இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர் 4)
பெரியோர் - சிறியோர் உறவு
இஸ்லாத்தில் அனைவரும் சமம்
இஸ்லாத்தில் அனைவருமே சமமானவர் தாம். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரரே. குலம், கோத்திரம், நிறம், நாடு, மொழி ஆகியவற்றால் பாகுபாடு காண இயலாது. சிலர் முந்தி பிறந்ததனால் மூத்தோராக, பெரியவராக இருக்கலாம். சிலர் பிந்திப் பிறந்ததனால் சிறியோராக, இளையவராக இருக்கலாம். ஆனால் இறை அச்சத்திலும், நற்கருமங்களிலும் யார் சிறந்து விளங்குகின்றார்களோ அவர்கள் தாம் சிறந்த மனிதர்கள். இறையச்சமின்றி, கெட்ட இழிவான, வெறுக்கதக்க, மானக்கேடான செயல்களைப் புரிந்து வருபவர் தான் இறைவன் முன் தாழ்ந்தவர். எனவே இஸ்லாத்தில் நல்லவர், கெட்டவர் என்பது பற்றி தான் பாகுபாடு உண்டேயொழிய வேறு வேற்றுமைகள் இல்லை.
இதனைத் திருமறை “.....உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர்... ” (அல்குர்ஆன் 49:13) என்று தெளிவுபடுத்துகிறது.
பெரியோர்களை கண்ணியப்படுத்து
எனவே வயதில் மூத்தவர்களைக் கண்ணுற்றால் நம்மை காண வயதில் முதிர்ந்த இவர் என்னை காண அதிகமதிகம் நற்செயல்கள் புரிந்திருக்கலாம், என்று கருதி அவர்களை கண்ணியப் படுத்த வேண்டும். நம்மைக் காண வயதில் இளையவர்களைக் கண்டால், நம்மைக் காண வயது குறைந்த இவர் என்னைக் காண குறைவாகத் தான் பாவங்கள் புரிந்திருப்பார், என்று கருதி அவரிடம் அன்பு பாராட்ட வேண்டும். மேலும், “எவர் பெரியவர்களுக்கு மரியாதை செய்யவில்லையோ, சிறியவர்களிடம் அன்பு காட்டவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர்.” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளனர்.
குழந்தைகளிடம் அன்பு காட்டுவது
குழந்தைகளை இனிய வார்த்தைகள் கூறி அன்புடன் நடத்த வேண்டும். பிள்ளையின் தலையை அன்பு பாசமாக தடவிக் கொடுப்பதும், முத்தமிடுவதும் சிறியவர்களுக்கு பெரியவர்கள் மீது கண்ணியத்தையும், மரியாதையையும் உண்டாக்கக் காரணமாகும். முதியோர்கள் கால நிலையை அனுசரித்து, தக்க முறையில் இளம் உள்ளங்களைக் கவர்ந்து அவர்களின் மேலெண்ணங்களையும், விருப்பங்களையும் உணர்ந்து மதித்து நடந்து கொண்டால் பெரியோர்-சிறியோர் உறவு பலப்படும்.
பெருமானாரின் பொன்மொழிகள்
சிறியவர்கள், பெரியவர்களின் வயதிற்கும், அனுபவத்திற்கும் கண்ணியமளித்து நடந்து கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு முந்தி சலாம் கூறுவது, அவர்களது தேவையறிந்து சேவை செய்வது, அவர்களுடைய ஏவல்களை மனம் கோணாமல் நிறைவேற்றுவது அவர்களை கண்ணியப்படுத்துவதாகும். அவர்கள் அறிவுரைப் படி நடக்க வேண்டும். “வயதில் முதிர்ந்தோர் என்பதற்காக ஒரு பெரியோரை கண்ணியப் படுத்துபவனுக்கு அவன் முதுமை பருவத்தை அடையும் போது அவனை கண்ணியப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒருவனை நியமிக்கின்றான்” என்றும், “வயது முதிர்ந்த ஒருவரை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்துவது போன்றதாகும்.” எனவும் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர். “வயதில் மூத்தோரைக் கண்டால் வயதில் சிறியோர் முந்தி ஸலாம் சொல்லுவார்களாக” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஏவியுள்ளனர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.