அதிகப் பிரியமானதாக இல்லை. தொழுகையானது எல்லாப் பாவங்களை விட்டும் பாதுகாக்கக் கூடியதுமாக இருக்கிறது.
“(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகி, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள்.” (அல்குர்ஆன் : 24:56)
தொழுகையின் நேரங்கள்
நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கின்றது.. (அல்குர் ஆன் : 4:103)
எவர்கள் ஐங்காலத் தொழுகைகளையும் அதனதன் நேரத்தில் பேணி நிறைவேற்றுவார்களோ, அவர்களை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வதற்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். எவர்கள் அவைகளைப் பேணி தொழவில்லையோ அவர்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை; என அல்லாஹு தஆலா அறிவித்ததாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
பஜ்ரு தொழுகை
இரவின் கடைசி பாகத்தில் விடியுந்தருணத்தில் கிழக்கு வெளுத்தது முதல் சூரிய உதயமாகும் வரை பஜ்ரு தொழுகையின் நேரமாகும். (சூரிய உதயத்திற்கு சுமார் 75 நிமிடங்கள் முன்பு பஜ்ரு தொழுகை நேரம் ஆரம்பமாகிறது.) (ஷரஹுத் தன்வீர்)
லுஹர் தொழுகை
மதிய நேரத்தில் சூரியன் உச்சத்தை விட்டு கொஞ்சம் சாய்ந்ததில் இருந்து ஒரு பொருளின் நிழல் அப்பொருளைப் போன்று இருமடங்கு நீளமாகும் வரை லுஹர் தொழுகையின் நேரமாகும்.
அஸர் தொழுகை
ஒரு பொருளின் நிழல் இரு மடங்கானதிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை அஸர் தொழுகையின் நேரமாகும்.
மஃரிபு தொழுகை
சூரியன் அஸ்தமித்ததிலிருந்து மேற்கு வானில் சிவந்த மேகம் இருக்கும் வரை மஃரிபு உடைய நேரமாகும், (சூரிய மறைவிலிருந்து சுமார் 75 நிமிடங்கள் நேரம் வரை மஃரிபு தொழுகையின் நேரமாகும்.)
இஷா தொழுகை
வானத்தில் சிவந்த நிறம் மறைந்ததிலிருந்து கிழக்கு வெளுக்கும் (பஜ்ரு) வரை இஷாவுடைய நேரமாகும்.
தொழக்கூடாத நேரங்கள்
ஆனால் அந்த நேரத்து அஸர் பர்ளு தொழுகையை மட்டும் சூரியன் அஸ்தமிக்கும் பொழுதும் தொழுது கொள்ளலாம். (ஷரஹுத் தன்வீர்)
அந்த நேரத்தில் ஆஜரான ஜனாசாத் தொழுகை, ஸஜ்தாதிலாவத் மக்ரூஹுடன் நிறைவேறுகிறது.
தொழும் முறை
தொழும் முறையினைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது “நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்றுசேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள். (அல்குர் ஆன் : 2:43) என தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழும் முறையினைப் பற்றிக் குறிப்பிடும் போதும்.
நீங்கள் இறைவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று தொழ வேண்டும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை ஆனாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் தொழ வேண்டும் எனக் குறிப்பிட்டிருகிறார்கள்.
தொழுகையினை அந்தந்த நேரங்களில் மன ஓர்மையுடனும், உள்ளச்சத்துடனும் அழகிய முறையில் ஒலுச் செய்து தொழ வேண்டும்.
ஹலரத் முஸ்லிம் இப்னு பஷார் என்னும் சான்றோர் ஒரு முறை அவரது வீட்டின் ஓர் அறையில் தொழுது கொண்டு இருக்கும் பொழுது அவரது வீட்டின் ஒரு புறத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்த பொழுது அருகில் இருந்த மக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். குடும்பத்தினர் தொழுகையை முடித்த அப்பெரியாரிடம் இத்தகைய ஆபத்துகள் நேரும் போது பர்ளு தொழுகையை முறிப்பதற்கு மார்க்கம் அனுமதித்திருந்தும் நீங்கள் ஏன் அவ்வாறு செய்யவில்லை? என வினவ, அப்பெரியார், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக வீட்டில் நெருப்பு பற்றியது எனக்குத் தெரியாது. அல்லாஹ்வின் தண்டனையாகிய நரக நெருப்புக்கு பயந்து உறுதியான எண்ணத்துடன் வணங்கிக் கொண்டு இருந்ததால் சாதாரண இத்தீயின் கொடூரத்தை முற்றிலும் நான் உணரவில்லை” என விடை பகன்றார்கள். தொழுகையில் மன ஓர்மை இருக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் முன்னுதாரணமாகும்.
