இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர் 3)
கணவன் - மனைவி உறவு
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும், மனைவியும் கருத்தொருமித்த உறவுடன் இருந்தால் தான் அந்த இல்லத்தில் நிம்மதியும் இன்பமும் நிலவும். இல்லையெனில் அந்த இல்லம் உலகிலேயே நரகின் படுகுழியாகிவிடும். வாழ்நாள் முழுவதும் அனைத்து சுகதுக்கங்களிலும் இவர்கள் சமபங்கெடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இவர்களின் பயிற்சியினால் தான் குழந்தைகளின் பண்பும், பழக்கமும், வாழ்வும் உருவாகின்றது. எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன்பு பெண்களுக்கு - குறிப்பாக மனைவிக்கு சமூகத்திலோ, வீட்டிலோ எந்தவித உரிமையும் கொடுக்கப்படவில்லை. வீட்டிலுள்ள தட்டுமுட்டு சாமான்களில் ஒன்றாகத்தான் அவளும் கருதப்பட்டாள். காம வேட்கையைத் தீர்க்கும் கருவியாகத் தான் அவளும் கருதப் பட்டாள். இன்னும் எத்தனையோ எண்ணிலடங்கா இழி நிலையும் இன்னலும் தன் மனைவிக்குக் கிடைத்தன. இந்நிலையைத் திருமறையும், நபி வழியும் மாற்றியமைத்தன.
இறைமறை பெண்களைப் பற்றி
கணவனுக்கு உள்ளது போல் மனைவிக்கும் கணிசமான உரிமைகள் வழங்கப்பட்டன. அவள் அடிமை நிலையிலிருந்து மாற்றப்பட்டு அன்புக் கணவனின் துணைவியாக, இல்லத்தின் அரசியாக, குடும்பத்தை அழிவிலிருந்து பாதுகாக்கும் உறவாளியாக உயர்த்தப்பட்டாள்.
“அவர்கள் (மனைவிகள்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 2:187)” என்று இறைமறை பெண்களைப் பற்றி இயம்புகிறது. மனிதனின் மானத்தை மறைப்பதற்கும், தட்ப வெப்ப சூழ்நிலையை விட்டும் பாதுகாப்பதற்கும், அழகு ஊட்டுவதற்கும் ஆடை மிக மிக அவசியம். அதுபோன்று தான் மனைவி கணவனுடன் வாழ்வில் உதவுகிறாள். எப்படி ஆடை உடலுடன் உறவாடிக் கொண்டிருக்கிறதோ அது போன்று கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து மனம் ஒத்து வாழ வேண்டும்.
கணவனுக்கு உள்ள கடமைகள்
கணவன் மனைவியை அன்புடன் நடத்த வேண்டும். கண்ணியமாக மதிக்க வேண்டும். அவர்களிடம் ஏதேனும் குறை இருந்து நாம் வெறுத்தாலும், அவர்களிடமுள்ள மற்ற நற்செயல்களைக் கொண்டு மன்னித்து மறந்துவிட வேண்டும். “தன் மனைவிக்கு நல்லவனே மக்களில் சிறந்தவன்.” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். “நிச்சயமாக பெண்ணானவள் கோணலான விலா எலும்பினால் படைக்கப் பட்டிருக்கிறாள். அவள் ஒரு வழியிலும் உனக்கு நேராக நடக்கமாட்டாள். அவளால் நீ சுகம் பெறுவதாயின், அவளிடம் கோணல் இருக்கும் நிலையிலேயே நீ சுகம் பெறுவாய்; மேலும் நீ அவளை நேராக்கப் போனால் அவளை முறித்து விடுவாய்.” என்று நாயகம் (ஸல்) அவர்கள் நயமாகக் கூறுகின்றார்கள். எனவே மனைவியிடம் குற்றம் கண்டாலும் அவளை மாட்டைப் போல, அடிமைப் போல அடிக்கக் கூடாது. தேவையான போது மெதுவாய்க் காயப்படுத்தாத அளவு கண்டிப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் முகத்தில் அடிக்க கூடாது. அதையும் கடைசி ஆயுதமாகத் தான் பயன்படுத்த வேண்டும் குற்றங்களிலிருந்து திருந்துவதற்கு.
