நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் வாழ்க்கை வரலாறு (மக்கா வாழ்க்கை)
அன்றைய அரேபிய நாட்டு நிலைமை
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் தோன்றிய நபியாவார். இவர்கள் நபிமார்களில் இறுதியானவர். இவர்கள் பிறந்த காலத்தில் அரபு மக்கள் கேவலமான நிலையிலிருந்தனர். அல்லாஹ்வின் ஆலயமாகிய கஅபாவில் 360 விக்ரகங்களை வைத்து சிலை வணக்கம் செய்பவர்களாக இருந்தார்கள். இவர்களை ஆட்சி செய்ய எந்த அரசரும் முன் வரவில்லை. ஒருவருக்கொருவர் தலைமுறை தலைமுறையாகச் சாதாரண காரணங்களுக்கும் சண்டையிட்டுக் கொள்வர். பெண் குழந்தைகளை உயிரோடு குழி தோண்டிப் புதைப்பவர்களாக இருந்தனர்.
இஸ்லாத்தில் இணைவதற்க்கு முன் அரபிகள் நிலை
ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்கள், தாங்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் இருந்த தன்மையையும், இஸ்லாத்தில் இணைந்ததற்குப் பின்னால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி முதல் ஹிஜ்ரத் அபிசீனியா சென்ற பொழுது அந்நாட்டு அரசர் நஜ்ஜாஷி மன்னரிடம் கூறிய பின்வரும் கருத்துக்கள் சிந்திக்கத் தக்கன.
“மன்னர் அவர்களே! நாங்கள் அறியாமையில் மூழ்கிக்கிடந்தோம். அல்லாஹ்வைப் பற்றியும், அவனது தூதர்களை பற்றியும் அறியாமலிருந்தோம். கற்களை வணங்கி வந்தோம். செத்த பிராணிகளைச் சாப்பிட்டுக் கொண்டும், தீய செயல்களைச் செய்தும், உறவினர்களைப் பகைத்தும் வாழ்ந்து வந்தோம். எங்களில் வலியவர்கள் பலவீனமானவர்களை அழித்து நாசப் படுத்திக் கொண்டிருந்தோம்.
இந்நேரத்தில் அல்லாஹ் தன்னுடைய தூதர் ஒருவரை எங்களின் பால் அனுப்பி வைத்தான். அந்த தூதருடைய வம்சத்தைப் பற்றி, அவருடைய வாய்மையைப் பற்றி, அவருடைய அமானிதம் காக்கும் தன்மையைப் பற்றி, அவருடைய பரிசுத்தத் தன்மையைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். அந்த தூதரவர்கள் நற்காரியங்களை நாங்கள் செய்ய வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிட்டார். தீய காரியங்களை விட்டும் எங்களைத் தடுத்தார். நாங்கள் உண்மையே பேச வேண்டுமென்றும், உறவினர்களோடு சேர்ந்து வாழ வேண்டுமென்றும், பக்கத்து வீட்டாருடன் நல்ல பண்போடு நடந்து கொள்ள வேண்டுமென்றும் கட்டளையிட்டார். தொழுகை, நோன்பு, தானதருமங்கள் செய்ய வேண்டுமென்று கூறி நற்பண்புகளையும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். விபச்சாரம், தீய செயல், பொய் பேசுதல், அனாதைகளின் பொருளைச் சாப்பிடுதல், பிறர் மீது அவதூறு கூறுதல் போன்ற தீய செயல்கள் அனைத்தையும் தடை செய்தார். எங்களுக்கு பரிசுத்தக் குர் ஆனைக் கற்றுத் தந்தார். நாங்கள் அதனை விசுவாசங் கொண்டு ஈமான் கொண்டோம். அதன் கட்டளைக்கு வழிபட்டு அமல் செய்தோம்.”
பெருமானாரின் குடும்பச் சிறப்பு
பெருமானார் முஹம்மது முஸ்தபா நபி (ஸல்) அவர்கள் குறைஷியர் குலத்தில் ஹாஷிம் கோத்திரத்தில் பிறந்தார்கள். இவர்கள் ஹலரத் இஸ்மாயீல் நபி (அலை) அவர்களின் வம்சமாகும். ஹாஷிம் கோத்திரத்தார் கஅபாவை நிர்வாகம் செய்யும் பொறுப்பாளராக இருந்தனர். பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிப் கஅபாவின் (பொறுப்பாளராக) முத்தவல்லியாக இருந்தார்.