தொழும் முறை (ஹனபி)
“(ஆயினும்) தொழுகையை (தவறவிடாது) சரியாக நிலை நிறுத்துங்கள்.” (73:20)
தொழுவதற்கு உடல், உடை, இடம் சுத்தமாக இருக்க வேண்டும். கிப்லாவை முன்னோக்கித் தொழுகையின் நிய்யத்து செய்து கொண்ட பிறகு,
“அல்லாஹு அக்பர்” என்று தனது இரு முன் கைகளையும் காதுகள் வரை உயர்த்தி தொப்புளுக்கு கீழ் இடது கரத்தை வைத்து அதன் மணிக்கட்டை வலது கரத்தின் பெரு விரலாலும், சுண்டு விரலாலும் வளைத்துப் பிடித்துக் கொண்ட் பிறகு,
“ஸுப்ஹான கல்லாஹும்ம வபிஹம்திக்க வத்தபாரகஸ்முக்க வத்த ஆலா ஜத்துக வலா இலாஹ கைருக்க” என்ற தனாவை ஓத வேண்டும். பிறகு,
“அவூது பில்லாஹி மினஸ் ஷைத்தானிர் ரஜீம்” “பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்” ஓதி சூரத்துல் பாத்திஹா (அல்ஹம்து சூரா)வை ஓதி முடித்ததும்” ஆமீன் என்று மெதுவாக கூற வேண்டும்.
பிறகு ஏதேனும் ஒரு தெரிந்த மூன்று ஆயத்துக்கு குறையாத சூராவை ஓதி “அல்லாஹு அக்பர்” என்று ருகூஉ செய்ய வேண்டும்.
“அல்லாஹு அக்பர்” என்று கூறி ருகூவில் குனிந்து இரு கரங்களையும் முழங்காலைப் பிடித்துக் கொண்டு பார்வையினைக் கீழ் நோக்கி வைத்து,
“சுப்ஹான ரப்பியல் அளீம்” என மூன்று முறை ஓத வேண்டும்.
பிறகு “ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா” என்று சொல்லி நிமிர்ந்ததும் (சிறு நிலையில்) “ரப்பனா வலக்கல் ஹம்து” என்று சொல்லி பிறகு “அல்லாஹு அக்பர்” என்று மொழிந்து கொண்டு முழங்கால்களைத் தரையில் ஊன்றி இரு கைகளையும் கீழே வைப்பதுடன் நெற்றி, மூக்கு இரண்டும் பூமி மீது படும்படி வைத்து ஸஜ்தா செய்ய வேண்டும். ஸஜ்தாவில்,
“சுப்ஹான ரப்பியல் அஃலா” என மூன்று தடவை சொன்ன பின்,
“அல்லாஹு அக்பர்” எனக் கூறி தலையை உயர்த்தி வலது காலை மடக்கி வைத்து அதன் மீது அமர்ந்து கொள்ள வேண்டும். மறுபடியும் இரண்டாவது ஸஜ்தாவை முன் செய்த மாதிரியே செய்து முடித்து எழுந்து நேராக நிலைக்கு வந்து தனா ஓதாமல் முதல் ரக அத்தைப் போலவே ஓத வேண்டியவைகளை முறையாக ஓதி முடித்து ருகூஉ, ஸஜ்தா செய்த பின் இருப்பில் அமர்ந்து,
“அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யி பாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு” என்று ஓதிய பின்,
(”லா யிலாஹ” என்று ஓதும் போது நடு விரலையும் பெருவிரலையும் வளையமாக மடித்துக் கொண்டு, ஆள்காட்டி விரலை “இல்லல்லாஹு” என்று சொல்லும் போது நீட்டி பின் மடக்கி கொள்ள வேண்டும்)
“அல்லாஹும்ம ஸல்லி அலா முகம்மதிவ் வ அலா ஆலி முகம்மதின், கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.”