“....அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சினால், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:34) என்று திருமறை குறிப்பிடுகிறது. மேலும் பெருமானார் (ஸல்) அவர்களும், “நீர் உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்தலும், நீர் உடுத்தும் போது அவளையும் உடுத்தச் செய்தலும், நீர் (அவளது) கன்னத்தில் அடிக்காதிருத்தலும், நீர் (அவளை) நிந்திக்காதிருத்தலும் நீர் வீட்டுக்குள்ளன்றி வெறுத்து (அவளை தனியே) விடாதிருத்தலும் உமக்கு கடமையாகும்” என்று கூறியுள்ளார்கள்.
இரு மனைவிகளைப் பெற்ற கணவரின் கடமையைப் பற்றியும் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்; “ஒருவரிடத்தில் இரு மனைவியர் இருக்கும் போது, அவ்விருவருக்குமிடையே நேர்மையாய் நடக்கவில்லையானால் இறுதித் தீர்ப்பு நாளன்று தனது உடலின் பாதி வீழ்ச்சியுற்ற நிலையில் தான் வருவார்.”
மனைவி தன் கணவருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்
கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய பொறுப்புகளைப் போன்று மனைவி தன் கணவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன. இல்லத்தரசி ஆட்சி நடத்தும் தரத்தைப் பொறுத்து தான் வீட்டிலுள்ளவர்களது இன்பமும், துன்பமும் அமையும், அவள் கற்பு ஒழுக்கமும், நற்பண்புகளும் பெற்றிருந்தால் இல்லத்தில் அமைதியும், நிம்மதியும், நிலவும். தன் கணவனுக்கு ஆனந்தம் அளிப்பாள். தன் அன்பின் உறைவிடமாகத் தனது கணவனை ஆக்கி கொள்வதுடன், வரம்பு கடந்த வாழ்க்கையில் ஈடுபட்டு விடாமல் அவனையும் பாதுகாப்பாள்; அவளது உள்ளத்திலுள்ள இறையச்சம் இல்லத்திலுள்ள அனைவரிடத்திலும் எதிரொலிக்கும். இதற்கு மாற்றமான நிலையில் மனைவி இருந்தால் இல்லம் இவ்வுலகிலேயே நரகமாக மாறிவிடும். எனவே தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “சதாவும் அல்லாஹ்வைப் புகழும் நாவும், நன்றி செலுத்தும் உள்ளமும், கற்பிலும், தன் கணவன் சொத்தில் மோசம் செய்யாத இறை நம்பிக்கையுள்ள மனைவியும் மனிதனுக்குக் கிடைக்கும் சொத்துக்களில் மேலானது.” என்று கூறியுள்ளார்கள். மேலும், “ஒழுக்கமற்ற பெண்களைக் காட்டிலும் கெட்ட சோதனை ஆடவருக்கு வேறொன்றும் இல்லை” எனவும் கூறியிருக்கிறார்கள்.
“நல்லொழுக்கமுள்ள மனைவியானவள் தன் கணவன் தன்னைக் காணும் போது அவனை மகிழ்விப்பாள்; இன்னும் அவளை அவன் ஏவும் போது, அவனுக்கு வழிப்பட்டு நடப்பாள்; இன்னும் அவளை விட்டு அவன் இல்லாத போது அவனது சொத்து, பிள்ளைகளையும், தன் கற்பையும் பாதுகாப்பாள்.” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர். மேலும் “பெண்களில் சிறந்தவள் கணவனை மகிழ்வித்து, அவள் விரும்புவதை விரும்பி அவன் வெறுப்பதை தானும் வெறுப்பவளேயாகும்.” என்றும் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர். “ஒருவருக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செய்யும்படி நான் ஒருவரை ஏவியிருக்க கூடுமாயின், தனது புருஷனுக்குத் தலை வணங்கும் படி மனைவிமார்களை ஏவியிருப்பேன். (ஆனால் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் சிரவணக்கம் செய்வதற்கு அனும்தியில்லாததால் ஏவவில்லை)” என்றும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளனர். இன்னும் கணவன் விரும்பும் நேரமெல்லாம் அவனை மகிழ்விப்பதும், கணவன் மனம் கோணாமல் நடந்து கொள்வதும் அவளது கடமையாகும். அதே நேரத்தில் “தன் கணவன் வீட்டிலிருந்து எந்தப் பொருளையும் ஒரு பெண் தன் கணவன் அனுமதியின்றி செலவிடலாகாது” என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
இஸ்லாத்தில் உண்ணுவது - பருகுவது பற்றிய வழிமுறைகள்...
இஸ்லாத்தில் உறங்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை
இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல் பற்றிய வழிமுறைகள்
இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள் பற்றிய கட்டுரை....
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.