இஸ்லாமியப் பண்பாடு
(உண்ணுவது - பருகுவது) தொடர் - 1

மனித வாழ்வில் உண்ணுவது, பருகுவது, உறங்குவது வழக்கமாக இருக்கிறது. இதற்காகத் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியைச் செலவழிக்க வேண்டியுள்ளது. இவைகளைப் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறையில் செய்யும் பொழுது அது வணக்கமாக (இபாதத்தாக) ஆகி விடுகிறது. இதனால் இறைவனிடம் நன்மையைப் பெற முடியும்.
“ஆதத்” என்னும் வழக்கத்தை “இபாதத்” என்னும் வணக்கமாக மாற்றுவது இஸ்லாமிய வழிமுறைகளாகும்.
இஸ்லாத்தில் உண்ணும் முறை
- சாப்பிடுவதற்கு முன் இரு கைகளை மணிக்கட்டு வரை கழுவிக் கொள்ள வேண்டும்.
- வாயைக் கொப்பளித்துக் கொள்ள வேண்டும்.
- தலையை மூடிக் கொள்ள வேண்டும்.
- சாப்பிட ஆரம்பிக்கும் போது “பிஸ்மில்லாஹி வ அலா பரக்கதில்லாஹி” என்று கூறி ஆரம்பிக்க வேண்டும்.
- சுப்ரா (விரிப்பு) விரித்துக் கொள்ள வேண்டும்.
- உட்காரும் போது பெருமானார் (ஸல்) அவர்கள் அமர்ந்து காட்டிய மூன்று முறைகளில் ஒரு முறையிலாவது உட்கார வேண்டும்.
- உணவை பாத்திரத்தின் ஒரத்திலிருந்து உண்ண ஆரம்பிக்க வேண்டும்.
- சாப்பிடும் போது இடையிடையே “அல்லாஹும்ம லகல் ஹம்து வலகஷ்ஷுக்ரு” என்று சொல்ல வேண்டும்.
- ஆரம்பத்தில், பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்து விட்டால் நினைவு வரும்பொழுது “பிஸ்மில்லாஹி அவ்வலஹு வ ஆகிரஹு” என்று கூறிக் கொள்ள வேண்டும்.
- சாப்பிடும் பொழுது தண்ணீர் தேவைப்பட்டால் இடது கையில் எடுத்து, வலது உள்ளங்கையில் வைத்துப் பருக வேண்டும்.
- இறுதியாகச் சாப்பிட்டு முடிக்கும் போது பாத்திரத்தில் உள்ளவற்றை முழுமையாகச் சாப்பிட்டுவிட வேண்டும். கைவிரல்களை உணவு அருந்தி முடித்தவுடன் சூப்பிக் கொள்ளல் வேண்டும்.
- இறுதியில் கீழ்காணும் துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.
“அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ சகானா வஜஅலனா மினல் முஸ்லிமீன்.”
பொருள் : நமக்கு உணவும், பானமும் அளித்து நம்மை முஸ்லிம்களாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
விருந்து உண்ணும் முறை
விருந்து உண்ணும் போது கீழ்க்காணும் முறைகளையும் பின் பற்ற வேண்டும்.
- பிறர் வீட்டினுள் நோக்காமல் கண்பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.
- உப்பு, நீர் ஆகியவைகளைத் தவிர வேறெதுவும் கேட்பது நன்றன்று.
- (மற்றவர்களுக்கு) சக விருந்தினர்களுக்கு விருந்தளிப்பவரின் அனுமதியின்றி உணவு பரிமாறுதல் கூடாது.
- பொதுவாக வைக்கப்பட்டுள்ள உணவுப் பதார்த்தங்களை முழுமையாக உண்டு தீர்த்து விடாமல் மீதம் வைக்க வேண்டும்.
- உணவருந்தி முடித்தவுடன் சாதாரணமாக ஓதும் துஆவுடன் கீழ்கானும் துஆவினையும் ஓதிக்கொள்ள வேண்டும்.
“அல்லாஹும்ம அத்இம் மன் அத்அமனா வஸ்கிமன் சகானா”
மேற்காணும் முறைகளைப் பின் பற்றுவதோடு முக்கியமாக கவனிக்க வேண்டியது நிய்யத் வைப்பதாக இருக்கிறது. அதாவது சாப்பிடுவதற்கு முன், இந்த ஆகாரத்திற்கு எந்த விதமான சக்தியுமில்லை. இதற்கு சக்தியளிக்கக் கூடியவன் இறைவன். அவன் அளிக்கும் சக்தியை வணக்க வழிபாடுகளுக்குச் செலவழிப்பேன் என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தில் பருகும் முறை
பானங்களைப் பருகும் போது கீழ்க்கானும் நபி வழிகளைப் பின் பற்ற வேண்டும்.
- தலையை மறைத்துக் கொள்வது.
- உட்கார்ந்து பருகுவது.
- வலது கையால் பாத்திரத்தை எடுத்துப் பருகுவது.
- பிஸ்மில்லாஹ் என்று கூறிப் பருகத் தொடங்குவது.
- பானத்தை உற்று நோக்கிப் (தூசி அகற்றி) பருகுவது.
- மிடறு மிடறாகப் பாத்திரத்தில் மூச்சு விடாமல் பருகுவது.
- பருகி முடித்தவுடன் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவது.
- பால் அருந்தினால் “அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீஹி வஜித்னா மின்ஹு” என்று கூறுவது
பொருள் : யா அல்லாஹ் இதில் (பாலில்) பரக்கத்தை ஏற்படுத்துவாயாக. மேலும் இதிலிருந்து (உடல் நலத்தை) அதிகப் படுத்துவாயாக.
கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.
புதிய வெளியீடுகள்
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.