“அல்லாஹும்ம பாரிக் அலா முகம்மதிவ் வ அலா முகம்மதின், கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹிம இன்னக்க ஹமீதும் மஜீத்” என ஸலவாத் ஓத வேண்டும். பிறகு
“அல்லாஹும் மஃபிர்லீ வலிவாலிதய்ய, வலி உஸ்தாதி வல்ஜமீஉல் முஃமினீன வல் முஃமினாத்தி வல் முஸ்லிமீன வல் முஸ்லிமாத்தி அல் அஹ்யாகி மின்ஹும் வல் அம்வாதி இன்னக்க முஜீபுத் தஅவாதி பிரஹ்மதிக்க யா அர்ஹமர் ராஹிமீன்.” என ஓதி முடித்து, பிறகு வலது பக்கம் முகத்தை திருப்பியவாறு
“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறி இடது பக்கம் முகத்தை திருப்பியவாறு
“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என சலாம் கூறித் தொழுகையை முடிக்க வேண்டும்.
மூன்று ரக் அத் தொழுகையாக இருந்தால் இரண்டாவது ரக் அத்தில் “அப்துஹு வ ரசூலுஹு” வரை ஓதி எழுந்து முன்றாம் ரக்க அத்தில் “அல்ஹம்து” சூரா மட்டும் ஓதி கடைசி இருப்பில் அமர்ந்து மூன்றாம் ரக்க அத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
நான்கு ரக் அத் தொழுகையாக இருந்தால் இரண்டாவது ரக் அத்து இருப்பில் “அத்தஹிய்யாத்து” மட்டும் ஓதி பின் எழுந்து மூன்று, நான்காவது ரக் அத்துகளைத் தொழுது இருப்பில் உட்கார்ந்து அத்தஹிய்யாத்து, சலவாத்து, துஆ ஓதி வலது இடது புறங்களில் ஸலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்ய வேண்டும். பர்லு தொழுகையில் மூன்று, நான்காவது ரக் அத் நிலையில் சூரே பாத்திஹா மட்டும் ஓத வேண்டும். சுன்னத், நபில் தொழுகைகளில் சூராவும் சேர்த்து ஓத வேண்டும்.
தொழும் முறை (ஷாஃபி)
கிப்லாவை முன்னோக்கி தொழுகையின் நிய்யத்து செய்து கொண்டு இரு கைகளையும் உயர்த்தி,
“அல்லாஹு அக்பர்” என தக்பீர் சொல்லி, தொப்புளுக்கு மேல் நெஞ்சுக்கு கீழ் கையை வைத்து தக்பீர் கட்ட வேண்டும். கரங்களை வைக்கும் பொழுது தக்பீரை சொல்லி முடிக்க வேண்டும். அடுத்து கீழ்கண்டவாறு ஓத வேண்டும்.
“இன்னீ வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதீ பத்திரஸ்ஸமாவாத்தி வல் அர்ள ஹனிஃபா வமா அன மினல் முஷ்ரிக்கீன். இன்னஸ்ஸலாத்தீ வ நுஸுகீ வ மகியா வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீக்க லஹு வபிதாலிக்க உமிர்து வ அன மினல் முஸ்லிமீன்.” பின்னர்
“அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.” “பிஸ்மில்லாஹிர் ரஹ்மா னிர்ரஹீம்” என்று சொல்லியதைத் தொடர்ந்து சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா) ஓதி,
“ரப்பி ஃபிர்லீ ஆமீன்” எனக் கூற வேண்டும்.
பிறகு ஓர் ஆயத்து அல்லது மூன்று ஆயத்துகள் அல்லது முழு சூரா ஓத வேண்டும்.
ருக்கூவில், “ஸுப்ஹான ரப்பியல் அளீமி வபி ஹம்திஹி” என்று மும்முறை கூறி.
“ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா” என்று சொல்லி நிலைக்கு வந்து “ரப்பனாலக்கல் ஹம்து” என சொன்னதன் பிறகு இரு கரங்களையும் உயர்த்தி தக்பீர் சொல்லிக் கொண்டு சுஜுதுக்குச் சென்று அங்கு,
“ஸுப்ஹான ரப்பியல் அஃலா வ பி ஹம்திஹி” என மும்முறை சொல்லி விட்டு நடு இருப்புக்கு வந்து இடது காலை மடக்கி விரித்து வலது கால் விரல்களை ஊன்றி நட்டு வைத்து உட்கார்ந்து கைவிரல்களை கிப்லாவுக்கு நேராக இரு தொடைகளின் மீது வைத்தவுடன்,
“ரப்பி ஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வர்ஃபஃனீ வர்ஜுக்னீ வஹ்தினீ வ ஆஃபினீ வஃபு அன்னீ” என ஓதி தக்பீர் கூறிக்கொண்டு நிலைக்கு வந்து முதல் ரக்க அத்தைப் போல் இரண்டாவது ரக் அத்தையும் தொழுது இருப்பில் அத்தஹிய்யாத்து, ஸலவாத்து ஓதிய பின்னர்,
“அல்லாஹும் மஃபிர்லீ மா கத்தம்து வமா அக்கர்த்து வமா அஸ்ரர்த்து வமா அஃலன்த்து வமா அஸ்ர்ஃப்த்து வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ அன்த்தல் முகத்திமு வஅன்த்தல் முஅஹ்ஹிர், லாஇலாஹ இல்லா அன்த்த, வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி வமின் அதாபின் நாரி வமின் ஃபித்தனத்தில் மஸீஹித் தஜ்ஜால் அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸி லுல்மன் கதீரன் கபீரன் ஃபஃபிர்னீ மஹ்ஃபிரதன் மின் இன்திக்க இன்னக்க அன்தல் கஃபூருர் ரஹீம், அல்லாஹும்ம யாமுகல்லிபல் குலூபு தப்பித் குலூபனா அலா தீனிக்க வதா அத்திக வ ஈமானிக்க யா அல்லாஹ்” என ஓதி முடித்ததும்,
பின்னர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு என வலப்புறமும் இடப்புறமும் ஸலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்ய வேண்டும்.
தஸ்பீஃ ஃபாத்திமா
தொழுகையை முறைப்படி முழுமையாக நிறைவேற்றிய பின் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அருமை மகளார் ஃபாத்திமா (ரழி) அவர்களுக்கு கற்றுக் கொடுத்த தஸ்பீஹ்களான கீழ்கண்டவற்றை ஐந்துவேளை தொழுகைகளுக்குப் பின்னர் நாம் ஓதலாம்.
சுப்ஹானல்லாஹ் 33 தடவை
அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை
அல்லாஹு அக்பர் 34 தடவை
ஒவ்வொருவரும் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் அவர்களுக்கு வேண்டியவற்றை பிரார்த்தனை (துஆ)க்களாக அவரவர் மொழியில் கேட்கலாம்.
வித்ரு தொழுகை
இத் தொழுகை “இஷா”வில் கடைசியாகத் தொழப்படுகிறது. வித்ரு தொழுகை மூன்று ரக்அத்து ஒரு சலாமில் தொழுவது வாஜிபாக இருக்கின்றது. மூன்றாவது ரக் அத்தில் “ருகூஉ” செய்வதற்கு முன் மீண்டும் இரண்டு கைகளையும் உயர்த்தி “தக்பீர்” சொல்லி கையைக் கட்டிக்கொண்டு சப்த மின்றி குனூத்து ஓத வேண்டும்.
ஹனபி (குனூத்து)
“அல்லாஹும்ம இன்னா நஸ்த்தயீனுக்க வ நஸ்தஃபிருக்க வ நுஃமினு பிக்க வ நத்த வக்கலு அலைக்க வ நுத்னீ அலைக்கல் கைர குல்லஹு வ நஷ்குருக்க வலா நக்புருக்க வநக்லஉ வநத்ருக்க மய் எஃப்ஜுருக்க.
அல்லாஹும்ம இய்யாக்க நஃபுது வலக்க நுஸல்லீ வநஸ்ஜுது வ இலைக்க நஸ்ஆ வ நஹ்பிது வ நர்ஜு ரஹ்மத்திக்க வ நக்ஷா அதாபக்க இன்ன அதாபக்கல் ஜித்த பில் குஃப்பாரி முல்ஹிக்” என்று குனூத்து ஓத வேண்டும்.
