Home


இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர் 1)

        அல்லாஹுத்தஆலா இப்பரந்த பூவுலகில் எத்தனையோ விதமான உயிரினங்களைப் படைத்துள்ளான். அனைத்து உயிரினங்களும், படைப்பினங்களும் மனிதனுக்காகப் படைக்கப் பட்டுள்ளன. எனவே மனிதன் தன்னுடைய வாழ்வில் மற்ற மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் போன்றவற்றின் உதவியின்றி தொடர்பின்றி தனித்து வாழ்ந்து விட முடியாது. மனிதன் தனது பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, மக்கள் என்று பலருடன் சேர்ந்து ஒரு குடும்பமாகி வாழ்கின்றான். பல குடும்பத்தினர் சேர்ந்து அடுத்தடுத்து ஒரு தெருவில் குடியிருக்கின்றனர். பலவிதமான பணிகளை நிறைவேற்றக் கூடிய, பலவிதமான ஊழியம் செய்யக் கூடிய மக்கள் சேர்ந்து ஒரு ஊரில் வசிக்கின்றனர். பலவிதமான நிர்வாகங்கள், நிர்மாணங்கள் நடைபெற பல ஊர்களில் ஒருவருக்கொருவர் தொடர்புடைய நிலையில் ஒரு தேசத்தில் வசிக்கின்றார்கள். இந்நிலையில் மனிதர்கள் குடும்பத்தில், தெருவில், ஊரில், பணிபுரியுமிடத்தில் ஒருவருக்கொருவர் சுமூகமான முறையில் அன்புடன், பண்புடன், பாசத்துடன் நடந்து கொண்டால் தான் வாழ்க்கையில் இனிமையும், நிம்மதியும் உருவாகும். சாந்தி மார்க்கமான இஸ்லாமும் சாந்த நபி (ஸல்) அவர்களும் இதற்கு முழுமையான வழிகாட்டி மானிடனை நெறிப் படுத்தியுள்ளனர்.

பெற்றோர் பிள்ளை உறவு

        மனித இனம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்பது குர் ஆன் கூறும் அறிவுரையாகும். மனித இனத்தின் முதல் படி குடும்பமாகும். இறுதிப் படி முழு மனித சமுதாயமாகும். உலகில் அமைதி காண முதலில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிம்மதி நிலவ வேண்டும். குடும்பத்தில் நிம்மதி நிலவ அதன் ஒவ்வொரு உறுப்பினராகிய தந்தை - தனயன், கணவன் - மனைவி, உற்றார் - உறவினர் இவர்களிடையே நல்லுறவு உரம் பெற வேண்டும். இதைத் தான் இஸ்லாம் வலியுறுத்திக் காட்டியுள்ளது. ஒரு குடும்பத்தின் தலைவன் தந்தை; தலைவி தாய். பெற்ற இருவருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது பிள்ளைகளின் பொறுப்பாகும். பெற்றோர்கள் அறிவிலும் அனுபவத்திலும் பிள்ளைகளை விடச் சிறந்தவர்கள். எனவே அன்பால் பிணைக்கப்பட்ட இவர்களின் ஒற்றுமையில் தான் அமைதி தவழும்; நிம்மதி நிலவும்.

இறைவன் தன் திருமறையில்...

        நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (அல்குர்ஆன் 4:59.) என்று இயம்பி குடும்பத்தின் தலைவர்களான பெற்றோர்களுக்கும், அல்லாஹ்வுக்கும், திருத்தூதருக்கும் வழிப்பட்டு நடக்க வலியுறுத்துகின்றான். எனவே பெற்றோர்களுடன் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்களுக்கு புரிய வேண்டிய கடமைகள்