யானை ஆண்டு
நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டிற்கு யானை ஆண்டு என்று பெயர். இந்த ஆண்டில் தான் அப்ரஹா என்ற அரசன் அல்லாஹ்வின் ஆலயமாகிய கஅபாவை அழிப்பதற்காக யானைப் படையைக் கொண்டு வந்தான். அப்ரஹா அபீசீனியா நாட்டு மன்னனின் “யமன்” மாநில அதிபதியாக இருந்தான். நகரங்களின் தாய் என்றழைக்கப்படும் மக்கா நகரில் இப்ராஹீம் நபி (அலை) அவர்களால் கட்டப்பட்ட கஅபாவில் ஆண்டுக்கொரு முறை அரபு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி “ஹஜ்” வணக்கம் செலுத்துவது வழக்கம். இது அப்ரஹா என்ற அரசனுக்குப் பிடிக்கவில்லை. இவன் தன்னுடைய நாட்டின் தலைநகராகிய “ஸன்ஆ” என்னும் ஊரில் ஒரு பெரிய மாதா கோவிலை ஏற்படுத்தி அரபிகள் அனைவரும் கஅபாவிற்குச் செல்லாமல் அந்த மாதா கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்த வேண்டுமென்று கட்டளை பிறப்பித்தான். ஆனால் அரபிகள் இதை மதிக்கவில்லை. இதனால் சினம் கொண்டு கஅபாவை அழித்து தரைமட்டமாக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பெரும் படை 60,000 வீரர்களுடன் பெரிய யானையின் மீது அமர்ந்து மக்காவை நோக்கிப் படையெடுத்தான்.
இச்சமயத்தில் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் கஅபாவின் (பொறுப்பாளராக) முத்தவல்லியாக இருந்தார். இவர்கள் கஅபாவில் சென்று “இறைவனே! உன்னுடைய வீட்டை நீயே பாதுகாத்துக் கொள்” என துஆ செய்து விட்டுத் தமது குடும்ப சகிதம் மக்காவாசிகளுடன் அருகிலிருந்த குன்றில் அடைக்கலம் புகுந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் இவர்களின் ஒட்டகங்களை அப்ராஹாவின் படையினர் கைப்பற்றிக் கொண்டனர். தம் ஒட்டகங்களை மீட்பதற்காக அப்ராஹவிடம் சென்ற போது “கஅபாவை நான் அழிப்பது பற்றி நீங்கள் கவலைப்பட வில்லையா?” என்று கேட்டான். அதற்கு அப்துல் முத்தலிப் அவர்கள் “நான் ஒட்டகங்களின் எஜமானன், அதைப் பற்றித்தான் நான் கவலைப்படுகின்றேன். கஅபாவின் எஜமானன் வேறொருவன் அவன் அதைப் பார்த்துக் கொள்வான்.” என்று கூறினார்கள்.
பிறகு அப்ரஹா கஅபாவை அழிக்க உத்தரவிட்டான். இந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று தோன்றிய பறவைக் கூட்டம் தம் அலகுகளிலும், கால்களிலும் இடுக்கிக் கொணர்ந்த சிறு சிறு கற்களை அப்ராஹாவின் படைகள் மீது வீசி எறிந்தது. அந்த கற்கள் பட்டதும் மனிதர்கள் சுருண்டு, சுருண்டு விழுந்தனர். யானைகளும் மாண்டன. இவ்வாறு எல்லோரும் அழிக்கப்பட்டு ஏக இறைவன் தன் இல்லமாகிய கஅபாவைக் காப்பாற்றினான். இந்த சம்பவம் நடந்த ஆண்டு யானை ஆண்டு எனப்படும். இச்சம்பவத்திற்குப் பின் நாற்பது நாட்கள் கழித்து அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வுலகில் அவதரித்தார்கள்.
