Home


இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர் 9)

அநாதைகள் உறவு

அநாதையான ஆதரவற்றவர்களுடைய நிலை

நாம் நமது சின்னஞ்சிறு குழந்தைகளின் மேல் அளவிலா அன்பு கொண்டு, அவர்களின் மகிழ்ச்சிக்காக எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கிக் கொள்கின்றோம். அவர்களுக்கு அறுசுவை உணவு ஊட்டுவதிலே,  அழகு ஆடை அணிவிப்பதிலே, சொத்து செல்வம் சேர்ப்பதிலே, வீடு வாசல் கட்டுவதிலே எல்லையில்லாத ஆனந்தமடைகின்றோம். ஆனால் அதே சமயம் எத்தனையோ குழந்தைகள் தாயின், தந்தையின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாத நிலையிலே, தாய் தந்தைப் பாசம் என்னவென்றே அறியாத நிலையிலே, அரவணைக்க ஆளில்லாத அநாதரவான நிலையிலே, பிறக்கும் போதே பெற்றோர்களைத் தூக்கித் தின்று விட்ட தரித்திரம் என்ற பேச்சுக்கு நடுவிலே அநாதையாக ஆதரவற்ற நிலையிலிருக்கிறார்களே! இவர்களுடைய நிலை என்ன?

நபி பெருமானார் (ஸல்) அவர்களின் ஆரம்பகாலம்

        எம் பெருமானார் (ஸல்) அவர்களே தந்தையின் முகத்தைக் கூட பார்க்காத நிலையில் தான் பிறந்தார்கள். பெற்ற தாயையும் வளர்த்த பாட்டனாரையும் கூட சில வருடங்களில் இழந்து அநாதையாக அநாதரவாகத் தான் வாழ்ந்தார்கள். எனவே அல்லாஹுதஆலா தனது திருமறையில், “அநாதைக் குழந்தைகளை சகோதரராகப் பாவித்து நடக்க வேண்டுமென்றும், அவர்களுடைய சொத்துக்களை பக்குவமாக பராமரித்து வர வேண்டுமென்றும், பராமரிப்புக்காக அவர்களது சொத்திலிருந்து நியாயமான அளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பருவமடைந்ததும் அவர்களுடைய சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டுமென்றும்,  அவர்களுக்கு கொடுமை இழைக்கக் கூடாது என்றும், பல சட்டங்களை பல இடங்களில் எடுத்துக்கூறியுள்ளான்.

திருமறை குர் ஆனில் அல்லாஹ்வின் அறிவுறை

        (நபியே!) அநாதைகளைப் (வளர்ப்பதைப்) பற்றியும் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்களுடைய சகோதரர்களே! (ஆதலால் அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், "நன்மை செய்வோம்" என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) கஷ்டத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவனும், நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.)               (அல்குர்ஆன் 2:220.)

        நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்களுடைய பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.          (அல்குர்ஆன் 4:2.)

        (அநாதைகளின் பொருளுக்குக் பொறுப்பாளரான நீங்கள் அந்த அனாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருள்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும், (அவர்களுக்குப் போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் கூறி (நல்லறிவைப் புகட்டி) வருவீர்களாக! (அல்குர் ஆன் 4:5)

        அன்றி, அநாதை(ச் சிறுவர்)களை (நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து)ச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர் (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய பொருள்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் பொருள்களைப் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்ற எண்ணத்தின் மீது, அவர்களுடைய பொருள்களை அவசரமாகவும் அளவு கடந்தும் சாப்பிட்டு விடாதீர்கள். (அநாதையின் பொருள்களுடைய பொறுப்பாளர்) பணக்காரராக இருந்தால் (தனக்காக அநாதையின் பொருள்களிலிருந்து யாதொன்றையும் பயன் பெறாமல்) தவிர்த்துக் கொள்ளவும். அவர் ஏழையாக இருந்தாலோ முறையான அளவு (அதிலிருந்து) புசிக்கலாம். அவர்களுடைய பொருள்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மைக்) கணக்கை அறிய அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். (ஆகவே அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்.) (அல்குர் ஆன் 4:6)

        எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று பயப்படுகிறார்களோ அதுபோன்று அவர்கள் பிற (உறவினர்களின்) அநாதைகளின் விஷயத்திலும் பயந்து கொள்ளட்டும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், நேர்மையான வார்த்தையை சொல்லட்டும்.  (அல்குர் ஆன் 4:9)

எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகின்றார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள்.  (அல்குர் ஆன் 4:10)

(நபியே!) அவர்கள் உங்களிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு (அடுத்த வசனத்திலிருந்து) கட்டளையிடுகின்றான். இதற்கு முன்னர் (பெண்களைப் பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டது அநாதைப் பெண்களைப் பற்றியதாகும். அவர்களுக்குக் குறிப்பிட்டுள்ள மஹரை நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதைப் பற்றியும் (அவர்களிலுள்ள) விவரமறியா குழந்தைகளைப் பற்றியும் (அதில் கூறி) "அநாதைகள் விஷயத்தில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, (அவர்களுக்கு) நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்து கொள்வான். (அல்குர் ஆன் 4:127)

"அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி தொடாதீர்கள்.  (அல்குர் ஆன் 6:152)

(நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரையில் (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.         (அல்குர் ஆன் 17:34)

நமது கடமையும், நபிகளாரின் போதனைகளும்

        தகுந்த பாதுகாப்பு இல்லாத காரணத்தால், குழந்தைகள் பண்பற்றவர்களாக, நல்லது கெட்டது அறியாதவர்களாக, கண்டிப்பதற்கு ஆளின்றி, தான் தோன்றித்தனமாக, ஒழுக்கமற்றவராக வாழ தலைப்படுவர். எனவே அநாதையாக உள்ள பிள்ளைகளை நன்முறையில் அறிவுரைகள் கூறி அரவணைத்து வளர்க்க வேண்டியது நம்மனைவர் மீதும் கடமையாகும்.

மேலும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் “அநாதைகள் ஆதரிக்கப்படும் இல்லமே சிறந்த இல்லம்” என்றும், “அநாதைகளை ஆதரிப்பவரும் நானும் நாளை இறுதிநாளில் இவ்வாறு சேர்ந்திருப்போம்” என்று நடுவிரல் ஆட்காட்டி விரல் இரண்டையும் இணைத்துக் காட்டிக் கூறியுள்ளனர். அநாதைகளை ஆதரிக்கக்கூடிய அளவு வசதி வாய்ப்பு நம்மிடத்தில் இல்லையெனினும், அக்குழந்தைகளிடம் புன்முறுவலுடன், அவர்களுக்கு ஆறுதலான அறவுரைகள் கூறி, தலையை பாசத்துடன் வருடிக் கொடுக்கவாவது வேண்டும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளனர்.


இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முக்கியமான வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.