இஸ்லாமியப் பண்பாடு தொடர் - 4
இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல்
நகச்சுத்தம்
உலகில் நோய் பரப்பும் சாதனங்களில் கை விரல் நகங்களும் ஒன்றாக இருக்கின்றது. அதற்குள் இருக்கும் அழுக்கும், கிருமியும் உணவோடு வயிற்றினுள் செல்லுமானால் பல நோய்கள் உண்டாக ஏதுவாகும். சிலர் தம் விரல் நகங்களைப் பற்களினால் கடிப்பதைக் காண்கிறோம். அதனை அவர்கள் தமது அன்றாட வழக்கமாகவே கைக்கொண்டுள்ளனர். அதன் மூலம் நோய் அணுகுவதும் சாத்தியமாகும். எனவே நகத்தை வளர விடாமல், பிளவு படாமல், மட்டமாக கத்தரித்துக் கொள்ளல் அவசியமாகும்.
“கை விரல் நகங்களுடன் கால் விரல் நகங்களையும் அகற்றிச் சுத்தமாக இருங்கள்”, என அறப்போதர் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். நகங்களை நறுக்குவதில் கூட ஓர் ஒழுங்கை கைக் கொள்ள வேண்டுமென்று இஸ்லாம் நமக்கு கட்டளை இடுகின்றது. கை நகங்களை எடுக்கும் போது. முதலில் வலது கையிலுள்ள ஆட்காட்டி (கலிமா) விரலைக் கொண்டு ஆரம்பித்து, முறையே நடு விரல், அதற்கடுத்த விரல், சின்ன விரல், பின்னர் இடது கைச் சின்ன விரலைக் கொண்டு தொடங்கி, இறுதியாக இடது, வலது கைப் பெருவிரல் நகத்தை வெட்ட வேண்டும். கால் நகங்களை எடுக்கும் போது, வலது காலின் சிறு விரலைக் கொண்டு துவக்கம் செய்து, அடுத்துள்ள விரல் நகங்களையும் முறையே வரிசைப்படி நறுக்கி கடைசியாக இடது காலின் சிறு விரலில் பூர்த்தி செய்ய வேண்டும்.
நகங்களை களைவதற்கு முன்னர், விரல்களுக்கு ஏதேனும் கொஞ்சம் எண்ணெய் அல்லது தண்ணீர் போட்டுக் கொண்டால் மிக இலகுவில் அவற்றை கத்தரித்துக் கொள்ள இயலும்.
நகம் வெட்டியவுடன் விரல்களைக் கழுவாமல் உடலைச் சொறிந்தால் சரும நோய் உண்டாகும் என்று மருத்துவ நூல்களில் எழுதப்பட்டிருப்பதால் நகங்களைக் களைந்தவுடன் விரல்களை நன்கு கழுவிச் சுத்தப் படுத்திக் கொள்ளல் வேண்டும். களைந்த நகங்களை அங்குமிங்கும் எறிந்து விடாமல் புதைப்பதோ அல்லது குப்பைக் கூடையில் போடுவதோ நல்லது.
நகத்திற்குச் சாயம் பூசுதல் தேவையற்றதும், இஸ்லாத்தில் முற்றிலும் விலக்கப்பட்டதுமாகும். ஆனால், பெண்கள் மருதேன்றிச் சாயம் பூசுவது தவறாகாது.
முடி களைதல்
உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நகம் வெட்டுவார்கள், மேல் மீசையைக் கத்தரிப்பார்கள். இருபது தினங்களுக்குள் கக்கத்து மூடி, கீழ்முடி முதலியவைகளைக் களைவார்கள் என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
உலக இரட்சகர் நபியே கரீம் (ஸல்) அவர்களது முன் மாதிரியைப் பின்பற்றி நாமும் மேற்கண்ட விதி முறைகளைப் பின் பற்றுவது மிக அவசியமாகும். இவை எல்லாம் சிறு காரியங்கள்தானே என்றெண்ணி அலட்சியமாக இருந்து விடுதல் கூடாது. வேண்டா மயிர்களைக் களைவதிலுள்ள தன்மையை அழ்ந்து ஆராய்வோமாயின், இஸ்லாத்தின் சிறந்த சுகாதார வாழ்க்கை முறை தெளிவாகப் புலனாகும்.
கக்கத்து உரோமம் களைதல்
உடலில் இருந்து வெளியேறும் நீரானது மயிர்கள் அடர்த்தியாக உள்ள இடங்களில் தேங்கி நின்று துர்நாற்றத்தைக் கொடுக்கின்றது. கக்கத்து முடிகளைக் களையாமல் இருந்தால் அதில் நின்று வீசும் அசுத்த வாடையை நம்மால் கூடச் சகித்துக் கொள்ள முடியாது.
மர்மஸ்தலத்தில் முடி நீக்குதல்
கீழ் முடி களைதல் இஸ்லாத்தில் நின்றுமுள்ளது என்ற ஹதீஸை புகாரீ போன்ற கிராந்தத்தில் காணப்படுகின்றது. மர்மஸ்தானத்தைச் சுற்றி வளரும் மயிர்களைக் களையாதிருந்தால் அங்கு கிருமிகளும், அழுக்குகளும் சேர்ந்து ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும். மேலும், அவ்விடத்தில் ஒருவகைத் துர் நீர் கசிவதினால் நாம் அணியும் ஆடைகளையும் அசுத்தமாக்கிவிடும். அருவருப்பைத்தரும். அம்மயிர்களைக் களைதல் சுகாதாரத்திற்கும். தாம்பத்திய உறவுக்கும் மிகவும் நல்லதாகும். ஆகவே, தூய நபி (ஸல்) அவர்களின் போதனைப் படி இருபது நாட்களுக்கொரு முறையோ, அல்லது மாதத்தில் இரு தடவைகள் கீழ் முடி களைதலை நமது வழக்கத்தில் கொண்டு வருவது சிறந்தது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.