பிறப்பு :
நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி.571 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ரபியுல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை அதிகாலை பிறந்தார்கள். இவர்கள் தாயாரின் பெயர் ஆமினா, தந்தையின் பெயர் அப்துல்லாஹ். இவர்கள் பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் இவர்களின் தந்தை அப்துல்லாஹ் இறந்து விட்டார்கள். பாட்டனார் இவர்களுக்கு முஹம்மது என்று பெயரிட்டனர். முஹம்மது என்றால் புகழப்பட்டவர் என்று பொருள். இவர்களின் தாயார் இவர்களுக்கு அஹ்மது (புகழுக்குரியவர்) எனப் பெயர் சூட்டி அழைத்து வந்தனர். இவர்கள் பிறந்த பின் அப்துல் முத்தலிப் அவர்கள் பெரிய விருந்து கொடுத்து அனைவரையும் மகிழ்வித்தார்கள்.
குழந்தைப் பருவம் :
அக்கால வழக்கப்படி ஆமினா அவர்கள் தம் அருமைக் குழந்தையை ஹலீமா என்னும் செவிலித்தாயிடம் பாலூட்டி வளர்த்து வருமாறு ஒப்படைத்தார்கள். ஹலீமா அவர்கள் மிகவும் மெலிந்து இருந்ததால் மற்ற பெண்களைப் போல பணக்காரக் குழந்தைகள் அவரிடம் ஒப்படைக்கப் படவில்லை. கடைசியாக வேறு வழியில்லாமல் முஹம்மது (ஸல்) அவர்களை, அனாதைக் குழந்தையாகப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினார்கள். இந்த குழந்தையைப் பாலூட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து ஹலீமாவின் வறிய வாழ்வு அகன்றது. இவர்கள் தம் குழந்தைகளைவிட அண்ணலாரை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்கள். இரண்டு வயது வரை பாலூட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். பிறகு திரும்ப மக்கா வந்து விட்டார்கள். மறுபடியும் மூன்று வயது ஆன போது ஹலீமாவின் சொந்தக் குழந்தைகளுடைய பாசத்தினால் மீண்டும் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பிறகு நான்கு வயதில் திரும்பி வந்து விட்டார்கள்.
முஹம்மது (ஸல்) அவர்களின் ஆறாவது வயதில் தாயார் ஆமினா அம்மையார் தன் குழந்தையை முழு அனாதையாக விட்டு விட்டு இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது. என்றும், தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தம் இருக்கிறது என்றும் எடுத்துரைத்த பெருமானார் (ஸல்) அவர்கள் தாயின் கருவறையில் இருக்கும் போது தந்தையையும், தமக்கு ஆறு வயது முடிவதற்குள் தாயையும் இழந்து அனாதையாக விடப்பட்டார்கள். பெற்றோர்களின் அன்பையும், பாசத்தையும் அறியாதவர்கள் இப்போது பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்கள். அண்ணலாரின் எட்டாவது வயதில், அப்துல் முத்தலிப் அவர்கள் இறந்து விடவே, இவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்து வந்தார்கள்.
இளமைப் பருவம் :
புகழப் பெற்றவர் என்னும் பொருள் கொண்ட முஹம்மது என்னும் பெயர் கொண்ட பெருமானார் தங்களின் இளமையிலிருந்தே பிறர் புகழும் படியாக விளங்கினார்கள். மற்றவர்களுக்கு உதவி புரிவதில் என்றுமே முன்னணியில் இருந்தார்கள். ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குச் செய்தியைக் கொண்டு செல்வதிலும், முதியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், உதவி புரிவதிலும், தண்ணீர் இறைத்துக் கொடுப்பதிலும், பொருள்களைத் தூக்கிச் செல்வதிலும் துணை புரிவார்கள். பெரிய தந்தையாரின் பராமரிப்பில் அவருக்கு பாரமாக அண்ணலார் இருக்கவில்லை. தங்களின் வீட்டு ஆட்டு மந்தையை மேய்த்து வந்ததோடு, பிறரது ஆடுகளையும் கூலிக்கு மேய்த்து வந்தார்கள்.