ஷாஃபி (குனூத்து)
பஜ்ரு தொழுகையில் பர்ளுவின் இரண்டாவது ரக் அத்தில் ஸுஜுதுக்கு போகு முன் இரண்டு கைகளையும் சிறு நிலையில் உயர்த்தி……
“அல்லாஹு மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ ஃபீமன் ஆபைத்த வ தவல்லனீ ஃபீமன் தவல்லைத்த வ பாரிக் லீ மினல் கைரி ஃபீமா அஃதய்த வகினீ ஷர்ரமாகளைத்த ஃபஇன்னக்க தக்ளீ வலாயுக்ளா அலைக்க ஃபஇன்னஹுலாயதில்லு மன்வாலைத்த வலா இஸ்ஸீ மன் ஆதய்த்த தபாரக்க ரப்பனா வத்தாலைத்த ஃபலக்கல் ஹம்து அலாமாகழைத்த அஸ்தஃபிருக்க வ அத்தூபு இலைக்க வ சல்லல்லாஹு அலா ஸய்யிதினா முஹம்மதின் னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸஹ்பிஹீ வ ஸல்லிம்” என குனூத்து ஓதிய பிறகு தொழுகையை நிறைவு செய்ய வேண்டும்.
ஸஜ்தா ஸஹ்வு
தொழுகையில் ஏதாவது மறதியாக அதிகப்பட்டோ, அல்லது விடுபட்டோ விடுமானால் தொழுகையில் ஏற்பட்ட இக் குறையை நிறைவு செய்வதற்காக செய்யும் ஒரு முறைக்கு ஸஜ்தா ஸஹ்வு என்று பெயர்.
ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டியதாக ஏற்படின் அத்தஹிய்யாத்து மட்டும் ஓதிய பின் வலது புறம் மட்டிலும் தலையைத் திருப்பி ஸலாம் கொடுத்து விட்டுப் பின்னர் இரண்டு தடவை ஸஜ்தா செய்து விட்டு இருப்பில் அமர்ந்து அத்தஹிய்யாத்து, ஸலவாத்து, துஆ ஓதி இருபுறமும் சலாம் கொடுத்து தொழுகையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஐவேளைத் தொழுகை
“பகலில் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவில் ஒரு பாகத்திலும், நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள். நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.” (11: 114)
அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்ற படைப்புகளில் மானிடர் சிறந்தவர்கள். இவர்கள் சிரம் வணங்க கடமைப் பட்டவர்கள் என்பதையும், இறைவனின் ஏவல்களுக்கு அடிபணிபவர்கள் என்பதையும், அடிமைகள் என்பதையும் வெளிப்படுத்தவே தொழுகையை அல்லாஹு த ஆலா மானிடர் மீது மட்டும் விதியாக்கி இருக்கின்றான்.
ஜமாஅத் தொழுகையின் சிறப்பு (முக்கியதுவம்)
தொழுகையைத் தவறவிடக் கூடாது.
தொழுகை மனிதனுக்குத் தூய்மையையும், கடமையுணர்வையும், நன்றி செலுத்தும் தன்மையையும், நல்லொழுக்கத்தையும் பயிற்றுவிக்கிறது. தொழுகை, அடியான் இறைவனுக்குச் செய்யும் நன்றி ஆகும். “தொழுகையை மனப்பூர்வமாக தவற விடாதீர்; அவ்வாறு மனப்பூர்வமாக விடுபவர் சமுதாயத்தில் இருந்து நீக்கப்பட்டு விடுகின்றார்,” என ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றுள்ளார்கள். ஒருவர் ஒருவேளைத் தொழுகையை எவ்வித காரணமுமின்றித் தவற விடுவாராயின் அது அவருடைய சொத்துக்களும், குடும்பமும் பறிக்கப்பட்டது போன்றதாகும். என ஹதீஸில் வந்துள்ளது.
“(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்.” (அல் குர் ஆன் 2:45)
களா தொழுகை
நேரம் தவறி தொழப்படும் தொழுகைக்கு “களா” என்று பெயர். தொழுகையை குறித்த நேரத்தில் அதாவது அதற்குரிய சமயத்தில் நிறைவேற்ற வேண்டும். தவிர்க்க முடியாத காரணமின்றி நேரம் பிற்படுத்தி தொழுவது குற்றமாகும்.