        “உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டு இருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளை யிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.” (அல்குர் ஆன் 17:23.) என்று இறைவன் தன் திருமறையில் இயம்பியுள்ளான். பெற்றோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதுடன், அவர்கள் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றல் வேண்டும். பெற்றோர் பேசும் சப்தத்திற்கு மேல் நமது குரலை உயர்த்தவோ, அவர்களை மரியாதை இன்றி அழைப்பதோ அவர்கள் கூறும் வார்த்தைகளை உதாசீனப்படுத்தி “சீ சீ “ என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுவதோ கூடாது. அல்லாஹ்வுக்கு அடியார்கள் புரியும் கடமைகளுக்குப் பின் பெற்றோர்களுக்குப் புரிய வேண்டிய கடமைகள் உள்ளதால் தான் இதனை ஒரே வசனத்தை அடுத்தடுத்து இறைவன் குறிப்பிட்டுள்ளான். “பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்வது பாவத்தைப் போக்குகின்றது; நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் பெற்றுத் தருகிறது.” என்பதாகவும் “பெற்றோர்களுக்கு  தொண்டு புரிவது மார்க்கப் போரில் ஈடுபடுவதைக் காட்டிலும் சிறந்தது.” எனவும் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர்.

        பெற்றோர்களில் இருவரோ, அல்லது ஒருவரோ இருந்து (அவர்களுக்கு பணிவிடை செய்து) யார் சொர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்” என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிட்ட சாபத்திற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் புனித வெள்ளிக் கிழமையன்று, மதீனா முனவ்வராவின் மஸ்ஜிதுன் நபவியின் குத்பா மிம்பர் படியிலிருந்து ‘ஆமீன்!’ கூரியுள்ளார்கள். வயது முதிர்ந்து உடல் தளர்ந்த நிலையில் பெற்றோர்கள் கோபமாக பேசினாலும், தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய நன்றிக்கு பிள்ளைகள் அதனைப் பொறுத்துக் கொள்வதுடன் சொல்லாலோ செயலாலோ அவர்கள் மனவேதனை அடையும் படி நடந்து கொள்ளவும் கூடாது. “சுவனம் தாயின் காலடியிலுள்ளது” எனவும் “சுவனத்தை அடையும் வழி தந்தையிடமுள்ளது.” எனவும் நாயகம் (ஸல்) நவின்றுள்ளார்கள்.

தாயின் சிறப்பு பற்றி திருமறை

 பெற்றோர் இல்லையெனில் பிறப்பு இல்லை. குழந்தைப் பருவம் முதல் வாலிப வயது வரை பெற்றோரின் மெய்யன்பில் தான் பிள்ளைகள் வளர்கின்றனர். இதற்கிடையில் எண்ணிலடங்காத் துன்பங்களை பொறுமையுடன் பெற்றோர்கள் சகித்துக் கொள்கின்றனர்.  “.......அவனுடைய தாய், கஷ்டத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன.”…….(அல்குர் ஆன் 46:15) எனவும், “...அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து….” (அல்குர் ஆன் 31:14) என்றும் கட்டளையிடுகின்றான்.

பிள்ளையைச் சுமந்த நேரத்தில் தாய் எத்தனையோ பக்குவமான, பத்தியம் இருந்து, தனது உயிரைப் பணயம் வைத்து ஈன்றெடுத்து, இரத்தத்தைப் பாலாக மாற்றி ஊட்டி, பல இரவுகள் தூக்கமின்றி, கண் விழித்துப் படாதபாடு  படுகின்றாள். தந்தையும் பிள்ளைகளின் பராமரிப்புக்காகப்  பொருளீட்டி, நல்லொழுக்கங்களையும் கல்வியையும் கற்றுத் தருகின்றனர்.

பெற்றோர்களுக்கு பணிந்து நடங்கள்

 எனவே பெற்றோரைப் பாதுகாத்து ஆதரித்தல். கருணை காட்டி கீழ்படிந்து நடத்தல், இனிய வார்த்தைகளால் உறவாடி மகிழ்வித்தல், அவர்களுக்கு இறைவனிடம் இறைஞ்சுதல், அவர்களின் உறவினர்களையும், நண்பர்களையும் கண்ணியப்படுத்துதல், அவர்களின் பெயரால் நன்மை செய்தல் முதலியவற்றை இஸ்லாம் எடுத்துக் கூறுகின்றது.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்! (அல்குர் ஆன் 17:24) என்று இறைவன் பெற்றோர்களுக்காக பிரார்த்திக்க வேண்டிய முறையையும் கற்றுத் தருகின்றான். மேலும், “அல்லாஹ்வின் விருப்பு, வெறுப்பும், தந்தையின் விருப்பு வெறுப்பில் உள்ளது” என ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பி உள்ளார்கள்.

