ஹதீஸ்
அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னவை, செய்தவை, அங்கீகரித்தவை ஆகிய அனைத்திற்கும் ஹதீஸ் எனப்படும்.
ஹதீஸ் என்ற அரபு சொல்லிற்கு ‘நியூஸ்’ (செய்தி) எனப் பொருள்படும். பெருமானார் காலத்தில் சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறி ‘மாஹதீஸ்’ பெருமானாரின் செய்தி என்ன? என வினவுவார்கள். இதன் அடிப்படையில் பெருமானார் சொன்னவைகளுக்கு ஹதீஸ் எனப் பெயர் அமைந்து விட்டது.
குர் ஆன் அல்லாஹ்வின் வாக்கு. ஹதீஸ் நபிகள் நாயகத்தின் வாக்கு. இவை இரண்டும் இஸ்லாத்தின் இரண்டு கண்கள் ஆகும். எனவே தான் குர் ஆன் கூறுகிறது; “எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கட்டுப்ப(ட்)டு (நடக்)கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டார்.” (4:80)
பெருமானார் கூறினார்கள். “நான் உங்களுக்கிடையில் இரண்டினை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமாகிய குர் ஆன் மற்றொன்று எனது வழிமுறை என்னும் சுன்னத்.
பாதுகாத்தல்
நபிகளாரைப் போன்று இவ்வுலகில் பிறந்த வேறு எந்த மனிதரும் மிக நுணுக்கமாக உற்று நோக்கப்படவில்லை என்பது உலகம் ஒப்புக் கொண்ட உண்மையாகும். அவர்கள் தாடியில் எத்தனை நரை முடிகள் இருந்தன என்பதும் கணக்கிடப் பட்டிருக்கிறது. பெருமானார் எப்படி பேசுவார்கள், சிரிப்பார்கள், உண்பார்கள், உறங்குவார்கள் என்பவனவற்றை எல்லாம் சஹாபாக்களின் கூரிய கண்கள் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் நபிகளாரின் சொல், செயல் இவைகளை ஏட்டில் எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, காரணம் வஹியின் மூலம் அருளப்பட்ட குர் ஆன் வசனங்கள் ஏட்டில் எழுதப்பட்டன. இந்தக் குர் ஆன் வசனங்களுடன் ஹதீஸும் கலந்து விடுமோ என்ற அச்சத்தினால் ஹதீஸ் எழுதுவதை தடை செய்யப்பட்டிருந்தது. சில தோழர்கள் தாங்கள் ஞாபக சக்தி குறைவின் காரணமாக ஹதீஸ்களை மறந்து விடுகிறோம் என முறையிட்ட போது எழுதிக் கொள்ளுங்கள் என பெருமானார் அனுமதியும் வழங்கி இருக்கிறார்கள். இவ்வாறு பெருமானாரின் ஹதீஸ்கள் சஹாபாக்களின் நெஞ்சங்களிலும் ஒரு சிலரின் ஏடுகளிலும் எழுதிப் பாதுகாக்கப்பட்டது. ஹதீஸ்களை அதிகம் அறிந்து வைத்திருந்த சஹாபாக்களில் பிரபல்யமானவர்கள்.
தொகுத்தல்
ஆயிரக் கணக்கானவர்களின் நெஞ்சங்களில் இருந்த ஹதீஸ்களை ஒரு சேரத் திரட்டி எழுத்தில் உருவாக்க வேண்டிய அவசியம் பெருமானார் உயிர் வாழ்ந்த வரை உணரப்படவில்லை. அவர்களுக்கு பின் வந்த ஹலரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) 500 ஹதீஸ்களை திரட்டி தம் அருமை மகள் ஆயிஷாவிடம் கொடுத்தார்கள். ஆனால் அடுத்த நாளே அதை வாங்கி எரித்து விட்டார்கள். காரணம் கேட்ட போது, “எனது தொகுப்பில் நம்பகத்தகுந்த பிறர் சொன்னதையும் சேர்த்திருந்தேன். அவைகள் உண்மையாக இல்லாவிட்டால் குழப்பம் நேருமோ என்ற அச்சத்தால் அவைகளை அழித்து விட்டேன்.” என்றார்கள்.
ஹலரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முன் வாழ்ந்த மக்கள் இறைவேதங்களை அலட்சியம் செய்து தூதர் செயலிலேயே அதிக கவனம் செலுத்தினார்கள். அதே போல குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் குழப்பம் நேரும் நிலையை நான் ஏற்படுத்த விரும்பவில்லை என்று கூறி ஹதீஸ் தொகுக்கும் பணியை அவர்கள் ஆதரிக்கவில்லை. ஹலரத் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), அலீ (ரலியல்லாஹு அன்ஹு) இவர்களின் காலத்தில் குழப்பங்கள் ஏற்பட்டதால் இப்பணியில் அவர்கள் கவனம் செலுத்த இயலவில்லை. நாற்பெரும் கலீபாக்களுக்குப் பின் வந்த இரண்டாவது உமர் என்று புகழ் பெற்ற கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் தான் துணிந்து ஹதீஸ்களை திரட்டத் தூண்டினார்கள்.
நாற்பெரும் கலீபாக்களுக்குப் பின் இஸ்லாமியப் பேரரசு பரந்து விரிந்து விட்டதால் பல பிரச்சினைகள் உண்டாயின. அவற்றிற்குப் பரிகாரங்களை குர் ஆனில் காண இயலாத நிலையில் ஹதீஸ்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஹதீஸ்களை மனப்பாடம் செய்திருந்த பலர் மரணம் அடைந்து கொண்டும், மார்க்கப் பிரச்சாரத்திற்கு தூர நாடுகளுக்குச் சென்று கொண்டும் இருந்தனர். இஸ்லாத்தின் எதிரிகள் தவறான கருத்துக்களை ஹதீஸ் என்ற பெயரால் கட்டி விடத் தொடங்கினர். பதவிப் போட்டியின் காரணமாக முஸ்லிம்களிடையே சிலர் தம் கருத்துக்களை ஹதீஸ் என சொல்லத் துணிந்தனர். எனவே பொய்யான ஹதீஸிலிருந்து மெய்யான ஹதீஸ்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அவைகளைத் தொகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பெருமானார் கூறியதைக் கேட்டு, பின் கேட்டு, யார் வாய் மூலம் இறுதியாக வந்தது. அவர்களின் குண நலம், நம்பகத் தன்மை நினைவாற்றல் இவைகளை எல்லாம் ஆராய்ந்து பின்னரே இது உண்மையான ஹதீஸா? இல்லையா? எனத் தீர்மானிக்க வேண்டி இருந்தது. இப் பணியில் ஈடுபட்டு உண்மையான ஹதீஸ்களை திரட்டத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நல்லவர்கள் தான் முஹத்திதீன்கள் (அல்லது) முஹத்திஸுகள் எனப்படுவர். அவர்கள் இப்பணியில் ஈடுபட்டு “ஸிஹாஹ் சித்தா” என்னும் உண்மையான ஆறு ஹதீஸ் நூல்களைத் தொகுத்தனர். அவையாவன :
இந்த ஆறு திரட்டுக்களைத் தொகுத்தவர்களின் காலம் ஹிஜ்ரீ 200 - 300 ஆகும்.
இந்த ஆறு மேதைகளும் கடினமான விதிகளை ஏற்படுத்திக் கொண்டு பல லட்சம் ஹதீஸ்களிலிருந்து வடிகட்டி சில ஆயிரம் ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஹதீஸை அறிவித்த ராவி (அறிவிப்பாளர்களின்) பெயர் வரிசையும் தயாரிக்கப்பட்டது. ஐந்து லட்சம் ராவிகளின் பெயர்கள், அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் தான் “அஸ்மாஉர் ரிஜால்” எனப்படும்.
இவ்வாறு தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள் பல வகையாகப் பிரிக்கப்பட்டன. 1. நபிகள் நாயகம் தங்கள் வாயால் மொழிந்தவை - “கவ்லீ” எனப்படும். 2. நபிகளாரிடம் நிகழ்ந்த செயல்களை பார்த்து சஹாபாக்கள் தம் வாயால் கூரியவை “ஃபிஃலீ” எனப்படும். 3. நபிகள் நாயகம் முன்னிலையில் செய்யப்பட்டவை அவர்கள் அங்கீகரித்தவை அல்லது தடுக்காதவை - “தக்ரீரீ” எனப்படும்.
நபிகள் நாயகம் பொதுவாகக் கூறியவை “ஹதீஸே நபவி” என்றும், நபிகள் நாயகம் அல்லாஹ் சொன்னான் என்று கூரியவை “ஹதீஸே குதுஸி” என்று சொல்லப்படும்.