பெற்றவரினும் பேணி வளர்க்கும் பெரிய தந்தை அபூதாலிபின் அரவணைப்பில் பெருமானார் தங்களின் பன்னிரண்டாவது வயதிலேயே அவருடன் வாணிகத்தின் பொருட்டுச் சிரியா நாடு சென்றார்கள். அங்கு சிறுவர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கூர்ந்து கவனித்த பஹீரா என்ற கிருத்துவப் பாதிரியார், வேதங்கள் முன்னறிவிப்புச் செய்த தீர்க்கதரிசி இவர் தாம் என்று தெளிவாக உணர்கின்றார். “இந்தச் சிறுவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இவரை நன்கு கண்காணித்து வளர்த்து வாருங்கள். யூதர்கள் இவரை இன்னாரென்று அறிந்தால் இவர்களது உயிருக்கே ஊறு விளைவிப்பர். வந்த காரியத்தை விரைவில் முடித்துக் கொண்டு ஊர் திரும்புங்கள்” என்று அபூதாலிபிடம் எச்சரிக்கை செய்தார். எப்போதையும் விட வியாபாரத்தில் அதிக இலாபத்துடன் அபூதாலிபு மக்கமா நகருக்குத் திரும்பினார்கள்.
நம்பிக்கையாளர் எனப் பொருள்படும் “அல்-அமீன்” என்றும், உண்மையாளர் எனப் பொருள்படும் “அஸ்-ஸாதிக்” என்றும் மக்களால் அழைக்கப் பட்டார்கள். தங்களின் 16 ஆம் வயதில் “ஹில்ஃபுல் ஃபுழூல்” என்னும் சேவை மன்றத்தைப் பிற இளைஞர்களுடன் சேர்ந்து ஏற்படுத்திப் பொது மக்களுக்கும் பெரும் பணி புரிந்தார்கள்.
பெருமானாரின் 23 ஆம் வயதில் ஓர் அரிய நிகழ்ச்சி நடந்தது. கஅபாவின் ஒரு சுவரின் மூலையில் கருப்பு நிறமான “ஹஜருல் அஸ்வத்” என்னும் சுவர்க்கத்தின் கல் உள்ளது. கஅபா புதுப்பிக்கப்பட்ட பொழுது அதனை முன்பு உள்ள இடத்தில் பதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பொழுது உண்டான பெரிய பிரச்சனையை இவர்கள் தீர்த்து வைத்தார்கள். ஏழை எளியவர்களின் இன்னல் துடைத்தும், அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்தும் வந்தார்கள்.
திருமணம் :
இவர்கள் தங்கள் 24 ஆம் வ்யதில், மக்காவில் சிறந்த செல்வரும், தூய்மையானவர் எனப் பொருள் படும் “தாஹிரா” என்னும் சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த கதீஜா பிராட்டியாரின் வியாபாரத்திற்காகச் சிரியா சென்று அதிகமான செல்வத்தைத் திரட்டி வந்தார்கள். இவர்களின் திறமையையும், நேர்மையையும் உணர்ந்த அந்த விதவை அம்மையார் தங்களின் 40ஆம் வயதில் நாயகம் (ஸல்) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். அப்பொழுது பெருமானாருக்கு வயது 25. தங்களின் முழுச் செல்வத்தையும் பெருமானாரின் வசம் ஒப்படைத்தார்கள். இவர்கள் இந்த செல்வத்தைக் கொண்டு ஏழைகள், ஆதரவற்றோர், இயலாதவர் அனைவருக்கும் பெரிதும் உதவினார்கள்.
குழந்தைகள் :
இவர்களுக்கு காசிம், அப்துல்லா என்னும் இரண்டு ஆண்மக்களும், ஜைனப், ருகையா, உம்மு குல்தூம், ஃபாத்திமா என்னும் நான்கு பெண் மக்களும் பிறந்தனர். கதீஜா நாயகி அவர்கள் ஜைது என்னும் 8 வயது நிரம்பப் பெற்ற ஒரு அடிமையைப் பெருமானாரின் பணிவிடைக்காக ஒப்படைத்தார்கள். ஆனால் பெருமானார் அவ்வடிமைச் சிறுவனுக்கு உரிமையளித்துத் தன்னுடைய மகன் போல வளர்த்து வந்தார்கள். பெருமானாரின் இரண்டு ஆண் மக்களும் குழந்தைப் பருவத்திலேயே மரணமடைந்து விட்டனர்.
