இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர் 7)
உற்றார் உறவினர் உறவு
குடும்பத்திற்கிடையில் இணைப்புப் பாலம்
பல குடும்பங்கள் இணைந்து ஒரு சமூகம். ஒரு குடும்பத்திற்கும் மற்றொரு குடும்பத்திற்கும் இணைப்புப் பாலமாக உறவினர் அமைகின்றனர். ஒரு குடும்பத்தில் மட்டும் அமைதியை நிலை நாட்டி விட்டு, உறவு முறையால் தொடர்பு கொண்ட வேறொரு குடும்பத்தில் அமைதி இல்லையெனில், இரண்டு குடும்பங்களிலும் அமைதி அழிந்து விடும். ஒரு குடும்பத்தில் செல்வச் செழிப்பும், உறவின் முறையால் நெருங்கிய மற்றொரு குடும்பத்தில் வறுமையின் வருத்தமும் இருந்தால் எங்ஙனம் இரு குடும்பத்திலுமுள்ள உறவினர்களிடையே உறவு எற்படும்.
உறவினர்களுக்கு அளிக்கும் வெகுமதி
செல்வ நிலையிலுள்ளவர்கள் தமது உறவினர்களில் வறுமையில் வாடுவோரின் துயர் துடைக்க முயற்சி செய்ய வேண்டும். அயலாருக்கு அளிப்பதைக் காட்டிலும் தமது உறவினர்களுக்கு அளிக்கும் வெகுமதியும், தர்மமும் இருமடங்கு பலன் தரும். ஒன்று தர்மம் செய்ததற்காக, இரண்டு உறவினர்களை ஆதரித்தற்காக. செல்வத்தில் புரளும் சீமான்கள் உதவி செய்யாவிடில் தமது உறவினர்களில் வறியவர்கள் பிச்சையெடுக்கவோ, பிறர் தயவை நாடி வாழவோ நேரும் போது வரும் இழிவு, கேவலம் அந்த உறவுகார சீமானுக்கும் தானே.
இது பற்றி திருமறையில்….
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். … (அல்குர்ஆன் 16:90) என்று திருமறை உறவினருக்கு உதவி செய்யும் படி கூறுகிறது. மேலும்
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர் களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம். (அல்குர்ஆன் 17:26) என்றும் உறவினர்களுக்குச் செய்ய வேண்டிய உரிமைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டியது பற்றி இறைமறை இயம்புகிறது.
உறவினர்களை ஆதரிப்பது பற்றிய நபி மொழிகள்
“பெற்றோர்களுக்கு அடுத்த படியாக உற்றார்களுக்குரிய கடமை உள்ளது.” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். “தமது உற்றார்க்கு நல்லவனாக இருப்பவனே மனிதருள் உத்தமன், முஸ்லிம்களில் சிறந்தவன்” என்றும், “உற்றார்கள் பேரில் இரக்க சிந்தையுடைய ஒரு மனிதன் சுவர்க்கவாசியாவான்.” என்றும், “உறவினருக்கு உதவி புரிபவரின் உணவும் செல்வமும் பெருகும் ; ஆயுளும் நீடிக்கும் ; பரக்கத் உண்டாகும்.” என்றும் உறவினர்களை ஆதரிப்பதன் சிறப்புகளை பெருமானார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தனர்.
இரத்த பந்துக்களை விரும்புகின்றவரை அல்லாஹ்வும் விரும்புகின்றான்
நமது உறவினர்கள் நம்மைப் பகைத்து வாழ்ந்தாலும், இரத்தப் பாசத்தை மதித்து சேர்ந்து வாழ வேண்டும். வெட்டி வாழும் உறவினர்களையும் ஒட்டி வாழ வேண்டும். அவர்கள் இறைவனுக்கு மாற்றமாக நடக்கும் போது இதமான முறையில் உபதேசம் செய்து நேர்வழிப் படுத்த வேண்டும். “முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்….” (அல்குர்ஆன் 66:6) என்றும் “நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.” (அல்குர் ஆன் 26:214.) என்று உறவினர்களை நரக நெருப்பை விட்டும் காப்பதற்கு அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் படி இறைவன் ஆணையிடுகின்றான். “இரத்த பந்துக்களை விரும்புகின்றவரை அல்லாஹ்வும் விரும்புகின்றான் ; பந்தத்துவத்தை முறிப்பவனை இறைவனும் முறித்து விடுகின்றான்.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
சமூக நிம்மதிக்கும் அமைதிக்கும்
பொதுவாக சமூக வளர்ச்சிக்கும், அமைதிக்கும், எழுச்சிக்கும், மலர்ச்சிக்கும் உறவினர் நல்லுறவு இன்றியமையாதது. உறவின் முறையை ஆதரித்து வாழ்வது சமூக நிம்மதிக்கும் அமைதிக்கும் வழிகோலும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.