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது உள்ள பொறுப்புகள்

        பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மீது சில கடமைகள் உள்ளது போன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகள் மீது பல பொறுப்புகள் உள்ளன. மக்களை வளர்த்தல், பாதுகாத்தல், ஒழுக்கம் போதித்தல் முதலியன. குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பேணிக்காத்தல் பற்றி இஸ்லாம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. மகன் தந்தை போதிக்கும் ஒழுக்கத்தையே மேற்கொள்கிறான். தந்தையின் வளர்ப்பு முறையைக் கொண்டுதான் தனயன் நல்லவனாகவோ, தீயவனாகவோ ஆகின்றான். “தந்தை மக்கட்கு அளிக்கும் சிறந்த கொடை நல்லொழுக்கமேயாகும்.” என்றும், “தந்தை தரும் நல்லொழுக்கமே தர்மங்களனைத்திலும் மேலானது” எனவும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவுளமாகியிருக்கிறார்கள். “குழந்தை பிறந்தவுடன் அதன் காதுகளில் அல்லாஹ்வின் திருப்பெயரை (பாங்கு, இகாமத் மூலமாக) ஒலித்தல், தேன் அல்லது தித்திப்பான பொருளைச் சுவைக்கக் கொடுத்தல், பிறந்த ஏழாம் நாளில் நல்ல பெயரை சூட்டல்; அத்துடன் பிறந்த முடியை மழித்து அகீக்கா கொடுத்தல்; ஐந்தாம் ஆண்டில் கல்விப்பயிற்சி அளித்தல், ஏழாம் ஆண்டில் தொழுகைக்கு ஏவுதல்; பத்தாம் ஆண்டில் தொழாவிட்டால் அடித்தாவது தொழச் செய்தல்; பருவம் எய்திய பின்பு திருமணம் செய்து வைத்தல் முதலியன பெற்றோர்களின் தலையான கடமைகளாகும், மேலும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் ‘அன்பும் கருணையும் காட்ட வேண்டும். அவர்களைத் திட்டவோ, சபிக்கவோ கூடாது. அல்லாஹ்விடம் அவர்களின் நல்வாழ்விற்காக துஆச் செய்ய வேண்டும்.

பெண் மக்களை வெறுப்புடன் நடத்துவது தவறு

 அறியாமைக் காலத்து மக்களைப் போல் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் கூட சில பெற்றோர்கள் ஆண் மக்களை அன்புடனும், பெண் மக்களை வெறுப்புடனும் நடத்தி வருவதைக் காணுகின்றோம். தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாய் அறிந்தால் மனச்சோர்வு அடைவதுடன், தாங்கமுடியாத பெரும் பாரம் தம் மீது சுமத்தப் பட்டதாகவும் நினைக்கின்றனர். கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளிக்கின்றனர். ஆனால் “பருவம் அடையும் வரை பெற்ற இரண்டு பெண்களை பாதுகாப்பவரும் நானும் மறுமையில் (ஆள்காட்டி விரல், நடுவிரல் போல்) சேர்ந்திருப்போம். என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர். இன்னும் பிள்ளைகளுக்குத் திருமண உரிமை போன்றவைகள் இருந்தாலும் அறிவிலும், அனுபவத்திலும் சிறந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இதமாகவும், பதமாகவும் அறிவுரைகள் அளிக்க வேண்டியது மிகப் பெரும் பொறுப்பாகும்.  

இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர்கள் அனைத்தும்)


இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முக்கியமான வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Islamic Culture-1

இஸ்லாத்தில் உண்ணுவது - பருகுவது பற்றிய வழிமுறைகள்...

I C-2

இஸ்லாத்தில் உறங்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை

I C-4

இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல் பற்றிய வழிமுறைகள்

I C-5

இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள் பற்றிய கட்டுரை....


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.