நபிப் பட்டம் :
பெருமானார் தங்களின் 40 ஆம் வயதில் பல நாட்கள் மக்காவிற்கு அருகில் உள்ள ஹிரா என்னும் மலைக் குன்றில் சென்று தங்கினார்கள். ஏக இறைவனின் தியானத்தில் ஆழ்ந்தனர். தாங்கள் படைக்கப்பட்டதின் நோக்கத்தை சிந்தித்தார்கள். இவ்வாறு பல நாட்கள் ஆண்டவனின் ஒளியைக் காணும் வரை தவம் இருந்தார்கள். ரமலான் மாதம் லைலத்துல் கத்ரு இரவில் ஒரு புதிய உருவம் அவர்கள் முன் தோன்றியது.
அவ்வுருவம் “ஓதுக” என்று சொன்னது. பெருமானார் “எனக்கு ஓதத் தெரியாது” என்றார்கள். அந்த உருவம் இறுகக் கட்டியணைத்த பின் மீண்டும் ஒரு முறை “ஓதுக” என்றது. பெருமானார் “ஓதத் தெரியாது” என்றார்கள். மூன்றாவது முறையாக மிகப் பயங்கரமான உரத்த குரலில் “ஓதுக” என்று கட்டளையிட்டது. பெருமானார் “நான் எதை ஓதுவது” என்று கேட்ட போது அந்த அமர ஒலி,
“நபியே! (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக, “இரத்தக் கட்டி” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” என்று முழங்கியது (குர்ஆன் 96: 1-5)
பெருமானார் முழுமையான விழிப்பு நிலைக்கு வந்த போது இவ்வாக்கியங்கள் கல் மேல் பதித்த எழுத்துப் போல மனதில் தெளிவாக நின்றன. பெருமானார் ஹிரா குகையை விட்டு வெளியே வந்தார்கள். ஆகாய வெளியில் பேரொளியாக நின்ற ஜிப்ரீல் என்னும் வானவரைக் கண்டார்கள். ஜிப்ரீல் (அலை) தம்மை இறைவனால் அனுப்பப்பட்ட மலக்குகளின் தலைவர் என்று அறிமுகம் செய்து கொண்டு “நீங்கள் இறைவனின் நபியாக உள்ளீர்” என்று கூறினார். ஜிப்ரீல் மறைந்த பிறகு தங்களின் துணைவியாரிடம் வந்து அச்சத்துடம் நடந்தவற்றை விவரித்தனர் ஹலரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
உடனே கதீஜா அம்மையார் ஆறுதல் கூறினார்கள். மேலும் தங்களின் பெரிய தந்தையார் மகனான வரக்கா இப்னு நெளபல் என்பவரிடம் சென்று நடந்ததைக் கூறினர். நடந்தவற்றைக் கேட்ட வரக்கா அம்மையாரை நோக்கி, “நிச்சயமாக தங்களின் கணவர் முன் தோன்றியவர் நபி மூஸாவுக்கும், நபி ஈஸாவுக்கும் வஹி கொண்டு வந்த ஜிப்ரீல் ஆவார். உலக மாந்தர் இதுவரை எதிர்பார்த்திருந்த உலக மாநபி உமது கணவராவார்,” என்று சுபச் செய்தி சொன்னார்கள். இதைக் கேட்ட கதீஜா அம்மையார் பெருமானாருக்கு ஆறுதல் கூறி தமது கணவரின் தூதை மெய்ப் படுத்தி முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
இரண்டாவது வஹ்யி வருவதற்கு சிறிது காலதாமதமானது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். மலை உச்சியிலிருந்து கீழே குதித்து விட பல முறை முனைந்தார்கள் அவ்வாறு கீழே குதித்து விடுவதற்காக ஏதேனும் மலை உச்சிக்குச் செல்லும் போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் ஜிப்ரீல் (அலை) தோன்றி “முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர் தான்” என்று கூறுவார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்களின் பதற்றம் தணிந்து மனம் சாந்தி பெறும்.