கஸர் தொழுகை
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணம் செய்யும் காலத்தில் (நீங்கள் தொழுது கொண்டிருக்கும்போது) நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என பயந்தால் நீங்கள் ("கஸர்" தொழுவது அதாவது உங்கள்) தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. ஏனென்றால், நிராகரிப்பவர்கள் உங்களுக்குப் பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர். (அல்குர் ஆன் 4:101)
ஒருவர் 77 கி.மீ. அல்லது அதற்கு அதிகமான தூரம் பிரயாணம் செல்வதற்காகப் புறப்பட்டு பதினைந்து நாட்களுக்கு குறைவாக தங்குவதானால் அவர் தொழுகையை கஸராகத் தொழுக வேண்டும். உதாரணமாக லுஹர், அஸர், இஷா ஆகிய மூன்று நேரத்து பர்ளு தொழுகைகளையும் முறையே இரண்டு ரக் அத்தாக குறைத்துத் தொழ வேண்டும். இவர் இமாமைத் தொடர்ந்து தொழுதால் முழுமையாகத் தொழ வேண்டும். இதற்கு கஸர் தொழுகை எனப்படும்.
தொழுகையை முறிப்பவை (ஹனபி)
தொழுகையை முறிப்பவை (ஷாபி)
தொழுகையை விடுவதால் ஏற்படும் வேதனைகள்
எவர்கள் தொழுகையில் உள்ளச்சமில்லாமல் பாராமுகமாக இருக்கின்றார்களோ அவர்களைப் பற்றி அல்லாஹுத்த ஆலா, பின்வருமாறு கூறுகிறான்.
“(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டவர்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே சந்திப்பார்கள்.” (அல்குர் ஆன் 19:59)
“(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான். அவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.” (அல்குர் ஆன் 107:4,5)
எவர் தொழுகையை விட்டு விடுகின்றாரோ அவர் பலவகை வேதனைகளுக்கு உள்ளாவர் என ஹதீதில் வந்துள்ளது. அவற்றில் இவ்வுலகிலும், மரணமாகும் போதும், இன்னும் மரணமான பின்னும் மற்றும் மண்ணறையிலும், இன்னும் மறுமையிலும் உண்டாகும் வேதனைகள் வருமாறு,
தொழுகையின் சிறப்பு
“நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்.” (அல்குர்ஆன் 23:1,2)
சுன்னத், நபிலான தொழுகைகளின் பெயர்களும், ரக்க அத்துகளும்
No | தொழுகை பெயர் | ரக்க அத்துகள் |
1 | இஷ்ராக் தொழுகை | 2 அல்லது 4 ரக்க அத்துகள். |
2 | லுஹா தொழுகை | 4 அல்லது 8 அல்லது 12 ரக்க அத்துகள் |
3 | அவ்வாபீன் தொழுகை | 6 அல்லது 12 அல்லது 20 ரக்க அத்துகள் |
4 | தஹுஜ்ஜுது தொழுகை | 2 அல்லது 4 அல்லது 12 ரக்க அத்துகள் |
5 | பெருநாள் தொழுகை | 2 ரக்க அத்துகள் |
6 | பெற்றோரின் தொழுகை | 2 ரக்க அத்துகள் |
7 | ஹாஜத் தொழுகை | 2 அல்லது 4 ரக்க அத்துகள் |
8 | தஸ்பீஹ் தொழுகை | 4 ரக்க அத்துகள் |
9 | மரண வேதனையின் தொழுகை | 2 ரக்க அத்துகள் |
10 | பாவமன்னிப்பு தொழுகை | 2 ரக்க அத்துகள் |
11 | மழைத் தொழுகை | 2 ரக்க அத்துகள் |
12 | சூரிய கிரஹணத் தொழுகை | 2 ரக்க அத்துகள் |
13 | உறங்க செல்லும்முன் தொழுகை | 2 ரக்க அத்துகள் |
14 | பிரயாணத் தொழுகை | 2 ரக்க அத்துகள் |
15 | பயத்தின் தொழுகை | 2 ரக்க அத்துகள் |
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.