அறுவரின் வாழ்க்கைக் குறிப்பு
1. இமாம் புகாரீ :
இயற் பெயர் | முஹம்மது இஸ்மாயீல் புகாரீ |
பிறப்பிடம் | ரஷ்யாவிலுள்ள புகாரா |
வாழ்ந்த காலம் | ஹிஜ்ரி 194 முதல் 256 வரை |
திரட்டிய ஹதீஸ்களின் எண்ணிக்கை | 6 லட்சம் |
அதிலிருந்து உண்மையானவை எனத் தேர்ந்தெடுத்தது | 7,275 |
இவைகளில் இருமுறை வரும் ஹதீஸை ஒன்றாகக் கொண்டால் | 4000 ஹதீஸ்கள் |
இவர்கள் இயற்றிய நூலுக்கு பெயர் | புகாரீ ஷரீப் |
புகாரீ ஷரீபிலுள்ள ஒவ்வொரு ஹதீஸையும் இமாம் அவர்கள் குளிக்காமலும் இரண்டு ரக்அத் தொழாமலும் எழுதவில்லை. நூலை முடித்து மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியில் ரவுலாவிற்கும் மிம்பருக்கும் இடையில் வைத்து மூன்று முறை சரி பார்த்தார்கள். எனவே தான் குர் ஆனுக்கு அடுத்து கொள்ளத் தக்க ஹதீஸ் நூல்களில் தலைசிறந்தது புகாரீ ஷரீப் என்று சொல்லப்படுகிறது.
2. இமாம் முஸ்லிம் :
இயற்பெயர் | முஸ்லிம் இப்னுல் ஹஜ்ஜாஜ் |
பிறப்பிடம் | ஈரானிலுள்ள நைஷாப்பூர் |
காலம் | ஹிஜ்ரி 206 முதல் 261 வரை |
திரட்டிய ஹதீஸ்களின் எண்ணிக்கை | 3 லட்சம் |
உண்மையான ஹதீஸ்களின் எண்ணிக்கை | 9,200 |
இவர்கள் தொகுத்த நூல் பெயர் | முஸ்லிம் |
3. இமாம் அபூ தாவூத் :
இயற்பெயர் | சுலைமான் இப்னு அஸ் அஸ் (மக்கள் அபூதாவூத் என்றழைத்தனர் |
பிறப்பிடம் | பஸராவிலுள்ள ஸிஜிஸ்தான் |
காலம் | ஹிஜ்ரி 202 முதல் 275 வரை |
திரட்டிய ஹதீஸ்கள் எண்ணிக்கை | ஐந்து லட்சம் (5,00,000) |
உண்மையான ஹதீஸ்கள் | 4,800 |
இவர்கள் தொகுத்த நூல் பெயர் | அபூதாவூத் |
4. இமாம் திர்மிதி
இயற்பெயர் | அபூ ஆஸா முஹம்மது திர்மிதி |
பிறப்பிடம் | ஈரானிலுள்ள திர்மித் |
காலம் | ஹிஜ்ரி 209 முதல் 279 வரை |
திரட்டிய ஹதீஸ்களின் எண்ணிக்கை | 50,000 |
உண்மையான ஹதீஸ்களின் எண்ணிக்கை | 1,600 |
இவர்கள் தொகுத்த நூல் பெயர் | திர்மிதி |
5. இமாம் நஸயீ
இயற்பெயர் | அஹ்மது பின் ஷுஐப் நசயீ |
பிறப்பிடம் | ஈரானிலுள்ள நாசா |
காலம் | ஹிஜ்ரி 215 முதல் 303 வரை |
உண்மையான ஹதீஸ்களின் எண்ணிக்கை | 3,000 |
இவர்கள் தொகுத்த நூல் பெயர் | நஸயீ |
6. இமாம் இப்னுமாஜா :
இயற்பெயர் | அபூஅப்துல்லாஹ் இப்னு மாஜா |
பிறப்பிடம் | ஈரானிலுள்ள கஸ்வீன் |
காலம் | ஹிஜ்ரி 209 முதல் 273 வரை |
உண்மையான ஹதீஸ்களின் எண்ணிக்கை | 4,000 |
குறிப்பு :
இந்த அறுவரும் திரட்டியவை 30,000 ஹதீஸ்கள், இதில் இருமுறை வருவதை ஒன்றாகக் கணக்கிட்டால் சுமார் 6,000 ஹதீஸ்களாக சுருங்கி விடுகின்றன. இந்த உண்மையான 6,000 ஹதீஸ்களைப் பயின்றால் இஸ்லாமிய வாழ்க்கைக்குப் போதுமானது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.