ஆறுமாத காலத்திற்கு பின் மறுபடியும் ஜிப்ரீல் தோற்றமளித்துக் கீழ் கண்ட வசனங்களை ஓதினார். “உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும். இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.” (குர்ஆன் 93: 3-5)
அதன் பின் மூன்று மாதங்கள் கழித்து கீழ்கண்ட வசனம் இறங்கியது. “(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே! நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.” (குர்ஆன் 74 :1-2) இதற்குப் பின் பெருமானார் அவர்கள் தமது நம்பிக்கைக்குரியவரிடம் சென்று தூதை வெளியிட்டு இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். ஆண்களில் முதன் முதலில் ஹலரத் அபூபக்ர் (ரழி) அவர்களும், அடிமைகளில் ஜைது பின் ஹாரிஸ்(ரழி) அவர்களும், சிறுவர்களில் ஹலரத் அலீ (ரழி) அவர்களும் இஸ்லாத்தை தழுவியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள். ஹலரத் அபூபக்ர் (ரழி) அவர்கள் அழைப்பை ஏற்று அவரது நண்பர்கள் உஸ்மான் இப்னு அஃப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் ஆண்களில் முதல் முதலாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு ரகசியமாக மூன்று ஆண்டுகள் வரை இஸ்லாமியப் பிரச்சாரம் நடைபெற்றது. சுமார் 30 நபர்கள் இஸ்லாத்தைத் தழுவினர்.
மக்கா வாழ்க்கை
நபித்துவத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்கத்தில் இஸ்லாத்தைப் பகிரங்கமாகப் பிரசாரம் செய்யுமாறு இறைவனின் கட்டளை பிறந்தது. உடனே நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவாசிகளை சபா என்ற குன்றின் அடியில் ஒன்று சேர்த்தார்கள். மலை மீது தாங்கள் நின்று கொண்டு அவர்களை நோக்கிச் சொன்னதாவது: இந்த மலையின் பின்புறத்திலிருந்து எதிரிப் படை நம்மை தாக்க வருவதாக நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா? எனக் கேட்டார்கள். அனைவரும் உங்கள் வார்த்தைகளை நிச்சயமாக நம்புவோம் எனக் கூறினார்கள். பிறகு நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாவது: “நீங்கள் ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கலாகாது. நான் அவனால் நியமனம் செய்யப்பட்ட தூதுவராவேன், எனது வார்த்தைகளை நீங்கள் நம்பினால் இருவுலகிலும் ஈடேற்றம் பெறுவீர்கள். புறக்கணித்தால் பெரும் இழப்புக்கு ஆளாவீர்கள். இதனைக் கூறவே நான் உங்களை அழைத்தேன்.” எனக் கூறினார்கள். இதனைக் கேட்ட அபூலஹப், எங்களை இதற்காகவா அழைத்து சிரமம் கொடுத்தீர் எனக் கூறி மண்ணை வாரித்தூற்றி விட்டுச் சென்றதனால் அனைவரும் கலைந்து சென்றனர். பிறகு நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய குடும்பத்தினருக்கு விருந்து அளித்து இறைதூதை ஏற்றுக் கொள்ளும்படி அழைத்தார்கள். அப்போதும் அபூலஹப் ஏளனம் செய்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஏழைகளையும், அடிமைகளையும் மக்கா குறைஷிகள் அதிகமாகத் துன்புறுத்தினர். இதில் ஹலரத் சுமையா (ரழி) என்ற பெண்மணியும், யாசிர் (ரழி) என்ற தோழரும் இஸ்லாத்தை ஏற்றதற்காக குறைஷிகளால் கொலை செய்யப் பட்டார்கள். ஹலரத் பிலால்(ரழி), ஹலரத் கப்பாப் (ரழி) ஆகியோர் அதிகமான தொல்லைகளுக்கு ஆளாயினர். நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனையையும், வேதனையையும் முடிந்த அளவு இலகுவாக்கி அவற்றிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க மதி நுட்பமான இரண்டு திட்டங்களை நபி(ஸல்) அவர்கள் வகுத்தார்கள். அவ்விரு திட்டங்களால் அழைப்புப் பணியை வழி நடத்துவதிலும், இலட்சியத்தை அடைவதிலும் பற்பல பலன்கள் கிட்டின. அவை 1) அழைப்புப் பணிக்கு மையமாகவும், ஒழுக்க போதனைக்கு உறைவிடமாக “அர்கம் இப்னு அபுல் அர்கம் மக்ஜுமி” என்பவரின் வீட்டை நபி(ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். 2) முஸ்லிம்களை ஹபஷா(அபிசீனியா)விற்கு குடிபெயருமாறு கட்டளையிட்டார்கள். நபி பட்டம் கிடைத்த 5-ஆம் ஆண்டு மக்காவாசிகளின் தொல்லை தாங்காமல் 16 பேர் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். பிறகு 7-ஆம் ஆண்டு 103 பேர் அபிசீனியா சென்றனர்.
மக்கா நகரத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து நாயகத்தின் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக அவர்களைக் கொலை செய்ய ஹலரத் உமர் அவர்களைத் தயார் செய்து அனுப்பினர். கொலை செய்ய சென்ற உமர் வழியில் தனது சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியறிந்து, அவரின் வீட்டிற்குச் சென்றார். அங்கு திருக்குர் ஆனின் வசனங்களை செவியுற்று மனம் மாறி பின் நபிகளாரிடம் சென்று இஸ்லாத்தை ஏற்றார்.
மக்காவிலுள்ள 40 தலைவர்கள் ஒன்று கூடி அண்ணலாரின் பெரிய தந்தை அபூதாலிப் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களை ஊரை விட்டுத் தள்ளி வைக்கும் நகர்ப்புறக்கணிப்பு நிபந்தனையை நபி பட்டம் கிடைத்த 7 ஆம் ஆண்டு நிறைவேற்றினர். தலைவர்கள் கையொப்பம் இட்ட ஒப்பந்தத்தை கஅபாவில் தொங்கவிட்டனர். இதனால் அபூதாலிப் அவர்கள் தங்களுடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு ஊரருகில் தனது பள்ளத்தாக்கில் சென்று தங்கினார்கள். அப்போது அனைத்து முஸ்லிம்களுக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் குடும்பத்தினருக்கும் அதிகமான சிரமங்கள் ஏற்பட்டன. இந்த புறக்கணிப்பு மூன்று ஆண்டுகள் நீடித்தது. நபிப் பட்டம் கிடைத்த 10 ஆம் ஆண்டு கஅபாவில் தொங்கவிடப் பட்ட ஆணையை கறையான் அரித்ததால் அழிந்து போய் விட்டது. இதனால் புறக்கணிப்பு ஆணை முடிந்து விட்டது என முடிவு செய்து முஸ்லிம்கள் மக்கா திரும்பினர். சில நாட்களுக்குப் பின் முதலில் கதீஜா (ரழி) அவர்களும், அதைத் தொடர்ந்து ஹலரத் அபூதாலிப் அவர்களும் இறந்து விட்டனர்.
தாயிப் நிகழ்ச்சி
நபித்துவம் பெற்ற 10 ஆம் ஆண்டு நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்காக தாயிப் என்னும் நகரவாசிகளைச் சந்திக்கச் சென்றார்கள். அப்பொழுது அவ்வூரில் முக்கியமானவர்களைச் சந்தித்து இஸ்லாத்தின் பால் அழைத்த போது, ஒரு தலைவன், இறைத் தூதர் ஆக்க உம்மைவிட ஆண்டவனுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? என்று கேட்டான். மற்றொரு தலைவன், “உம்முடன் பேச விரும்பவில்லை” என்று சொன்னான். மற்றொருவன் இன்னும் கேவலாமாகப் பேசினான். எனவே, நாயகம் (ஸல்) அவர்கள் பொது மக்களிடம் சென்று இஸ்லாத்தின் அழைப்பைக் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் சிறுவர்களைத் தூண்டி விட்டு கற்களைக் கொண்டு அடிக்கச் செய்தார்கள். பெருமானார் ஊரை விட்டு வெளியே வந்தபோது அம்மக்களுடைய நேர்வழிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
ஆயிஷாவின் திருமணம்
கதீஜா (ரழி) அவர்கள் இறந்த பின் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு திருமணம் செய்யவில்லை. ஹலரத் அபூபக்ர் (ரழி) அவர்களின் மகள் ஆயிஷா அழகும் புத்திக் கூர்மையும் உள்ள பெண், ஆகையால் அவர்களைப் பெருமானாருக்கு திருமணம் செய்து வைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என எண்ணிப் பெருமானாரிடம் ஹலரத் அபூபக்ர் தன் எண்ணத்தை வெளிப் படுத்தினார்கள். இதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள் இசையவே, இவர்களின் திருமணம் நபிப்பட்டம் பெற்ற 11 ஆம் ஆண்டில் நபிகள் (ஸல்) அவர்கள் 500 திர்ஹம் மஹர்த் தொகை அளிக்க திருமணம் நடைபெற்றது.
மிஃராஜ் நிகழ்ச்சி
நபித்துவம் பெற்ற 12 ஆம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 27 இரவு நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய பூத உடலுடன் விண் பயணம் செய்தார்கள். இந்நிகழ்ச்சி “மிஃராஜ்” என அழைக்கப்படும். ஹலரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வழி நடத்த நாயகம் (ஸல்) அவர்கள் “ஸித்ரதுல் முன்தஹா” என்ற இடம் வரை சென்றார்கள். இந்த எல்லைக்குப் பின் தனிமையில் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று அல்லாஹ்வைத் தரிசனம் செய்து உம்மத்தினருக்கு தொழுகை என்னும் காணிக்கையைப் பெற்று திரும்பினார்கள்.
ஹிஜ்ரத் செய்தல்
தொழுகை கடமையான பின் மக்காவில் குரைஷிகளின் தொல்லை அதிகமானது. மக்காவாசிகள் அனைவரும் சேர்ந்து நாயகம் (ஸல்) அவர்களைக் கொன்று விடுவது என தீர்மானித்து இரவில் வீட்டை முற்றுகையிட்டனர். நபித்துவம் அடைந்து 13 ஆம் ஆண்டு சபர் மாத இறுதியில் நாயகம் (ஸல்) அவர்கள் ஹலரத் அலீ (ரழி) அவர்களுடன் தங்கி இருக்கும் போது நாயகம் (ஸல்) அவர்களுக்கு மக்காவை விட்டு செல்லும் படி அல்லாஹ்வின் உத்தரவு வந்தது. இதன்படி நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே இறங்கி வரும் போது ஏந்திய வாளோடு எதிரிகள் சூழ்ந்திருந்தனர். இதனை பார்த்த நாயகம் (ஸல்) அவர்கள் தரையிலிருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அங்கிருந்தவர்களின் தலையின் மீது தூவி விட்டுச் சென்றார்கள். எதிரிகள் நபி (ஸல்) அவர்களை பார்க்க முடியாதவாறு அல்லாஹ் செய்துவிட்டான்.
வீட்டிலிருந்து புறப்பட்டு ஹலரத் அபூபக்ர் (ரழி) அவர்களின் வீடு சென்று அவரை அழைத்துக் கொண்டு மக்காவை விட்டுப் புறப்பட்டார்கள். மூன்று மைல் தொலைவிலுள்ள “தெளர்” என்னும் குகையில் சென்று தங்கினார்கள். அங்கும் மக்கா குறைஷிகள் வந்து தேடினர். அவர்களின் சப்தத்தைக் கேட்ட ஹலரத் அபூபக்ர் (ரழி) அவர்கள், “நாம் இருவர் தானே இருக்கின்றோம். நாம் என்ன செய்வோம்? என்று சொன்னார்கள். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் ’கவலைப்படாதீர்’ நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்; என்றனர். அவ்வமயம் அந்த குகையின் வாயிலில் சிலந்திப் பூச்சி வலையைப் பின்னியது. இதைப் பார்த்த மக்காவாசிகள் குகைக்குள் யாரும் இல்லை என்று கருதி திரும்பிச் சென்று விட்டனர். அவ்விடத்திலேயே மூன்று இரவு, மூன்று பகல் தங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு ரபியுல் அவ்வல் மாதத் தொடக்கத்தில் மதீனா சென்று அடைந்தார்கள். அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்களின் இல்லத்தில் தங்கினார்கள். இந்த நகரம் “யத்ரிப்” என்று அழைக்கப்பட்டு வந்தது. நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு குடியேறியதனால் அது “மதீனத்துன் நபி” நபிகளாரின் பட்டணம் என்று அழைக்கப்பட்டது. இந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியிலிருந்து இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி ஆண்டு எனக் கணக்கிடப்படுகிறது.
தொடர்ந்து படிக்க கீழே கிளிக் செய்யவும்
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் வாழ்க்கை வரலாறு (மதீனா வாழ்க்கை)
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மதீனா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி தாவூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இத்ரீஸ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்ஹாக் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஸுலைமான்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி யூனுஸ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....